The cruel feat of Aswatthama! | Sauptika-Parva-Section-08b | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : உறக்கத்திலிருந்து எழுந்து போரிட வந்த அனைவரையும் கொன்ற அஸ்வத்தாமன்; தப்பி ஓட முயன்ற போர்வீரர்களை வாயிலில் நின்ற கிருபரும், கிருதவர்மனும் கொன்றது; பாண்டவ மூகாமை அவர்கள் எரித்தது; அஸ்வத்தாமன் இதை ஏன் முன்பே செய்யவில்லை என்று கேட்ட திருதராஷ்டிரன்; பாண்டவர்கள், கிருஷ்ணன் ஆகியோர் இல்லாமையும், போர்வீரர்களின் உறக்கமும் தான் அஸ்வத்தாமனின் வெற்றிக்குக் காரணம் என்று சொன்ன சஞ்சயன்; துரியோதனனைத் தேடிச்சென்ற அஸ்வத்தாமன்...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "அவ்வாறு ஏற்பட்ட ஒலியின் காரணமாக, முகாமில் இருந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாண்டவ வில்லாளிகள் தங்கள் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டனர்.(72) காலத்தால் விடுவிக்கப்பட்ட அந்தகனைப் போல அஸ்வத்தாமன், அவர்களில் சிலரின் கால்களையும், சிலரது இடைகளையும் வெட்டி, சிலரது விலாப்புறங்களைத் துளைத்துத் திரிந்து கொண்டிருந்தான்.(73) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, வடிவமற்றவர்களாக நொறுக்கப்பட்டோ, யானைகள் மற்றும் குதிரைகளால் மிதிக்கப்பட்டோ கிடந்த மனிதர்கள் பூமியை மறைத்துக் கொண்டு, பெரும் துன்பத்தில் கதறிக் கொண்டிருந்தனர்.(74) பலர், "இஃது என்ன? இவன் எவன்? ஏன் இந்த ஒலி? இதைச் செய்தவன் எவன்?" என்று உரக்கக் கதறினர். இவ்வாறு அவர்கள் கதறிக் கொண்டிருந்தபோது, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அவர்களைக் கொல்லும் காலனானான்.(75)
தாக்குபவர்களில் முதன்மையானவனான அந்தத் துரோணரின் மகன், கவசம் மற்றும் ஆயுதங்களற்றவர்களாக இருந்த பாண்டுக்கள் மற்றும் சிருஞ்சயர்களை யமலோகத்திற்கு அனுப்பி வைத்தான்.(76) பலர், அவ்வொலியால் பீடிக்கப்பட்ட உறக்கத்தில் இருந்து எழுந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்டும், உறக்கத்தால் குருடாகவும், தங்கள் புலனுணர்வுகளை இழந்து இருந்த அந்தப் போர்வீரர்கள் (அஸ்வத்தாமனின் சீற்றத்திற்கு முன்னால்) காணாமல் போனார்கள்.(77) பலரின் தொடைகள் முடக்கப்பட்டன. தங்கள் சக்தி முழுவதையும் தொலைக்கும் அளவுக்குப் பலர் திகைப்பை அடைந்திருந்தனர். அச்சத்தால் பீடிக்கப்பட்டுக் கதறிக் கொண்டிருந்த அவர்கள், ஒருவரையொருவர் கொல்லத் தொடங்கினர்.(78) துரோணரின் மகன், பயங்கரச் சடசடப்பொலியைக் கொண்ட தன் தேரில் மீண்டும் ஏறித் தன் வில்லை எடுத்துக் கொண்டு பலரைத் தன் கணைகளால் யமலோகம் அனுப்பி வைத்தான்.(79) உறக்கத்தில் இருந்து விழித்தெழுந்த, துணிச்சல்மிக்க, மனிதர்களில் முதன்மையான வேறு போர்வீரர்கள், அஸ்வத்தாமனை நெருங்கும் முன்பே அவனால் கொல்லபட்டு, இவ்வாறே அந்தக் கால இரவுக்கு {கால ராத்ரிக்குப்} பலியாகக் காணிக்கையளிக்கப்பட்டனர்.(80)
அந்த முதன்மையான தேரால் பலரை நசுக்கியவண்ணம், முகாமில் திரிந்து கொண்டிருந்த அவன் {அஸ்வத்தாமன்}, தன் கணைமாரிகளால் மீண்டும் மீண்டும் எதிரிகளை மறைத்துக் கொண்டிருந்தான்.(81) பிறகு மீண்டும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட தன் அழகிய கேடயத்தையும், ஆகாயத்தின் நிறத்தைக் கொண்ட தன் வாளையும் எடுத்துக் கொண்டு எதிரிகளின் மத்தியில் திரிந்தான்.(82) பெரும் தடாகத்தைக் கலங்கடிக்கும் யானையைப் போலப் போரில் தடுக்கப்பட முடியாதவனான துரோணரின் மகன் பாண்டவ முகாமைக் கலங்கடித்தான்.(83) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்வொலியால் விழித்தெழுந்த போர்வீரர்கள் பலர், அப்போதும் உறக்கத்தாலும், அச்சத்தாலும் பீடிக்கப்பட்டு, மதிமயக்கத்துடன் அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(84) பலர் கடுந்தொனியில் கதறினார், இன்னும் பலர் தொடர்பற்ற சொற்களைப் பிதற்றினர். பலர், தங்கள் ஆயுதங்களையும், கவசங்களையும் அடையத் தவறினர்.(85)
பலரது கேசங்கள் கலைந்திருந்தன, பலர் ஒருவரையொருவர் அடையாளங்காண தவறினர். உறக்கத்தில் இருந்து எழுந்த பலர் களைத்துப் போய்க் கீழே விழுந்தனர்; சிலர் காரணம் ஏதும் அறியாமல் இங்கேயும், அங்கேயும் திரிந்து கொண்டிருந்தனர்.(86) யானைகள், குதிரைகள் ஆகியன தங்கள் கட்டுகளை அறுத்துக் கொண்டு மலமும், சிறுநீரும் கழித்தன.(87) பெருங்குழப்பத்தோடு கூடிய பலர் ஒன்றாகத் திரண்டனர். அவர்களில் சிலர் அச்சத்தால் தங்களைப் பூமியில் கிடத்திக் கொண்டனர். முகாமைச் சேர்ந்த விலங்குகள் அவர்களை அங்கேயே நசுக்கின.(88) முகாம் இந்நிலையை அடைந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஓ! பாரதர்களின் தலைவரே, ராட்சசர்கள் மகிழ்ச்சியில் உரக்க முழக்கமிட்டனர்.(89) ஓ! மன்னா, மகிழ்ச்சியில் இருந்த பூதக்கூட்டங்களால் வெளியிடப்பட்ட அந்த உரத்த ஒலியானது திசைகளின் புள்ளிகள் அனைத்தையும், ஆகாயத்தையும் நிறைத்தது.(90)
துன்ப ஓலங்களைக் கேட்ட யானைகள், குதிரைகள் ஆகியன, தங்கள் கட்டுகளை அறுத்துக் கொண்டு அங்கேயும், இங்கேயும் ஓடி, முகாமின் போராளிகளை நசுக்கின.(91) அவ்விலங்குகள் அங்குமிங்கும் விரைந்த போது, அவற்றால் எழுப்பப்பட்ட புழுதியானது அவ்விரவின் இருளை இரட்டிப்பாக்கியது.(92) அந்த அடர்த்தியான இருள் சூழ்ந்தபோது, முகாமை சேர்ந்த போர்வீரர்கள் முற்றிலும் திகைப்படைந்தனர்; தந்தையரால் தங்கள் மகன்களையும், சகோதரர்களால் தங்கள் சகோதரர்களையும் அடையாளங்காண முடியவில்லை.(93) பாகர்களற்ற யானைகளைப் பிற யானைகளும், சாரதிகளற்ற குதிரைகளைப் பிற குதிரைகளும் {ஒன்றையொன்று} தாக்கிப் பிளந்து, தங்கள் வழியில் நின்ற மக்களை நசுக்கின.(94) ஒழுங்கனைத்தையும் இழந்த போராளிகள் விரைந்து சென்று ஒருவரையொருவர் கொன்று, தங்கள் வழியில் நின்றவர்கள் மீது பாய்ந்து அவர்களைத் துண்டுகளாக வெட்டிக் கொன்றனர்.(95)
உணர்வுகளை இழந்து, உறக்கத்தின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு, இருளில் மூழ்கிய அம்மனிதர்கள், விதியால் உந்தப்பட்டுத் தங்கள் தோழர்களையே கொன்றனர்.(96) வாயில் காப்போர் தாங்கள் காத்து வந்த வாயில்களையும், புறக்காவலில் ஈடுபட்டோர் புறங்களையும் கைவிட்டு, எங்கே செல்கிறோம் என்று தெரியாமல், உணர்வுகளை இழந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தப்பி ஓடினர்.(97) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தக் கொலைகாரர்கள், கொல்லப்படுபவர்களை அடையாளம் காணாமல் ஒருவரையொருவன் கொன்றனர். விதியால் உந்தப்பட்ட அவர்கள் தங்கள் தந்தைமாரையும், மகன்களையும் அழைத்தனர்.(98) தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களைக் கைவிட்டு அவர்கள் தப்பி ஓடியபோது, தங்கள் குடும்பங்கள் மற்றும் தங்கள் பெயர்களைக் குறிப்பிட்டு ஒருவரையொருவர் அழைத்தனர்.(99) வேறு சிலர், "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கதறியபடியே கீழே பூமியில் விழுந்தனர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, போருக்கு மத்தியில் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு கொன்றான்.(100)
இவ்வாறு கொல்லப்படும்போது, வேறுசில க்ஷத்திரியர்கள், தங்கள் உணர்வுகளை இழந்து, அச்சத்தால் பீடிக்கப்பட்டுத் தங்கள் முகாம்களை விட்டுத் தப்பி ஓட முயன்றனர்.(101) அவ்வாறு தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்ள முகாமை விட்டுத் தப்பி ஓட முயற்சித்த அம்மனிதர்கள் வாயிலில் இருந்த கிருதவர்மன் மற்றும் கிருபரால் கொல்லப்பட்டனர்.(102) ஆயுதங்கள், கருவிகள் மற்றும் கவசங்கள் அற்றவர்களும், கலைந்த கேசத்தைக் கொண்டவர்களும், அச்சத்தால் நடுங்கி தங்கள் கரங்களைக் கூப்பியவர்களும் தரையில் கிடந்தார்கள். எனினும், (தங்கள் தேர்களில் இருந்த) அந்தக் குரு வீரர்கள் இருவரும் {அவர்களில்} யாருக்கும் இடமளிக்கவில்லை.(103) கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய அந்தத் தீயவர்கள் இருவரும், முகாமில் இருந்து தப்பித்த எவரையும் விட்டுவிடவில்லை.(104) துரோணரின் மகனுக்கு மிகவும் ஏற்புடையதைச் செய்வதற்காக அவர்கள் இருவரும், அந்தப் பாண்டவ முகாமின் மூன்று இடங்களில் நெருப்பூட்டினர்.(105)
அந்த முகாம் {இவ்வாறு} ஒளியூட்டப்பட்டபோது {எரிக்கப்பட்டபோது}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தங்கள் தந்தைமாரை திளைக்கச் செய்பவனான அஸ்வத்தாமன், கையில் வாளுடன், பெரும் திறனுடன் தன் எதிரிகளைத் தாக்கினான்.(106) துணிச்சல்மிக்க அவனது எதிரிகளில் சிலர் அவனை நோக்கி விரைந்தனர், சிலர் இங்கேயும் அங்கேயும் ஓடினர். அந்த மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையான துரோணரின் வீரமகன், தன் வாளால் அவர்கள் அனைவரின் உயிரையும் எடுத்தான்.(107) சினத்தால் நிறைந்து போர்வீரர்களில் சிலரை வீழ்த்தி, எள்ளுக்கட்டையை வெட்டுவதைப் போலத் தன் வாளால் அவர்களை இரண்டாக வெட்டினான்.(108) ஓ! பாரதக் குலத்தின் காளையே, துன்ப ஓலங்களுடன் கதறியபடியே வீழ்ந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் உடல்கள் ஆகியவை ஒன்றாகக் கலந்து பூமியெங்கும் பரவிக்கிடந்தன.(109) ஆயிரக்கணக்கான மனிதர்கள் உயிரையிழந்து கீழே விழுந்தபோது, எண்ணற்ற தலையற்ற முண்டங்கள் எழுந்து நின்று மறுபடியும் கீழே விழுந்தன.(110)
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அஸ்வத்தாமன், அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், ஆயுதங்களைப் பிடித்திருந்தவையுமான கரங்களையும், தலைகளையும், யானையின் துதிக்கைகளுக்கு ஒப்பான தொடைகளையும், கைகளையும், கால்களையும் வெட்டினான்.(111) துரோணரின் சிறப்புமிக்க மகன் சிலரின் முதுகுகளைச் சிதைத்து, சிலரின் தலைகளை அறுத்து, சிலரைப் போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடும்படியும் செய்தான்.(112) அவன் சிலரின் உடல்களையும், வேறு சிலரின் காதுகளையும், சிலரின் தோள்களையும் வெட்டி, சிலரின் தலைகளை அவர்களது உடல்களுக்குள் நசுக்கினான்.(113) அஸ்வத்தாமன் இவ்வழியில் ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்று திரிந்து கொண்டிருந்தபோது நேர்ந்த இருளின் விளைவால் அந்த ஆழ்ந்த இரவு பயங்கரத்தை அடைந்தது.(114) இறந்தும், சாகக்கிடந்துமிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்கள், எண்ணற்ற குதிரைகள் மற்றும் யானைகளுடன் பூமியானது காணப் பயங்கரமானதாக இருந்தது.(115)
சினகொண்ட துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} வெட்டப்பட்ட அவனது எதிரிகள் விழுந்ததும் அந்தப் பூமியானது, யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களின் கூட்டத்தால் அடையப்பட்டு, (முறிந்த) தேர்கள், கொல்லப்பட்ட குதிரைகள் மற்றும் யானைகளுடன் சேர்ந்து அச்சம் நிறைந்ததாகத் தெரிந்தது.(116) {அவ்வாறு வீழும்போது} சிலர் தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் தந்தைமாரையும், சிலர் தங்கள் மகன்களையும் அழைத்தனர். சிலர், "சினங்கொண்ட தார்தராஷ்டிரர்களால் போரில் இத்தகு அருஞ்செயல்களைச் செய்ய முடியாது. உறங்கும் நேரத்தில் அடையப்படும் இத்தீச்செயல்கள் ராட்சசர்களின் வேலையே. பார்த்தர்கள் இல்லாததன் விளைவாலேயே இந்தப் பெரும் படுகொலை நடந்து கொண்டிருக்கிறது.(117,118) ஜனார்த்தனனைத் {கிருஷ்ணனைத்} தன் பாதுகாவலனாகக் கொண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தேவர்களாலும், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களாலும் வெல்லப்பட முடியாதவனாவான்.(119) பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடனும், உண்மை நிறைந்த பேச்சுடனும், தன்னடக்கத்துடனும், அனைத்துயிர்களிடமும் கருணையுடனும் இருக்கும் பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உறங்கிக் கொண்டிருப்பவர்களையோ, கவனமில்லாமல் இருப்பவனையோ, தன் ஆயுதங்களை வைத்துவிட்டவனையோ, கூப்பிய கரங்களுடன் சரணடைந்தவனையோ, பின்வாங்கிச் செல்பவனையோ, கேசம் கலைந்தவனையோ ஒருபோதும் கொல்ல மாட்டான்.(120) ஐயோ, நம்மீது இத்தகு கொடூரத்தை இழைப்பவர்கள் தீச்செயல்களைச் செய்யும் ராட்சசர்களே" என்று சொன்னார்கள். இத்தகு வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே பலர் கீழே விழுந்தனர்.(121)
மனிதர்களின் கதறல்களாலும், அழுகைகளாலும் எழுந்த உரத்த ஆரவராம் ஒரு குறுகிய காலத்திற்குள்ளாகவே அடங்கியது.(122) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குருதியால் பூமி நனைந்ததால், அச்சந்தரும்வகையில் அடர்த்தியாக எழுந்த புழுதியானது விரைவில் மறைந்தது.(123) அஸ்வத்தாமன், உயிரினங்களைக் கொல்லும் ருத்திரனைப் போலவே, வலியுடனும், வேதனை மற்றும் துயரத்தில் மூழ்கியும் நகர்ந்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மனிதர்களைக் கொன்றான்.(124) கட்டிப்பிடித்துக் கொண்டே கீழே விழுந்த பலரும், தப்பி ஓட முயன்ற பலரும், ஒளிந்து கொள்ள முயன்ற பலரும், போரில் போராடிக் கொண்டிருந்த பலரும் என அனைவரும் துரோணரின் மகனால் கொல்லப்பட்டனர்.(125) எரியும் தழல்களில் எரிந்தும், அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டும், மனிதர்கள் தங்கள் புலனுணர்வுகளை இழந்து ஒருவரையொருவர் கொன்றனர்.(126) ஓ! ஏகாதிபதி, பாதி இரவு முடிவதற்குள்ளாகவே, அந்தத் துரோணரின் மகன், பாண்டவர்களின் பெரும்படையை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(127) மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளுக்கு அழிவைத் தந்த அந்தப் பயங்கரமான இரவில், இருளில் உலவும் உயிரினங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் நிறைந்தன.(128)
ராட்சசர்கள் மற்றும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த பிசாசங்கள் ஆகியோர், தரையில் கிடந்த மனித இறைச்சியைக் கடித்து, குருதியைக் குடித்தனர்.(129) அவர்கள் கடுமையானவர்களாகவும், பழுப்பு நிறத்தவர்களாகவும், பயங்கரமானவர்களாகவும், வஜ்ரம் போன்ற பற்களைக் கொண்டவர்களாகவும், குருதியால் நனைந்தவர்களாகவும் இருந்தனர். தலைகள் சடாமுடி தரித்துக் கொண்டு, நீண்ட பருத்த தொடைகளுடனும், ஐந்து கால்களுடன் கூடியவர்களுமாக இருந்த அவர்களின் வயிறுகள் பெரியனவாக இருந்தன.(130) அவர்களின் விரல்கள் பின்புறத்தில் இருந்தன. கடுங்குணமும், கோரத் தன்மைகளையும் கொண்ட அவர்களின் உரத்த குரல் பயங்கரமானதாக இருந்தது. அவர்கள் தங்கள் உடல்களில் கிங்கிணி மணிகளை வரிசையாகக் கட்டியிருந்தனர். நீலத் தொண்டைகளைக் கொண்டிருந்த அவர்கள் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்தனர்.(131) மிகவும் கொடூரமானவர்களும், அச்சமடையாமல் பார்க்க இயலாதவர்களும், எதிலும் வெறுப்படையாதவர்களுமான அவர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவியருடன் அங்கே வந்தனர். உண்மையில் அங்கே காணப்பட்ட ராட்சசர்கள் பல்வேறு வடிவங்களில் இருந்தனர்.(132)
ஓடையாக ஓடிக் கொண்டிருந்த குருதியைக் குடித்த அவர்கள், மகிழ்ச்சியால் நிறைந்து தனித்தனி கூட்டங்களாக ஆடத் தொடங்கினர். "இஃது அருமையாக இருக்கிறது", "இது தூய்மையாக இருக்கிறது", "இது மிக இனிமையாக இருக்கிறது" என்ற வார்த்தைகளையே அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர்.(133) விலங்குணவை உண்டு வாழும் பிற ஊனுண்ணிகளும், கொழுப்பு, மஜ்ஜை, எலும்புகள் ஆகியவற்றை ருசித்து, சடலங்களில் உள்ள இனிமையான பகுதிகளை உண்ணத் தொடங்கின.(134) வேறு சிலர், ஓடையாகப் பாய்ந்து கொண்டிருந்த கொழிப்பைக் குடித்து, களத்தில் நிர்வாணமாக ஓடிக் கொண்டிருந்தனர். பல்வேறு வகை முகங்களைக் கொண்டவர்களும், பெரும் மூர்க்கம் கொண்டவர்களும், இறந்தவற்றின் இறைச்சியை உண்டு வாழ்பவர்களுமான வேறு ஊனுண்ணிகளும்,(135) அங்கே ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் வந்தனர். கோரமானவர்களும், தீச்செயல்களைச் செய்பவர்களுமான பெரும் ராட்சசர்கள் எண்ணற்ற கூட்டங்களாக அங்கே வந்தனர்.(136) ஓ! மன்னா, அந்தப் பயங்கரப் பேரழிவுக்கு மத்தியில் காணப்பட்ட வேறு வகைப் பூதங்களும், அங்கே வந்து, மகிழ்ச்சியால் நிறைந்து, மனநிறைவுடன் உண்டனர்.(137)
காலை விடிந்ததும் அஸ்வத்தாமன் அம்முகாமைவிட்ட அகல விரும்பினான்.(138) அவன் மனித இரத்தத்தில் குளித்திருந்தான், அவனது கரமும், வாளும் ஒன்றானது போல, அந்த வாளின் கைப்பிடி அவனது பிடியில் உறுதியாக இருந்தது.(139) (நல்ல போர்வீரர்களால்) ஒரு போதும் நடக்கப்படாத பாதையில் நடந்து சென்ற அஸ்வத்தாமன், அந்தப் படுகொலைக்குப் பிறகு, யுகத்தின் முடிவில் அனைத்து உயிரினங்களையும் சாம்பலாய் எரித்த சுடர்மிக்க நெருப்பைப் போலத் தெரிந்தான்.(140) ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தத் துரோணரின் மகன், நடக்கப்படாத வழியில் நடந்து, தன் நோன்புக்கு ஏற்புடைய சாதனையைச் செய்து, தன் தந்தையின் படுகொலையால் ஏற்பட்ட துயரை மறந்தான்.(141) துரோணரின் மகன் அந்த இரவில் உள்ளே நுழைந்த போது, உறக்கத்தில் அனைவரும் புதைந்திருந்ததன் விளைவால் பாண்டவ முகாமானது முற்றிலும் அசைவற்றதாக இருந்தது. இந்த இரவு படுகொலைக்குப்பின்னர், மீண்டும் அனைவரும் அமைதியடைந்ததும் அஸ்வத்தாமன் அங்கிருந்து வெளியே வந்தான்.(142) ஓ! மன்னா, முகாமில் இருந்து வெளியே வந்த வீர அஸ்வத்தாமன், தன் இரு தோழர்களையும் சந்தித்து, தன் சாதனையின் செய்தியைச் சொல்லி அவர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்தான்.(143) அவனது நன்மையில் அர்ப்பணிப்புடன் கூடிய அவ்விருவரும், (வாயிலில்) பாஞ்சாலர்களையும், சிருஞ்சயர்களையும் அவர்கள் எவ்வாறு கொன்றார்கள் என்ற இனிய செய்தியை அவனிடம் சொன்னார்கள்.(144) இவ்வாறே அவ்விரவானது கவனமற்று, உறக்கத்தில் புதைந்திருந்த சோமகர்களுக்குப் பயங்கர அழிவைத் தந்தது.(145) காலத்தின் வழியானது தடுக்கப்படமுடியாதது என்பதில் ஐயமில்லை. நம்மை அழித்தவர்கள், இப்போது தாங்களே அழிந்து போனார்கள்" {என்றான் சஞ்சயன்}.(146)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "வலிமைமிக்கத் தேர்வீரனான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித்தர உறுதி கொண்டிருந்தாலும், இத்தகு சாதனையை ஏன் அவன் முன்பே அடையவில்லை?(147) அந்தப் பெரும் வில்லாளி {அஸ்வத்தாமன்} எக்காரணத்தினால் துரியோதனன் இறந்தபிறகு இந்தப் படுகொலையை நிகழ்த்தினான். இவற்றை எனக்குச் சொல்வதே உனக்குத் தகும்" என்று கேட்டான்.(148)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! குருகுலத்தின் மகனே {திருதராஷ்டிரரே}, பார்த்தர்கள் மீது கொண்ட அச்சத்தினால், அஸ்வத்தாமன் அத்தகு சாதனையைச் செய்யவில்லை. பார்த்தர்களும், புத்திசாலியான கேசவனும் {கிருஷ்ணனும்}, சாத்யகியும் இல்லாததனாலேயே துரோணரின் மகனால் அச்சாதனையைச் செய்ய முடிந்தது.(149) அவ்வீரர்கள் இருக்கும்போது, தலைவன் இந்திரனைத் தவிர அவர்களைக் கொல்லத்தகுந்தவன் வேறு எவன் இருக்கிறான்?[1] ஓ! மன்னா, மேலும் அம்மனிதர்க்ள அனைவரும் உறக்கத்தில் இருந்ததால் மட்டுமே அஸ்வத்தாமனால் அச்சாதனையைச் செய்ய முடிந்தது.(150) பாண்டவப் படைக்குப் பேரழிவை ஏற்படுத்திய அம்மூன்று வீரர்களும் (அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியோர்) ஒன்றாகச் சந்தித்து, "நற்பேறு பெறுவோம்" என்று சொன்னார்கள்.(151) அவ்விரு தோழர்களும் அஸ்வத்தாமனை வாழ்த்தி அவனை ஆரத்தழுவிக் கொண்டனர். அப்போது பெருமகிழ்ச்சியடைந்த அவன் {அஸ்வத்தாமன்}, இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(152) "பாஞ்சாலர்கள் அனைவரும், திரௌபதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். சோமகர்களும், எஞ்சியிருந்த மத்ஸ்யர்கள் அனைவரும் என்னால் கொல்லப்பட்டனர்.(153) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட நாம் தாமதமில்லாமல் மன்னனிடம் {துரியோதனனிடம்} செல்வோமாக. மன்னன் இன்னும் உயிரோடு இருந்தால் அவனுக்கு இந்த மகிழ்ச்சி நிறைந்த செய்தியைச் சொல்வோம்" {என்று சொன்னான் அஸ்வத்தாமன்}".(154)
[1] அஸ்வத்தாமனுக்கு வரமருளி, அவனது உடலுக்குள் சிவன் நுழைந்தான் என்று முந்தைய பகுதியில் சொன்ன சஞ்சயன், இங்கே இந்திரனைத் தவிர பாண்டவர்களை வேறு யாராலும் வெல்ல முடியாது என்கிறான். இந்தப் பகுதியின் வர்ணனை, அஸ்வத்தாமன் தன்னையே பலிகொடுத்தது, சிவன் கொடுத்த வரம் ஆகியவற்றின் உண்மைத்தன்மையில் ஐயங்கொள்ளச் செய்கிறது.
சௌப்திக பர்வம் பகுதி – 08அ வில் உள்ள சுலோகங்கள் : 71
சௌப்திக பர்வம் பகுதி – 08ஆ வில் உள்ள சுலோகங்கள் : 83
சௌப்திக பர்வம் பகுதி – 08அ, ஆ சேர்ந்து மொத்தம் உள்ள சுலோகங்கள் : 154
ஆங்கிலத்தில் | In English |