The death of Duryodhana! | Sauptika-Parva-Section-09 | Mahabharata In Tamil
(சௌப்திக பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : கௌரவர்களில் எஞ்சியிருந்தவர்களான மூன்று வீரர்களும் துரியோதனனிடம் சென்று, அவன் உயிரோடிருப்பதைக் காண்பது; குரு மன்னனின் பரிதாபகரமான நிலை; மூன்று வீரர்களின் புலம்பல்; கிருபரின் புலம்பல்; பாண்டவப்படைக்குச் செய்த பேரழிவைத் துரியோதனனிடம் சொன்ன அஸ்வத்தாமன்; செய்தியைக் கேட்டு மனநிறைவு கொண்ட துரியோதனன்; துரியோதனனின் மரணம்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பாஞ்சாலர்களையும், திரௌபதியின் மகன்களையும் கொன்றபிறகு, எதிரியால் தாக்கி வீழ்த்தப்பட்டுத் துரியோதனன் கிடக்கும் இடத்திற்கு அந்தக் குரு வீரர்கள் மூவரும் சென்றனர்.(1) அங்கே வந்த அவர்கள், குற்றுயிராகக் கிடக்கும் மன்னனைக் {துரியோதனனைக்} கண்டனர். அவர்கள், தங்கள் தேர்களில் இருந்து குதித்து, உமது மகனைச் சூழ்ந்து கொண்டனர்.(2) ஓ! ஏகாதிபதி, குரு மன்னன் {துரியோதனன்} அங்கே முறிந்த தொடைகளுடன் கிடந்தான். கிட்டத்தட்ட உணர்விழந்த நிலையில், உயிர் போகும் தருவாயில் அவன் கிடந்தான். கீழே பார்த்த விழிகளுடன் அவன் அடிக்கடி இரத்தம் கக்கிக் கொண்டிருந்தான்.(3) அப்போது அவன் {துரியோதனன்}, பயங்கர வடிவிலான ஊனுண்ணும் விலங்குகளால் சூழப்பட்டிருந்தான், ஓநாய்கள், கழுதைப்புலிகள் ஆகியன அவனது உடலை உண்பதற்காக நெடுந்தொலைவில்லில்லாமல் அருகிலேயே காத்திருந்தன.(4) அம்மன்னன், தன்னை உண்ணும் எதிர்பார்ப்பில் நிற்கும் அந்த ஊனுண்ணும் விலங்குகளைப் பெரும் சிரமத்துடன் தடுத்துக் கொண்டிருந்தான். அவன் பெரும் வேதனையுடன் பூமியில் கிடந்து துடித்துக் கொண்டிருந்தான்.(5)
அவனது {துரியோதனது} படையில் எஞ்சியிருப்பவர்களான அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய மூன்று வீரர்களும், தன்குருதியிலேயே குளித்து இவ்வாறு பூமியில் கிடக்கும் அவனைக் கண்டு துன்பத்தால் பீடிக்கப்பட்டு, அவனைச் சுற்றி அமர்ந்தார்கள்.(6) குருதியில் நனைந்து, வெப்பப் பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களால் சூழப்பட்ட குரு மன்னன் {துரியோதனன்}, மூன்று நெருப்புகளால் சூழப்பட்ட வேள்விப்பீடத்தைப் போலவே தெரிந்தான்.(7) அந்த மூன்று வீரர்களும், முற்றிலும் தகாத அவலநிலையில் கிடக்கும் மன்னனைக் கண்டு, தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் அழுதனர்.(8) அவனது முகத்திலிருந்த குருதியைத் தங்கள் கரங்களால் துடைத்த அவர்கள், போர்க்களத்தில் கிடக்கும் மன்னன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டனர்.(9)
கிருபர், "பதினோரு {11} அக்ஷௌஹிணிகளின் தலைவனான இந்த மன்னன் துரியோதனன், எதிரியால் தாக்கி வீழ்த்தப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டு வெறுந்தரையில் உறங்குவதால், விதியினால் எதையும் கொண்டு வர முடியும் என்பது தெரிகிறது.(10) பசும்பொன்னின் காந்தியைக் கொண்டதும், இம்மன்னனுக்குப் பிடித்தமானதும், பசும்பொன்னாலேயே அலங்கரிக்கப்பட்டதுமான இவனது கதாயுதம் இவன் அருகிலேயே கிடப்பதைப் பாருங்கள்.(11) எந்தப் போரிலும் இந்தக் கதாயுதம் இந்த வீரனைக் கைவிடவில்லை. இப்போதும், இந்தச் சிறப்புமிக்கப் போர்வீரன் சொர்க்கத்திற்குச் செல்ல இருக்கும் இத்தருணத்திலும் இந்தக் கதாயுதம் இவனை விடவில்லை.(12) பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட இவ்வாயுதம், படுக்கையறையில் தன் தலைவனின் அருகில் கிடக்கும் காதல் மனைவியைப் போலவே இந்த வீரனின் அருகில் கிடப்பதைப் பாருங்கள்.(13) காலம் கொண்டு வந்த இந்த மாற்றங்களைப் பாருங்கள். எதிரிகளை எரிப்பவனும், மகுடம் தரித்த மன்னர்கள் அனைவரின் தலையிலும் நடப்பவனுமான இவன், (எதிரியால்) வீழ்த்தப்பட்டு, இப்போது புழுதியை உண்டு கொண்டிருக்கிறான்.(14) எவன் முன்பு எதிரிகள் பலரைத் தாக்கி வீழ்த்தி, வெறுந்தரையில் கிடக்கச் செய்தானோ, அந்தக் குருக்களின் மன்னன் இன்று எதிரிகளால் தாக்கி வீழ்த்தப்பட்டு வெறுந்தரையில் கிடக்கிறான்.(15) நூற்றுக்கணக்கான மன்னர்கள், எவனுக்கு அஞ்சிப் பணிவார்களோ, அவன் இன்று இரைதேடும் விலங்குகளால் சூழப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கிறான்.(16) முன்பு பிராமணர்கள் எவனிடம் காத்திருந்தார்களோ {பணிவிடை செய்தார்களோ}, ஐயோ, இன்று அந்தச் செல்வத்தலைவனின் உடலை உண்பதற்காக இரைதேடும் விலங்குகள் இவனுக்காகக் காத்திருக்கின்றன" என்றார்".(17)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொட்ரந்தான், "ஓ! பாரதர்களில் சிறந்தவரே, அந்தக் குருகுலத் தலைவன் {துரியோதனன்} தரையில் கிடப்பதைக் கண்ட அஸ்வத்தாமன், இந்தப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டான்:(18) "ஓ! மன்னர்களில் புலியே {துரியோதனனே}, மக்கள் அனைவரும் உன்னை வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவன் என்று சொன்னார்கள். அந்த மக்கள், (கதாயுதப் போரில்) சங்கர்ஷணரின் {பலராமரின்} சீடனான நீயே பொக்கிஷத் தலைவன் (குபேரன்) என்றும் சொன்னார்கள்.(19) ஓ! பாவமற்றவனே, பிறகு உன்னில் எந்தத் தாமதத்தையும் அந்தப் பீமனால் காண முடிந்தது எவ்வாறு? நீ எப்போதும் வலிமைமிக்கவனாகவும், திறம் கொண்டவனாகவும் இருந்தாய். ஓ! மன்னா, மறுபுறம் அவனோ {பீமனோ}, தீய ஆன்மா கொண்ட பொல்லாதவனாக இருந்தான்.(20)
ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அப்படிப்பட்ட நீயே போரில் பீமசேனனால் தாக்கி வீழ்த்தப்பட்டதை நாங்கள் காண்பதால், இவ்வுலகில் அனைத்தையும் விடக் காலமே வலிமைமிக்கது என்பதில் ஐயமில்லை.(21) ஐயோ, நீதியின் ஒவ்வொரு விதியையும் அறிந்தவனான உன்னை, இழிந்தவனும், தீயவனுமான விருகோதரனால் {பீமனால்} நியாயமற்ற வகையில் தாக்கி வீழ்த்த முடிந்தது எவ்வாறு? காலம் தடுக்கப்பட முடியாதது என்பதில் ஐயமில்லை.(22) ஐயோ, உன்னால் நியாயமான போருக்கு அழைக்கப்பட்ட பீமசேனன், தன் வலிமையை வெளிப்படுத்தி உன் தொடைகளை முறித்தான்.(23) போரில் நியாயமற்ற வகையில் தாக்கி வீழ்த்தி, காலால் தீண்டிய ஒருவனைப் பொறுத்துக் கொண்ட அந்த இழிந்த யுதிஷ்டிரனுக்கு ஐயோ.(24) உலகம் உள்ளவரையில், போர்கள் அனைத்திலும், விருகோதரனை {பீமனை} நிச்சயம் போர்வீரர்கள் நிந்திப்பார்கள். நீ நியாயமற்ற முறையில் தாக்கி வீழ்த்தப்பட்டாய் என்பதில் ஐயமில்லை.(25)
ஓ! மன்னா {துரியோதனா}, யதுகுலத்தின் வீரப் பலராமன், "கதாயுதப் போர்களில் துரியோதனனுக்கு இணையானவன் யாருமில்லை" என்று எப்போதும் சொல்வான்.(26) ஓ! பாரதா, அந்த விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவன் {பலராமன்}, "குருகுலத்தின் துரியோதனன் எனக்குத் தகுந்த சீடனாவான்" என்று வழக்கமாகவே ஒவ்வொரு சபையிலும் பெருமை பேசுவான்.(27) பெரும் முனிவர்களால் சொல்லப்படுவதைப் போலப் போரில் எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்து உயர்ந்த வெகுமதியை நீ அடைந்திருக்கிறாய்.(28) ஓ! மனிதர்களில் காளையே, ஓ! துரியோதனா, நான் உனக்காக வருந்தவில்லை. உன் தாயான காந்தாரி மற்றும் உனது தந்தை {திருதராஷ்டிரர்} ஆகியோர் பிள்ளைகளற்றவர்களாகிவிட்டனரே என்றே இப்போது வருந்துகிறேன்.(29) அவர்கள், சோகத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் தங்கள் உணவுக்காகப் பூமியெங்கும் திரியப் போகிறார்கள். விருஷ்ணி குலத்தின் கிருஷ்ணனுக்கும், தீய புரிதல் {துர்ப்புத்தி} கொண்ட அர்ஜுனனுக்கு ஐயோ.(30) அவர்கள் தங்களை அறநெறிகளின் கடமைகளை அறிந்தவர்கள் என்று கருதிக் கொண்டாலும், நீ கொல்லப்பட்டபோது அலட்சியமாகவே நின்றார்கள். ஓ! மன்னா, வெட்கமற்றவர்களாகவே இருந்தாலும் பிற பாண்டவர்களும், உன்னைக் கொன்ற முறையைக் குறித்து எவ்வாறு பேசப் போகிறார்கள்?(31)
ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனனே}, ஓ! மனிதர்களில் காளையே, எதிரியை முறையாக எதிர்த்துப் போர்க்களத்தில் கொல்லப்பட்டதால் நீ உயர்ந்த நற்பேற்றையே அடைவாய்.(32) ஐயோ, இப்போது பிள்ளைகளை இழந்தவளும், தன் சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் அனைவரையும் இழந்தவளுமான காந்தாரி அடையப்போகும் அவல நிலை என்னவாக இருக்கும்? பார்வையற்ற மன்னன் {திருதராஷ்டிரன்} அடையப்போகும் அவல நிலையும் என்னவாக இருக்கும்?(33) அரசனான உன்னை முன்னிட்டுக் கொண்டு சொர்க்கத்தை அடையாமல் இருக்கும் கிருதவர்மன், நான் மற்றும் வலிமைமிக்கத் தேர்வீரரான கிருபர் ஆகிய எங்களுக்கு ஐயோ.(34) விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றுபவனும், மனிதர்கள் அனைவரின் பாதுகாவலனும், குடிமக்கள் அனைவருக்கும் நன்மை செய்பவனுமான உன்னைப் பின்தொடராமல் இருக்கும் இழிந்த மனிதர்களான எங்களுக்கு ஐயோ.(35)
ஓ! மனிதர்களில் புலியே {துரியோதனனே}, கிருபரின் வசிப்பிடம், என் வசிப்பிடம் மற்றும் என் தந்தையின் வசிப்பிடம் ஆகியவையும், நம்மைச் சார்ந்திருப்பவர்களின் வசிப்பிடங்களும் உன் அதிகாரத்தாலேயே செல்வத்தால் நிறைந்திருந்தன.(36) உன் அருளால் நாங்களும், எங்கள் நண்பர்களும், உறவினர்களும், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளைக் கொடுத்து முதன்மையான வேள்விகள் பலவற்றைச் செய்தோம்.(37) பூமியில் உள்ள மன்னர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு நீ சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டால், இத்தகு பாவிகளான நாங்கள் எங்கே செல்வோம்?(38) ஓ! மன்னா, (வாழ்வின்) உயர்ந்த எல்லையை அடையப்போகும் உன்னை நாங்கள் மூவரும் பின்தொடராததால், இத்தகு புலம்பல்களிலே ஈடுபட்டுக் கொண்டிருக்கப் போகிறோம்.(29) உன்னோடு நாங்கள் வராததால், உன் தோழமையை இழந்து, செல்வமற்று, உன் செழிப்பில் வலியுடன் வசிக்கப்போகும் நாங்கள் அடையப்போகும் கதிதான் என்ன?(40)
ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, நாங்கள் இவ்வுலகத்தில் துயரத்துடன் திரியப் போகிறோம் என்பதில் ஐயமில்லை. ஓ! மன்னா, உன்னை இழந்து நாங்கள் அமைதியை எங்கே அடைவோம்? மகிழ்ச்சியை எங்கே அடைவோம்?(41) ஓ! ஏகாதிபதி, இவ்வுலகில் இருந்து சென்று, (உனக்கு முன்பு அங்கே சென்றிருக்கும்) அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களைச் சந்தித்து, என் வேண்டுகோளுக்கிணங்க, அவர்களின் வயதின் அடிப்படையிலும், பதவியின் அடிப்படையிலும் ஒருவர்பின் ஒருவராக உன் மரியாதையைச் செலுத்துவாயாக.(42) ஓ! மன்னா {துரியோதனா}, விற்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான உன் ஆசானை {துரோணரை} வழிபட்டபிறகு, திருஷ்டத்யும்னன் என்னால் கொல்லப்பட்டான் என்பதை அவரிடம் சொல்வாயாக.(43) உனக்கு முன்னே சொர்க்கத்திற்குச் சென்றிருப்பவர்களான வலிமைமிக்கத் தேர்வீரரும், மன்னருமான பாஹ்லீகரையும், சிந்துக்களின் ஆட்சியாளனையும் {ஜெயத்ரதனையும்}, சோமதத்தன் மற்றும் பூரிஸ்ரவஸையும்,(44) இன்னும் பிற முதன்மையான மன்னர்களையும் ஆரத்தழுவிக் கொள்வாயாக. என் வேண்டுகளோளுக்கிணங்க அவர்கள் அனைவரையும் ஆரத்தழுவி, அவர்களது நலத்தை விசாரிப்பாயாக" என்றான் {அஸ்வத்தாமன்}".(45)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அந்த அஸ்வத்தாமன், உணர்வுகளை இழந்தவனாக, முறிந்த தொடைகளுடன் கிடந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லி, மீண்டும் தன் கண்களை அவன் மீது செலுத்தி, அவனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(46) "ஓ! துரியோதனா, உன்னில் இன்னும் உயிரானது இருக்குமானால், கேட்பதற்கு இனிய இவ்வார்த்தைகளைக் கேட்பாயாக. பாண்டவர்களின் தரப்பில் எழுவர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர், தார்தராஷ்டரர்களில் நாங்கள் மூவர் மட்டுமே {உயிருடன் இருக்கிறோம்}.(47) ஐந்து சகோதரர்கள் {பாண்டவர்கள்}, வாசுதேவன் {கிருஷ்ணன்}, மற்றும் சாத்யகி ஆகியோரே அவர்களின் தரப்பில் இருக்கும் எழுவராவர். நம் தரப்பிலோ நான், கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகிய மூவர் {எஞ்சியிருக்கிறோம்}.(48) திரௌபதியின் மகன்கள் அனைவரும், திருஷ்டத்யும்னனின் பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஓ! பாரதா, பாஞ்சாலர்கள் அனைவரும், எஞ்சியிருந்த மத்ஸ்யர்களும் கொல்லப்பட்டனர்.(49) அவர்கள் என்ன செய்தார்களோ, அந்தப் பழிக்குப்பழியைப் பார். பாண்டவர்கள் இப்போது பிள்ளைகளற்றவர்களா இருக்கின்றனர். அவர்களது முகாமில் உறக்கத்தில் புதைந்திருந்த மனிதர்கள் அனைவரும், விலங்குகள் அனைத்தும் கொல்லப்பட்டன.(50) ஓ! மன்னா, அவர்களது முகாமுக்குள் இரவில் ஊடுருவிய நான் பாவம்நிறைந்த செயல்களைச் செய்யும் பொல்லாதவனான திருஷ்டத்யும்னனை விலங்குகளைக் கொல்வதைப் போலக் கொன்றேன்" {என்றான் அஸ்வத்தாமன்}.(51)
அப்போது துரியோதனன், தன் இதயத்துக்கு ஏற்புடைய அவ்வார்த்தைகளைக் கேட்டு, புலனுணர்வு மீண்டு, பதிலுரையாக இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(52) "கங்கையின் மைந்தனோ {பீஷ்மரோ}, கர்ணனோ, உமது தந்தையோ {துரோணரோ} அடையாத ஒன்று, இறுதியாகக் கிருபர் மற்றும் போஜனனின் {கிருதவர்மனின்} துணையுடன் கூடிய உம்மால் இன்று அடையப்பட்டது.(53) பாண்டவப் படைகளின் தலைவனான அந்த இழிந்தவனையும் (திருஷ்டத்யும்னனையும்}, சிகண்டியையும் நீர் கொன்றிருக்கிறீர். இதன் விளைவாக நான் என்னை மகவத்துக்கு {இந்திரனுக்கு} இணையானவனாகக் கருதுகிறேன்.(54) உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாகட்டும். செழிப்பு உங்களுடையதாகட்டும். நாம் அனைவரும் மீண்டும் சொர்க்கத்தில் சந்திப்போம்" {என்றான் துரியோதனன்}.
இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குருக்களின் மன்னன் {துரியோதனன்} அமைதியடைந்தான்.(55) (கொல்லப்பட்ட) தன் சொந்தங்கள் அனைவருக்குமான தன் துயரங்கள் அனைத்தையும் கைவிட்டு, அவன் {துரியோதனன்} தன் உயிர் மூச்சை விட்டான். அவனது உடல் மட்டுமே பூமியில் கிடந்தபோது, அவனது ஆன்மாவோ புனிதமான சொர்க்கத்திற்கு உயர்ந்து சென்றது.(56) ஓ! மன்னா, இவ்வாறே உமது மகன் துரியோதனன் தன் இறுதி மூச்சை சுவாசித்தான். போரை முதலில் துண்டியவனான அவன், தன் எதிரிகளால் இறுதியாகக் கொல்லப்பட்டான்.(57) அந்த மூன்று வீரர்களும் மன்னனை மீண்டும் மீண்டும் ஆரத்தழுவி கொண்டு அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு அவர்கள் தங்கள் தேர்களில் ஏறினர்.(58)
துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} இந்தப் பரிதாபகரமான புலம்பல்களைக் கேட்ட பிறகே, விடியற்காலையில் நான் நகரத்தை நோக்கிப் புறப்பட்டு வந்தேன்.(59) இவ்வாறே குருக்கள் மற்றும் பாண்டவர்களின் படைகள் அழிக்கப்பட்டன. ஓ! மன்னா, உமது தீய கொள்கையினால் ஏற்பட்ட அழிவு பெரிதானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது.(60) உமது மகன் சொர்க்கத்திற்கு உயர்ந்த பிறகு, நான் துயரத்தால் பீடிக்கப்பட்டேன், மேலும் முனிவர் {வியாசர்} கொடுத்த ஆன்மப் பார்வையையும் இழந்தேன்" {என்றான் சஞ்சயன்}".(61)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மன்னன் {திருதராஷ்டிரன்}, தன் மகன் {துரியோதனன்} இறந்ததைக் கேட்டு, வெப்பப் பெருமூச்சுகளை விட்டுக்கொண்டு, பெரும் சோகத்தில் மூழ்கினான்"[1].(62)
[1] கங்குலி மற்றும் மன்மதநாததத்தர் ஆகியோரின் பதிப்புகளில் இந்த சௌப்திக உபபர்வம் இங்கேயே நிற்காமல் இந்தப் பர்வம் முழுவதும் தொடர்கிறது. கும்பகோணம் பதிப்பு மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்பு ஆகியவற்றில் இங்கே "சௌப்திக பர்வம்" என்ற உபபர்வம் நிறைவடைகிறது. அடுத்ததாக ஐஷீப பர்வம் என்ற உபபர்வம் தொடங்குகிறது.
*********சௌப்திக உபபர்வம் முற்றும்*********
சௌப்திக பர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 62
ஆங்கிலத்தில் | In English |