Yudhishthira's lamentation! | Sauptika-Parva-Section-10 | Mahabharata In Tamil
(ஐஷீக பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கு நடந்த செய்தியைச் சொன்ன திருஷ்டத்யும்னனின் சாரதி; திரௌபதியை அழைத்து வர நகுலனை அனுப்பிய யுதிஷ்டிரன்; முகாமை அடைந்து, மாண்டு கிடக்கும் தன் தரப்பினரைக் கண்டு அழுது புலம்பிய யுதிஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், "அந்த இரவு கழிந்ததும், திருஷ்டத்யும்னனின் சாரதியானவன், உறங்கும் வேளையில் ஏற்பட்ட அந்தப் பேரழிவைக் குறித்த செய்தியை மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தான்.(1)
அந்தச் சாரதி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, "தங்கள் முகாமில் கவனமற்றவர்களாகவும், நம்பிக்கையுடனும் உறங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் மகன்களும், துருபதனின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(2) ஓ! மன்னா, இரவு வேளையில் உமது முகாமானது, கொடூரர்களான கிருதவர்மன், கோதமரின் மகன் கிருபர் மற்றும் பாவம் நிறைந்த அஸ்வத்தாமன் ஆகியோரால் நிர்மூலமாக்கப்பட்டது.(3) அம்மனிதர்கள், வேல்கள், ஈட்டிகள் மற்றுப் போர்க்கோடரிகளைக் கொண்டு ஆயிரக்கணக்கான மனிதர்கள், யானைகள், குதிரைகள் அடங்கிய உமது படையை அழித்துவிட்டனர்.(4) கோடரியால் வெட்டி வீழ்த்தப்பட்ட காட்டைப் போல உமது படை கொல்லப்பட்டபோது, உமது முகாமில் இருந்து உரத்த ஓலம் கேட்டது.(5) ஓ! ஏகாதிபதி, அந்தப் பரந்த படையில் நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஓ! அற ஆன்மாவே, கிருதவர்மன் கவனமற்றிருந்த வேளையில் மிகுந்த சிரமத்திற்கிடையில் நான் தப்பித்து வந்தேன்" என்றான்.(6)
குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, (எதிரிகளை எதிர்த்துச் செல்கையில் அவர்களைத்) தாங்கிக் கொள்ள இயன்றவனானாலும், இந்தத் தீயச் செய்தியைக் கேட்டு, தன் மகன்களை இழந்ததால் ஏற்பட்ட துயரத்தில் பீடிக்கப்பட்டுக் கீழே பூமியில் விழுந்தான்.(7) சாத்யகி, முன்னே வந்து மன்னனைப் பிடித்துக் கொண்டான். பீமசேனன், அர்ஜுனன், மாத்ரியின் இரு மகன்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} ஆகியோரும் தங்கள் கரங்களை நீட்டினர் {நீட்டி யுதிஷ்டிரனைப் பிடித்துக் கொண்டனர்}.(8)
அந்தக் குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, புலனுணர்வு மீண்டு, சோகத்துடனும், தடுமாற்றத்துடனும் இவ்வார்த்தைகளைச் சொல்லிப் பெரும் துயரத்தால் அழுது புலம்பினான்: "ஐயோ, எதிரியை வென்றும், இறுதியில் நாமே வெல்லப்பட்டோம் {வீழ்ந்தோம்}.(9) ஆன்மப் பார்வை கொண்டவர்களால் கூட நிகழ்வுகளின் வழியை அறிவது கடினமே. வெல்லப்பட்ட எதிரி, வெற்றியடைந்துவிட்டான். மேலும், நாமோ வெற்றியடைந்தும், வெல்லப்பட்டோம் {வீழ்த்தப்பட்டோம்}.(10) சகோதரர்கள், நண்பர்கள், தந்தைமார், மகன்கள், நலன் விரும்பிகள், சொந்தங்கள், அமைச்சர்கள் ஆகியோர் அனைவரையும் வென்று இறுதியில் நாமே வெல்லப்பட்டோம்.(11) அவலம் செழிப்பாகத் தெரிகிறது, செழிப்பு அவலமாகத் தெரிகிறது. இந்த நமது வெற்றியானது, தோல்வியின் வடிவத்தையே ஏற்றிருக்கிறது. எனவே நமது வெற்றி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.(12) வெற்றியையடைந்தும், துயரமடைந்த அற்பனாக நான் துயரத்தையே அடைகிறேன். பிறகு, எவ்வாறு இதை என்னால் வெற்றியாகக் கருத முடியும்? உண்மையில், நான் எதிரியால் இரண்டு மடங்கு வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.(13) யாருக்காகச் சொந்தங்கள் மற்றும் நண்பர்களைக் கொன்று வெற்றிக்காகப் பாவமிழைத்தோமோ, ஐயோ, அவர்கள் வெற்றி மகுடம் சூடிக்கொண்டு, வீழ்த்தப்பட்டவர்களான கவனம் நிறைந்த எதிரிகளால் வெல்லப்பட்டனர்.(14)
முள்பதித்த கணைகள், நாளீகங்கள் ஆகியவற்றைத் தன் பற்களாகவும், வாளையே தன் நாவாகவும், நாணொலி தரும் நாண்கயிற்றுடன் கூடிய வில்லையே தன் வாயாகவும், உள்ளங்கையொலிகளையே தன் முழக்கமாகவும் கொண்டவனும், போரில் இருந்து ஒருபோதும் பின்வாங்காதவனும், மனிதர்களில் சிங்கமுமான கோபக்காரக் கர்ணனிடம் இருந்தே தப்பித்தவர்கள், ஐயோ!, கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(15,16) தேர்களையே ஆழமான தடாகங்களாகவும், கணைமாரியே அலைகளாகவும், போர்வீரர்களின் ஆபரணங்களே ரத்தினங்களாகவும், தேர்க்குதிரைகளையே விலங்குகளாகவும், ஈட்டிகள் மற்றும் வாள்களையே மீன்களாகவும், யானைகளேயே முதலைகளாகவும், விற்களையே பெரும் நீர்ச்சுழிகளாகவும், வலிமைமையிக்க ஆயுதங்களையே நுரையாகவும், போர் அடையாளத்தையே சக்தியில் பெரும் சந்திரோதயமாகவும், நாண்கயிற்றின் நாணொலி மற்றும் உள்ளங்கையொலிகளையே முழக்கங்களாகவும் கொண்ட துரோணப் பெருங்கடலைத் தங்கள் சிறந்த ஆயுதங்களாலான படகால் கடந்த இந்த இளவரசர்கள், ஐயோ கவனக்குறைவினால் கொல்லப்பட்டார்கள்.(17,18) இவ்வுலகின் மனிதர்களைப் பொறுத்தவரையில் கவனக்குறைவைவிட மரணத்திற்கான சக்திமிக்கக் காரணம் வேறு எதுவுமில்லை. கவனமற்ற மனிதனை செழுமையானது அனைத்துப் பக்கங்களிலும் கைவிடுகிறது, மேலும் அனைத்து வகை அவலங்களும் அவனை மூழ்கடிக்கின்றன.(19)
{பீஷ்மரின்} தேரில் நின்றதும், சிறந்த நுனி கொண்டதுமான உயர்ந்த கொடிமரத்தில் இருந்த புகைவிரிப்பானது {கொடியானது} அந்தப் பீஷ்ம நெருப்பை, பிழையற்றதாகக் காட்டியது. கணைகளே அதன் தழல்களாயின, கோபமே அதை வீசிப்பெருக்கும் காற்றானது. உறுதிமிக்க வில்லின் நாணொலியும், உள்ளங்கையொலியும் அந்நெருப்பின் முழக்கமானது. கவசமும், பல்வேறு வகை ஆயுதங்களும் அதற்குள் ஊற்றப்படும் ஹோமக் காணிக்கைகள் ஆகின. பகைவரின் பரந்த படையானது அந்த நெருப்பால் எரிக்கப்படும் உலர்ந்த காட்டுப்புல்லானது. ஐயோ, பயங்கர சக்தியுடன் கூடிய {பீஷ்மரெனும்} அந்தக் கடும் நெருப்பையும் தாங்கிக் கொண்டவர்கள், இறுதியில் கவனக் குறைவால் வீழ்ந்தனர்.(20,21) கவனக்குறைவுள்ளவன், ஞானத்தையோ, தவத்தையோ, செழிப்பையோ, பெரும்புகழையோ ஒருபோதும் அடையமுடியாது.(22)
நமது எதிரிகளில் எஞ்சியிருக்கும் சிலர், உண்மையில் இந்திரனைப் போன்றவர்களான அம்மன்னர்களின் மகன்கள் மற்றும் பேரர்கள் பலரை நமது கவனக்குறைவினால் கொன்றுவிட்டனர். ஐயோ, விலைமதிப்புமிக்கக் கப்பல்களில் செல்லும் வணிகர்களைப் போல, பெருங்கடலைக் கடந்த பிறகு, கவனக்குறைவினால் ஒரு சிறு ஓடையில் அழிந்தனர்.(23) யாருடைய உடல்கள் இப்போது வெறுந்தரையில் கிடக்கின்றனவோ, அவர்கள் பொறாமையுள்ள அந்த இழிந்தவர்களால் கொல்லப்பட்டுச் சொர்க்கத்தையே அடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. எனினும், இளவரசி கிருஷ்ணைக்காகவே {திரௌபதிக்காகவே} வருந்துகிறேன்.(24) அவள் {திரௌபதி}, தன் சகோதரர்கள், மகன்கள் மற்றும் மதிப்பிற்குரிய தந்தையான பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்} ஆகியோரின் படுகொலையைக் கேட்டு உணர்வற்றுப் பூமியில் விழப் போகிறாள் என்பதில் ஐயமில்லை. அவள், துயரால் உடல்மெலிந்து மீண்டும் எழும்ப மாட்டாள்.(25) இத்தகு துன்பத்தின் விளைவால் உண்டாகும் துயரைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், மகிழ்ச்சிக்குத் தகுந்தவளான அவள் எந்த அவல நிலையை அடைவாள்? மகன்கள் மற்றும் சகோதரர்களின் படுகொலையால் இதயம் பிளக்கப்படும் அவள், நெருப்பில் எரிபவளாக ஆகப்போகிறாள்" என்றான்.(26)
ஆழமான துயரால் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்ட அந்தக் குரு குல மன்னன் {யுதிஷ்டிரன்}, பிறகு நகுலனிடம், "செல்வாயாக, சென்று, நற்பேறற்றவளான இளவரசி திரௌபதியையும், அவளது தாய்வழி உறவினர்களையும் அழைத்து வா" என்றான்.(27)
நீதியில் யமனுக்கு இணையான அம்மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையைக் கீழ்ப்படிந்து ஏற்ற நகுலன், பாஞ்சால மன்னனின் {துருபதனின்} மனைவியர் அனைவருடன் {தன் தாய்மாருடன்} திரௌபதி எங்குத் தங்கியிருந்தாளோ அந்த இடத்திற்குத் தன் தேரில் வேகமாகச் சென்றான்.(28) யுதிஷ்டிரன், மாத்ரியின் மகனை {நகுலனை} அனுப்பிவிட்டு, துயரால் நொறுங்கி, கண்களில் கண்ணீருடன், எங்குத் தன் மகன்கள் போரிட்டார்களோ, எங்குப் பல்வேறு வகை உயிரினங்கள் இன்னும் மொய்த்துக் கொண்டிருந்தனவோ, அந்தக் களத்திற்குத் தன் நண்பர்கள் துணையுடன் சென்றான்.(29) கடுங்காட்சிகள் நிறைந்த அந்தச் சபிக்கப்பட்ட களத்திற்குள் நுழைந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, குருதியில் மறைந்து, உடல்கள் சிதைக்கப்பட்டு, உடல்களில் இருந்து தலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தரையில் கிடப்பவர்களான தன் மகன்கள், நலன்விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் கண்டான்.(30) நீதியாளர்களில் முதன்மையான யுதிஷ்டிரன், அவர்களை அந்த அவலநிலையில் கண்டு ஆழமாகத் துயரடைந்தான். பிறகு அந்தக் குருக்களின் தலைவன் {யுதிஷ்டிரன்}, தன் தொண்டர்களுடன் சேர்ந்து உரக்க அழுது, புலன் உணர்வுகளை இழந்து கீழே பூமியில் விழுந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)
சௌப்திக பர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |