Draupadi sat on praya! | Sauptika-Parva-Section-11 | Mahabharata In Tamil
(ஐஷீக பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : திரௌபதியை யுதிஷ்டிரனிடம் அழைத்து வந்த நகுலன்; மயக்கமடைந்த திரௌபதி; அஸ்வத்தாமனைப் பாண்டவர்கள் கொல்லவில்லையெனில் பிராயத்தில் அமரப்போவதாகத் தீர்மானித்த திரௌபதி; அவளுக்கு ஆறுதல் சொன்ன யுதிஷ்டிரன்; அஸ்வத்தாமனைக் கொன்று அவனுடைய தலையிலுள்ள மணியைக் கொண்டு வரச் சொன்ன திரௌபதி; நகுலனைச் சாரதியாகக் கொண்டு அஸ்வத்தாமனைக் கொல்லப் புறப்பட்ட பீமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா, போரில் தனது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்டதைக் கண்ட மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆன்மா பெருந்துயரில் மூழ்கியது.(1) அந்த மகன்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளை நினைத்துப் பார்த்ததும் அந்தச் சிறப்புமிக்க ஏகாதிபதியை ஆழமான சோகம் ஆட்கொண்டது.(2) உணர்வற்று நடுங்கிக் கொண்டிருந்த அவனுடைய கண்கள் கண்ணீரால் குளித்தன. அப்போது அவனது நண்பர்களும் கவலையில் மூழ்கியிருந்தாலும், அவனுக்கு ஆறுதல் சொல்லத் தொடங்கினர்.(3) அந்நேரத்தில் {தன் அண்ணனின்} குற்றேவல்களை நிறைவேற்றுவதில் திறம் கொண்டவனான நகுலன், பெரும் துயரில் இருந்த இளவரசி கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்}, சூரியப் பிரகாசம் கொண்ட தனது தேரில் அங்கே வந்து சேர்ந்தான்.(4)
அவள் {திரௌபதி இதுவரை} உபப்லாவ்யத்தில் வசித்திருந்தாள். அவள் {திரொபதி}, தன் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர் என்ற இதயம் பிளக்கும் செய்தியைக் கேட்டு மிகவும் கலக்கமடைந்திருந்தாள்.(5) காற்றால் அசைக்கப்பட்ட வாழையைப் போல நடுங்கிய அந்த இளவரசி கிருஷ்ணை {திரௌபதி}, யுதிஷ்டிரனின் முன்னிலைக்கு வந்து, துயரால் பீடிக்கப்பட்டுக் கீழே விழுந்தாள்.(6) முற்றாக மலர்ந்த இரு தாமரைகளுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளது முகம், இருளால் மூடப்பட்ட சூரியனைப் போலத் துயரால் கறுத்திருந்தது.(7) கோபம் நிறைந்தவனும், கலங்கடிக்க முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான விருகோதரன் {பீமன்}, பூமியில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவளைக் {திரௌபதியைக்} கண்டு வேகமாகச் சென்று, அவளை உயர்த்தி {எழச் செய்து}, தன் கரங்களால் அவளை {ஆறுதலாகப்} பிடித்துக் கொண்டான்.(8)
பீமசேனனால் ஆறுதலளிக்கபட்ட அந்த அழகிய மங்கை {திரௌபதி} அழத் தொடங்கி, தன் சகோதரர்களுடன் கூடியவனான பாண்டு மகன்களில் மூத்தவனிடம் {யுதிஷ்டிரனிடம்},(9) "ஓ! ஏகாதிபதி, க்ஷத்திரியக் கடமைகளை நோற்ற உமது துணிச்சல்மிக்க மகன்களின் படுகொலைக்குப் பின்பு, நீர் மொத்த பூமியையும் அடைந்து அதை {பூமியை} அனுபவிக்கப் போவது நற்பேற்றாலேயே.(10) ஓ@ பிருதையின் {குந்தியின்} மைந்தரே {யுதிஷ்டிரரே}, மொத்த பூமியையும் அடைந்துவிட்டோம் என்ற நினைப்பில் நீர் மகிழ்ச்சியாக இருப்பதும் நற்பேற்றாலேயே. மதங்கொண்ட யானைக்கு ஒப்பான நடையைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} குறித்து நீர் சிந்திக்காததும் நற்பேற்றாலேயே. உபப்லாவ்யத்தில் வசித்த என்னைப் போலல்லாமல், க்ஷத்திரியக் கடமைகளை நோற்றுக் கொல்லப்பட்ட உமது வீர மகன்களை நீர் எண்ணாதிருப்பதும் நற்பேற்றாலேயே.(12) ஓ! பிருதையின் மைந்தரே, உறங்கிக் கொண்டிருந்த அந்த வீரர்கள், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவனான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} படுகொலை செய்யப்பட்டதைக் கேட்டு, ஏதோ நெருப்பின் மத்தியில் இருப்பவளைப் போல, துயரம் என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.(13) போரில் உமது ஆற்றலை வெளிப்படுத்தி, பாவச் செயல்கள் புரியும் அந்த இழிந்தவன் {அஸ்வத்தாமன்} மற்றும் அவனது தொண்டர்கள் அனைவரின் உயிர்களையும் நீர் எடுக்காமல், அந்தத் துரோணர் மகனைத் தனது பாவச்செயலுக்கான கனியை அறுவடை செய்ய வைக்காமல் இருந்தால், பாண்டவர்களே, கேளுங்கள், நான் இங்கே பிராயத்தில் அமரப் போகிறேன்" என்றாள் {திரௌபதி}.(14,15)
யக்ஞசேனன் மகளும், ஆதரவற்றவளுமான கிருஷ்ணை {திரௌபதி}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, பாண்டு மகனில் மூத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் அருகில் அமர்ந்தாள்.(16) நீதிமிக்க ஆன்மா கொண்டவனான அரசமுனி யுதிஷ்டிரன், தன் அன்புக்குரிய ராணி {திரௌபதி} பிராயத்தில் அமர்வதைக் கண்டு, அவளிடம், "ஓ! மங்கலமான பெண்ணே {கல்யாணி}, ஓ! அறநெறிகளை அறிந்தவளே, உன் மகன்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உன்னதமான இறப்பை நேர்மையாகச் {க்ஷத்திரிய முறைக்கேற்ப} சந்தித்தனர். அவர்களுக்காக நீ வருந்துவது தகாது.(17,18) ஓ! அழகிய இளவரசி, துரோணர் மகனைப் பொறுத்தவரை, அவர் தொலைதூரக் காட்டுக்குச் சென்றுவிட்டார். ஓ! பெண்ணே, போரில் அவருடைய வீழ்ச்சியை உன்னால் எவ்வாறு உறுதிசெய்ய முடியும்?" என்று கேட்டான்.(19)
திரௌபதி {யுதிஷ்டிரனிடம்}, "துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் தலையில் ஒரு ரத்தினத்துடனேயே {மணியுடனே} பிறந்தான் என நான் கேட்டிருக்கிறேன். போரில் அந்த இழிந்தவனைக் கொன்ற பிறகு, என்னிடம் கொண்டு வரப்படும் அந்த ரத்தினத்தை {மணியை} நான் காண்பேன். ஓ மன்னா, அந்த ரத்தினத்தை உமது தலையில் சூட்டிய பிறகே நான் என் உயிரைத் தாங்கிக் கொள்ளவேன். இதுவே எனது தீர்மானம்" என்று பதிலுரைத்தாள்.(20)
பாண்டுவின் அரசமகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அழகிய கிருஷ்ணை {திரௌபதி}, பீமசேனனை அணுகி, உயர்ந்த நோக்கம் கொண்ட இந்த வார்த்தைகளை அவனிடம் {பீமனிடம்} சொன்னாள்:(21) "ஓ! பீமரே, க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்து, நீர் என்னைக் காப்பதே உமக்குத் தகும். சம்பரனைக் கொன்ற மகவத்தை {இந்திரனைப்} போல, பாவச்செயல்களைச் செய்யும் அம்மனிதனை {அஸ்வத்தாமனைக்} கொல்வீராக.(22) இவ்வுலகில் உமது ஆற்றலுக்கு இணையானவர்கள் வேறு எவரும் இல்லை. வாரணாவத நகரில் பேரிடர் நேர்ந்த சமயத்தில் நீர் எவ்வாறு பார்த்தர்கள் அனைவரின் புகலிடமாக இருந்தீர் என்பது உலகம் முழுவதும் நன்றாக அறியப்பட்டிருக்கிறது.(23) மேலும் ஹிடிம்பனால் நாம் பார்க்கப்பட்டபோதும்,[1] அதே வழியில் நீரே எங்கள் புகலிடமானீர்.(24) மகவத் {இந்திரன்} (தன் மனைவியான) புலோமனின் மகளை {பௌலோமி [அ] சச்சியைக்] காத்தது போலவே, விராட நகரத்தில் நீர் என்னைப் பேரிடரில் {கீசகனிடம்} இருந்து காத்தீர்[1].(25) ஓ! பார்த்தரே {பீமரே}, ஓ! எதிரிகளைக் கொல்பவரே, முன் நாட்களில் நீர் அடைந்த அந்தப் பெரும் சாதனைகளைப் போலவே, இப்போது துரோணர் மகனை {அஸ்வத்தாமனைக்} கொன்று மகிழ்ச்சியடைவீராக" {என்றாள் திரௌபதி}.(26)
[1] திரௌபதி இங்கே தன்னையும் சேர்த்துச் சொல்வதாகப் பொருள்படுகிறது. ஆனால், ஹிடிம்பவதத்தின் போது திரௌபதியின் சுயம்வரமே நடந்திருக்கவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பிலும், கங்குலியில் உள்ளதைப் போலவே திரௌபதி தன்னையும் சேர்த்து சொல்வது போலவே இவ்வாக்கியம் அமைந்திருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நாம் ஹிடிம்பனைக் கண்டபோது, நீரே மீண்டும் புகலிடமானீர்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பிலோ, "அவ்வாறே ஹிடிம்பனைக் கண்ட ஸமயத்திலும் நீர் பார்த்தர்களுக்கு ரக்ஷகரானீர்" என்ற வரிகளில் திரௌபதி தன்னையும் சேர்த்து சொல்வது போலத் தெரியவில்லை.
பெரும் வலிமைமிக்கவனும், குந்தியின் மகனுமான பீமசேனனால், அந்த இளவரசியின் {திரௌபதியின்} இவ்வார்த்தைகளையும், பரிதாபகரமான இன்னும் வேறு புலம்பல்களையும் கேட்டுப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் பெருந்தேரில் ஏறிய அவன் {பீமன்}, நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் அழகிய வில்லையும் எடுத்துக் கொண்டான்.(28) நகுலனைத் தன் தேரோட்டியாகச் செய்து கொண்டும், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனைக்} கொல்லும் தீர்மானத்துடனும், தன் வில்லை வளைக்கத் தொடங்கி, தாமதமில்லாமல் தன் குதிரைகளைத் தூண்டச் செய்தான்.(29) ஓ! மனிதர்களில் புலியே, காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இவ்வாறு தூண்டப்பட்டுப் பெரும் வேகத்தில் சென்றன.(30) பெரும் வீரமும், மங்காத சக்தியும் கொண்ட பீமன், பாண்டவ முகாமில் இருந்து புறப்பட்டு, அஸ்வத்தாமனின் வாகனத்தடத்தைப் பின்தொடர்ந்தபடியே பெரும் வேகத்தில் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)
சௌப்திக பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 31
[1] நான்காம் பர்வமான விராட பர்வத்தில் வரும் உபபர்வமான கீசகவதப் பர்வத்தில்
http://mahabharatham.arasan.info/2014/11/Mahabharatha-Virataparva-Section21.html
ஆங்கிலத்தில் | In English |