Aswatthama solicited Krishna's discus! | Sauptika-Parva-Section-12 | Mahabharata In Tamil
(ஐஷீக பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தைக் கொண்டவனாதலால் பீமனின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு யுதிஷ்டிரனை வேண்டிய கிருஷ்ணன்; அஸ்வத்தாமன் பிரம்மாயுதத்தை அடைந்த வரலாறு; கிருஷ்ணனின் சக்கரத்தை அடைவதற்காகத் துவாரகை சென்ற அஸ்வத்தாமனின் துணிபு; அவனால் சக்கரத்தை உயர்த்த இயலாமை; கிருஷ்ணனின் கடிந்துரை; பீமனைப் பாதுகாக்க யுதிஷ்டிரனிடம் வேண்டிய கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தடுக்கப்படமுடியாதவனான பீமசேனன் புறப்பட்டதும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனான அந்த யதுகுலத்தின் காளை {கிருஷ்ணன்}, குந்தியின் மகனான யுதிஷ்டிரனிடம்,(1) "ஓ! பாண்டுவின் மைந்தரே {யுதிஷ்டிரரே}, உமது தம்பி, தன் மகன்களின் படுகொலைகளால் உண்டான துயரத்தில் மூழ்கி, துரோணரின் மகனை {அஸ்வத்தாமரைக்} கொல்லும் விருப்பத்தில் போரிடத் தனியொருவராகச் செல்கிறார்.(2) ஓ! பாரதக் குலத்தின் காளையே, உமது தம்பியர் அனைவரிலும், பீமரே உமக்கு அன்பானவர். அவர் பெரும் ஆபத்தில் வீழ்ந்தும், நீர் ஏன் இன்னும் காக்க முயலவில்லை?(3) பகை நகரங்களை அடக்கவல்ல துரோணர், தன் மகனுக்கு {அஸ்வத்தாமருக்கு} அறிவித்த பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, மொத்த உலகத்தையும் எரிக்கவல்லதாகும்.(4) சிறப்புமிக்கவரும், உயர்ந்த அருளைக் கொண்டவரும், வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவருமான அந்த ஆசான் {துரோணர்}, அந்த ஆயுதத்தைத்தான் மகிழ்ச்சியுடன் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குக்} கொடுத்தார்.(5)
அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவரான அவருடைய {துரோணருடைய} ஒரே மகன் {அஸ்வத்தாமர்}, அஃதை {பிரம்மசிரத்தை} அவரிடம் இரந்து கேட்டார். அவர் {துரோணர்}, தமக்கு விருப்பமில்லாமலேயே அவ்வாயுதத்தின் அறிவை அஸ்வத்தாமருக்குப் புகட்டினார்.(6) சிறப்புமிக்கத் துரோணர், தன் மகனின் மன உலைவை {சஞ்சலத்தை} அறிந்திருந்தார். கடமைகள் அனைத்தையும் அறிந்தவரான அந்த ஆசான் அவருக்குக் கட்டளையாக,(7) "ஓ! குழந்தாய், போருக்கு மத்தியில் நீ பெரும் ஆபத்தைச் சந்தித்தாலும், இவ்வாயுதத்தை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது, அதிலும் குறிப்பாக மனிதர்களை எதிர்த்துப் பயன்படுத்தக்கூடாது" என்று சொன்னார்.(8) இவ்வாறே ஆசான் துரோணர் தன் மகனிடம் சொன்னார். அவர் {துரோணர்}, சிறிது நேர் கழித்து மீண்டும் அவரிடம் {அஸ்வத்தாமரிடம்}, "ஓ! மனிதர்களில் காளையே, நீ நீதியின் பாதையில் நடக்கமாட்டாய் என்று தெரிகிறது" என்றார்.(9) தன் தந்தையின் இந்தக் கசப்பான வார்த்தைகளைக் கேட்டவரும், தீய ஆன்மா கொண்டவருமான அஸ்வத்தாமர், அனைத்து வகைச் செழிப்பையும் அடையும் {அடைய முடியாத} மனத்தளர்ச்சியுடன், துயரத்தில் பூமியெங்கும் திரியத் தொடங்கினார்.(10)
ஓ! குருக்களின் தலைவரே {யுதிஷ்டிரரே}, நீங்கள் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்தபோது, துவாரகைக்கு வந்த அவர் {அஸ்வத்தாமர்}, விருஷ்ணிகளால் வழிபடப்பட்டுத் தன் வசிப்பிடத்தை அங்கே அமைத்துக் கொண்டார்.(11) அவர், துவாரகையில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட பிறகு, ஒரு நாள், தோழனற்றவனாகவும், அருகே யாருமில்லாதவனாகவும் கடற்கரையில் இருந்த என்னிடம் வந்து, சிரித்துக் கொண்டே,(12) "ஓ! கிருஷ்ணா, ஓ! தாசார்ஹா, தேவர்களாலும், கந்தர்வர்களாலும் வழிபடப்படுவதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட, பாரதர்களின் ஆசானான என் தந்தை {துரோணர்}, கடுந்தவங்களுக்குப் பிறகு அகஸ்தியரிடம் இருந்து அடைந்ததுமான பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது, என் தந்தையிடம் இருப்பது போலவே, இப்போது என்னிடமும் இருக்கிறது.(13,14) ஓ! யதுகுலத்தில் முதன்மையானவனே, அந்தத் தெய்வீக ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு, போரில் எதிரிகள் அனைவரையும் கொல்லவல்ல உனது சக்கரத்தை எனக்குக் கொடுப்பாயாக" என்று கேட்டார்.(15)
கரங்களைக் கூப்பிக் கொண்டு பெரும்பிதற்றல் செய்து, இவ்வாறு அவர் என்னிடம் எனது சக்கரத்தைக் கேட்டபோது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரரே}, நான் அவரை மகிழ்விக்க விரும்பி, அவரிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னேன்,(16) "தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் ஆகியோர் அனைவரும், பறவைகள், பாம்புகள் ஆகிய அனைத்தும் ஒன்றுகூடினாலும், என் சக்தியின் நூறில் ஒரு பங்குக்கும் அஃது இணையாகாது.(17) நான் இந்த வில்லையும், இந்த ஈட்டியையும் {சக்தியையும்}, இந்தச் சக்கரத்தையும், இந்தக் கதாயுதத்தையும் கொண்டிருக்கிறேன். என்னிடம் இருக்கும் இவற்றில், நீர் எதை விரும்பினாலும், நான் அஃதை உமக்குக் கொடுப்பேன். நீர் கொடுக்க விரும்பும் ஆயுதத்தைக் கொடுக்காமலே, இந்த என் ஆயுதங்களில் நீர் எதையெடுக்க வல்லவரோ, அஃதை எடுத்துக் கொண்டு, போரில் பயன்படுத்திக் கொள்வீராக" என்றேன்.(19) இவ்வாறு சொல்லப்பட்டதும், என்னை அறைகூவி அழைப்பதைப் போலத் துரோணரின் அந்தச் சிறப்புமிக்க மகன் {அஸ்வத்தாமன்}, இரும்பாலானதும், ஆயிரம் ஆரங்களைக் கொண்டதும், வஜ்ரத்தைப் போன்று கடினமானதும், சிறப்புமிக்கக் குழியை {நடுத்துவாரத்தைக்} கொண்டதுமான என் சக்கரத்தை என்னிடம் இருந்து வேண்டினார்.(20)
நான் அவரிடம், "எடுத்துக் கொள்ளும்" என்று சொன்னேன். இவ்வாறு சொல்லப்பட்டதும், திடீரென எழுந்த அவர், தன் இடக்கையால் அச்சக்கரத்தைப் பற்றினார்.(21) இருப்பினும், அந்த ஆயுதத்தை அது கிடந்த இடத்தில் இருந்து அவரால் அசைக்கவும் முடியவில்லை. பிறகு அவர் அதை வலக்கரத்தால் பற்ற ஆயத்தமானார்.(22) பிறகு அவர், உறுதியாக அதைப் பற்றிக் கொண்டு, தன் பலமனைத்தையும் வெளிப்படுத்தினாலும் அதைத் தரிக்கவோ, அசைக்கவோ முடியவில்லை. இதனால் அந்தத் துரோணரின் மகன் சோகத்தில் நிறைந்தார். ஓ! பாரதரே, முயற்சியால் களைத்தபிறகே அவர் {அஃதை எடுப்பதை} நிறுத்தினார்.(23,24)
அந்நோக்கத்தில் இருந்து தமது இதயத்தை விலக்கியப் பிறகு, உணர்வற்றவராகவும், கவலை கொண்டவராகவும் இருந்த அஸ்வத்தாமரிடம் நான்,(25) "ஓ! பிராமணரே, எவன் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகக் கருதப்படுகிறானோ, எவன் காண்டீவத்தைத் தரித்திருக்கிறானோ, எவன் வெண்குதிரைகளைத் தன் தேரில் பூட்டியிருக்கிறானோ, எந்த வீரன் தன் கொடிமரத்தில் குரங்குகளின் இளவரசனைப் பொறித்திருக்கிறானோ,(26) எந்த வீரன், தேவர்களின் தேவனும், நீலமிடறு கொண்டவனும், உமையின் தலைவனுமான பெரும் சங்கரனிடமே மல்யுத்தம் செய்து வெல்ல விரும்பினானோ,(27) எந்தப் பல்குனனைத் தவிரப் பூமியில் எனக்கு வேறு அன்புக்குரிய நண்பவன் எவனும் இல்லையோ, எந்த நண்பனுக்கு என் மனைவியர் மற்றும் பிள்ளைகள் உட்பட எதையும் நான் கொடுப்பேனோ,(28) அந்த என் அன்புக்குரிய நண்பனான, களங்கமற்ற செயல்களையுடைய பார்த்தன் {அர்ஜுனன்} கூட என்னிடம் இத்தகு வார்த்தைகளை ஒருபோதும் சொன்னதில்லை.(29)
தவத்துறவுகளின் மூலமும், இமய மலைச்சாரலில் பனிரெண்டு வருடங்கள் கடுந்தவம் செய்தும் எந்த மகனை அடைந்தேனோ,(30) எவன் சனத்குமாரனின் ஒரு பகுதியோ, என்னைப் போலவே கடும் நோன்புகளை நோற்றவளான என் மனைவி ருக்மிணியிடம் என்னால் எவன் பெறப்பட்டானோ,(31) அந்தப் பெருஞ்சக்தி கொண்ட எனது மகன் பிரத்யும்னன் கூட, சிறுமதி கொண்ட உம்மைப் போல, பொருட்களில் சிறந்ததும், ஒப்பற்றதுமான இந்தச் சக்கரத்தை ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை.(32) பெரும் வலிமையைக் கொண்ட ராமர் {பலராமர்}, ஒருபோதும் இத்தகு வார்த்தைகளை என்னிடம் பேசியதில்லை. கதனோ, சாம்பனோ நீர் கேட்டதை ஒருபோதும் கேட்டதில்லை.(33) துவாரகையில் வசிக்கும் விருஷ்ணி மற்றும் அந்தகக் குலங்களின் பெருந்தேர்வீரர்களில் எவரும் என்னிடம் நீர் கேட்டதைக் கேட்டதில்லை.(34) நீர் பாரதர்களுடைய ஆசானின் {துரோணரின்} மகனாவீர். யாதவர்கள் அனைவராலும் நீர் உயர்வாக மதிக்கப்படுகிறீர். ஓ! தேர்வீரர்களில் முதன்மையானவரே, நான் கேட்கிறேன், இவ்வாயுதத்தைப் பயன்படுத்தி நீர் யாருடன் போரிடப்போகிறீர்?" என்று கேட்டேன்.(35)
இவ்வாறு என்னால் சொல்லப்பட்ட துரோணர் மகன், "ஓ! கிருஷ்ணா, ஓ மங்கா மகிமை கொண்டவனே, உன்னை வணங்கிய பிறகு, உன்னிடம் போரிட வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. ஓ! கிருஷ்ணா, தேவர்கள் மற்றும் தானவர்களால் புகழப்படும் உன் சக்கரத்தை அதற்காகவே நான் வேண்டினேன். நான் அஃதை அடைந்திருந்தால், இவ்வுலகில் வெல்லப்பட முடியாதவனாக ஆகியிருப்பேன்.(37) ஓ! கேசவா, ஓ! கோவிந்தா, கிட்டத்தட்ட அடையமுடியாத என் விருப்பத்தை அடைய முடியாமலே நான் உன்னை விட்டுச் செல்லப் போகிறேன். இப்போது என்னிடம் நல்வார்த்தைகளைப் பேசுவாயாக.(38) பயங்கரமான மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான நீ ,இந்தப் பயங்கரமான ஆயுதத்தைத் தரித்திருக்கிறாய். இவ்வாயுதத்தால் நீ ஒப்பற்றவனாக இருக்கிறாய். இவ்வுலகில் இதைத்தரிக்கவல்லவன் எவனுமில்லை" என்றார்.(39)
என்னிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, பிறகு, குதிரை இணைகள் {ஜோடிகள்} பலவற்றையும், அதிகச் செல்வத்தையும், பல்வேறு வகை ரத்தினங்களையும் பெற்றுக் கொண்டு துவாரகையை விட்டகன்றார்.(40) அவர் கோபம்நிறைந்தவராகவும், தீய ஆன்மா கொண்டவராகவும், மன அமைதியற்றவராகவும், மிகக் கொடூரராகவும் இருக்கிறார். பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அவர் அறிந்திருக்கிறார். விருகோதரர் {பீமர்} அவரிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}".(41)
சௌப்திக பர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |