Aswatthama let off brahmashira! | Sauptika-Parva-Section-13 | Mahabharata In Tamil
(ஐஷீக பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனுடன் சேர்ந்து பீமனைப் பின்தொடர்ந்த பாண்டவர்கள்; நிற்குமாறு அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டும் நிற்காத பீமன்; வியாசருடன் அமர்ந்திருக்கும் அஸ்வத்தாமனைக் கண்ட பாண்டவர்கள்; பிரம்மசிர ஆயுதத்தை வெளியிட்ட அஸ்வத்தாமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதன்மையானவனும், யாதவர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனுமான அவன் {கிருஷ்ணன்}, இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வலிமைமிக்க அனைத்து வகை ஆயுதங்களுடன் ஆயத்தமாக இருக்கும் தன் அற்புதத் தேரில் ஏறிக் கொண்டான்.(1) தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவையும், காம்போஜ இனத்தைச் சேர்ந்த முதன்மையானவையுமான குதிரைகளில் ஈரிணைகள் {இரண்டு ஜோடிகள்} அவ்வாகனத்தில் பூட்டப்பட்டிருந்தன. அந்தச் சிறந்த தேரின் தூரம் {ஏர்க்கால்} காலைச் சூரியனின் நிறத்தில் இருந்தது.(2) {அந்த ஏர்க்காலின்} வலப்புறத்தில் சைவியம் என்றறியப்பட்ட குதிரையும், இடப்புறத்தில் சுக்ரீவமும்; பார்ஷினியில் {பின்புறத்தில்} மேகபுஷ்பம் மற்றும் வலாஹகம் என்றழைக்கப்பட்ட இரு குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.(3) அந்தத் தேரில், ரத்திரங்கள் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், தெய்வீகத் தச்சனால் {விஸ்வகர்மனால்} செய்யப்பட்டதுமான தெய்வீகக் கொடிமரமொன்று மாயனை (விஷ்ணுவைப்) போலவே உயர்ந்து நின்றிருந்தது.(4) அந்தக் கொடிமரத்தின் நுனியில் வினதையின் மகன் (கருடன்) பெருங்காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். உண்மையில், அந்தப் பாம்புகளின் எதிரியானவன் {கருடன்}, உண்மையின் உடல்வடிவமான {சத்தியரூபியான} கேசவனின் {கிருஷ்ணனின்} கொடிமர உச்சியில் அமர்ந்திருந்தான்.(5)
வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான ரிஷிகேசன் {கிருஷ்ணன்} அத்தேரில் ஏறிக்கொண்டான். அவனை அடுத்து தடுத்தற்கரிய சாதனைகளைக் கொண்ட அர்ஜுனனும், குருக்களின் மன்னனான யுதிஷ்டிரனும் அதே வாகனத்தில் ஏறினார்கள்.(6) சாரங்கம் என்றழைக்கப்படும் வில்லைத் தரிக்கும் தசார்ஹ குலத்தோனின் {கிருஷ்ணனின்} அருகில் அத்தேரில் அமர்ந்திருந்த பாண்டுவின் மகன்கள் இருவரும், வாசவனின் {இந்திரனின்} அருகில் அமர்ந்திருக்கும் அசுவினி இரட்டையர்களைப் போல மிக அழகாகத் தெரிந்தனர்.(7) அந்தத் தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, உலகமனைத்தாலும் புகழப்படும் தன் தேரில் அவர்களை ஏறச் செய்து, பெரும் வேகம் கொண்ட அந்த முதன்மையான குதிரைகளைத் தூண்டினான்.(8) பாண்டு மகன்கள் இருவராலும், அந்த யாதவக் காளையாலும் {கிருஷ்ணனாலும்} செலுத்தப்பட்ட அந்தச் சிறந்த வாகனத்தில் இருந்த குதிரைகள் அவர்களை ஏற்றிக் கொண்ட பிறகு திடீரெனப் பறந்தன.(9) அந்தச் சாரங்கபாணியை {கிருஷ்ணனை} அவ்விலங்குகள் பெரும் வேகத்தோடு சுமந்து சென்ற போது, அவற்றின் விரைவால் ஏற்பட்ட ஒலியானது, காற்றின் ஊடாகச் செல்லும் பறவைகளின் ஒலியைப் போலப் பேரொலியாக இருந்தது.(10)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, பெரும் வேகத்தில் சென்ற அவர்கள், விரைவாகத் தாங்கள் பின்தொடர்ந்து சென்ற வலிமைமிக்க வில்லாளியான பீமசேனனை அடைந்தனர்.(11) அந்தப் பெருந்தேர்வீரர்கள் பீமனைச் சந்தித்தாலும், எதிரியை நோக்கி மூர்க்கமாகச் செல்பவனும், கோபத்தில் நிறைந்தவனுமான அந்தக் குந்தியின் மகனைத் {பீமனைத்} தடுக்கத் தவறினர்.(12) சிறப்புமிக்கவர்களும், உறுதியானவர்களுமான அந்த வில்லாளிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {பீமன்}, பகீரதனால் கீழே கொண்டுவரப்பட்ட ஆற்றின் {கங்கையாற்றின்} கரையை, மிக வேகமாகச் செல்லும் தன் குதிரைகளின் மூலம் அடைந்தான்.(13) அங்கே நீர் முனையின் {கரையின்} அருகில், உயர் ஆன்மா கொண்டவரும், சிறப்புமிக்கவரும், கரிய நிறத்தவரும், தீவில் பிறந்தவருமான வியாசர் பல முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பதைக் கண்டான்.(14) மேலும் அவன் {பீமன்}, புழுதியால் மறைக்கப்பட்டவனும், குசப்புல்லாலான ஆடை உடுத்தியவனும், தெளிந்த நெய்யை மேனியெங்கும் பூசிக்கொண்டிருந்தவனும், தீச்செயல்கள் புரிபவனுமான துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அங்கே அவரின் {வியாசரின்} அருகில் அமர்ந்திருப்பதையும் கண்டான்.(15)
வலிமைக்கக் கரங்களைக் கொண்ட குந்தியின் மகன் பீமசேனன், அஸ்வத்தாமனை நோக்கி விரைந்து, கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்து, "நில், நிற்பாயாக" என்றான்.(16) கையில் வில்லுடன் தன்னை நோக்கி வரும் அந்தப் பயங்கர வில்லாளியையும் {பீமனையும்}, ஜனார்த்தனனின் {கிருஷ்ணனின்} தேரிலிருந்த அவனது சகோதரர்கள் இருவரையும் {யுதிஷ்டிரன் மற்றும் அர்ஜுனனையும்} கண்ட துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(17) மிகுந்த கலக்கத்தை அடைந்து, தன் நேரம் வந்ததென நினைத்தான். தளர்வடையா ஆன்மா கொண்ட அவன் {அஸ்வத்தாமன்}, (தன் தந்தையிடம் இருந்து தான் அடைந்த) அந்த உயர்ந்த ஆயுதத்தை {பிரம்மசிரத்தை} தன் மனத்தில் அழைத்தான்.(18) பிறகு அவன் {அஸ்வத்தாமன்}, தன் இடக்கையால் ஒரு புல்லை {சீழ்கீர்க்கையை {நாணற்புல்லை}} எடுத்தான்.
பெரும்துன்பத்தில் வீழ்ந்த அவன் {அஸ்வத்தாமன்}, அந்தப் புல்லை உரிய மந்திரங்களுடன் ஈர்த்து, அதைப் பலமிக்க அந்தத் தெய்வீக ஆயுதமாக {பிரம்மசிரமாக} மாற்றினான்.(19) (பாண்டவர்களின்) கணைகளையும், தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட அவர்களையும் {பாண்டவர்களையும்} காணப்பொறுக்காத அவன் {அஸ்வத்தாமன்}, கோபத்தால், "பாண்டவர்களின் அழிவுக்காக" என்ற இந்தப் பயங்கரமான வார்த்தைகளைச் சொன்னான்.(20) ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, துரோணரின் வீர மகன் {அஸ்வத்தாமன்} இவ்வார்த்தைகளைச் சொல்லி, அனைத்துலகங்களும் திகைக்கும் வகையில் அவ்வாயுதத்தை ஏவினான்.(21) யுகத்தின் முடிவில் அனைத்தையும் அழிக்கும் யமனைப் போல, மூவுலகங்களையும் எரிக்கவல்லதாகத் தெரிந்த அந்தப் புல்லில் இருந்து நெருப்புண்டானது" {என்றார் வைசம்பாயனர்}.(22)
சௌப்திக பர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |