Aswatthama unable to withdraw the weapon! | Sauptika-Parva-Section-15 | Mahabharata In Tamil
(ஐஷீக பர்வம் - 06)
பதிவின் சுருக்கம் : தன் ஆயுதத்தை விலக்கித் திருப்பிக் கொண்ட அர்ஜுனன்; தன் ஆயுதத்தை விலக்கிக் கொள்ள முடியாத அஸ்வத்தாமன், அதைப் பாண்டவப் பெண்களின் கருவறையை நோக்கிச் செலுத்துவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மனிதர்களில் புலியே, நெருப்பைப் போன்ற காந்தியைக் கொண்ட அவ்விரு முனிவர்களையும் கண்டவுடனேயே, தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் தெய்வீகக் கணையைத் திரும்பிப் பெறத் தீர்மானித்தான்.(1) கரங்களைக் கூப்பிக் கொண்ட அவன், அம்முனிவர்களிடம், "நான் இவ்வாயுதத்தைப் பயன்படுத்தும் போது, "(எதிரியின்) அந்த ஆயுதம் தணிவடையட்டும்" என்று சொல்லியே ஏவினேன்.(2) நான் இந்த உயர்ந்த ஆயுதத்தைத் திரும்பப் பெற்றால், பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தன் ஆயுதத்தின் சக்தியால் எங்கள் அனைவரையும் எரித்துவிடுவார் என்பதில் ஐயமில்லை.(3) நீங்கள் இருவரும் தேவர்களைப் போன்றவர்களாவீர். எங்கள் நன்மையையும், மூன்று உலகங்களின் நன்மையையும் பாதுகாக்கும்படியான ஏதாவது வழிமுறையை ஆலோசிப்பதே உங்களுக்குத் தகும்" என்றான்.(4)
இந்த வார்த்தைகளைச் சொன்ன தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன் ஆயுதத்தைத் திருப்பிக் கொண்டான். போரில் அவ்வாயுதத்தைத் திருப்புவது தேவர்களுக்கே மிகக் கடினமான செயலாகும்.(5) ஒரு முறை ஏவப்பட்ட அந்த உயர்ந்த ஆயுதத்தைப் பாண்டுவின் மகனை {அர்ஜுனனைத்} தவிர, மஹேந்திரனாலும் திருப்பமுடியாது.(6) அவ்வாயுதம் பிரம்ம சக்தியில் பிறந்ததாகும். தூய்மையற்ற ஆன்மா கொண்ட எந்த மனிதனாலும் அதைத் திருப்ப முடியாது. பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவனால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.(7) பிரம்மச்சரிய நோன்பைப் பயிலாத ஒருவன், அஃதை ஏவிய பிறகு மீண்டும் திருப்பினால், அனைத்துக் கருவிகளுடன் சேர்த்து, அவனுடைய {ஏவியவனின்} தலையையும் அது தாக்கி வீழ்த்தும்.(8) அர்ஜுனன் ஒரு பிரம்மச்சாரியும், நோன்புகளை நோற்பவனுமாவான். கிட்டத்தட்ட அடையமுடியாத ஆயுதத்தை அடைந்த அவன் {அர்ஜுனன்}, பெரும் ஆபத்தான சூழ்நிலையில் மூழ்கியிருந்தபோதும், ஒருபோதும் அதைப் பயன்படுத்தவில்லை.(9) உண்மை நோன்பை நோற்பவனும், பெரும் வீரம் கொண்டவனும், பிரம்மச்சாரியின் வாழ்வுமுறையை நோற்பவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பணிவுடையவனாகவும், பெரியோர் அனைவருக்கும் கீழ்ப்படிந்தவனாகவும் இருந்தான். இதன் காரணமாகவே அவனால் அவ்வாயுதத்தைத் திருப்பிக் கொள்ள முடிந்தது.(11)
ஆனால் துரோணரின் மகனோ {அஸ்வத்தாமனோ}, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த உயர்ந்த ஆயுதத்தைப் போரில் திரும்பப் பெற முடியாமல், தீவில் பிறந்தவரான முனிவரிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(12) "ஓ! தவசியே, பேராபத்தால் அச்சமடைந்தும், என் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பியும், பீமசேனன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவும் நான் இந்த ஆயுதத்தை ஏவினேன்.(13) ஓ! புனிதமானவரே {வியாசரே}, பொய் நடத்தை கொண்ட இந்தப் பீமசேனன், போரில் திருதராஷ்டிரர் மகனைக் {துரியோதனனைக்} கொன்றபோது பாவம் நிறைந்த செயலைச் செய்தான்.(14) ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, அதன் காரணமாகவே தூய்மையற்ற ஆன்மா கொண்டவனான நான் இந்த ஆயுதத்தை ஏவினேன். எனினும், இப்போது இதை நான் திரும்பப் பெறத் துணிய மாட்டேன்.(15) பாண்டவர்களின் அழிவுக்காகவே, தடுத்தற்கரிய இந்தத் தெய்வீக ஆயுதத்தை நெருப்பின் சக்தியால் ஈர்த்து நான் ஏவினேன்.(16) பாண்டவர்களின் அழிவுக்காகத் திட்டமிட்டு ஏவப்பட்டதே இந்த ஆயுதம். எனவே, அது பாண்டு மகன்கள் அனைவரின் உயிரையும் எடுக்கும்.(17) ஓ! மறுபிறப்பாளரே, கோபத்தால் நான் இந்தப் பாவம் நிறைந்த செயலைச் செய்துவிட்டேன். பாண்டவர்களின் அழிவுக்காகவே போரில் நான் இவ்வாயுதத்தை இருப்புக்கு அழைத்தேன்" என்றான் {அஸ்வத்தாமன்}.(18)
வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, "ஓ! குழந்தாய் {அஸ்வத்தாமா}, பிருதையின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதத்தை அறிந்தவனாவான். கோபத்தாலோ, போரில் உன்னை அழிக்கவோ அவன் அந்த ஆயுதத்தை ஏவவில்லை.(19) மறுபுறம், உன் ஆயுதத்தைக் கலங்கடிக்கவே அவன் அதைப் பயன்படுதிதனான். மேலும் அவன் {அர்ஜுனன்} அதைத் திரும்பவும் பெற்றான்.(20) உன் தந்தை கற்பித்ததன் மூலம் பிரம்ம ஆயுதத்தையே அடைந்தும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிடவில்லை.(21) அர்ஜுனன் அந்த அளவுக்குப் பொறுமையும், அந்த அளவுக்கு நேர்மையும் கொண்டிருக்கிறான். மேலும் அவன் அனைத்து ஆயுதங்களையும் அறிந்தவனாவான். அப்படிப்பட்ட ஒரு மனிதனை, அவனது சகோதரர்களுடன் சேர்த்து அழிக்க நீ ஏன் முயல்கிறாய்?(22) பிரம்மசிரம் என்றழைக்கப்படும் ஆயுதமானது எந்த இடத்தில் வைத்து, மற்றொரு உயர்ந்த ஆயுதத்தால் கலங்கடிக்கப்படுமோ, அந்த இடத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு சொட்டு நீரையும் மேகங்கள் பொழியாது. அக்காலத்தில் அங்கே பஞ்சமேற்படும்.(23)
இக்காரணத்திற்காகவே, சக்தியைக் கொண்டவனாகவே இருந்தாலும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, வாழும் உயிரினங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் உனது ஆயுதத்தை அவனது ஆயுதத்தால் கலங்கடிக்கவில்லை.(24) பாண்டவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்; நீயும் பாதுகாக்கப்பட வேண்டும்; இந்த நாடும் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இந்த உனது தெய்வீக ஆயுதத்தைத் திரும்ப அழைப்பாயாக.(25) உன் இதயத்தில் இருந்து இந்தக் கோபத்தை அகற்றி, பாண்டவர்களைப் பாதுகாப்பாக இருக்கச் செய்வாயாக. அரச முனியான யுதிஷ்டிரன், பாவம் நிறைந்த எச்செயலையும் செய்து வெற்றியடைய ஒருபோதும் விரும்பமாட்டான்[1].(26) உன் தலையில் இருக்கும் அந்த மணியைக் கொடுப்பாயாக. பாண்டவர்கள் அதை {மணியை} எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக உனக்கு உன் உயிரைத் தருவார்கள்" என்றார் {வியாசர்}.(27)
[1] "யுதிஷ்டிரன் உன்னைக் கொன்று ஆட்சி செய்ய மாட்டான் என்று இதற்குப் பொருள் என நான் நினைக்கிறேன்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ராஜரிஷியான பாண்டவன் அதர்மத்தினால் வெல்வதற்கு விரும்பவில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அரசமுனியான பாண்டவன், அதர்மத்தின் மூலம் வெல்லவிரும்பவில்லை" என்றிருக்கிறது.
துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, "பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இதுவரை ஈட்டியிருக்கும் செல்வங்கள் அனைத்தையும் விட இந்த எனது மணி விலைமதிப்புமிக்கதாகும். இந்த மணியைச் சூடியவனுக்கு ஆயுதங்கள், நோய் மற்றும் பசி ஆகியவற்றிடமிருந்து எப்போதும் அச்சமேற்படாது. தேவர்கள், தானவர்கள் மற்றும் நாகர்களிடம் அவன் அச்சங்கொள்ளத் தேவையில்லை.(29) ராட்சசர்கள் மற்றும் கள்வர்களிடமும் அவன் அச்சங்கொள்ள மாட்டான். எவ்வழியிலும் நான் அதைப் பிரிந்திருக்க முடியாது.(30) இருப்பினும், ஓ! புனிதமானவரே, நீர் எதைச் செய்யச் சொல்கிறீரோ அஃது என்னால் செய்யப்பட வேண்டும். இதோ எனது மணி. இதோ நான். எனினும், (மரண ஆயுதத்தால் ஈர்க்கப்பட்டிருக்கும்) இப்புல்லானது,(31) உயர்வானதும், வலிமைமிக்கதும், கலங்கடிக்கப்பட முடியாத ஆயுதமாகவும் இருப்பதால், இது பாண்டவப் பெண்களின் கருவறைகளில் பாயும். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே- வியாசரே}, இவ்வாயுதத்தை ஒருமுறை ஏவியபிறகு என்னால் திரும்பப் பெற முடியாது.(32) நான் இப்போது இந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசப் போகிறேன். ஓ! புனிதமானவரே, உமது ஆணைகளைப் பொறுத்தவரையில், வேறு விதங்களில் நான் அவற்றுக்கு நிச்சயம் கீழ்ப்படிவேன்" என்றான் {அஸ்வத்தாமன்}.(33)
வியாசர், "இவ்வாறே செய். எனினும், ஓ! பாவமற்றவனே, வேறு எந்த நோக்கத்திலும் புத்தியைச் செலுத்தாதே. இவ்வாயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசி ஒழிவடைவாயாக {அனைத்தையும் நிறுத்துவாயாக}" என்றார்".(34)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தீவில் பிறந்தவரின் {துவைபாயனரான வியாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணரின் மகன், அந்த ஆயுதத்தைப் பாண்டவப் பெண்களின் கருவறைகளில் வீசினான்".(36)
சௌப்திக பர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |