Thou shall wander for three thousand years! | Sauptika-Parva-Section-16 | Mahabharata In Tamil
(ஐஷீக பர்வம் - 07)
பதிவின் சுருக்கம் : கருவை மீட்பேன் என்று சொன்ன கிருஷ்ணன்; அஸ்வத்தாமனைச் சபித்தது; கிருஷ்ணனின் சாபத்தை அங்கீகரித்த வியாசர்; சாபத்தை ஏற்றுக் கொண்டு, தன் தலையில் இருந்த மணியைக் கொடுத்த அஸ்வத்தாமன்; திரௌபதியிடம் திரும்பிச் சென்ற பாண்டவர்கள்; திரௌபதியிடம் மணியைக் கொடுத்த பீமன்; அம்மணியைத் தலையில் சூடிக்கொள்ளுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன திரௌபதி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} (பாண்டவப் பெண்களின் கருவறையில்) அவ்வாயுதம் ஏவப்படப்போவதை அறிந்த ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, உற்சாகம் நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் {அஸ்வத்தாமனிடம்} சொன்னான்:(1) "பக்தி நோன்புகளை நோற்கும் ஒரு குறிப்பிட்ட பிராமணர், இப்போது அர்ஜுனனின் மருமகளாக இருப்பவளான விராடனின் மகள் {உத்தரை} உபப்லாவ்யத்தில் இருக்கும்போது அவளைக் கண்டு,(2) "குரு குலம் அருகிப் போகும்போது உனக்கு ஒரு மகன் பிறப்பான். இந்தக் காரணத்திற்காக அந்த உன் மகன் பரீக்ஷித் என்ற பெயரால் அழைக்கப்படுவான்" என்றார்.(3) அந்தப் பக்திமானின் வார்த்தைகள் உண்மையாகும். பாண்டவர்கள் பரீக்ஷித் என்ற பெயரில் ஒரு மகனை {பேரனை} அடைவார்கள்" என்றான் {கிருஷ்ணன்}.(4)
சாத்வத குலத்தில் முதன்மையானவனான கோவிந்தன் {கிருஷ்ணன்} இவ்வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கோபத்தால் நிறைந்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(5) "ஓ! கேசவா {கிருஷ்ணா}, பாண்டவர்களிடம் நீ கொண்ட ஒருதலைச் சார்பினால் சொல்லப்படும் இது நடக்காது. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, என் வார்த்தைகள் நிறைவேறும்.(6) என்னால் உயரத்தப்பட்ட என் ஆயுதம் {ஐஷீகம் [நாணற்புல்லாலான பிரம்மசிரம்]}, நீ எந்தக் கருவைக் காக்க விரும்புகிறாயோ, விராடன் மகளின் {உத்தரையின்} கருவறையில் உள்ள அந்தக் கருவின் மேலேயே விழும்" என்றான்.(7)
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "இந்த வலிமைமிக்க ஆயுதத்தின் பாய்ச்சல் கனியற்றதாகாது. அந்தக் கரு மாளும். மாண்டதே மீண்டும் உயிரை அடைந்து நீண்ட வாழ்வைப் பெறும்.(8) உம்மைப் பொறுத்தவரையில், ஞானிகள் அனைவரும் உம்மைக் கோழையாகவும், இழிந்த பாவியாகவும் அறிவார்கள். எப்போதும் பாவம் நிறைந்த செயல்களிலேயே ஈடுபடும் நீர் பிள்ளைகளைக் கொல்லும் கொலையாளியாவீர். இக்காரணத்திற்காக, இந்த உமது பாவங்களுக்குரிய கனியை நீர் தாங்கவே வேண்டும்.(9) எந்தத் தோழனும் இல்லாமல், பேசுவதற்கு எவருமில்லாமல் இப்பூமியில் மூவாயிரம் {3000} வருடங்கள் நீர் திரிந்து கொண்டிருப்பீர்[1].(10) தனியொருவராகவும், உம்மருகே எவரும் இல்லாத நிலையிலும் நீர் பல்வேறு நாடுகளில் திரிந்து கொண்டிருப்பீர். ஓ! இழிந்தவரே {அஸ்வத்தாமரே}, மனிதர்களுக்கு மத்தியில் உமக்கு இடமேதும் கிடையாது.(11) சீழ் மற்றும் குருதியின் முடைநாற்றம் உம்மிலிருந்து வெளிப்படும், மேலும் அடைதற்கரிய காடுகளும், அச்சந்தரும் முட்புதர்களும்தான் உமது வசிப்பிடங்களாகும். ஓ! பாவம் நிறைந்த ஆன்மா கொண்டவரே {அஸ்வத்தாமரே}, நோய்கள் அனைத்தின் கனத்துடன் நீர் பூமியில் திரிந்து கொண்டிருப்பீர்.(12)
[1] மன்மதநாதத்தரின் பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே மூவாயிரம் வருடங்கள் அஸ்வத்தாமன் திரிய வேண்டும் என்றும், கங்குலியில் சொல்லப்படும் வர்ணனைக்கேற்பவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "உம்மையோ கற்றறிந்தவர்கள் அனைவரும் இழிவான மனிதரென்றும், பாவியென்றும், அடிக்கடி பாவத்தொழிலைச் செய்பவரென்றும், குழந்தைகளுடைய உயிரைப் போக்குகிறவரென்றும் கருதுகிறார்கள். ஆதலால், நீர் இந்தப் பாவச் செய்கையினுடைய பலனை அடைவீராக. மூவாயிரம் வருஷகாலம் இந்தப் பூமியில் ஸஞ்சரிக்கப் போகிறீர். நீர் ஓரிடத்திலும் ஒருகாலும் ஒருவரோடும் ஒருவரின் ஸல்லாபத்தையும் அடையாதவராகவும், ஸஹாயமற்றவராகவும் ஜனங்களில்லாத தேசங்களில் ஸஞ்சரிக்கப்போகிறீர். அல்பரே, உமக்கு ஜனங்களுடைய மத்தியில் வாஸம் ஏற்படாது. பாவத்தில் புத்தியுள்ளவரே, நீர் சீழினாலும் ரத்தத்தினாலும் துர்நாற்றமுள்ளவராகவும் பிரவேசிக்க முடியாத ஆரண்யத்தை இருப்பிடமாகக் கொண்டவராகவும் இருந்து ஒருவராக நெடுங்காலம் பூமியில் ஸஞ்சரிக்கப் போகிறீர்" என்றிருக்கிறது. ஆக நம்மிடம் இருக்கும் முழுமஹாபாரதங்கள் அனைத்திலும் அஸ்வத்தாமன் மூவாயிரம் வருடங்கள் உலகில் திரிய சபிக்கப்பட்டவன் என்றே இருக்கிறது.
வீரப் பரீக்ஷித் வயதை அடைந்து, வேதங்களை அறிந்து, பக்தி நோன்புகளை நோற்று, சரத்வான் மகனிடம் {கிருபரிடம்} இருந்து ஆயுதங்கள் அனைத்தையும் அடைவான்.(13) நீதிமிக்க ஆன்மாக் கொண்ட அந்த மன்னன் {பரீக்ஷித்}, உயர்ந்த ஆயுதங்கள் அனைத்தின் அறிவையும் அடைந்து, க்ஷத்திரியக் கடமைகள் அனைத்தையும் அறிந்து, அறுபது {60} ஆண்டுகளுக்குப் பூமியை ஆள்வான்.(14) மேலும், ஓ! தீய ஆன்மா கொண்டவரே, உமது கண்களுக்கு முன்பாகவே அந்தப் பிள்ளை {பரீக்ஷித்} குருக்களின் வலிமைமிக்க மன்னனாவான்.(15) உமது ஆயுதநெருப்பின் சக்தியால் எரிக்கப்பட்டாலும் நான் அவனை மீட்பேன். ஓ மனிதர்களில் இழிந்தவரே, என் தவங்கள் மற்றும் என் உண்மையின் சக்தியை நீர் காண்பீராக" என்றான் {கிருஷ்ணன்}.(16)
வியாசர் {அஸ்வத்தாமனிடம்}, "மிகக் கொடூரமான இந்தச் செயலைச் செய்து, எங்களை அவமதித்ததாலும், (பிறப்பால்) நல்ல பிராமணனாக இருந்தாலும், உன் நடத்தை இவ்வாறு இருப்பதாலும்,(17) தேவகியின் மகன் {கிருஷ்ணன்} சொன்ன அந்தச் சிறந்த வார்த்தைகள், க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றும் உன் வழக்கில் உணரப்படும் என்பதில் ஐயமில்லை" என்றார்.(18)
அஸ்வத்தாமன் {வியாசரிடம்}, "ஓ! புனிதமானவரே, மனிதர்கள் அனைவரின் மத்தியில் உம்முடன் நான் வாழ்ந்து வருவேன். மனிதர்களில் முதன்மையானவனும், சிறப்புமிக்கவனுமான இவனது வார்த்தைகள் உண்மையாகட்டும்" என்றான்".(19)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு, அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, தன் மணியை உயர் ஆன்மப் பாண்டவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்களது கண்களுக்கு முன்பாகவே உற்சாகமில்லாமல் காட்டுக்குள் சென்றான்.(20) தங்கள் எதிரிகள் அனைவரையும் தண்டித்துக் கொன்றுவிட்ட பாண்டவர்கள், கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, தீவில் பிறந்த கிருஷ்ணரையும் {துவைபானரான வியாசரையும்}, பெருந்தவசியான நாரதரையும் முன்னிட்டுக் கொண்டு, அஸ்வத்தாமனுடன் பிறந்த அந்த மணியை எடுத்துக் கொண்டு, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்த நுண்ணறிவு கொண்ட திரௌபதியிடம் வேகமாகத் திரும்பி வந்தனர்".(21,22)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அந்த மனிதர்களில் புலிகள் {பாண்டவர்கள்}, காற்றின் வேகத்திற்கு ஒப்பான சிறந்த குதிரைகளால் சுமக்கப்பட்டு, தசார்ஹ குலத்தோனையும் {கிருஷ்ணனையும்} உடனழைத்துக் கொண்டு, தங்கள் முகாமுக்குத் திரும்பினர்.(23) தங்கள் தேர்களில் இருந்து வேகமாகக் கீழிறங்கியவர்களும், அதிகத் துயருடன் இருந்தவர்களுமான அந்தப் பெருந்தேர்வீரர்கள், துருபதன் மகளான கிருஷ்ணை {திரௌபதி} துயரத்தால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.(24) கிருஷ்ணனுடன் கூடிய பாண்டவர்கள், சோகம் மற்றும் துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்தவளும், உற்சாகமற்றவளுமான அந்த இளவரசியை {திரௌபதியை} அணுகி, அவளைச் சுற்றி அமர்ந்தனர்.(25)
அப்போது, மன்னனின் {யுதிஷ்டிரனின்} அன்புக்குரியவனும், வலிமைமிக்கவனுமான பீமசேனன், அந்தத் தெய்வீக மணியை அவளிடம் {திரௌபதியிடம்} கொடுத்து, இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(26) "ஓ! இனிமையான மங்கையே இந்த மணி உனதானது. உன் மகன்களைக் கொன்றவன் வெல்லப்பட்டான். உன் கவலையை விட்டு எழுந்து, ஒரு க்ஷத்திரியப் பெண்ணுக்குரிய கடமைகளை நினைவுகூர்வாயாக.(27) ஓ! கரிய கண்களைக் கொண்டவளே, ஓ! மருண்ட பெண்ணே, வாசுதேவன் (உபப்லாவ்யத்திலிருந்து) தூதுசெல்லப் புறப்பட்டபோது, அந்த மதுசூதனனிடம் இந்த வார்த்தைகளையே நீ சொன்னாய்:(28) "ஓ! கோவிந்தா, மன்னர் {யுதிஷ்டிரர்} அமைதியை விரும்புவதால், நான் கணவர்கள் இல்லாதவள். நான் மகன்களோ, சகோதரர்களோ இல்லாதவள். நீயும் {என்னைப் பொறுத்தவரையில்} உயிரோடில்லை" என்றாய்.(29)
இந்தக் கசந்த வார்த்தைகளையே நீ மனிதர்களில் முதன்மையானவனான கிருஷ்ணனிடம் சொன்னாய். க்ஷத்திரிய நடைமுறைகளுக்கு மிகவும் ஏற்புடைய அந்த வார்த்தைகளை நீ நினைவுகூர்வதே உனக்குத் தகும்.(30) அரசுரிமைக்கான நமது வழியில் தடையாக இருந்த இழிந்த துரியோதனன் கொல்லப்பட்டான். துச்சாசனனின் உயிர்க்குருதியை நான் குடித்துவிட்டேன்.(31) நம் எதிரிகளுக்கு நாம் பட்ட கடனைச் செலுத்திவிட்டோம். மனிதர்கள் பேசும்போது, இனியும் நம்மை நிந்திக்க முடியாது. துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} வென்றாலும், அவன் பிராமணன் என்பதாலும், இறந்துவிட்ட நமது ஆசானுக்கு {துரோணருக்கு} மரியாதை காட்ட வேண்டும் என்பதாலும் அவனை விடுவித்துவிட்டோம்.(32) ஓ! தேவி, அவனது புகழ் அழிக்கப்பட்டது, அவனது உடல் மட்டுமே எஞ்சியிருக்கிறது. தன் மணியை இழந்த அவன், இப்பூமியில் ஆயுதங்களற்றவனாகத் திரியப் போகிறான்" என்றான் {பீமன்}.(33)
திரௌபதி, "நாம் காயம் பிழைத்த காரணத்தால், நாம் அடைந்த கடனை மட்டுமே திரும்பச் செலுத்த நான் விரும்பினேன். ஆசானின் மகன் {அஸ்வத்தாமர்}, அந்த ஆசானை {துரோணரைப்} போலவே எனது மரியாதைக்குரியவராவார்.(34) ஓ! பாரதரே {பீமரே}, இந்த மணியை மன்னர் {யுதிஷ்டிரர்} தன் தலையில் சூடிக் கொள்ளட்டும்" என்றாள். அப்போது அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, திரௌபதியின் விருப்பப்படியே அந்த மணியை எடுத்து, ஆசானின் பரிசென அதைக் கருதி அதைத் தன் தலையில் சூடினான்.(35) சிறப்பானதும், தெய்வீகமானதுமான அந்த மணியைத் தன் தலையில் சூடிய அந்தப் பலமிக்க மன்னன் {யுதிஷ்டிரன்}, தனக்கு மேலே சந்திரனைக் கொண்ட ஒரு மலையைப் போல அழகாகத் தெரிந்தான்.(36) இளவரசி திரௌபதி, தன் மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டிருந்தாலும், மனோபலம் கொண்டவளான அவள், தன் நோன்பை {பிராய நோன்பைக்} கைவிட்டாள். பிறகு மன்னன் யுதிஷ்டிரன், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணனிடம் பின்வரும் வார்த்தைகளைச் சொன்னான்" {என்றார் வைசம்பாயனர்}.(37)
சௌப்திக பர்வம் பகுதி – 16ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |