Narada and Vyasa in between those fires! | Sauptika-Parva-Section-14 | Mahabharata In Tamil
(ஐஷீக பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் தன் பிரம்மாயுதத்தை ஏவியது; இயற்கையில் தோன்றிய இயல்புக்குமீறிய சகுனங்கள்; அவ்விரு ஆயுதங்களின் மூலம் உண்டான இரு நெருப்புகளுக்கிடையில் மூவுலகங்களைக் காப்பதற்காக நின்ற நாரதரும், வியாசரும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, மிகத் தொடக்கத்திலேயே துரோணர் மகனின் {அஸ்வத்தாமனின்} நோக்கத்தைக் குறிப்புகளால் அறிந்து கொண்டான். அர்ஜுனனிடம் அவன் {கிருஷ்ணன்},(1) "ஓ! அர்ஜுனா, ஓ! பாண்டுவின் மகனே, உன் நினைவில் இருப்பதும், துரோணரால் உனக்குப் புகட்டப்பட்ட அறிவுமான அந்தத் தெய்வீக ஆயுதத்தை {பிரம்மாயுதத்தைப்} பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது.(2) ஓ! பாரதா {அர்ஜுனா}, உன்னையும், உன் சகோதர்களையும் காப்பதற்காக, அனைத்து ஆயுதங்களையும் தணிக்கவல்லதான அவ்வாயுதத்தை இப்போரில் ஏவுவாயாக" என்றான்.(3) கேசவனால் {கிருஷ்ணனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், பகைவீரர்களைக் கொல்பவனான அர்ஜுனன், நாண்கயிற்றில் கணை பொருத்தப்பட்ட தன் வில்லை எடுத்துக் கொண்டு, வேகமாகத் தன் தேரில் இருந்து இறங்கினான்.(4) தனது ஆசானின் மகனுக்கும் {அஸ்வத்தாமனுக்கும்}, தனக்கும், தன் சகோதரர்களுக்கும் நன்மையை விரும்பிய அந்த எதிரிகளை எரிப்பவன் {அர்ஜுனன்},(5) தேவர்கள் அனைவரையும் வணங்கி, பெரியோர் அனைவரையும் வணங்கி, உலகங்கள் அனைத்தின் நன்மையைச் சிந்தித்து, "அஸ்வத்தாமரின் ஆயுதம் இவ்வாயுதத்தால் தணிக்கப்படட்டும்" என்ற வார்த்தைகளைச் சொல்லி அவ்வாயுதத்தை ஏவினான்.(6)
காண்டீவதாரியால் {அர்ஜுனனால்} ஏவப்பட்ட அவ்வாயுதமானது, யுக முடிவில் தோன்றும் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போலக் கடுந்தழல்களுடன் எரிந்தது.(7) அதே போலவே, கடுஞ்சக்தி கொண்டவனான துரோணரின் மகனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்ட ஆயுதமும், பெரும் நெருப்புப்பந்தைப் போலப் பயங்கரத் தழல்களுடன் சுடர்விட்டெரிந்தது.(8) எண்ணற்ற இடிமுழக்கங்கள் கேட்டன; ஆயிரக்கணக்கான எரிநட்சத்திரங்கள் விழுந்தன; உயிரினங்கள் அனைத்தும் பேரச்சத்தால் ஈர்க்கப்பட்டன.(9) ஒலியால் நிறைந்திருப்பதாகத் தெரிந்த மொத்த ஆகாயமும், அந்நெருப்பின் தழல்களுடன் பயங்கரத் தன்மையை அடைந்தது. மலைகள், நீர் நிலைகள் மற்றும் மரங்களுடன் கூடிய மொத்த பூமியும் நடுங்கியது.(10)
அப்போது, அனைத்து உயிரினங்களின் ஆன்மாவான நாரதர், பாரத இளவரசர்கள் அனைவரின் பாட்டன் (வியாசர்) ஆகிய இருபெரும் முனிவர்களும், மூவுலகங்களையும் எரிக்கும் அவ்விரு ஆயுதங்களையும் கண்டு, அங்கே தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். அந்த இரு முனிவர்களும், அஸ்வத்தாமன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இரு வீரர்களையும் அமைதிப்படுத்த முயன்றனர்.(11,12) கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையை விரும்பியவர்களும், பெருஞ்சக்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு தவசிகளும், சுடர்மிக்க அவ்விரு ஆயுதங்களுக்கு மத்தியில் நின்றனர்.(13) எந்தச் சக்தியிலும் மூழ்க இயலாதவர்களான அந்தச் சிறப்பு மிக்க முனிவர்கள் இருவரும், அவ்விரு ஆயுதங்களுக்கிடையில் சுடர்மிக்க இரு நெருப்புகளைப் போலத் தங்களை நிறுத்திக் கொண்டனர்.(14) உயிருடன் கூடிய எவ்வுயிரினத்தாலும் தடுக்கப்பட முடியாதவர்களும், தேவர்கள் மற்றும் தானவர்களால் துதிக்கப்படுபவர்களுமான அவ்விருவரும், அவ்விரு ஆயுதங்களின் சக்தியை தணிக்கும் வகையில், உலகமனைத்துக்கும் நன்மை செய்ய இவ்வழியில் செயல்பட்டனர்.(15)
அவ்விரு முனிவர்கள், "இந்தப் போரில் வீழ்ந்த பெருந்தேர்வீரர்கள், பல்வேறு வகை ஆயுதங்களை அறிந்திருந்தனர். எனினும் அவர்கள், மனிதர்கள் மீது இத்தகு ஆயுதத்தை ஒருபோதும் ஏவியதில்லை. வீரர்களே, நீங்கள் செய்திருக்கும் இந்த மூர்க்கச் செயல் என்ன தெரியுமா?" என்று கேட்டனர்".(16)
சௌப்திக பர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 16
ஆங்கிலத்தில் | In English |