Brahma invoked another creator! | Sauptika-Parva-Section-17 | Mahabharata In Tamil
(ஐஷீக பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : தனியொருவனாக இருந்து கொண்டு அஸ்வத்தாமனால் பலரை எவ்வாறு கொல்ல முடிந்தது என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷடிரன்; மஹாதேவனின் மகிமை குறித்துச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; உயிரினங்களைப் படைக்குமாறு சிவனிடம் சொன்ன பிரம்மன்; சிவன் தவம் செய்தது; அந்நேரத்தில் மற்றொருவனை உண்டாக்கி உயிரினங்களைப் படைக்கச் செய்த பிரம்மன்; தவம் நிறைந்து திரும்பிய சிவன் கோபம் கொண்டு மஞ்சவான் மலைக்குச் சென்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "உறங்கும் வேளையில், அந்த மூன்று தேர்வீரர்களால் துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, பெருந்துயரில் இருந்த யுதிஷ்டிரன், தசார்ஹ குலோத்தனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(1) "ஓ! கிருஷ்ணா, பாவம் நிறைந்தவரும், இழிந்தவரும், போரில் பெருந்திறமற்றவருமான அஸ்வத்தாமரால் வலிமைமிக்கத் தேர்வீரர்களான என் மகன்கள் அனைவரையும் எவ்வாறு கொல்ல முடிந்தது?(2) அதே போலவே, ஆயுதங்களில் சாதித்தவர்களும், பேராற்றல் கொண்டவர்களும், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எதிரிகளுடன் போரிட வல்லவர்களுமான துருபதன் பிள்ளைகள் அனைவரையும் அந்தத் துரோணரின் மகனால் {அஸ்வத்தாமரால்} எவ்வாறு கொல்ல முடிந்தது?(3) எவனுடைய முன்பு, பெரும் வில்லாளியான துரோணராலேயே தோன்ற முடியாதோ அந்த முதன்மையான தேர்வீரனான திருஷ்டத்யும்னனை அவரால் எவ்வாறு கொல்ல முடிந்தது?(4) ஓ! மனிதர்களில் காளையே, போரில் நம் மக்கள் அனைவரையும் தனியொருவராகக் கொல்லவதற்கு அந்த ஆசான் மகனால் {அஸ்வத்தாமரால்} என்ன காரியம் செய்யப்பட்டது?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(5)
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "உண்மையில், அந்தத் துரோணரின் மகன் {அஸ்வத்தாமர்}, தேவர்கள் அனைவரிலும் உயர்ந்தவனும், நித்தியமானவனுமான மஹாதேவனின் உதவியை நாடினார். இதன் காரணமாகவே, இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான போர்வீரர்களைத் தனியொருவராக அவரால் கொல்ல முடிந்தது.(6) மஹாதேவன் நிறைவுகொண்டால், அவனால் அழிவின்மையையும் {மரணமில்லா பெருவாழ்வை} அளிக்க முடியும். கிரிசனால் {சிவனால்} இந்திரனையே தடுக்குமளவுக்குப் பெரும் வீரத்தை அளிக்க முடியும்.(7) ஓ! பாரதகுலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நான் உண்மையில் மஹாதேவனை {உள்ளபடியே} அறிவேன். பழங்காலத்தில் அவன் செய்த பல்வேறு செயல்களையும் நான் அறிவேன்.(8) ஓ! பாரதரே, அவனே உயிரினங்கள் அனைத்தின் தொடக்கமும், நடுவும், முடிவும் ஆவான். இந்த மொத்த அண்டமே அவனது சக்தியின் மூலமே இயங்கி அசைகிறது.(9)
பலமிக்கப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, உயிரினங்களைப் படைக்க விரும்பி ருத்திரனைக் கண்டான்; அந்தப் பெரும்பாட்டன் அவனிடம், "தாமதமில்லாமல் உயிரினங்களைப் படைப்பாயாக" என்றான்.(10) இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட செஞ்சடை ருத்திரன் {சிவன்}, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, நீரில் மூழ்கி, உயிரினங்களின் குறைகளை உணரும் வரை நீண்ட காலத்திற்குத் தவம் பயின்றான்.(11) ருத்திரனை எதிர்பார்த்து மிக நீண்ட காலம் காத்திருந்த பெரும்பாட்டன் {பிரம்மன்}, தன் விருப்பத்தின்படியான ஆணையொன்றால் அனைத்து வகை உயிரினங்களின் படைப்பாளனாக வேறொருவனை இருப்புக்கு அழைத்தான்.(12) நீருக்குள் மூழ்கியிருக்கும் கிரிசனை {சிவனைக்} கண்ட அவன் {இரண்டாமவன்}, தன் தந்தையிடம், "எனக்கு முன்பு எந்த உயிரினமும் பிறக்கவில்லையென்றால் நான் உயிரினங்களைப் படைப்பேன்" என்றான்.(13) அதற்கு அவனது தந்தை, அவனிடம், "உன்னைத் தவிர்த்து முதலில் பிறந்த வேறொருவனும் இல்லை. இந்த ஸ்தாணு, நீரில் மூழ்கியிருக்கிறான். எந்தக் கவலையுமின்றிச் சென்று உயிரினங்களைப் படைப்பாயாக" என்றான்.(14) அவன் {இரண்டாமவன்}, இந்த நால்வகை உயிரினங்கள் அனைத்தையும் படைத்த தக்ஷனை முதலாகக் கொண்ட உயிரினங்கள் பலவற்றைப் படைத்தான்.(15)
எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அவர்கள் படைக்கப்பட்ட உடனேயே பசியால் பீடிக்கப்பட்டு, தங்கள் தந்தையையே உண்ண விரும்பி அவனை நோக்கி ஓடினர்.(16) அதன் பேரில் பிரம்மனால் உண்டாக்கப்பட்ட அந்த இரண்டாமவன், தன் வாரிசுகளிடம் இருந்து பாதுகாக்கப்பட விரும்பி, அவனை {பிரம்மனை} நோக்கி ஓடினான். அவன் அந்தப் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, இவர்களிடம் இருந்து என்னைப் பாதுகாப்பீராக, இந்த உயிரினங்களுக்கு நிர்ணயிக்கப்படும் உணவை அவர்கள் உண்ணட்டும்" என்றான்.(17) அப்போது பெரும்பாட்டன், செடிகொடிகளையும், காய்கறிகளையும் அவர்களது உணவாக நிர்ணயித்து, பலமிக்கவர்களுக்கு {பலமிக்க உயிரினங்களின்} வாழ்வாதாரமாக {உணவாக} பலவீனர்களை {பலமற்ற உயிரினங்களை} நிர்ணயித்தான்.(18) புதிதாகப் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் இவ்வாறு தங்களுக்கு ஊட்டப்பண்பு {வாழ்வாதாரம்} நிர்ணயிக்கப்பட்டதும், தங்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று, மகிழ்ச்சியுடன் தங்கள் தங்கள் வகைக்கான இனங்களுடன் கூடி {புணர்ந்து} பெருகினர்.(19) அந்த உயிரினங்கள் பெருகி, பெரும்பாட்டனும் நிறைவடைந்ததும், முதலில் பிறந்தவன் நீரில் இருந்து எழுந்து, உயிரோட்டத்துடன் கூடிய படைப்பைக் கண்டான்.(20)
அவன் {ருத்திரன்}, பல்வேறு வகை உயிரினங்கள் படைக்கப்பட்டுவிட்டதையும், அவை தங்கள் சக்தியாலேயே பல்கி பெருகிவிட்டதையும் கண்டான். இக்காட்சியால் கோபமடைந்த ருத்திரன், தன் பிறப்புறுப்பை {லிங்கத்தைப்} பூமியின் குடல்களுக்குள் மறையும்படி செய்தான். மங்காதவனான பிரம்மன் அவனிடம் மென்மையான வார்த்தைகளில்,(21,22) "ஓ! சர்வா, இவ்வளவு காலம் நீருக்குள் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? என்ன காரணத்தினால் உனது பிறப்புறுப்பை {லிங்கத்தை} பூமியின் குடல்களுக்குள் காணாமல் போகச் செய்தாய்?" என்று கேட்டான்.(23) இவ்வாறு கேட்கப்பட்ட அந்த அண்டத்தின் தலைவன் {சிவன்}, கோபத்துடன் தலைவன் பிரம்மனிடம், "இந்த உயிரினங்கள் அனைத்தையும் வேறு எவனோ படைத்திருக்கிறான். பிறகு இந்த என் அங்கமானது என்ன நோக்கத்தை நிறைவேற்றப் போகிறது?[1](24) ஓ! பெரும்பாட்டனே, கடுந்தவத்தின் மூலம் நான் இந்த உயிரினங்கள் அனைத்திற்கான உணவைப் படைத்திருக்கிறேன். இந்தச் செடிகொடிகளும், அவற்றை உண்டு உயிர்வாழ்வோரைப் போலவே பல்கிப் பெருகும்" என்றான்.(25)
[1] "உணவும், உயிரினங்களும் இவ்வாறு விதிக்கப்பட்ட பிறகு, இனியும் படைப்பு கொள்கைக்கான தேவையில்லை என்பது இங்கே பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மூத்தவரான அந்த ஸ்தாணுவானவர் ஜலத்தினின்று எழுந்தார்; இந்திப் பிரஜைகளையும் கண்டார். ஸ்ருஷ்டிக்கப்பட்டவைகளும் தம் தேஜஸினால் விருத்தி அடைந்திருப்பவைகளுமான பற்பலரூபமுள்ள பிரஜைகளைக் கண்டு அதிகக் கோபங்கொண்டார். தம்முடைய லிங்கத்தையும் பூமியில் விழும்படி செய்தார். அவ்வாறு வீழ்த்தப்பட்ட அந்த லிங்கமானது பூமியில் அப்படியே நேரில் நின்றது. அழிவற்றவரான பிரம்மதேவர் நல்ல வசனங்களால் போகத்தைத் தணிக்கின்றவரான அந்த ஸ்தாணுவைப் பார்த்து, "சர்வரே, ஜலத்தில் நெடுங்காலமாக இருந்த உம்மால் என்ன காரியம் செய்யப்பட்டது? என்ன காரணத்திற்காக இந்த லிங்கமானது அறுக்கப்பட்டுப் பூமியில் நாட்டப்பட்டது?" என்று வினவினர். லோககுருவான அந்த ஸ்தாணுவானவர் அவ்வாறு கோபமுள்ளவராகக் குருவான நான்முகரைப் பார்த்து, "வேறொருவனால் இந்தப் பிரஜைகள் படைக்கப்பட்டன. இந்த லிங்கத்தினால் என்ன செய்யப்போகிறேன்? பிதாமஹரே, பிரஜைகளின் பொருட்டு என்னுடைய தவத்தினால் அன்னம் அடையப்பட்டது. ஓஷதிகள் இவ்வண்ணம் எப்பொழுதும் உண்டாகி விருத்தியடைவதோடு பிரஜைகளுமாகப்போகின்றன" என்று மறுமொழி கூறினார்" என்றிருக்கிறது.
இந்த வார்த்தைகளைச் சொன்ன பவன், உற்சாகமற்றவனாகவும் கோபத்துடனும் மிகக் கடும் தங்களைப் பயில்வதற்காக {இமயமலைச் சாரலில் உள்ள} முஞ்சவான் மலைகளின் அடிவாரத்திற்குச் சென்றான்" {என்றான் கிருஷ்ணன்}.(26)
சௌப்திக பர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |