The aid of Rudra! | Sauptika-Parva-Section-18 | Mahabharata In Tamil
(ஐஷீக பர்வம் - 09)
பதிவின் சுருக்கம் : கிருதயுக முடிவில் தேவர்கள் செய்த பெரும் வேள்வி; வேள்வியை அழித்த ருத்திரன்; ருத்திரனின் உதவியின் மூலம் வெற்றியை அடைந்த அஸ்வத்தாமன்...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "கிருத யுகம் {தேவயுகம்} கடந்ததும், ஒரு வேள்வியைச் செய்ய விரும்பிய தேவர்கள், அதற்கு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி முறையான ஆயத்தங்களைச் செய்தனர்.(1) தெளிந்த நெய்யையும், தேவைப்படும் வேறு பொருட்களையும் சேகரித்தனர். அவர்கள், தங்கள் வேள்விக்குத் தேவையான பொருட்கள் என்ன என்பதை மட்டும் திட்டமிடாமல், வேள்விக்கொடைகளில் தங்களுக்குச் சேர வேண்டிய பங்குகளைக் குறித்தும் தீர்மானித்துக் கொண்டனர்.(2) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, உண்மையில் ருத்திரனை அறியாத தேவர்கள், அந்தத் தெய்வீக ஸ்தாணுவுக்கு எந்தப் பங்கையும் ஒதுக்கவில்லை.(3) மான்தோல் உடுத்துபவனான ஸ்தாணு, வேள்விக் கொடைகளில் தனக்கு எந்தப் பங்கையும் தேவர்கள் ஒதுக்காததைக் கண்டு, அந்த வேள்வியை அழிக்க விரும்பி, அந்நோக்கத்திற்காக ஒரு வில்லைக் கட்டமைத்தான்.(4) வேள்விகள், லோக வேள்வி, தனிச்சிறப்புகளடங்கிய சடங்குகளுடன் கூடிய வேள்வி {கிரியா வேள்வி}, அழிவில்லாத இல்லற வேள்வி {கிருஹ வேள்வி}, ஐந்து மூலகப் பொருட்கள் மற்றும் அவற்றின் சேர்மங்களில் இன்புற்று மனிதன் நிறைவை அடக்கிய வேள்வி {பஞ்சபந்ரு வேள்வி} என நான்கு வகை வேள்விகள் இருக்கின்றன. இந்த நால்வகை வேள்விகளின் மூலமே இந்த அண்டம் உதித்தது[1].(5)
[1] "இங்கே குறிப்பிடப்படும் நான்கு வகை வேள்விகளைக் குறித்த நீலகண்டரின் விளக்கம் பின்வருமாறு: "நல்லோரெனக் கருதப்படுவோரால் பேணி வளர்க்கப்படும் ஆசை என்பது லோக வேள்வியின் பொருளாகும்; தனிச்சிறப்புமிக்க வேளைகளில் செய்யப்படும் தனிச்சடங்குகள் என்பது கிரியா வேள்வியின் பொருளாகும்; அக்னி ஹோத்ரம் போன்று சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள அறச்சடங்குங்களைத் தினமும் செய்வது என்பது கிருஹய வேள்வியின் பொருளாகும்; இறுதியாக, ந்ரு வேள்வி என்பது ஒரு மனிதன் தன் வாழ்வில் தென்படும் பொருட்களை அனுபவித்து, அதன் மூலம் அடையும் மகிழ்ச்சியே அதன் பொருளாகும்" {இவ்வாறு நீலகண்டர் விளக்குகிறார்}. இந்த நால்வகை வேள்விகளைச் சார்ந்தோ, அவற்றின் மூலமோ எவ்வாறு அண்டம் உதிக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
முதல் மற்றும் நான்காம் வகை வேள்விகளின் பொருட்களைக் கொண்டு கபர்தின் {அடர்ச்சடையன் சிவன்} அந்த வில்லைக் கட்டமைத்தான். அந்த வில்லானது ஐந்து முழம்[2] நீளம் இருந்தது.(6) ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, புனித (மந்திரமான) வஷட்காரமே அதன் நாண்கயிறானது. வேள்வியின் நான்கு அங்கங்கள் அந்த வில்லின் அலங்காரங்களாகின.(7) பிறகு சினத்தால் நிறைந்த மஹாதேவன் அந்த வில்லை எடுத்துக் கொண்டு, தேவர்கள் வேள்வி செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். பிரம்மச்சாரியைப் போல உடுத்தியவனும், வில்லைத் தரித்திருந்தவனும் மங்காதவனுமான ருத்திரன் அங்கே வந்ததைக் கண்ட பூமாதேவி, அச்சத்தால் சுருங்கி, தன் மலைகளுடன் நடுங்கத் தொடங்கினாள்.(9) காற்று அசைவதை நிறுத்தியது, நெருப்பு மூட்டப்பட்டால் சுடர்விட்டெரியவில்லை. ஆகாயத்தின் நட்சத்திரங்கள் கவலையால் ஒழுங்கற்ற வழிகளில் திரியத் தொடங்கின.(10) சூரியனின் ஒளி குறைந்தது. சந்திரவட்டில் தன் அழகை இழந்தது. மொத்த ஆகாயமும் அடர்த்தியான இருளில் மூழ்கியது.(11)
[2] கும்பகோணம் பதிப்பில் இந்த வில்லானது 60 முழம் நீளம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் கங்குலியில் உள்ளதைப் போன்றே 5 முழ நீளம் என்றே சொல்லப்பட்டுள்ளது.
துயரில் மூழ்கிய தேவர்கள் என்ன செய்வது என்பதை அறியாதிருந்தனர். அவர்களது வேள்வி சுடர்விட்டெரிவது நின்றது. தேவர்கள் அனைவரும் பீதியடைந்தனர்.(12) அப்போது ருத்திரன், அந்த வேள்வியுடைய உடல்வடிவத்தின் இதயத்தைக் கடுங்கணையொன்றால் துளைத்தான். உடல் வடிவம் கொண்ட வேள்வியானது, மானின் வடிவத்தையேற்று, நெருப்பு தேவனுடன் {அக்னியுடன்} தப்பி ஓடியது.(13) அவ்வடிவில் சொர்க்கத்தை அடைந்த அவன் {வேள்வியானவன்} அழகால் சுடர்விட்டெரிந்தான். எனினும், ஓ! யுதிஷ்டிரரே, ருத்திரன் அவனை ஆகாயத்தில் பின்தொடர்ந்து சென்றான்.(14) வேள்வியானவன் தப்பி ஓடியபிறகு, தேவங்கள் தங்கள் ஒளியை இழந்தனர். தங்கள் உணர்வுகளை இழந்தவர்களான தேவர்கள் திகைப்படைந்திருந்தனர்.(15)
அப்போது முக்கண்ணனான மஹாதேவன், தன் வில்லைக் கொண்டு, சாவித்ரியின் கரங்களைச் சினத்தால் முறித்து, பகனின் கண்களையும், பூஷ்ணனின் {பூஷாவின்} பற்களையும் பிடுங்கினான்.(16) பிறகு தேவர்களும், அந்த வேள்வியின் பல்வேறு அங்கங்கள் அனைத்தும் தப்பி ஓடின. அவர்களில் சிலர் தப்பி ஓட முயலும்போது சுழன்று உணர்வுகளையற்றுக் கீழே விழுந்தனர்.(17) நீல மிடறு கொண்ட ருத்திரன் இவ்வாறு அவர்களைக் கலங்கடித்து, தன் வில்லின் நுனியைச் சுழற்றி அவர்களை முடக்கி உரக்கச் சிரித்தான்.(18) தேவர்கள் அப்போது பெருங்கூச்சலிட்டனர். அவர்களின் ஆணையின் பேரில் அந்த வில்லின் நாண்கயிறு அறுந்தது. நாண்கயிறு அறுந்ததும், அந்த வில்லானது ஒரு கோடாக நெடுக விரிந்தது.(19) பிறகு தேவர்கள், வில்லற்றவனாக இருந்த அந்தத் தேவர்களின் தேவனை {சிவனை}, {மான்வடிவில்} உடல் கொண்ட வேள்வியானவனுடன் அணுகி, அந்தப் பலமிக்க மஹாதேவனின் பாதுகாப்பை நாடி, அவனை நிறைவுகொள்ளச் செய்ய முயன்றனர்.(20)
நிறைவையடைந்த அந்தப் பெருந்தேவன் தன் கோபத்தை நீருக்குள் எறிந்தான். ஓ! மன்னா, அந்தக் கோபமானது நெருப்பின் வடிவத்தை ஏற்று, அந்த நீர்த்தனிமத்தை எரிப்பதிலேயே எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.(21) பிறகு அவன் சாவித்ரிக்கு {சூரியனுக்கு} அவனது கரங்களையும், பகனுக்கு அவனது கண்களையும், பூஷ்ணனுக்கு {பூஷாவுக்கு} அவனது பற்களையும் மீண்டும் கொடுத்தான். ஓ! பாண்டவரே {யுதிஷ்டிரரே}, பிறகு அவன் வேள்விகளையும் மீண்டும் நிறுவினான்.(22) உலகமானது மீண்டும் பாதுகாப்பானதாகவும், நலமானதாகவும் மாறியது. தேவர்கள், அந்தப் பெருந்தெய்வத்தின் {சிவனின்} பங்காகத் தெளிந்த நெய்க்காணிக்கைகள் அனைத்தையும் ஒதுக்கினர்.(23) ஓ! ஏகாதிபதி, மஹாதேவன் கோபமடைந்த போது, மொத்த உலகமும் இவ்வாறே கலங்கியது; அவன் நிறைவடைந்தபோதோ அனைத்தும் பாதுகாப்பானவை ஆகின. பெருஞ்சக்தி கொண்ட அந்த மஹாதேவனே அஸ்வத்தாமரால் நிறைவுகொள்ளச் செய்யப்பட்டான்.(24) இதன் காரணமாகவே வலிமைமிக்க வில்லாளிகளான அந்த உமது மகன்களை அந்தப் போர்வீரரால் கொல்ல முடிந்தது. இதன் காரணமாகவே, பாஞ்சாலர்களையும், அவர்களது தொண்டர்கள் அனைவரையும் அவரால் கொல்லமுடிந்தது.(25) உமது மனத்தில் இவற்றை நினைக்காதீர். துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} அக்காரியத்தைச் செயவில்லை. அது மஹாதேவனின் அருளாலேயே செய்யப்பட்டது. இப்போது அடுத்ததாகச் செய்ய வேண்டியதைச் செய்வீராக" என்றான் {கிருஷ்ணன்}" {என்றார் வைசம்பாயனர்}.(26)
*********ஐஷீக உபபர்வம் முற்றும்*********
*********சௌப்திக பர்வம் முற்றிற்று*********
சௌப்திக பர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |