Sanjaya consoles Dhritarashtra! | Stri-Parva-Section-01 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 01) [விசோக பர்வம் - 01][*]
பதிவின் சுருக்கம் : பிறகு என்ன நடந்தது என வைசம்பாயனரிடம் விசாரித்த ஜனமேஜயன்; திருதராஷ்டிரனின் துயரம்; திருதராஷ்டிரனின் புலம்பல்; இறந்தோருக்கான ஈமச்சடங்குகளைச் செய்யுமாறு சொன்ன சஞ்சயன்; சஞ்சயனின் கடிந்துரையும், தேற்றமும்; விதுரன் பேசத் தொடங்கியது...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! தவசியே {வைசம்பாயனரே}, துரியோதனனும், போர்வீரர்கள் அனைவரும் வீழ்ந்த பிறகு, செய்தியை அடைந்த மன்னன் திருதராஷ்டிரன் என்ன செய்தான்?(1) உயரான்ம குரு மன்னனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன் என்ன செய்தான்? எஞ்சிய மூவரான கிருபரும், மற்றவர்களும் என்ன செய்தனர்?(2) அஸ்வத்தாமனின் சாதனைகள் குறித்த அனைத்தையும் நான் கேட்டுவிட்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் சபித்த கடிந்துரைகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை எனக்குச் சொல்வீராக. பார்வையற்ற முதிய மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்குச்} சஞ்சயன் சொன்ன அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(3)
[*] ஸ்திரீ பர்வமானது, கங்குலி மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் "ஜலப்ரதானிக பர்வம்" என்ற ஒரே உபபர்வத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இரண்டு உப பர்வங்கள் இருக்கின்றன. பிபேக் திப்ராயின் பதிப்பில் நான்கு உபபர்வங்கள் இருக்கின்றன. உபபர்வங்களை விட்டுவிட வேண்டாமே என்றெண்ணி [ ] என்ற அடைப்புக்குறிக்குள் பிபேக்திப்ராயின் பதிப்பில் வரும் உபபர்வங்களின் பெயர்களை அந்தந்தப் பகுதிகளில் கொடுக்கிறேன். முதல் உபபர்வம் விசோகம். விசோகம் என்றால் துயர முடிவு, அல்லது துயரத்தில் இருந்து விடுதலை என்பது பொருளாகும். இந்தப் பர்வத்தில் விதுரன் திருதராஷ்டிரன் துயர்களைய முயற்சி செய்வதால் இப்பர்வத்திற்கு இந்தப் பெயர்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னன் திருதராஷ்டிரன், தனது நூறு மகன்களையும் இழந்த பிறகு, அதன் காரணமாகத் துயரால் பீடிக்கப்பட்டு, உற்சாகமற்றவனாக, கவலையில் மூழ்கி, பேசும் சக்தியை இழந்தவனாகக் கிளைகள் ஒடிந்த மரத்தைப் போலத் தெரிந்தான்.(4)
பெரும் ஞானத்தைக் கொண்டவனான சஞ்சயன் அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அணுகி, அவனிடம், "ஓ! ஏகாதிபதி, நீர் ஏன் வருந்துகிறீர்? துயரம் எக்காரியத்தையம் செய்யாது.(5) ஓ! மன்னா, பதினெட்டு {18}அக்ஷௌஹிணி போராளிகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். வெறித்துப் போயிருக்கும் பூமியானது இப்போது கிட்டத்தட்ட வெறுமையாகவே இருக்கிறது.(6) பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்களும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுமான மன்னர்கள் அனைவரும், உமது மகனுடன் சேர்ந்து தங்கள் உயிரை விட்டனர்.(7) இப்போது விதிப்படி செய்ய வேண்டியது, உமது தந்தைமார், மகன்கள், பேரப்பிள்ளைகள், சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் ஆசான்களுக்கான ஈமச் சடங்குகளே ஆகும்" என்றான் {சஞ்சயன்}".(8)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மகன்கள், அமைச்சர்கள் மற்றும் தன் நண்பர்கள் அனைவரையும் இழந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான மன்னன் திருதராஷ்டிரன், காற்றால் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தைப் போலத் திடீரெனக் கீழே பூமியில் விழுந்தான்.(9)
{அப்போது} திருதராஷ்டிரன், "மகன்கள், அமைச்சர்கள் மற்றும் என் நண்பர்கள் அனைவரையும் இழந்த நான், நிச்சயம் கவலையுடன் பூமியில் திரியப் போகிறேன்.(10) முதுமையால் பீடிக்கப்பட்டு, சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோரை இழந்து, சிறகுகளற்ற பறவைக்கு ஒப்பாக இருக்கும் எனக்கு உயிர் வாழும் தேவை என்ன இருக்கிறது?(11) ஓ! பெரும் ஞானியே, கண்களை இழந்தவனான நான், ஒளியிழந்த நட்சத்திரத்தைப் போலவே இப்போது நாட்டை இழந்து, சொந்தங்களை இழந்து ஒளியில்லாமல் இருக்கிறேன்.(12) நண்பர்களும், ஜமதக்னியின் மகன் {பரசுராமர்}, தெய்வீக முனிவரான நாரதர், தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்} ஆகியோரும் ஆலோசனைகளைச் சொன்ன போது, அவற்றை நான் பின்பற்றவில்லை.(13) சபைக்கு மத்தியில் வைத்து கிருஷ்ணன், "ஓ! மன்னா, பகைமைகளை நிறுத்துவோம். உமது மகனே {துரியோதனனே} மொத்த நாட்டையும் எடுத்துக் கொள்ளட்டும். (பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களை மட்டுமே கொடுப்பீராக)" என்று எனக்கு நன்மையானதைச் சொன்னான். மூடனான நான் அந்த அறிவுரையைப் பின்பற்றாததால் இப்போது, எரிச்சலூட்டத்தக்க இந்தக் கவலையை அடைந்தேன்.(14)
பீஷ்மரின் நீதிமிக்க ஆலோசனைகளை நான் கேட்கவில்லை. ஐயோ, ஒரு காளையைப் போன்ற முழங்கும் துரியோதனனின் படுகொலையைக் கேட்டும்,(15) துச்சாசனனின் மரணம், கர்ணனின் அழிவு, துரோணச் சூரியனின் மறைவு ஆகியவற்றைக் கேட்டும் என் இதயம் துண்டுகளாக நொறுங்காமல் இருக்கிறதே.(16) ஓ! சஞ்சயா, முந்தைய நாட்களில் நான் செய்த எந்தத் தீச்செயலின் விளைவாக இன்று துன்புறுகிறேன் என்பதை என்னால் நினைவுகூரமுடியவில்லை.(17) விதிவகுக்கும் உயர்ந்தவன் {பிரம்மன்}, இந்த அளவுக்குத் துன்பத்தைத் தாங்கிக் கொள்ள விதித்திருக்கிறான் என்றால் நான் முந்தைய பிறவிகளில் பெரும்பாவங்களைச் செய்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.(18) என் சொந்தங்கள் அனைவரின் இந்த அழிவும், என் நலன் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரின் இந்த நிர்மூலமும், விதியின் பலத்தாலேயே இந்த முதிர்வயதில் என்னை வந்தடைந்திருக்கிறது. இழிந்தவனான என்னைவிட இந்த உலகத்தில் வேறு எந்த மனிதன் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கிறான்?(19) நிலை இவ்வாறு இருப்பதால், உறுதிமிக்கத் தீர்மானத்துடன், பிரம்மலோகத்திற்கு இட்டுச்செல்லும் நீண்ட வழியில் நான் செல்வதை இந்த நாளே பாண்டவர்கள் பார்க்கட்டும்"[1] என்றான்".(20)
[1] "காட்டிற்குச் சென்று மரணத்திற்குத் தயாராகும் தன் விருப்பத்தைத் திருதராஷ்டிரன் வெளிப்படுத்துவதாகவே இது பொருள் படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மன்னன் திருதராஷ்டிரன் இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனது துயரத்தை அகற்றுவதற்காகப் பின்வரும் வார்த்தைகளைச் சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது துயரத்தைக் கைவிடுவீராக. பெரியோரின் உதடுகளின் மூலம் வேதங்களையும், பல்வேறு சாத்திரங்கள் மற்றும் புனிதமான ஆகமங்களின் தீர்மானங்களையும் நீர் கேட்டிருக்கிறீர். சிருஞ்சயன், தன் மகனுடைய மரணத்தின் நிமித்தமாகப் பீடிக்கப்பட்டிருந்தபோது, அவனிடம் தவசிகள் சொன்ன அந்த வார்த்தைகளையும் நீர் கேட்டிருக்கிறீர்.(22) உமது மகன் {துரியோதனன்}, இளமையில் பிறக்கும் {தோன்றும்} செருக்கை {கொழுப்பை} அடைந்தபோது, நலன்விரும்பிகளால் உமக்குச் சொல்லப்பட்ட ஆலோசனைகளை நீர் ஏற்க மறுத்தீர். கனியை விரும்பிய நீர், உமக்கான உண்மையான நன்மை எதுவோ, அதைப் பேராசையினால் செய்யாமல் இருந்தீர்.(23) {அந்த} உமது அறிவே ஒரு கூரிய வாளைப் போல {இப்போது} உம்மைக் காயப்படுத்தியிருக்கிறது. பொதுவாகவே தீய நடத்தை கொண்டோரின் துணையையே நீர் நாடினீர்.(24) உமது மகன் {துரியோதனன்}, தன் ஆலோசகர்களாகத் துச்சாசனன், தீய ஆன்மாவான ராதையின் மகன் {கர்ணன்}, அதே அளவுக்குத் தீயவனான சகுனி, மூட புத்தி கொண்ட சித்திரசேனன், சல்லியன்[2] ஆகியோரையே கொண்டிருந்தான். உமது மகன் (தன் சொந்த நடத்தையினாலேயே) மொத்த உலகத்தையும் தன் எதிரியாக்கிக் கொண்டான்.(25)
[2] இங்கே சல்லியன் பெயரும் சொல்லப்படுவது பொருத்தமாக இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "எவனுக்குத் துச்சாஸனனும், கெட்ட எண்ணமுள்ளவனான கர்ணனும், துஷ்டாத்மாவான சகுனியும், துர்ப்புத்தியுள்ள சித்திரஸேனனும் மந்திரிகளோ, எவனால் அளவில்லாத உலகமனைத்தும் சல்யமாகச் செய்யப்பட்டதோ, உம்முடைய அந்தப் புத்திரனால் கௌரவர்களுள் முதியவரான பீஷ்மர், காந்தாரி, விதுரர், துரோணர், சாரத்வதரான கிருபர், கோவிந்தர், புத்திமானான நாரதர், அவ்வாறே மற்ற ரிஷிகள் அளவு கடந்த தேஜஸுள்ள வியாஸர் இவர்களுடைய வசனம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "துச்சாசனன், தீய ஆன்மா கொண்ட ராதேயன், தீய ஆன்மா கொண்ட சகுனி, தீய புத்தி கொண்ட சித்திரசேனன் ஆகியோரே உமது ஆலோசகர்களாக இருந்தனர். அவர்களே முட்களாக இருந்தனர், அவர்களே மொத்த உலகத்தையும் {தங்களுக்கான} முட்கள் நிறைந்ததாகவும் செய்தனர்" என்றிருக்கிறது. சல்லியம் என்பது ஈட்டி, அல்லது முட்கள் என்ற பொருளில் இங்கே பயன்பட்டிருக்க வேண்டும்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஓ! மன்னா, குருக்களின் மரியாதைக்குரிய தலைவரான பீஷ்மர், காந்தாரி, விதுரர், துரோணர், சரத்வான் மகனான கிருபர், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், நுண்ணறிவு கொண்ட நாரதர், இன்னும் பல முனிவர்கள் மற்றும் அளவிடமுடியாத சக்தி கொண்ட வியாசர் ஆகியோரின் வார்த்தைகளுக்கு உமது மகன் கீழ்ப்படியவில்லை.(26,27) உமது மகன் {துரியோதனன்} ஆற்றல் படைத்தவனாக இருப்பினும், அவன் சிறு மதி கொண்டவனாகவும், செருக்குடையவனாகவும், எப்போதும் போரை விரும்புபவனாகவும், தீயவனாகவும், வெறிகொண்ட மூர்க்கனாகவும், நிறைவற்றவனாகவும் இருந்தான்.(28) நீரோ கற்றறிந்தவராகவும், நுண்ணறிவு கொண்டவராகவும், எப்போதும் உண்மை பேசுபவராகவும் இருக்கிறீர். உம்மைப் போன்ற நேர்மையாளர்களும், அறிவாளிகளும் துயரத்தால் ஒருபோதும் திகைக்கமாட்டார்கள்.(29) {உமது மகன்களில்} எவரும் அறங்கருதவில்லை. போர் என்ற ஒற்றை வார்த்தையே அவர்களது உதடுகளில் இருந்தன. அதன் காரணமாகவே க்ஷத்திரிய வகையினர் முற்றாக அழிக்கப்பட்டு, உமது எதிரிகளின் புகழ் பெருகியிருக்கிறது.(30)
நடுவருக்கான இடத்தில் இருந்த நீரோ, நலம்பேணும் அறிவுரை என ஒரு வார்த்தையும் சொல்லாதிருந்தீர். அப்பணிக்குத் தகாத நீர், தராசுகளைச் சமமாக நிறுத்தவில்லை.(31) ஒவ்வொரு மனிதனும், தான் ஏற்கனவே செய்த ஏதோ ஒன்றுக்காக வருந்த வேண்டிய தேவையில்லாமல் தொடக்கத்திலிருந்தே நன்மையான செயல்களையே {முறைப்படி} செய்ய வேண்டும்.(32) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது மகன் துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் நீர் அவனுக்கு ஏற்புடையதையே செய்தீர். அதற்காகவே இப்போது நீர் வருந்த வேண்டியிருக்கிறது. எனினும், நீர் துயரத்துக்கு ஆட்படுவது உமக்குத் தகாது.(33) பள்ளத்தைக் கவனியாமல் தேனை நோக்கி மட்டுமே கண்களைச் செலுத்தும் மனிதன், தேனின் மீது தான் கொண்ட பேராசையின் மூலமே அழிவை அடைகிறான். அத்தகு மனிதன் உம்மைப் போலவே வருந்த வேண்டியிருக்கும்.(34) துயரப்படும் மனிதன் ஒருபோதும் செழிப்பை வெல்வதில்லை. துயரப்படுவதால் ஒருவன் தன் ஆசைகளின் கனிகளையே இழக்கிறான். மேலும் நமது விருப்பத்திற்குரிய பொருட்களை அடைவதற்கு அந்தத் துயரமே தடையாக இருக்கிறது. துயரத்தில் மூழ்குபவன் தன் முக்தியையும் {விடுதலையையும்} இழக்கிறான்.(35)
எரியும் கரியைத் தன் உடுப்பில் மறைக்கும் ஒரு மனிதன், அதற்குள் முடுக்கப்படும் நெருப்பினால் எரிக்கப்பட்டுத் தான் அடைந்த காயங்களுக்காக வருந்துவானானால், அவன் மூடன் என்றே அழைக்கப்படுவான்.(36) நீரும், உமது மகனும், உங்கள் வார்த்தைகளால் பார்த்த-நெருப்பை {அர்ஜுன நெருப்பைத்} விசிறி, உங்கள் பேராசையின் விளைவால் உண்டான செயல்களால் தெளிந்த நெய்யை {அந்நெருப்பில்} ஊற்றி, அந்நெருப்பைச் சுடர்விட்டெரியச் செய்து, அஃதை எரிக்கும் தழல்களாக்கினீர்கள்.(37) அந்நெருப்பு இவ்வாறு சுடர்விட்டபோது, உமது மகன்கள் பூச்சிகளைப் போல அதில் விழுந்தனர். எனினும், எதிரியின் கணைகள் எனும் நெருப்பில் எரிந்தவர்களான அவர்களுக்காக இப்போது நீர் வருந்துவது தகாது.(38) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இப்போது நீர் கொண்டிருக்கும் அழுகைக்கறை கொண்ட முகமானது, சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படவோ, நல்லோரால் புகழப்படவோ இல்லை.(39) நெருப்புப் பொறிகளைப் போன்ற இந்தக் கண்ணீர்த்துளிகள் யாருக்காகச் சிந்தப்படுகின்றனவோ, இறந்தோரான அவர்களையே அவை எரிக்கும். உமது துயரை அறிவினால் கொன்று, உமது பலத்தால் எழுவீராக" {என்றான் சஞ்சயன்}.(40) இவ்வாறே உயரான்ம சஞ்சயனால் அம்மன்னன் {திருதராஷ்டிரன்} தேற்றப்பட்டான். ஓ! எதிரிகளை எரிப்பவனே {ஜனமேஜயா}, அப்போது, விதுரன் தன் பேரறிவை வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் அம்மன்னனிடம் {திருதராஷ்டிரனிடம்} பேசினான்" {என்றார் வைசம்பாயனர்}.(41)
ஸ்திரீ பர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |