Birth, growth and death! | Stri-Parva-Section-04 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 04) [விசோக பர்வம் - 04]
பதிவின் சுருக்கம் : உயிரானது கருவறையில் வசிக்கும் முறையையும், பிறந்து அடையும் துன்பத்தையும், அதன் இறப்பையும் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்...
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, "ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, இவ்வுலகெனும் அடர்க்காடு எவ்வாறு அறியப்பட வேண்டும்? இதை நான் கேட்க விரும்புகிறேன். இதைக் கேட்கும் எனக்கு நீ சொல்வாயாக" என்று கேட்டான்.(1)
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "உயிரினங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் நான் அவற்றின் முதல் கருத்தறிப்பிலிருந்தே விளக்குகிறேன். தொடக்கத்தில் அது {உயிரானது} குருதி மற்றும் உயிர்நீரின் கலவையில் {சுக்லசோணிதத்தில்} வாழ்கிறது. அதன் பிறகு அது மெல்ல மெல்ல வளர்கிறது. ஐந்து மாதங்கள் கடந்ததும் அது வடிவத்தை ஏற்கிறது.(2) அடுத்தாக {ஆறாம் மாதத்தில்} அங்கங்கள் அனைத்தும் வளர்ந்த நிலையில் முதிர்கருவாகி, சதையும், குருதியும் கலந்த தூய்மையற்ற ஓரிடத்தில் வாழ்கிறது.(3) பிறகு, காற்றின் செயல்பாட்டின் மூலம், அதன் அடி உறுப்புகள் தலைகீழாக மாறி, தலையானது கீழே வருகிறது. இந்நிலையிலேயே கருப்பையின் வாயிலை அடைந்து, பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறது.(4) கருப்பைச் சுருங்கி விரிவதன் விளைவாலும், தன் முந்தைய செயல்பாடுகள் அனைத்தின் விளைவாலும் அந்த உயிரினம் வெளியே வருகிறது. அதன் பிறகு அது தன்னை நோக்கி விரைந்து வரும் இவ்வுலகின் தீமைகளை எதிர்கொள்கிறது. இறைச்சியை நுகர்ந்து வரும் நாய்களைப் போல இடர்கள் அதை நோக்கி வருகின்றன.(5)
அதன்பிறகு, அது தன் முந்தைய செயல்களில் கட்டுப்பட்டிருக்கும்போது, பல்வேறு நோய்கள் அதை அணுகுகின்றன.(6) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புலனுணர்வுகள், பெண்கள், செல்வம், மற்றும் வாழ்வின் பிற இனிய பொருட்களில்ல் கட்டுப்பட்டிருக்கும் அதைப் {மனித ஆண் உயிரினத்தைப்} பல்வேறு தீமைகள் அணுகுகின்றன.(7) இதனால் பிடிக்கப்படும் அது {அவன்} ஒரு போதும் மகிழ்ச்சியை அடைவதில்லை. அந்தப் பருவத்தில், நன்மையான, அல்லது தவறான தன் செயல்களின் கனிகளை அடைவதில் அது {அவன்} தவறுகிறது {தவறுகிறான்}. எனினும் சிந்தனையில் தங்களின் இதயங்களை நிலைக்கச் செய்பவர்கள், தங்கள் ஆன்மாக்களைப் பாதுகாப்பதில் வெற்றியடைகிறார்கள்.(8) தன் புலன்களால் ஆளப்படும் ஒருவன், தன் வாயிலில் வந்திருக்கும் காலனை அறிவதில்லை. இறுதியாக, யமனின் தூதர்களால் இழுக்கப்படும் அவன், குறித்த நேரத்தில் தன் அழிவைச் சந்திக்கிறான்.(9) புலன்களின் கலக்கத்தால் அவன் செய்த நன்மையோ, தீமையோ, தொடக்கத்தில் செய்யப்படுபவையே. இவற்றின் கனிகளால் இன்புறவோ, துன்புறவோ செய்யும் அவன், தற்கொலைக்குச் சமமான தன் செயல்பாடுகளில் மீண்டும் அலட்சியம் கொள்கிறான்.(10)
ஐயோ, உலகம் வஞ்சிக்கப்பட்டு, பேராசையானது அதை {உலகத்தைத்} தன் ஆளுகையின் கீழ் கொண்டு வருகிறது. பேராசை, கோபம், அச்சம் ஆகியவற்றால் அறிவை இழக்கும் ஒருவன் தன்னையே உணர்வதில்லை.(11) தனது பிறப்பின் {குலவழியின்} பெருமையால் இன்பத்தில் நிறையும் ஒருவன், உயர்பிறப்பாளர்களையும் இழிவுசெய்கிறான். செல்வத்தின் செருக்கால் பெருகும் அவன், ஏழைகளை ஏளனம் செய்வதும் காணப்படுகிறது.(12) ஒருவன் அடுத்தவரை அறியாமை கொண்ட மூடர்களாகக் கருதுகிறான், அனால், தன்னைக் குறித்து ஆராய்வதேயில்லை.(13)
ஞானிகளும், ஞானமற்றவர்களும், செல்வந்தரும், செல்வமற்றவர்களும், உயர்ந்த பிறவியும், தாழ்ந்த பிறவியும், மதிக்கப்படுபவர்களும், மதிக்கப்படாதவர்களும்,(14) என அனைவரும், சதையற்றதும், வற்றிய தசைகளால் இணைக்கப்படும் வெறும் எலும்புகளை மட்டுமே கொண்டதுமான உடல்களுடன், இறந்தோரின் இடத்திற்குச் சென்று, அனைத்துக் கவலைகளில் இருந்தும் விடுபடும்போது,(15) மேற்கண்டவர்களின் பிறப்பையும், அழகையும் குறித்து எந்த அடையாளங்களைக் கொண்டு உறுதி செய்ய முடியும்?(16)
இதே வகையிலேயே அனைவரும், வெறுந்தரையில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கிறார்கள் எனும்போது, ஏன் மனிதர்கள் தங்கள் புலனுணர்வை மறந்து, ஒருவரையொருவர் வஞ்சிக்க விரும்ப வேண்டும்?(17) ஒருவன் (சாத்திரங்களில் இருக்கும்) இந்தச் சொலவடையை {பழமொழியை [ஸ்ருதியைத்]} தன் கண்களால் கண்டோ, பிறரிடம் இருந்து கேட்டோ இந்த நிலையற்ற உலக வாழ்வில் தொடக்கக் காலத்திலிருந்தே அறத்தைப் பின்பற்றிவந்தால், அவன் உயர்ந்த முடிவை {கதியை} அடைகிறான்.(18) ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இவையாவற்றையும் கற்றவன், எந்த வழிகளில் உண்மையைப் பின்பற்றிச் சென்றாலும், அவற்றில் அவன் வெற்றியடைகிறான்" என்றான் {விதுரன்}.(19)
ஸ்திரீ பர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |