Earthern pot and human life! | Stri-Parva-Section-02 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 03) [விசோக பர்வம் - 03]
பதிவின் சுருக்கம் : விதுரனின் இனிய உரையாடலைத் தொடரும்படி கேட்டுக் கொண்ட திருதராஷ்டிரன்; மனித வாழவின் நிலையாமையை மீண்டும் எடுத்துச் சொன்ன விதுரன்...
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, "ஓ! பெரும் ஞானியே, உன் வார்த்தைகளால் என் துயரம் விலகுகிறது. எனினும், நீ மீண்டும் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன்.(1) உண்மையில், தீயவை சேர்வதாலும், விருப்பத்திற்குரிய பொருட்களை இழப்பதாலும் பிறக்கும் மனத்துயரத்தில் இருந்து ஞானியர் எவ்வாறு விடுபடுகின்றனர்" என்று கேட்டான்.(2)
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஒருவன் துயரம் மற்றும் மகிழ்ச்சியில் இருந்து எவ்வழிகளில் தப்ப முடியுமோ அவற்றின் மூலமே, துயரம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய இரண்டையும் அடக்கி ஒரு ஞானி அமைதியை அடைகிறான்.(3) ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, எந்தப் பொருட்களுக்காக நாம் கவலையடைகிறோமோ அவை அனைத்தும், குறுகிய காலத்தைக் கொண்டவையே {நிலையில்லாதவையே}. இவ்வுலகம் பலத்தைப் பொறுத்துக்கொள்ளாத ஒரு வாழை மரத்தைப் போல இருக்கிறது.(4)
ஞானி மற்றும் மூடன், பணக்காரன் மற்றும் ஏழை ஆகியோர் அனைவரும், சதை இழந்த உடல்களுடனும், வெறும் எலும்புகளுடனும், வாடி வதங்கிய தசைகளுடனும் {நரம்புகளுடனும்}, கவலையற்றுச் சுடலைகளில் {சுடுகாடுகளில்} உறங்கும்போது, அவர்களில் எவரின் தனிப்பட்ட அடையாளங்களைக் கண்டு அவர்களின் பிறப்பு மற்றும் அழகின் தன்மைகளை உயிர்பிழைத்திருப்போரால் உறுதிசெய்ய முடியும்? (மரணமடைந்ததும் அனைவரும் சமமே எனும்போது), எப்போதும் (இவ்வுலகப் பொருட்களால்) வஞ்சிக்கப்படும் அறிவைக் கொண்ட மனிதர்கள், ஒருவருக்கொருவர் பதவி மற்றும் நிலைகளில் {அந்தஸ்துகளில்} ஏன் ஆசை கொள்கிறார்கள்?(5,6) மனிதர்களின் உடல்கள் வீடுகளைப் போன்றன எனக் கல்விமான்கள் சொல்கின்றனர். காலம் வரும்போது இவை அழிக்கப்படுகின்றன. எனினும், ஒருவன் {ஆன்மா} அழிவில்லாதவனாக இருக்கிறான்.(7) ஒரு மனிதன், பழையதாகவோ, புதியதாகவோ இருக்கும் தன் ஆடையைக் களைந்து, மற்றொரு ஆடையை அணிவதைப் போலவே உடல்படைத்த அனைவரின் உடல்களும் அவர்களால் களையப்படுகின்றன.(8) ஓ! விசித்திரவீரியன் மகனே {திருதராஷ்டிரனே}, உயிரினங்கள் இன்பம் அல்லது துன்பத்தைத் தங்கள் செயல்களின் கனியாகவே அடைகின்றன.(9)
மண்குடங்களில் சில, குயவனின் சக்கரத்தில் இருக்கும்போதே நொறுங்குகின்றன, சில ஓரளவே வடிவங்கொள்ளும்போதும், சில நல்ல வடிவத்தை அடையும்போதும், சில சக்கரத்தில் இருந்து அகற்றும்போதும், சில கொண்டு செல்லப்படும்போதும், சில கொண்டு செல்லப்பட்ட பிறகும், சில ஈரமாக இருக்கும் போதும், சில உலர்ந்திருக்கும்போதும், சில சுடப்பட்ட பிறகும், சில உலையில் இருந்து எடுக்கப்படும்போதும், சில உலையில் இருந்து எடுக்கப்பட்ட பிறகும், சில பயன்படுத்தப்படும்போதும் நொறுங்குவதைப் போலவே உடல்படைத்த உயிரினங்களின் உடல்களும் அழிகின்றன.(11-13) சிலர் கருவறையில் இருக்கும்போதே அழிவை அடைகின்றனர், சிலர் கருவறையை விட்டு வெளியேறியதும், சிலர் வெளியேறிய அடுத்த நாள், சிலர் அரை மாதம் சென்றோ, ஒரு மாதத்திலோ, சிலர் நடு வயதிலும், சிலர் முதிர் வயதிலும் அழிவை அடைகின்றனர்.(14-15)
உயிரினங்கள் தங்கள் முந்தைய வாழ்வுகளில் செய்த செயல்களுக்கு ஏற்பவே பிறக்கவோ, இறக்கவோ செய்கின்றனர். உலகத்தின் வழி இவ்வாறு இருக்கும்போது, நீர் ஏன் துயரத்தில் ஈடுபடுகிறீர்?(16) மனிதர்கள், நீர்விளையாட்டில் நீந்தும் போது, சில வேளைகளில் மூழ்குவதையும், சில வேளைகளிலும் மேலெழுவதையும் போலவே உயிரினங்களும் வாழ்வெனும் ஓடையில் மூழ்கி மேலெழுகின்றன. ஞானம் குறைந்தவர்கள், தங்கள் செயல்களின் விளைவாலேயே துன்புறவோ, அழிவடையவோ செய்கின்றனர்.(17,18) எனினும், வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மை செய்ய விரும்பி அறம் நோற்கும் ஞானியர், இவ்வுலகில் உயிரினங்களுடைய தோற்றத்தின் உண்மையான இயல்பை அறிந்து, இறுதியாக உயர்ந்த முடிவை அடைகின்றனர்" என்றான் {விதுரன்}.(19)
ஸ்திரீ பர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |