Honey and the calamities! | Stri-Parva-Section-05 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 05) [விசோக பர்வம் - 05]
பதிவின் சுருக்கம் : இடர்களுக்கு மத்தியிலும், பேராபத்திலும் கூட மனிதன் உயிர்வாழும் ஆசைகொண்டிருப்பதை உவமையின் மூலம் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்...
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, "கடமைகளெனும் அடர்க்காட்டைப் பாதுகாப்பாகக் கடக்க அறிவாற்றும் வழிமுறைகள் குறித்த அனைத்தையும் எனக்கு விபரமாகச் சொல்வாயாக" என்று கேட்டான்.(1)
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "தான்தோன்றியை {சுயம்புவை} வணங்கி, உமது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, வாழ்வெனும் அடர்க்காட்டைக் குறித்துப் பெருந்தவசிகள் என்ன சொல்கின்றனர் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன்.(2)
பேருலகில் வாழும் ஒரு குறிப்பிட்ட பிராமணன், ஒரு சந்தர்ப்பத்தில், அடைவதற்கரியதும், இரைதேடும் விலங்குகள் நிறைந்ததுமான ஒரு பெரிய காட்டை அடைந்தான்.(3) அஃது உரக்க முழங்கிக் கொண்டிருக்கும் சிங்கங்கள், புலிகள் மற்றும் யானைகளைப் போலத் தெரியும் பிற விலங்குகள் ஆகியவற்றால் அனைத்துப் பக்கங்களிலும் நிறைந்திருந்தது. யமனே அச்சங்கொள்ளும் வகையில் அந்தக் காடு பயங்கரத் தன்மையை அடைந்திருந்தது.(4) ஓ! ஏதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே} அந்தக் காட்டைக் கண்ட அந்தப் பிராமணரின் இதயம் அதிகக் கலக்கத்தை அடைந்தது. ஓ! எதிரிகளை எரிப்பவரே {திருதராஷ்டிரரே}, அவருக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது, மேலும் அச்சத்திற்கான பிற அடையாளங்கள் அனைத்தும் அவரில் வெளிப்பட்டன.(5)
அதற்குள் {காட்டுக்குள்} நுழைந்த அவன், திசைப்புள்ளிகள் அனைத்திலும் தன் கண்களைச் செலுத்திக் கொண்டு, யாரேனும் ஒருவரின் பாதுகாப்பை நாடுவதற்காக அங்கேயும், இங்கேயும் ஓடத் தொடங்கினான்.(6) அவன், அந்தப் பயங்கர உயிரினங்களிடம் இருந்து தப்பும் விருப்பத்தால் அச்சத்துடன் ஓடிக் கொண்டிருந்தான். எனினும் அவன், அவற்றிடம் இருந்து தொலைவாகச் செல்லவோ, அவற்றின் முன்னிலையில் இருந்து விடுபடவோ தவறினான்.(7) அப்போது அவன், அந்தப் பயங்கரக்காடானது ஒரு பெரிய வலையால் சூழப்பட்டிருப்பதையும், {அந்தக் காட்டுக்கு வெளிப்புறத்தில்} அங்கே அச்சத்தையேற்படுத்தக்கூடிய ஒரு பெண் தன் கரங்களை விரித்தபடி நின்றிருப்பதையும் கண்டான்.(8) அந்தப் பெரும் காடானது, நெடும்பாறைகளைப் போல நெடியவையும், சொர்க்கத்தையே {வானத்தையே} தொட்டுக்கொண்டிருந்தவையும், பயங்கர வடிவைக் கொண்டவையுமான ஐந்து தலை பாம்புகள் பலவற்றாலும் சூழப்பட்டிருந்தது.(9) அதற்குள் {அந்தக் காட்டுக்குள்} புற்களால் சூழப்பட்டதும், செடிகொடிகளால் சுற்றிலும் மறைக்கப்பட்டிருந்ததுமான ஒரு குழி {கிணறு} இருந்தது.(10)
அந்தப் பிராமணன் இவ்வாறு திரிந்து கொண்டிருந்த போது, கண்களுக்குப் புலப்படாத அந்தக் குழிக்குள் விழுந்தான். ஒன்றொடொன்றாகப் பின்னிப் பிணைந்து கிண்ட அந்தக் கொடிகளின் பின்னலில் அகப்பட்டுக் கொண்ட அவன், பலாமரத்தின் கனியை {பலாப்பழத்தைப்} போல அதில் தொங்கிக் கொண்டிருந்தான். கால் மேலாகவும், தலை கீழாகவும் அங்கேயே அவன் தொங்கிக் கொண்டிருந்தான்.(11,12) அந்நிலையிலேயே பல்வேறு இன்னல்கள் அவனை மூழ்கடித்தன. அவன் அந்தக் குழிக்குள் வலிமைமிக்கப் பெரும் பாம்பொன்றைக் கண்டான். மேலும் அவன் அந்தக் குழியின் வாயிலருகே ஒரு பெரும் யானை நிற்பதையும் கஙண்டான்.(13) கரிய நிறம் கொண்ட அந்த யானையானது, ஆறு முகங்களையும், பனிரெண்டு கால்களையும் கொண்டிருந்தது. மேலும் அந்த விலங்கு {யானை} கொடிகளாலும், மரங்களாலும் மறைக்கப்பட்டிருந்த அந்தக் குழியை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டிருந்தது.(14) (அந்தக் குழியின் வாயருகே இருந்த) மரத்தின் கிளைகளில் பயங்கர வடிவிலான தேனீக்கள் தங்கள் கூட்டில் சேகரிக்கப்பட்ட தேனைக் குடிப்பதற்காக அங்கே பெருமளவில் மொய்த்து கொண்டிருந்தன.(15)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அனைத்துயிர்களுக்கும் இனியதாக இருப்பினும், குழந்தைகளை மட்டுமே ஈர்க்கும் அந்தத் தேனை அவை {அந்தத் தேனீக்கள்} மீண்டும் மீண்டும் விரும்பின.(16) (கூட்டில் சேகரிக்கப்பட்ட) அந்தத் தேனானது, பல ஊற்றுகளாகக் கீழே வழிந்தது. குழிக்குள் தொங்கிக் கொண்டிருந்த அம்மனிதன் அதைத் தொடர்ந்து குடித்துக் கொண்டிருந்தான்.(17) இத்தகு துயரகரமான நிலையில் அந்தத் தேனைக் குடித்தாலும், அவனது தாகம் அடங்கவில்லை. மீண்டும் மீண்டும் தாகம் தனியாத அவன் மேலும் மேலும் தேனை விரும்பினான்.(18) ஓ! மன்னா, அப்போது அவன் உயிரைக் குறித்துக் கவலையடையாமல் இருந்தான். அப்படிப்பட்ட அவ்விடத்தில்கூட அம்மனிதன் உயிர்வாழும் நம்பிக்கையுடனேயே இருந்தான். கருப்பு மற்றும் வெள்ளை எலிகள் பல, அம்மரத்தின் வேர்களை உண்டு கொண்டிருந்தன.(19)
இரைதேடும் விலங்குகளிடமும், காட்டின் வெளிப்புறத்தில் இருக்கும் அந்தப் பெண்ணிடமும், அந்தக் கிணற்றின் அடியில் இருக்கும் பாம்பிடமும், உயரத்தில் நிற்கும் அந்த யானையிடமும்,(20) எலிகளின் செயல்பாட்டால் கீழேவிழ இருக்கும் மரத்திடமும், தேனைச் சுவைப்பதற்காகப் பறந்து கொண்டிருந்த அந்தத் தேனீக்களிடமும் அவனுக்கு அச்சமிருந்தது.(21) அந்தக் காட்டில் தன் புலனுணர்வுகளை இழந்திருக்கும் அந்த அவல நிலையிலும், அவன் தன் வாழ்வை நீட்டிப்பதில் உள்ள நம்பிக்கையை {உயிரோடு வாழும் நம்பிக்கையை} ஒருபோதும் இழக்கவில்லை" {என்றான் விதுரன்}.(22)
ஸ்திரீ பர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |