The description of simile by Vidura! | Stri-Parva-Section-06 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 06) [விசோக பர்வம் - 06]
பதிவின் சுருக்கம் : தான் சொன்ன கதை ஓர் உவமையென்றும், அந்த உவமைக்கான விளக்கத்தையும் சொன்ன விதுரன்...
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, "ஐயோ, அம்மனிதனின் துயரம் மிகப்பெரியது, அவனது வாழ்வு முறையும் வலி நிறைந்ததே. ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, வாழ்வுக்கான அவனது ஈடுபாடு எங்கிருந்தது? மேலும் அவனது இன்பம் எங்கிருந்தது? {அவன் அங்கே எவ்வாறு இன்புற்றிருக்க முடியும்?}(1) அந்த மனிதன் வசித்து வந்ததும், அறம்பயில்வதற்கு அனுகூலமற்றதுமான அந்த இடம் எங்கிருக்கிறது? ஓ!, அம்மனிதன் அந்தப் பெரும் பயங்கரங்களில் இருந்து எவ்வாறு விடுபடுவான்?(2) இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. அப்போது அவனுக்காக நாம் முறையாக முயற்சி செய்யலாம். அவனை மீட்கும் வழியில் கிடக்கும் கடினத்தன்மையை நினைத்து நான் பெரிதும் இரங்குகிறேன் {கருணை கொள்கிறேன்}" என்றான்.(3)
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, மோக்ஷதர்மத்தை {வீடுபேற்றை} அறிந்தோர் இதை ஓர் உவமையணியாகக் குறிப்பிடுவார்கள். இதை முறையாகப் புரிந்து கொள்ளும் மனிதன், அதன் பிறகு அருள் உலகங்களை அடைவான்.(4) காடுகளாக விளக்கப்படுவது பேருலகமாகும். அதற்குள் அளவான இடத்துடன் கூடிய அடைதற்கரிய காடானது ஒருவனின் சொந்த வாழ்வாகும்.(5) இரைதேடும் விலங்குகளாகச் சொல்லப்படுவது (நம்மை ஆட்கொள்ளும்) நோய்களாகும். பெரும் உடலுடன் அந்தக் காட்டில் வசிக்கும் பெண்ணானவள்,(6) நிறத்தையும், அழகையும் அழிக்கும் முதுமையாக ஞானியரால் காணப்படுகிறாள். குழியாக {கிணறாகச்} சொல்லப்படுவது உடல், அல்லது உடல்கொண்ட உயிரினங்களின் உடற்கட்டாகும்.(7) அந்தக் குழியின் அடியில் வசிக்கும் பெரும்பாம்பானது, உடல்கொண்ட அனைத்து உயிரினங்களையும் அழிக்கும் காலமாகும். உண்மையில், அதுவே அண்டத்தை அழிக்கிறது.(8)
அம்மனிதன் அகப்பட அந்தக்குழியில் வளர்ந்திருக்கும் செடிகொடிகளே, ஒவ்வொரு உயிரினமும் பேணி வளர்க்கும் உயிர்மீது கொண்ட {உயிர்வாழும்} விருப்பமாகும்.(9) ஓ! மன்னா, குழியின் வாயிலில் நிற்கும் மரத்தை நோக்கி வரும் ஆறு தலை யானையானது, வருடம் எனச் சொல்லப்படுகிறது. அதன் ஆறு முகங்கள் பருவகாலங்களையும், பனிரெண்டு கால்கள் பனிரெண்டு மாதங்களையும் குறிக்கின்றன.(10) மரத்தை உண்ணும் வெள்ளை மற்றும் கருப்பெலிகள், உயிரினங்களின் வாழ்நாளைக் குறைக்கும் பகல்களும், இரவுகளுமாகும். தேனீக்களாகச் சொல்லப்படுபவை நமது ஆசைகளே ஆகும்.(11) தேனைச் சொட்டும் எண்ணற்ற ஓடைகள், நமது ஆசைகளின் நிறைவால் கிட்டும் இன்பங்களாகும். மனிதர்கள் அதற்கே {இன்பங்களுக்கே} அடிமைகளாக இருக்கின்றனர்.(12) வாழ்வின் போக்கை இவ்வாறே ஞானியர் அறிகின்றனர். அந்த ஞானத்தினாலேயே அவர்கள் அவற்றின் கட்டுகளை அறுத்து வெற்றியடைகின்றனர்" என்றான் {சஞ்சயன்}.(13)
ஸ்திரீ பர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |