The highest virtue is Ahimsa said Vidura! | Stri-Parva-Section-07 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 07) [விசோக பர்வம் - 07]
பதிவின் சுருக்கம் : அமுதத்துக்கு நிகரான விதுரனின் வார்த்தைகளை மீண்டும் கேட்க விரும்பிய திருதராஷ்டிரன்; மனிதனை ஆட்கொள்ளும் நோய்கள், முதுமை ஆகியவற்றையும், அவற்றிலிருந்து ஞானிகள் எவ்வாறு தப்புகின்றனர் என்பதையும், புலனுணர்வுகளின் நுகர்வால் வாழ்நாள் குறைவதையும், மறுபிறவி அடையாமையே மனிதனுக்கு வேண்டிய விடுதலை என்பதையும், அஃதை அடைவதற்கு வேள்விகளை விடவும், நோன்புகளைவிடவும் அஹிம்சையே முக்கியமானது என்பதையும் திருதராஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன விதுரன்...
திருதராஷ்டிரன் {விதுரனிடம்}, "நீ சொன்ன இந்த உவமை அற்புதமானது. நிச்சயமாக, நீ உண்மையை அறிந்திருக்கிறாய். அமுதம் போன்ற உன் பேச்சைக் கேட்ட பிறகும், இன்னும் உன்னிடம் நான் கேட்க விரும்புகிறேன்" என்றான்.(1)
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, உலகக் கட்டுகளில் இருந்து ஞானியர் தங்களை விடுவித்துக் கொள்ளும் அறிவின் வழிமுறைகளைக் குறித்து மீண்டும் விவரமாகச் சொல்கிறேன் கேட்பீராக.(2) ஓ! மன்னா, நீண்ட தொலைவுக்குப் பயணம் செய்யும் ஒரு மனிதன், களைப்படையும்போது சில நேரங்களில் நிற்க வேண்டியிருக்கும்,(3) அதேபோலவே, ஓ! பாரதரே, சிறுமதிகொண்டவர்கள், வாழ்வின் நீண்ட வழியில் பயணித்து, கருவறையில் மீண்டும் மீண்டும் பிறத்தல் என்ற வடிவில் அடிக்கடி நின்றுவிடுகின்றனர். எனினும், ஞானியர் அந்தக் கடனிலிருந்து விடுபடுகின்றனர்.(4) சாத்திரங்களை அறிந்தோர் இதன் காரணமாகவே வாழ்வை நீண்ட வழி பயணமென்று விவரிக்கின்றனர். ஞானியரும், கடினங்கள் நிறைந்த வாழ்வின் சுழற்சியை ஒரு காடாகவே சொல்கின்றனர்.(5)
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, உயிரினங்கள் அசைவனவாகவோ, அசையாதனவாகவோ இருப்பினும் அவை இவ்வுலகிற்கு மீண்டும் மீண்டும் திரும்ப வேண்டும். ஞானிகள் மட்டுமே தப்புவார்கள்.(6) மனம் மற்றும் உடல் சம்பந்தமாக மனிதர்களுக்கு நேரும் நோய்கள், புலன்படுபவையாகவோ, புலன்படாதவையாகவோ இருப்பினும், ஞானியர் அவற்றை இரைதேடும் விலங்குகளாகவே சொல்லியிருக்கின்றனர்(7) ஓ! பாரதரே, மனிதர்கள் எப்போதும் அவற்றால் பீடிக்கப்பட்டுத் தடுக்கப்படுகிறார்கள் {துன்புற்றுப் பயணத்தைத் தொடராமல் நிற்கின்றனர்}. மேலும் அவர்களின் சொந்த செயல்பாடுகளையே பிரதிபலிக்கும் அந்த இரைதேடும் விலங்குகள் {நோய்கள்}, அந்தச் சிறுமதியாளர்களிடம் எந்தக் கவலையையும் உண்டாக்குவதில்லை.(8) ஓ! ஏகாதிபதி, ஒரு மனிதன் எவ்வாறாவது நோய்களில் இருந்து விடுபட்டால், பிறகு அழகை அழிக்கக்கூடிய முதுமை அவனை வெல்கிறது.(9) அம்மனிதன் ஒலி, வடிவம், சுவை, தீண்டல், மணம் என்ற புலனுணர்வுகளுக்குரிய பொருட்களின் சேற்றில் மூழ்கி அவனைப் பாதுகாக்க ஏதுமின்றி அங்கேயே {அந்தச் சேற்றிலேயே விழுந்து} கிடக்கிறான்.(10) அதேவேளையில், வருடங்கள், பருவகாலங்கள், மாதங்கள், அரைமாதங்கள் {பக்ஷங்கள்}, பகல்கள், இரவுகள் ஆகியன அடுத்தடுத்து வந்து அழகைக் கெடுத்து, அவனுக்காக ஒதுக்கப்பட்ட காலத்தைக் குறைக்கின்றன.(11) இவை அனைத்தும் காலனின் தூதர்களே. எனினும், சிறுமதி படைத்தோர் அவற்றை இவ்வாறு அறிவதில்லை. உயிரினங்கள் அனைத்தையும் அவற்றின் செயல்பாடுகளின் மூலமே விதியைச்சமைப்பவன் ஆள்கிறான் என ஞானியர் சொல்கின்றனர்.(12)
ஓர் உயிரினத்தின் உடல் தேர் என்றழைக்கப்படுகிறது. வாழ்வின் கொள்கையே {புத்தியே} அதன் {அந்தத் தேரின்} சாரதியாகும். புலன்களே குதிரைகளாகும். நமது செயல்களும், அறிவுமே அதன் கடிவாளங்களாகும்.(13) ஓடிக்கொண்டிருக்கும் அக்குதிரைகளைப் பின்தொடர்ந்து செல்வோர், மறுபிறப்பெனும் சுழற்சிக்குள் இவ்வுலகிற்கு மீண்டும் மீண்டும் வர வேண்டும்.(14) எனினும், தன் அறிவால் அவற்றைக் கட்டுப்படுத்தும் தன்னடக்கத்துடன் கூடிய ஒருவன் அவ்வாறு மீண்டும் வருவதில்லை.(15) உண்மையான சக்கரம் போலவே சுழலும் வாழ்வெனும் சக்கரத்தில் திரிந்தும் திகைப்படையாதோர், உண்மையில் மறுபிறப்பெனும் சுழற்சியில் திரிவதில்லை.(16) ஞானம் கொண்ட ஒருவன், மறுபிறப்பெனும் கடனைத் தவிர்க்க நிச்சயம் முயற்சிக்க வேண்டும். ஒருவன் இதில் அலட்சியமாக இருக்கக்கூடாது, அலட்சியமே மீண்டும் மீண்டும் நம்மை அதில் {மறுபிறப்பெனும் கடலில்} ஆழ்த்தும்.(17)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் புலன்களைக் கட்டுப்படுத்தி, கோபம் மற்றும் பேராசையை அடக்கி, உள்ளடக்கத்துடனும், உண்மை நிறைந்த பேச்சுடனும், இருக்கும் ஒரு மனிதனே அமைதியை அடைவதில் வெல்கிறான்.(18) திகைப்படையும் மூடரின் உடலானது யமனின் தேர் என்று அழைக்கப்படுகிறது. ஓ! மன்னா, அத்தகு மனிதன் நீர் அடைந்ததையே அடைவான்.(19) ஓ! பாரதரே, நாட்டையும், நண்பர்கள் மற்றும் பிள்ளைகள் ஆகியோரையும் இழப்பதும், இது போன்ற இழப்புகளும், ஆசையின் ஆதிக்கத்தில் இருப்பவனையே மூழ்கடிக்கும்.(20) ஞானியான ஒருவன், பெருந்துன்பங்கள் அனைத்திற்கும், அறிவெனும் மருந்தை இட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா கொண்ட ஒரு மனிதன், உண்மையில் நன்மைதரக்கூடியதும், கிட்டத்தட்ட அடையமுடியாததுமான ஞானமருந்தை அடைந்து கவலை என்றழைக்கப்படும் மிக முக்கிய நோயை உண்மையில் கொன்றுவிடுவான் {குணப்படுத்துவான்}.(21) துயரத்தில் இருக்கும் ஒரு மனிதனை, தன்னடக்கமுள்ள அவனது ஆன்மாவாலான்றி, ஆற்றலாலோ, செல்வத்தாலோ, நண்பர்களாலோ, நலன் விரும்பிகளாலோ {நோயிலிருந்து} குணப்படுத்த முடியாது. எனவே, ஓ! பாரதரே, அனைத்துத் தீங்குகளையும் செய்யாமலிருக்கும், அல்லது அனைத்து உயிரினங்களிடமும் நட்புடனிருக்கும் பெருங்கடமையை {அஹிம்சையைப்} பன்பற்றி நன்னடத்தையை நோற்பீராக.(22)
தற்கட்டுப்பாடு, துறவு, கவனக்குவிப்பு ஆகியவையே பிரம்மத்தின் மூன்று குதிரைகளாகும். இந்தக் குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும் தன்னான்மா எனும் தேரில் செல்லும் ஒருவன், நன்னடத்தை எனும் கடிவாளத்தின் துணை கொண்டு, மரணம் குறித்த அச்சமனைத்தையும் விட்டு, அதை {அந்தத் தேரைச்} செலுத்திச் பிரம்மலோகத்தை அடைகிறான்.(23) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, எந்த மனிதன் தீங்கிழையாமையை அனைத்து உயிரினங்களுக்கும் உறுதி செய்கிறானோ, அவன் அருளாளனான விஷ்ணுவின் உயர்ந்த உலகங்களுக்குச் செல்கிறான்.(24) உயிரினங்கள் அனைத்திற்கும் தீங்கிழையாமையை உறுதி செய்வதால் ஒருவன் அடையும் கனியை, ஆயிரம் வேள்விகளாலோ, தினநோன்புகளாலோ அடையமுடியாது.(25) அனைத்துப் பொருட்களிலும் தன்னை {சுயத்தை} விட அன்புக்குரியது வேறு எதுவுமில்லை. ஓ! பாரதரே, மரணத்தை எந்த உயிரினமும் விரும்புவதில்லை. எனவே, அனைவருக்கும் கருணை காட்டப்பட வேண்டும்.(26) பல்வேறு வகைத் தவறுகளால், தங்கள் சொந்த அறிவெனும் வலையிலேயே சிக்கும், தீயோரும், நல்லோரும் மீண்டும் மீண்டும் உலகத்தில் திரிய நேர்கிறது. எனினும், நுண்ணியப் பார்வை கொண்ட ஞானியரே பிரம்மத்துடன் ஒன்றுகலந்துவிடுகின்றனர்" {என்றான் விதுரன்}".(27)
ஸ்திரீ பர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |