The secret of gods! | Stri-Parva-Section-08 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 08) [விசோக பர்வம் - 08]
பதிவின் சுருக்கம் : மயக்கமடைந்து கீழே விழுந்த திருதராஷ்டிரன்; போரில் நேர்ந்த படுகொலைக்கான கமுக்கமான வரலாற்றை விளக்கி திருதராஷ்டிரனைத் தேற்றிய வியாசர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட பிறகும், தன் மகன்களின் மரணம் குறித்த துயரத்தால் பீடிக்கப்பட்ட குருக்களின் தலைவன் {திருதராஷ்டிரன்}, உணர்விழந்தவனாகக் கீழே தரையில் விழுந்தான்.(1) அவனது நண்பர்களும், தீவில் பிறந்தவரான {துவைபாயனரான} வியாசரும், விதுரன் மற்றும் சஞ்சயன் ஆகியோரும், நலன்விரும்பிகள் பிறரும், வாயில் காப்போரும், அவனது நம்பிக்கையைப் பெற்றோரும், அவன் விழுந்த நிலையைக் கண்டு,(2) அவனது உடலில் குளிர்ந்த நீரைத் தெளித்து, பனை ஓலைகளால் விசிறிவிட்டுத் தங்கள் கரங்களால் அவனை மெல்லத் தடவினர். அந்நிலையிலேயே நீண்ட நேரம் கிடந்த மன்னனை {திருதராஷ்டிரனை} அவர்கள் தேற்றினர்.(3)
நீண்ட நேரத்திற்குப் பிறகு உணர்வுகள் மீண்டவனான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, தன் மகன்களின் மரணம் குறித்த துயரில் மூழ்கி, நீண்ட நேரம் அழுது கொண்டிருந்தான்.(4) பிறகு அவன் {திருதராஷ்டிரன்}, "மனதநேயத்துக்கு ஐயோ, மனித உடலுக்கு ஐயோ, மனிதத்தன்மையாலேயே இவ்வாழ்வு அடிக்கடி துயரங்களை அனுபவிக்கிறது.(5) ஐயோ, மகன்கள், செல்வங்கள், சொந்தங்கள் மற்றும் உறவினர்களின் இழப்பால் ஒருவன் அனுபவிப்பது, நஞ்சையோ, நெருப்பையோ போன்ற பெருந்துயரமாகும்.(6) துயரம் அங்கங்களை எரிக்கிறது, அதனால் நமது ஞானமும் அழிகிறது. அத்துயரத்தில் மூழ்கும் ஒருவனுக்கு மரணமே சிறந்ததாகும்.(7) தீப்பேற்றால் நான் அடைந்திருக்கும் துயரமும் அவ்வாறானதே. உயிரை விடுவதைவிட வேறு எந்தவகையிலும் அது முடிவுபெறாது என நான் காண்கிறேன். எனவே, ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, இந்த நாளே நான் என் உயிருக்கு முடிவுகட்டப் போகிறேன்" என்றான் {திருதராஷ்டிரன்}.(8) உயரான்மா கொண்டவரும், பிரம்மத்தை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான தன் தந்தையிடம் {வியாசரிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்ன திருதராஷ்டிரன், துயரில் மூழ்கியவனாகத் திகைப்படைந்தான் {மயக்கமடைந்தான்}. ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அம்மன்னன், தன் துன்பங்களை நினைத்துப் பார்த்துப் பேச்சற்றவனானான்.(9) இவ்வார்த்தைகளைக் கேட்ட பலமிக்க வியாசர், பிள்ளைகளின் மரணத்தினால் உண்டான துயரத்தில் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} இவ்வாறு {பின்வருமாறு} பேசினார்.(10)
வியாசர் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட திருதராஷ்டிரா, நான் சொல்வதைக் கேள். ஓ! பலமிக்கவனே, நீ! கல்விமானும், பெரும் நுண்ணறிவு கொண்டவனும், கடமைகளைப் புரிந்து கொள்வதில் திறன் கொண்டவனும் ஆவாய்.(11) ஓ! எதிரிகளை எரிப்பவனே, அறியத்தக்கது எதையும் நீ அறியாதவனில்லை. மரணமடைய விதிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் நிலையாமையை நீ அறிவாய் என்பதில் ஐயமில்லை.(12) ஓ! பாரதா, உயிரினங்களுடன் கூடிய உலகம் {ஜீவலோகம்} நிலையற்றது, இவ்வுலகமே நிலையானதில்லை, உயிரானது நிச்சயம் மரணத்தினால்தான் முடிவுக்கு வரும் எனும்போது, நீ ஏன் துயருறுகிறாய்?(13) ஓ! மன்னா, காலத்தால் கொண்டவரப்பட்டு ஒன்றுதிரண்ட உண்மைகள், உன் கண்களுக்கு முன்பாக, உன் மகனையே {துரியோதனனையே} இந்தப் பகைமைக்குக் காரணமாக்கின.(14)
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, குருக்களின் அழிவு தவிர்க்கப்பட முடியாதது. உயர்ந்த முடிவை அடைந்திருக்கும் அவ்வீரர்களைக் குறித்து நீ ஏன் வருந்துகிறாய்?(15) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உயரான்ம விதுரன் அனைத்தையும் அறிவான். ஓ! மன்னா, தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தி அவன் {விதுரன்} அமைதியைக் கொண்டு வர முயன்றான்.(16) ஒருவன் அழிவில்லாமைக்காகப் போராடினாலும், விதியால் வகுக்கப்பட்ட பாதையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பது என் கருத்தாகும்.(17) தேவர்களால் தீர்மானிக்கப்பட்ட பாதை என்னால் நேரடியாகக் கேட்கப்பட்டது. உன் மன அமைதிக்காக அதை நான் உனக்குச் சொல்கிறேன்.(18)
ஒரு காலத்தில் நான், எக்களைப்புமின்றி வெகு வேகமாக இந்திரனின் சபையை அடைந்தேன். அங்கே சொர்க்கவாசிகள் அனைவரும் ஒன்றாகக் கூடியிருப்பதைக் கண்டேன்.(19) ஓ! பாவமற்றவனே, அங்கே நாரதரின் தலைமையில் தெய்வீக முனிவர்கள் அனைவரும் இருந்தனர். ஓ! ஏகாதிபதி, அங்கே (உடல் வடிவத்துடன் கூடிய) பூமாதேவியையும் கண்டேன்.(20) ஒரு குறிப்பிட்ட காரியத்தின் நிறைவுக்காகவே அவள் தேவர்களிடம் வந்திருந்தாள். தேவர்களை அணுகிய அவள் {பூமாதேவி},(21) "அருளப்பட்டவர்களே, நீங்கள் எனக்காகச் செய்ய வேண்டியது அனைத்தையும், பிரம்மனின் வசிப்பிடத்தில் வைத்து நீங்கள் ஏற்கனவே உறுதி கூறினீர்கள். அது விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்" என்றாள்.(22)
உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனான விஷ்ணு, அவளது வார்த்தைகளைக் கேட்டு, அந்தத் தெய்வீகச் சபைக்கு மத்தியில் சிரித்துக் கொண்டே,(23) "துரியோதனன் என்ற பெயரில் அறியப்படுபவனான திருதராஷ்டிர மகன்களில் மூத்தவன் உன் காரியத்தை நிறைவேற்றுவான். அம்மன்னனின் மூலமே உனது நோக்கம் நிறைவேறும்.(24) குருக்களத்தில் {குருக்ஷேத்திரத்தில்} மன்னர்கள் பலர் அவனுக்காக ஒன்று கூடுவார்கள். தாக்கவல்ல அவர்கள், கடும் ஆயுதங்களெனும் கருவிகள் மூலம் ஒருவரையொருவர் கொல்லச் செய்வார்கள்.(25) ஓ! தேவி, அப்போதைய போரில் உன் சுமை குறைக்கப்படும். ஓ! அழகியே, வேகமாக உன் இடத்திற்குச் சென்று, உயிரினங்களைச் சுமப்பதைத் தொடர்வாயாக" என்றான்.(26)
இப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காந்தாரியின் கருவறையில் பிறந்தவனான உன் மகன் துரியோதனன், அண்ட அழிவை உண்டாக்கும் நோக்குடன் உதித்த கலியின் {கலிகாலத்தின்} ஒரு பகுதியாவான் என்பதை உன்னால் புரிந்து கொள்ள முடியும்.(27) பழிவுணர்ச்சி, அமைதியின்மை, பெருங்கோபம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், நிறைவடையக் கடினமானவனாகவும் அவன் இருந்தான். விதியின் ஆதிக்கத்தால் அவனது சகோதரர்களும், அவனைப் போலவே மாறினார்கள்.(28) சகுனி அவனது தாய்மாமனாகவும், கர்ணன் அவனது பெரும் நண்பனாகவும் ஆனார்கள். அந்த அழிவு வேலைக்குத் துணைபுரியவே பல்வேறு மன்னர்கள் பூமியில் பிறந்தார்கள்.(29) மன்னன் எவ்வழியோ, குடிகளும் அவ்வழியே. மன்னன் நேர்மையானவனாக இருந்தால், அவனது ஆட்சிப்பகுதியில் நேர்மையற்றவர்களும், நேர்மையாளர்களாக ஆவார்கள்.(30) பணியாட்கள் தங்கள் தலைவர்களின் தகுதிகள் மற்றும் குறைகளால் பாதிப்பை அடைகிறார்கள் என்பதில் ஐயமில்லை {பணியாட்கள் தங்கள் தலைவர்களின் குணங்களையே அடைகிறார்கள்}. ஓ! மன்னா, உன் மகன்கள் ஒரு தீய மன்னனை அடைந்து அழிவை அடைந்தார்கள். ஓ! ஏகாதிபதி அவர்களுக்காக வருந்தாதே. துயருறக் காரணமேதுமில்லை.(32)
ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, {இதுவரை} நடந்தவற்றில் பாண்டவர்கள் சிறு தவறையும் செய்யவில்லை. உன் மகன்கள் அனைவரும் தீய ஆன்மாக்களைக் கொண்டோராக இருந்தனர். அவர்களே உலகத்திற்கு இந்த அழிவைச் செய்தனர்.(33) நீ அருளப்பட்டிருப்பாயாக. ராஜசூய வேள்வியின் போது யுதிஷ்டிரனின் சபையில் நாரதர்,(34) "பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவரோடொருவர் மோதி, அழிவைச் சந்திப்பார்கள். ஓ! குந்தியின் மகனே, நீ செய்ய வேண்டியதைச் செய்வாயாக" என்றார் {நாரதர்}.(35) நாரதரின் வார்த்தைகளைக் கேட்டுப் பாண்டவர்கள் துயரால் நிறைந்தார்கள். இவ்வாறே நான் தேவர்களின் அழிவில்லா ரகசியத்தை உனக்குச் சொல்லிவிட்டேன்.(36) தேவர்களால் விதிக்கப்பட்ட அத்தனையும் நடந்தது என்பதால், இஃது உன் துயரத்தை அழித்து, உன் உயிர்மூச்சில் அன்பை மீட்டெடுத்து, பாண்டவர்களிடம் பாசம் கொள்ளச் செய்யும்.(37)
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {திருதராஷ்டிரனே}, இவையனைத்தும் சில காலத்திற்கு முன்பே நான் அறிந்தேன். வேள்விகளில் முதன்மையான ராஜசூயத்தின்போது, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் நான் இதைப் பேசவும் செய்தேன்.(38) நான் அவனிடம் கமுக்கமாக இவையனைத்தையும் சொன்னபோது, அந்தத் தர்மனின் மகன் {யுதிஷ்டிரன்} கௌரவர்களுடனான அமைதியைப் பாதுகாக்க தன்னாலான சிறந்த முயற்சியைச் செய்தான். எனினும், தேவர்களால் விதிக்கப்பட்ட அது (அவனால் கலங்கடிக்கப்பட முடியாத அளவுக்கு) சக்தி வாய்ந்ததாக இருந்தது.(39) எவ்வாறாயினும், ஓ! மன்னா, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் யமனின் செயலைக் கலங்கடிக்கவல்லவையல்ல.(40)
ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, நீ அறத்தில் அர்ப்பணிப்பு கொண்டவனும், மேன்மையான நுண்ணறிவைக் கொண்டவனுமாவாய். அனைத்துயிரினங்களுக்கும் எது வழி, எது வழியில்லை என்பதையும் நீ அறிவாய்.(41) மன்னன் யுதிஷ்டிரன், நீ துயரால் எரிவதையும், அடிக்கடி உன் உணர்வுகளை இழப்பதையும் {மயங்கி விழுவதையும்} அறிந்தால், தன் உயிர்மூச்சையே விட்டுவிடுவான்.(42) அவன் எப்போதும் கருணையுள்ளவனாகவும், ஞானம் கொண்டவனாகவும் இருக்கிறான். இழிந்த உயிரினங்கள் அனைத்திடமும் கூட அவன் தன் அன்பை விரிவடையச் செய்கிறான். ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதி, அவன் {யுதிஷ்டிரன்} உன்னிடம் கருணைகொள்ளாதிருக்க என்ன சாத்தியம்?(43) என் ஆணையின் பேரிலும், தவிர்க்க முடியாத விதியை அறிந்தும், பாண்டவர்களிடம் அன்பு கொண்டு உன் உயிரைத் தாங்கிக் கொள்வாயாக.(44) இவ்வாறு நீ வாழ்ந்தால், உன் புகழ் உலகமெங்கும் பரவும். அனைத்துக் கடமைகளின் அறிவை அடைந்து, பலவருடங்களின் தவத் தகுதியை நீ அடைவாய்.(45) ஓ! மன்னா, உன் மகன்களின் மரணத்தால் உன் இதயத்தில் எழுந்திருக்கும் இந்தத் துயரமெனும் சுடர்மிக்க நெருப்பானது, ஞானமெனும் நீரால் எப்போதும் அணைக்கப்பட வேண்டும்" {என்றார் வியாசர்}.(46)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அளவிலா ஆன்மா கொண்டவரான வியாசரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அவற்றைக் குறித்துச் சிறிது நேரம் சிந்தித்த திருதராஷ்டிரன்,(47) "ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {தந்தையே}, நான் துயரெனும் பெருங்கனத்தால் அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கிறேன். என் புலனுணர்வுகள் என்னை அடிக்கடி கைவிடுகின்றன, என்னால் என்னையே தாங்கிக் கொள்ள முடியவில்லை.(48) எனினும், தேவர்களால் விதிக்கப்பட்டதைக் குறித்த உமது வார்த்தைகளைக் கேட்டதால், என் உயிர்மூச்சை விட நினைக்காமலும், துயரில் ஈடுபடாமலும் வாழ்வேன்" என்றான்.(49) சத்தியவதியின் மகனான வியாசர், ஓ! ஏகாதிபதி, திருதராஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு அங்கேயே அப்போதே மறைந்து போனார்" {என்றார் வைசம்பாயனர்}.(50)
ஸ்திரீ பர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 50
ஆங்கிலத்தில் | In English |