Vidura consoles Dhritarashtra again!| Stri-Parva-Section-09 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 09) [விசோக பர்வம் - 09]
பதிவின் சுருக்கம் : முதிய மன்னனுக்கு ஆறுதலளித்த விதுரன்; கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தையும், கொலை செய்தவர்கள் புகழையும் அடைவார்கள் எனவே கவலை கொள்வது தகாது எனத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்; காலனின் வலிமை, வாழ்வின் நிலையாமை ஆகியவற்றைச் சொன்ன விதுரன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மறுபிறப்பாள {பிராமண} முனிவரே, புனிதமான வியாசர் சென்ற பிறகு, மன்னன் திருதராஷ்டிரன் என்ன செய்தான்? எனக்கு இதைச் சொல்வதே உமக்குத் தகும்.(1) மேலும் குரு மன்னான மன்னனும், உயரான்மாவுமான தர்மன் மகன் {யுதிஷ்டிரன்} என்ன செய்தான்? கிருபர் முதலான மூவரும் என்ன செய்தனர்.(2) அஸ்வத்தாமனின் செயல்களையும், ஒருவருக்கொருவர் சாபங்களைப் பழித்துரைத்ததையும் நான் கேட்டேன். அடுத்ததாக நடந்ததையும், (முதிர்ந்த மன்னனிடம்) அடுத்து சஞ்சயன் என்ன சொன்னான் என்பதையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(30)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "துரியோதனன் கொல்லப்பட்டு, துருப்புகள் அனைத்தும் கொல்லப்பட்ட பிறகு, தன் ஆன்மப் பார்வையை இழந்த சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் திரும்ப வந்தான்.(4)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, பல்வேறு ஆட்சிப்பகுதிகளில் இருந்து வந்தவர்களும், பல்வேறு மக்களின் மன்னர்களும் என அனைவரும் உமது மகன்களுடன் சேர்ந்து இறந்தோரின் உலகத்தை அடைந்தனர்.(5) ஓ மன்னா, (அமைதிக்காக) தொடர்ந்து வேண்டிக் கொள்ளப்பட்டவனும், ஆனால் (பாண்டவர்களைக் கொன்று) தன் பகைமையை முடிக்க வேண்டும் என எப்போதும் விரும்பியவனுமான உமது மகன் {துரியோதனன்} இவ்வுலகத்தை நிர்மூலமாகச் செய்தான்.(60) ஓ! மன்னா, உமது மகன்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் தந்தைமார் ஆகியோரின் ஈமச் சடங்குகளை முறைப்படி செய்ய ஏற்பாடு செய்வீராக" என்றான்".(7)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "சஞ்சயனின் இந்தப் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட மன்னன் {திருதராஷ்டிரன்}, கீழே பூமியில் விழுந்து, உயிரை இழந்தவனைப் போல அசைவற்றுக் கிடந்தான்.(8)
கடமைகள் அனைத்தையும் அறிந்தவனான விதுரன், பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்த அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அணுகி, இவ்வார்த்தைகளைச் சொன்னான்:(9) "ஓ! மன்னா, ஏன் இவ்வாறு கீழே கிடக்கிறீர்? எழுவீராக. ஓ! பாரதக் குலத்தின் காளையே, வருந்தாதீர். ஓ! பூமியின் தலைவரே, அனைத்துயிர்களின் இறுதியான முடிவும் இதுவேயாகும்.(10) முதலில் உயிரினங்கள் இருப்பில் இல்லாதிருந்தன. ஓ!பாரதரே, நடுவிலோ, அவை இருப்பில் இருந்தன. இறுதியிலும், அவை இருப்பில் இல்லாமல் போகின்றன. இவை யாவற்றிலும் என்ன கவலையைக் கொள்ள முடியும்?(11) துயரில் ஈடுபடுவதால், இறந்தோர் திரும்பி வருவதில்லை. துயரில் ஈடுபடுவதால் ஒருவன் தானே இறப்பதுமில்லை. உலகத்தின் வழி இவ்வாறிருக்கையில், ஏன் நீர் துயரில் ஈடுபடுகிறீர்?(12) போரில் ஈடுபடாமலேயே ஒருவன் இறக்கலாம். போரில் ஈடுபட்ட பிறகும் ஒருவன் உயிரோடு தப்பலாம். ஆனால், ஓ! மன்னா, காலன் வரும்போது ஒருவனால் தப்ப முடியாது.(13)
அனைத்து வகை உயிரினங்களையும் காலன் இழுத்துச் செல்கிறான். ஓ! குருக்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, காலனுக்கு அன்புக்குரியவனோ, வெறுப்புக்குரியவனோ எவனும் கிடையாது.(14) ஓ! பாரதக் குலத்தின் காளையே புல்லின் நுனிகள் அனைத்தையும் கிழிக்கும் காற்றைப் போலவே, காலனின் ஆதிக்கத்திற்குள் அனைத்து உயிரினங்களும் வருகின்றன.(15) ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் வணிகக்கூட்டத்தின் உறுப்பினர்களைப் போலவே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. வேறொருவனுக்குச் சிறிது முன்பாகவே காலன் ஒருவனைச் சந்திக்கிறான் என்றால் அதில் வருந்துவதற்கான காரணம் என்ன இருக்கிறது?(16) மேலும் ஓ! மன்னா, போரில் வீழ்ந்த சிறப்புமிக்கவர்கள் அனைவரும் சொர்க்கத்திற்கே சென்றிருப்பதால், அவர்கள் உமது துயரத்திற்குரிய பொருட்கள் அல்லர்.(17) போரில் துணிவுடன் இருந்த வீரர்களைவிட அபரிமிதமான கொடைகளைக் கொண்ட வேள்விகளாலோ, தவங்களாலோ, அறிவாலோ ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு எளிதாகச் செல்ல முடியாது.(18)
அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்கள்; அவர்கள் அனைவரும் நோன்புகள் நோற்றவர்கள். எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்தே அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது?(19) அவர்கள், நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவதைப் போலத் துணிச்சல்மிக்க எதிரிகளின் உடல்களில் தங்கள் கணை ஆகுதிகளைப் பொழிந்தார்கள். மனிதர்களில் முதன்மையானோரான அவர்கள், பதிலுக்குத் தங்கள் மீது ஊற்றப்படும் கணை ஆகுதிகளைப் தாங்கிக் கொண்டனர்.(20) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் ஒரு க்ஷத்திரியனுக்கு, போரைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை என நான் உமக்குச் சொல்கிறேன்.(21) அவர்கள் அனைவரும் உயர் ஆன்ம க்ஷத்திரியர்களும், துணிச்சல் கொண்டவர்களும், சபைகளின் ரத்தினங்களுமாவர். அவர்கள் உயர்ந்த அருள்நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் நாம் கவலைகொள்ளத்தக்க மனிதர்களல்லர்.(22) ஓ! மனிதர்களில் காளையே, உம்மை நீரே தேற்றிக் கொண்டு, கவலையை விடுவீராக. செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, கவலையில் மூழ்குவது உமக்குத் தகாது" {என்றான் விதுரன்}[1].(23)
[1] ஸ்திரீ பர்வம் பகுதி2-ஐயும், இந்தப் பகுதியையும் {ஸ்திரீ பர்வம் பகுதி 9-ஐயும்} ஒப்பிட்டால் கிட்டத்தட்ட அவையிரண்டும் ஒன்றாகவே இருக்கிறது. உண்மையில் ஸ்திரீ பர்வம் இந்தப் பகுதியில் இருந்தே தொடங்குவதாகத் தெரிகிறது. ஸ்திரீ பர்வம் பகுதி 1 முதல் 8 வரை உள்ள பகுதிகளின் உண்மைத்தன்மையில், அதாவது இவை பிற்காலத்திய இடைச்செருகலாக இருக்குமோ, என வாசகர்கள் ஐயங்கொண்டால் அஃது இயல்பே. எனினும், முன்பு சென்ற பகுதிகளின் பொருளும் சுவையும் சிறந்தவையென்பதில் ஐயங்கொண்டால் அஃது இயல்பாகாது.
*********விசோக உபபர்வம் முற்றும்*********
ஸ்திரீ பர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |