Royal ladies set out to the battlefield! | Stri-Parva-Section-10 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 10) [ஸ்திரீ பர்வம் - 01]
பதிவின் சுருக்கம் : அரச மகளிரை அழைத்துக் கொண்டு போர்க்களத்திற்குச் செல்லத் தீர்மானித்த திருதராஷ்டிரன்; குருகுலப் பெண்களைத் தேரில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்த விதுரன்; அரச குடும்பமும், பெரும் எண்ணிக்கையிலான குடிமக்களுக்கும் ஹஸ்தினாபுரத்தை விட்டுப் புறப்பட்டது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தப் பாரதக் குலத்தின் காளை (திருதராஷ்டிரன்), விதுரனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டான்.(1) மன்னன் {திருதராஷ்டிரன்} மீண்டும் {விதுரனிடம்}, "காந்தாரியையும், பாரதக்குல பெண்கள் அனைவரையும் தாமதிக்காமல் இங்கே கொண்டு வருவாயாக. குந்தியையும், அவளுடன் உள்ள பிற பெண்கள் அனைவரையும் இங்கே கொண்டு வருவாயாக" என்றான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட திருதராஷ்டிரன், ஒவ்வொரு கடமையையும் அறிந்த விதுரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, கவலையால் உணர்வுகளை இழந்து தன் தேரில் ஏறினான்.(3) அப்போது, தன் மகன்களின் மரணத்தின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரி, தன் தலைவனின் {திருதராஷ்டிரனின்} ஆணையினால், குந்தி மற்றும் அரச குடும்பத்தின் பிற மகளிரின் துணையுடன், பின்னவன் {திருதராஷ்டிரன்} தனக்காகக் காத்திருந்த இடத்திற்கு வந்தாள்.(4) பெருந்துயரத்தால் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள் ஒன்றாக மன்னனிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் சந்தித்தபோது, ஒருவரையொருவர் கைவிரித்து அழைத்து, கவலையால் உரத்த ஓலமிட்டனர்.(5)
விதுரன், அந்தப் பெண்களைவிட அதிகம் பீடிக்கப்பட்டிருந்தாலும், அவர்களைத் தேற்றத் தொடங்கினான். அழுதுகொண்டிருந்த அந்த அழகிய பெண்களின் அருகில் ஆயத்தமாக இருந்த தேரில் ஏற்றி, (அவர்களுடன் சேர்ந்து) நகரத்தைவிட்டுப் புறப்பட்டான்.(6) அந்நேரத்தில் ஒவ்வொரு குருவின் {குருகுலத்தோன் ஒவ்வொருவனின்} வீட்டிலும் துன்ப ஓலம் எழுந்தது. பிள்ளைகளுடன் சேர்த்து மொத்த நகரமும் பெருந்துயரால் பீடிக்கப்பட்டிருந்தது.(7) இதற்கு முன்பு தேவர்களாலேயே {கண்கொண்டு} காணப்படாத மங்கையர், தங்கள் தலைவர்களை இழந்து ஆதரவற்றவர்களாகி இப்போது பொது மக்களால் காணப்பட்டனர். அவர்கள் அழகிய குழல்கள் கலைந்தவர்களாக, ஆபரணங்களற்றவர்களாக, உடுப்பாக ஒற்றையாடையை அணிந்திருந்த அந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் மிகத் துயரத்துடன் அவ்வாறு சென்றனர்.(9) உண்மையில் அவர்கள், தங்கள் தலைவன் வீழ்ந்ததும் மலைக்குகைகளில் இருந்து வெளிவரும் புள்ளிமான் கூட்டத்தைப் போல வெண்மலைகளுக்கு ஒப்பான தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தனர்.(10)
அந்த அழகிய பெண்கள், கேளிக்கை வட்டாரங்களில் பெண் குதிரைக்குட்டிக் கூட்டங்களைப் போலவும், அடுத்தடுத்த வானம்பாடிக் கூட்டங்களாகவும் கவலையால் அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தனர்.(11) ஒருவரையொருவர் கரங்கள் பற்றிக் கொண்ட அவர்கள், தங்கள் மகன்கள், சகோதரர்கள் மற்றும் தந்தைமாருக்காக உரத்த ஓலமிட்டனர். யுக முடிவின் போது நேரும் அண்ட அழிவுக்காட்சியை அது வெளிப்படுத்துவதாக இருந்தது.(12) துயரால் தங்கள் புலனுணர்வுகளை இழந்த அவர்கள், புலம்பிக் கொண்டும், அழுதுகொண்டும், அங்கேயே இங்கேயும் ஓடிக்கொண்டும், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தனர்.(13) தங்கள் பாலினத் தோழிகளின் முன்னிலையிலேயே முன்பெல்லாம் வெட்கப்படும் அந்தப் பெண்டிர், இப்போது மிகக் குறைவாகவே உடுத்தியிருந்த நிலையில் தங்கள் மாமியார்கள் முன்னிலையில் தோன்றியும் வெட்கமடையாதிருந்தனர்.(14) முன்பெல்லாம் வருந்தத்தக்க சிறு காரணங்களுக்காகவும் ஒருவருயொருவர் தேற்றிக் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {ஜனமேஜயா} இப்போதோ, துயரால் திகைப்படைந்து, ஒருவரையொருவர் கண்ணெடுத்துப் பார்ப்பதையும் தவிர்த்தனர்.(15)
மன்னன் {திருதராஷ்டிரன்}, ஓலமிட்டுக்கொண்டிருக்கும் அந்த ஆயிரக்கணக்கான பெண்களால் சூழப்பட்டு, நகரைவிட்டுப் புறப்பட்டு, போர்க்களத்தை நோக்கி வேகமாகச் சென்றான்.(16) கலைஞர்கள் {சிற்பிகள்}, வணிகர்கள் {வியாபாரிகள்}, வைசியர்கள், அனைத்து வகை இயந்திரக் கைவினைஞர்கள் ஆகியோரும் {வேலை செய்து பிழைக்கும் மற்ற அனைவரும்} நகரத்தில் இருந்து புறப்பட்டு மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(17) குருக்களை மூழ்கடித்திருக்கும் அந்த முற்றான அழிவால் பீடிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்டிர், சோகமாக அழுததால், அவர்களுக்கு மத்தியில் எழுந்த ஓலமானது அனைத்து உலகங்களையும் துளைப்பதாகத் தெரிந்தது.(18) அந்த ஓலத்தைக் கேட்ட அனைத்து உயிரினங்களும், யுக முடிவில் நெருப்பு எழுந்து அனைத்தையும் எரிக்கும் அண்ட அழிவுக்கான நேரம் வந்துவிட்டதென நினைத்தன.(19) ஓ! மன்னா, குருவின் {குருகுலத்தோனான திருதராஷ்டிரனின்} வீட்டிற்கு அர்ப்பணிப்புள்ள குடிமக்களும், தங்கள் ஆட்சியாளர்களுக்கு நேர்ந்த அழிவால் தங்கள் இதயங்கள் துயரில் நிறைய, அந்தப் பெண்களைப் போலவே உரக்க ஓலமிட்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(20)
ஸ்திரீ பர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |