Three heroes met the Royal family on the way! | Stri-Parva-Section-11 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 11) [ஸ்திரீ பர்வம் - 02]
பதிவின் சுருக்கம் : தன் மகனின் படையில் எஞ்சியிருக்கும் மூன்று வீரர்களை வழியில் சந்தித்த திருதராஷ்டிரன்; துரியோதனன் நியாயமற்ற முறையில் கொல்லப்பட்டதைக் காந்தாரிக்குச் சொன்ன கிருபர்; பாண்டவர்களிடம் கொண்ட அச்சத்தால் கிருபர், அஸ்வத்தாமன் மற்றும் கிருதவர்மன் ஆகியோர், காந்தாரியிடமும், திருதராஷ்டிரனிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரன், இரண்டு மைல்கள் {ஒரு குரோச தொலைவு} செல்வதற்குள், சரத்வான் மகனான கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} மற்றும் கிருதவர்மன் ஆகியோரைச் சந்ததித்தான்.(1) பெரும் சக்தி கொண்டவனும், பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதியை {திருதராஷ்டிரனை} அம்மூவரும் கண்டதும், துயரால் பெருமூச்சுவிட்டபடியும், கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அழுதுகொண்டும், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடைதற்கரிய சாதனைகளைச் செய்த உமது அரசமகன் {துரியோதனன்}, தன் தொண்டர்களுடன் இந்திரலோகம் சென்றுவிட்டான்.(3) துரியோதனனின் படையில் நாங்கள் மூன்று தேர்வீரர்கள் மட்டுமே உயிரோடு தப்பினோம். ஓ! பாரதக் குலத்தின் காளையே, பிறரனைவரும் அழிந்துவிட்டனர்" என்றனர்.(4)
மன்னனிடம் அவர்கள் இதைச் சொன்னதும், சரத்வான் மகனான கிருபர், துயரால் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியிடம், இவ்வார்த்தைகளைச் சொன்னார்,(5) "உன் மகன்கள், போரில் அச்சமில்லாமல் போரிட்டு, பெரும் எண்ணிக்கையிலான எதிரிகளை வீழ்த்தி, வீரர்களுக்குத் தகுந்த சாதனைகளைச் செய்து கொண்டிருந்தபோது வீழ்ந்தனர்.(6) அவர்கள், ஆயுதங்களைப் பயன்படுத்தி அடையும் பிரகாசமான உலகங்களை அடைந்து, பிரகாசமான வடிவங்களை ஏற்று விளையாடிக் கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.(7) அவர்களில் எந்த வீரனும் போரில் புறமுதுகிடவில்லை. அனைவரும் ஆயுதம் தீர்ந்தோ, ஆயுதமுனையினாலோ வீழ்ந்தனர். அவர்களில் எவரும் தங்கள் கரங்களைக் கூப்பித் தஞ்சம் கேட்கவில்லை {சரணடையவில்லை}.(8) ஆயுதங்கள் தீர்ந்தோ, ஆயுதங்களின் முனையிலோ போரில் மரணத்தை அடைவது க்ஷத்திரியன் அடையும் உயர்ந்த கதி என்று சொல்லப்படுகிறது.(9) ஓ! ராணி {காந்தாரி}, அவர்களின் எதிரிகளான பாண்டவர்களும் அதிக நற்பேற்றைப் பெறவில்லை. அஸ்வத்தாமன் தலைமையில் நாங்கள் என்ன செய்தோம் என்பதைக் கேட்பாயாக.(10)
உன் மகன் துரியோதனன், பீமனால் நியாயமற்ற வகையில் கொல்லப்பட்டான் என்பதை அறிந்த நாங்கள், உறக்கத்தில் புதைந்திருந்த பாண்டவர்களின் முகாமில் புகுந்து அவர்கள் அனைவரையும் கொன்றோம்.(11) பாஞ்சாலர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். உண்மையில் துருபதனின் மகன்கள் அனைவரும், திரௌபதியின் மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(12) நம் பகைவரின் மகன்களுக்கு இந்தப் பேரழிவைச் செய்துவிட்டு, போரில் அவர்கள் முன்பு நிற்க இயலாததால் இப்போது தப்பிச் செல்கிறோம்.(13) நம் எதிரிகளான பாண்டவர்கள் அனைவரும் வீரர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமாவர். சினத்தால் நிறையும் அவர்கள், பழிதீர்ப்பதற்காக எங்களை அடைய விரைவில் வருவார்கள்.(14) ஓ! சிறப்புமிக்கப் பெண்மணியே, தங்கள் மகன்கள் கொல்லப்பட்டதைக் கேட்டு, சினத்தால் மதங்கொள்பவர்களும் வீரர்களுமான அந்த மனிதர்களில் காளைகள் {பாண்டவர்கள்} வேகமாக எங்கள் தடத்தைப் பின்தொடர்ந்து வருவார்கள்.(15)
(உறங்கும் முகாமுக்குள்) பேரழிவை ஏற்படுத்திய நாங்கள் {இங்கே} நிற்பதற்கும் துணியமாட்டோம். ஓ! ராணியே {காந்தாரியே}, எங்களுக்கு விடைகொடுப்பாயாக. உன் இதயத்தைக் கவலையில் ஆழ்த்துவது உனக்குத் தகாது.(16) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீயும் எங்களுக்கு விடைகொடுப்பாயாக. மன உரம் அனைத்தையும் {உதவிக்கு} அழைப்பாயாக. க்ஷத்திரியக் கடமைகளை அதன் உயர்ந்த வடிவில் நோற்பாயாக" என்றார் {கிருபர்}.(17)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, கிருபர், கிருதவர்மன் மற்றும் துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} ஆகியோர், பெரும் ஞானம் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, அவனை வலம் வந்து,(18) அவனிடமிருந்து தங்கள் கண்களை அகற்ற முடியாமல், தங்கள் குதிரைகளைத் தூண்டி கங்கைக்கரையை நோக்கிச் சென்றனர்.(19) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவ்விடத்தைவிட்டு அகன்ற அந்தப் பெருந்தேர்வீரர்கள், இதயங்கள் கவலையில் மூழ்கிய நிலையிலேயே, ஒருவரிடமிருந்து ஒருவர் விடைபெற்றுக் கொண்டு, பிரிந்து சென்றனர்.(20)
சரத்வான் மகனான கிருபர் ஹஸ்தினாபுரத்திற்கும்; ஹிருதிகனின் மகன் {கிருதவர்மன்} தன் நாட்டுக்கும்; துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்} வியாசரின் ஆசிரமத்திற்கும் புறப்பட்டுச் சென்றனர்.(21) இவ்வாறே, பாண்டுவின் உயரான்ம மகன்களுக்குக் குற்றமிழைத்த அவ்வீரர்கள், அச்சத்தால் பீடிக்கப்பட்டும், ஒருவரின் மீது மற்றவர் பார்வையைச் செலுத்திக் கொண்டும் தாங்கள் விரும்பிய இடத்திற்குச் சென்றனர்.(22) இவ்வாறு மன்னனைச் சந்தித்தவர்களும், துணிச்சமிக்கவர்களுமான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்கள், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சூரியன் உதிக்கும் முன்பே தாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களுக்குச் சென்றனர்.(23) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இதற்குப் பின்னரே, பெரும் தேர்வீரர்களான பாண்டுவின் மகன்கள் துரோணரின் மகனுடன் {அஸ்வத்தாமனுடன்} மோதி, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி (ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல) அவனை வென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(24)
ஸ்திரீ பர்வம் பகுதி – 11ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |