The wrath of Gandhari! | Stri-Parva-Section-14 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 14) [ஸ்திரீ பர்வம் - 05]
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைச் சபிக்க நினைத்திருந்த காந்தாரி; தீடீரென அங்கே வந்த வியாசர் அவளது கோபத்தைத் தணிக்க ஆலோசனை கூறுவது; அவரது ஆலோசனையை ஏற்றுக் கொண்ட காந்தாரி, பீமனின் அநியாயத்தைச் சுட்டிக்காட்டியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "திருதராஷ்டிரனால் ஆணையிடப்பட்ட குரு குலக் காளைகளான அந்தப் பாண்டவச் சகோதரர்கள், கேசவனின் {கிருஷ்ணனின்} துணையுடன் காந்தாரியைக் காணச் சென்றனர்.(1) களங்கமற்றவளான காந்தாரி, தன் நூறு மகன்களின் மரணத்தால் துயரில் பீடிக்கப்பட்டு, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் தன் எதிரிகள் அனைவரையும் கொன்றதை நினைவுகூர்ந்து அவனைச் {யுதிஷ்டிரனைச்} சபிக்க விரும்பினாள்.(2) சத்தியவதியின் மகன் {வியாசர்}, பாண்டவர்களிடம் அவள் கொண்டிருக்கும் தீய நோக்கங்களைப் புரிந்த கொண்டு, தொடக்கத்திலேயே அதற்கு எதிர்வினையாற்றத் தனக்குள் தீர்மானித்தார்.(3) மனோவேகத்தில் தாம் விரும்பும் இடத்திற்குச் செல்ல வல்ல அந்தப் பெரும் முனிவர் {வியாசர்}, கங்கையின் புனிதமான தெளிந்த நீரால் தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்.(4) ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்தையும் தமது ஆன்மப் பார்வையால் பார்க்க வல்ல அந்தத் தவசி {வியாசர்}, தன் மனத்தை அதை நோக்கிச் செலுத்தி அங்கே தோன்றினார்.(5)
பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், எப்போதும் உயிரினங்களின் நன்மையையே நோக்கமாகக் கொண்டவருமான அந்த முனிவர் {வியாசர்}, சரியான நேரத்தில் தன் மருமகளிடம் {காந்தாரியிடம்},(6) "சபிப்பதற்கு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதே. மறுபுறம் உன் மன்னிப்பைக் காட்ட {வழங்க} அதைப் பயன்படுத்துவாயாக {பொறுமை காட்டுவாயாக}. ஓ! காந்தாரி, நீ பாண்டவர்களிடம் கோபங்கொள்ளக் கூடாது. உன் இதயத்தை அமைதியில் நிலைநிறுத்துவாயாக. உன் உதடுகளிலிருந்து உதிரப்போகும் வார்த்தைகளைத் தடுப்பாயாக. என் அறிவுரையைக் கேட்பாயாக.(7) வெற்றியை விரும்பிய உன் மகன் {துரியோதனன்}, பதினெட்டு நாட்கள் நீடித்த அந்தப் போரின் போது ஒவ்வொருநாளும்[1] உன்னிடம், "ஓ! தாயே, எதிரிகளுடன் போரிடப் போகும் எனக்கு அருள்புரிவாயாக" என்று வேண்டினான்.(8) வெற்றியை விரும்பிய உனது மகன் ஒவ்வொரு நாளும் இவ்வார்த்தைகளால் இரந்து கேட்டுக் கொண்டும், நீ அவனுக்கு எப்போதும் கொடுத்த பதில், "எங்கே அறமிருக்கிறதோ, அங்கே வெற்றியுமிருக்கும்" என்பதாகும்.(9)
[1] பிபேக்திப்ராயின் பதிப்பில், "வெற்றியை விரும்பிய உன் மகன் உன்னிடம் பதினெட்டு நாட்களுக்கு முன் பேசினான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இந்த நாட்கள் குறிப்பிடப்படவில்லை.
ஓ! காந்தாரி, நீ சொன்ன வார்த்தைகள் ஏதும் பொய்த்ததாக எனக்கு நினைவில்லை. எனவே, துரியோதனனால் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டு, நீ சொன்ன அந்த வார்த்தைகளும் பொய்க்க முடியாது. நீ எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையிலேயே ஈடுபட்டிருக்கிறாய்.(10) க்ஷத்திரியர்களின் அந்தப் பயங்கரப் போரில் அடுத்தக் கரையை அடைந்த பாண்டுவின் மகன்களே நிச்சயமாக வென்றிருக்கிறார்கள், {அவர்களிடமே} அறத்தின் அளவும் அதிகமாக இருக்கிறது.(11) நீ முன்பு மன்னிக்கும் அறத்தை {பொறுமையை} நோற்று வந்தாய். அஃதை இப்போது ஏன் நீ நோற்கக்கூடாது? ஓ! அறமறிந்தவளே, அநீதியை அடக்குவாயாக. எங்கே அறமிருக்கிறதோ, அங்கேதான் வெற்றியுமிருக்கும்.(12) ஓ! காந்தாரி, உன் அறத்தையும், நீ பேசிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்து உன் கோபத்தை அடக்குவாயாக. ஓ! அழகாகப் பேசுபவளே, வேறுவகையில் செயல்படாதே" என்றார் {வியாசர்}.(13)
இவ்வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி {வியாசரிடம்}, "ஓ! புனிதமானவரே, பாண்டவர்களிடம் நான் எந்தக் கோபமும் கொள்ளவில்லை, அவர்கள் அழிய வேண்டும் என்று விரும்பவுமில்லை. எனினும், என் மகன்களின் மரணத்தால் ஏற்பட்ட துயரின் விளைவாக, என் இதயம் மிகப் பலத்த கலக்கத்தையடைகிறது.(14) குந்தி எவ்வளவு கவனமாகப் பாண்டவர்களைப் பாதுகாக்கிறாளோ, அதே அளவு நானும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், நான் பாதுகாக்கும் அளவுக்குத் திருதராஷ்டிரரும் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் நான் அறிவேன்.(15) துரியோதனன் மற்றும் சுபலரின் மகனான சகுனி ஆகியோரின் குற்றத்தின் மூலமும், கர்ணன் மற்றும் துச்சாசனன் ஆகியோரின் செயல்பாடுகளின் மூலமும், குருக்களின் இந்த முற்றான அழிவு நடைபெற்றிருக்கிறது.(16) இக்காரியத்தில், பீபத்சு {அர்ஜுனன்} மீதோ, பிருதையின் மகனான விருகோதரன் {பீமன்} மீதோ, நகுலன் மீதோ, சகாதேவன் மீதோ, யுதிஷ்டிரன் மீதோ சிறு பழியையும் இணைத்துச் சொல்ல முடியாது.(17)
ஆணவம் மற்றும் செருக்குடன் கூடிய கௌரவர்கள், போரில் ஈடுபடும்போது, (அவர்களின் உதவிக்கு வந்த) பலருடன் சேர்ந்து வீழ்ந்திருக்கிறார்கள். இதனால் நான் வருத்தமடையவில்லை.(18) ஆனால், வாசுதேவன் {கிருஷ்ணன்} முன்னிலையில், பீமனால் செய்யப்பட்ட ஒரு காரியம் (என் சினதைத் தூண்டும்படி} இருக்கிறது. உயர் ஆன்ம விருகோதரன் {பீமன்}, ஒரு பயங்கரக் கதாயுதப் போருக்குத் துரியோதனனை அறைகூவி அழைத்து விட்டு,(19) போரில் பல்வேறு வகைகளில் திரியும்போது, அவனை {பீமனை} விட என் மகன் {துரியோதனன்} திறனில் மேன்மையானவன் என்பதை அறிந்து, உந்திக்கு {தொப்புளுக்குக்} கீழே தாக்கினான்.(20) இதுவே என் கோபத்தைத் தூண்டுகிறது. கடமைகள் {தர்மங்கள்} அனைத்தையும் அறிந்த உயரான்ம மனிதர்களால் தீர்மானிக்கப்பட்ட கடமைகளை, வீரர்கள் தங்கள் உயிர்களுக்காக ஏன் கைவிடுகிறார்கள்?[2]" என்று கேட்டாள் {காந்தாரி}".(21)
[2] கும்பகோணம் பதிப்பில், "தர்மத்தை அறிந்தவர்களான சூரர்கள், மஹாத்மாக்களால் விதிக்கப்பட்டிருக்கிற தர்மத்தை யுத்தத்தில் எவ்விதத்தினாலாவது பிராணனைக் காப்பாற்றுவதற்காக எவ்வாறு விடுவார்கள்" என்றிருக்கிறது.
ஸ்திரீ பர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |