The toe of Yudhishthira! | Stri-Parva-Section-15 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 15) [ஸ்திரீ பர்வம் - 06]
பதிவின் சுருக்கம் : காந்தாரியிடம் பேசிய பீமன், நியாயமற்ற முறையில் துரியோதனனைக் கொன்ற தன் குற்றத்தைக் குறைத்துச் சொன்னது; துச்சாசனனின் குருதியைக் குடித்த செயலைப் பீமனுக்குச் சுட்டிக்காட்டி அவனைக் கண்டித்த காந்தாரி; தன் தம்பியின் குருதியை உண்மையில் குடிக்கவில்லை என்றும், கர்ணன் மட்டுமே அஃதை அறிவான் என்றும் சொன்ன பீமன்; காந்தாரியிடம் பணிந்த யுதிஷ்டிரன்; காந்தாரியின் கண்கள் யுதிஷ்டிரனின் கால் கட்டைவிரல் நகத்தை எரித்தது; தங்கள் தாயைச் சந்தித்த பாண்டவர்கள்; திரௌபதியோடு சேர்ந்து அழுத குந்தி; திரௌபதிக்கு ஆறுதலளித்த காந்தாரி ...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காந்தாரியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட பீமசேனன், பயந்தவன் போலத் தெரிந்து, அவளை ஆறுதல் படுத்த இவ்வார்த்தைகளைச் சொன்னான்,(1) "அந்தச் செயல் நேர்மையானதோ, நேர்மையற்றதோ, அஃது அச்சத்தினாலும், என்னைக் காத்துக் கொள்ளும் நோக்குடனுமே செய்யப்பட்டது. எனவே, என்னை இப்போது மன்னிப்பதே உனக்குத் தகும்.(2) உன் வலிமைமிக்க மைந்தன் {துரியோதனன்}, நேர்மையான நல்ல போரில், எவராலும் கொல்லப்பட முடியாதவனாக இருந்தான். துரியோதனனே முன்பு நியாயமற்ற வகையில் யுதிஷ்டிரரை வென்றான்[1]. இதன் காரணமாகவே நான் நியாயமற்றதைச் செய்தேன். அவன் எப்போதும் எங்களிடம் வஞ்சகமாகவே நடந்து கொண்டான். இதன் காரணமாகவே நான் நியாயமற்ற செயலைச் செய்ய வேண்டியிருந்தது.(4) உன் மகனே, அவனது தரப்பில் கொல்லப்படாமல் எஞ்சிய ஒரே வீரன். அந்த வீர இளவரசன் {துரியோதனன்} என்னைக் கதாயுத்ததில் கொல்லாமல் இருக்கவும், மீண்டும் எங்களை அவன் நாட்டை இழக்கச்செய்யாமல் இருக்கவும் நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(5)
[1] பிபேக்திப்ராயின் பதிப்பில் இது விடுபட்டிருக்கிறது. துரியோதனன் யுதிஷ்டிரனை வென்றது எப்போது என்று தெரியவில்லை.
பாஞ்சால இளவரசி {திரௌபதி} தன் பருவ காலத்தில் ஒற்றையாடை உடுத்தியிருந்தபோது, உன் மகன் அவளிடம் சொன்ன அனைத்தையும் நீ அறிவாய்.(6) சுயோதனனை {துரியோதனனை} ஒழிக்காமல், கடல்களுடன் கூடிய மொத்த பூமியையும் எங்களால் அமைதியாக ஆள முடியாது. இதன் காரணமாகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(7) உன் மகன் எங்களுக்குப் பல தீங்குகளைச் செய்தான். சபைக்கு மத்தியில் வைத்து அவன் தன் இடது தொடையைத் திரௌபதிக்குக் காட்டினான்.(8) அந்தத் தீய நடத்தைக்காகவே அப்போதே உன் மகன் எங்களால் கொல்லத்தக்கவனாவான். எனினும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரின் ஆணையின் பேரிலும், ஏற்கப்பட்ட ஒப்பந்தத்தின் படியும் நாங்கள் எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம்.(9) ஓ! ராணி, இவ்வழிகளில் உன் மகன் {துரியோதனன்} எங்களுடன் தீராப் பகைமையைத் தூண்டிக் கொண்டிருந்தான். (உன் மகனால் விரட்டப்பட்டு) நாங்கள் காட்டில் அடைந்த பாடு மிகப் பெரியதாகும். இவையனைத்தையும் நினைவுகூர்ந்தே நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(10) போரில் துரியோதனனைக் கொன்றதன் மூலம் நாங்கள் எங்கள் பகைமைகளின் முடிவை அடைந்துவிட்டோம். யுதிஷ்டிரர் தமது நாட்டை மீண்டும் அடைந்துவிட்டார். நாங்களும் கோபத்திலிருந்து விடுபட்டோம்[2]" என்றான்.(11)
[2] மஹாபாரதம் நெடுகிலும் பீமன் இவ்வாறு பணிவாக, பயந்தவனாக எங்கும் பேசியதில்லை.
பீமனின் வார்த்தைகளைக் கேட்ட காந்தாரி, "(போர்த்திறனில்) இவ்வாறு என் மகனை நீ புகழ்வதாலேயே, அவன் இத்தகு மரணத்திற்குத் தகாதவனாவான். எனினும், நீ என்னிடம் சொன்ன அனைத்தையும் அவன் செய்திருக்கிறான். {அது ஒருபுறம்} இருப்பினும், ஓ! பாரதா, விருஷசேனன் நகுலனை, அவனது குதிரைகளை இழக்கச் செய்தபோது, நீ போரில் துச்சாசனனது உடலின் குருதியைக் குடித்தாய்.(13) அத்தகு கொடூரச் செயல் நல்லோரால் நிந்திக்கப்படுகிறது. மிக இழிந்த ஒருவனுக்கே அது தகும். ஓ! விருகோதரா {பீமா}, அப்போது நீ செய்தது தீச்செயலே. இஃது உனக்குத் தகாது" என்றாள்.(14)
பீமன் {காந்தாரியிடம்}, "அந்நியனின் குருதியைக் குடிப்பதும் முறையாகாது, அப்படியிருக்கையில், ஒருவனுடைய சொந்த இரத்தத்தைக் குடிப்பதைப் பற்றி என்ன சொல்ல முடியும்? ஒருவனின் தம்பி, ஒருவனின் சுயமே ஆவான். அவர்களுக்குள் எந்த வேறுபாடும் கிடையாது.(15) எனினும், ஓ! தாயே, (நான் குடித்ததாகக் கருதப்படும்) குருதி, என் உதடுகளையும், பற்களையும் தாண்டவில்லை. கர்ணன் இதை நன்கறிவான். என் கைகள் மட்டுமே (துச்சாசனனின்) குருதியால் பூசப்பட்டிருந்தது.(16) போரில் விருஷசேனன், நகுலனைக் குதிரைகளை இழக்கச் செய்ததைக் கண்டு, மகிழ்ச்சியடைந்த (கௌரவ) சகோதரர்களை நான் பீதியால் நிறையச் செய்தேன்.(17) பகடையாட்டத்திற்குப் பிறகு, திரௌபதியின் குழல்கள் பற்றப்பட்டபோது, நான் சினத்தால் சில குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொன்னேன். அவ்வார்த்தைகள் இன்னும் என் நினைவில் இருக்கின்றன.(18) அந்தச் சபதத்தை நான் நிறைவேற்றாமல் இருந்திருந்தால், நான் நாளெல்லாம் க்ஷத்திரியக் கடமைகளில் தவறியவனாகக் கருதப்பட்டிருப்பேன். ஓ! ராணி, இதன் காரணமாகவே நான் அச்செயலைச் செய்தேன்.(19) ஓ! காந்தாரி, என்னிடம் களங்கம் காண்பது உனக்குத் தகாது. முன் நாட்களில் உன் மகன்களைத் தடுக்காமல், அப்பாவிகளான எங்கள் மீது எந்தக் களங்கத்தையும் காண்பதும் உனக்குத் தகாது" என்றான்.(20)
காந்தாரி {பீமனிடம்}, "ஓ! குழந்தாய் {பீமா}, எவராலும் வெல்லப்படாத நீ, இந்த முதிய மனிதரின் {திருதராஷ்டிரரின்} நூறு மகன்களைக் கொன்றிருக்கிறாய். ஓ!, குற்றங்கள் குறைந்தவர்களும், நாட்டை இழந்தவர்களுமான இந்த முதிர்ந்த இணையின் {தம்பதியரின்} ஒரேயொரு மகனையாவது நீ ஏன் எஞ்சவிடவில்லை?(21) ஒரேயொரு ஊன்றுகோலைக் கூட இந்தக் குருட்டு இணைக்கு நீ ஏன் விட்டு வைக்கவில்லை? ஓ! குழந்தாய், என் பிள்ளைகள் அனைவரையும் கொன்று, பிறகும் நீ காயமில்லாமல் வாழ்ந்தாய் என்றாலும், (அவர்களைக் கொல்லும்போது) நீ நீதியின் பாதையைப் பின்பற்றியிருந்தால் எனக்கு எந்தத் துயரமும் இல்லை" என்றாள்".(23)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன காந்தாரி, தன் மகன்கள், தன் பேரப்பிள்ளைகள் அனைவரும் கொல்லப்பட்டதால் கோபத்தில் நிறைந்தவளாக, யுதிஷ்டிரனை விசாரிக்கும் வகையில், "எங்கே மன்னன் {யுதிஷ்டிரன்}?" என்று கேட்டாள்.(24) அவள் இவ்வார்த்தைகளைச் சொன்னதும், மன்னன் யுதிஷ்டிரன், நடுங்கிக் கொண்டே, கூப்பிய கரங்களுடன் அவளை {காந்தாரியை} அணுகி, அவளிடம் இந்த மென்மையான வார்த்தைகளைச் சொன்னான்,(25) "ஓ! தேவி, உன் மகன்களைக் கொன்ற கொடூரனான யுதிஷ்டிரன் இங்கே இருக்கிறேன். நானே இந்த அண்டத்தின் அழிவுக்குக் காரணமாக இருப்பதால் உன் சாபங்களுக்கு நான் தகுந்தவனே. ஓ!, என்னைச் சபிப்பாயாக.(26) உயிர், நாடு, செல்வம் ஆகியவற்றின் எந்தத் தேவையும் இனியும் எனக்கு இல்லை. இத்தகு நண்பர்களைக் கொல்லச் செய்த நான், பெரும் மூடனாகவும், நண்பர்களை வெறுப்பவனாகவுமே என்னை நிரூபித்துக் கொண்டேன்" என்றான்.(27)
அச்சத்தில் மூழ்கி இவ்வார்த்தைகளைப் பேசியவனும், காந்தாரியின் அருகில் நின்றவனுமான யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, அவள் {காந்தாரி} நீண்ட பெருமூச்சுகளை விட்டபடியே ஒன்றும் சொல்லாதிருந்தாள்.(28) அறவிதிகளை அறிந்தவளும், பெரும் முன்னறிதிறனைக் கொண்டவளுமான அந்தக் குரு ராணி {காந்தாரி}, தன் பாதத்தில் விழ முன்னோக்கிக் குனிந்த இளவரசன் யுதிஷ்டிரனின் {கால்} கட்டை விரலில் தன் கண்களை மறைத்திருந்த துணியின் ஊடாக அவற்றை {தன் கண்களைச்} செலுத்தினாள். இதனால், முன்பு மிக அழகிய நகங்களைக் கொண்டிருந்த மன்னனின் கட்டைவிரல் புண்ணுள்ள நகத்தைக் கொண்டததானது[3].(29,30) இதைக் கண்ட அர்ஜுனன் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} பின்புறத்திற்கு நகர்ந்து சென்றான் {ஒளிந்து கொண்டான்}, பாண்டுவின் பிற மகன்களும் அமைதியிழந்தவர்களாக அடுத்தடுத்த இடத்திற்கு நகர்ந்து சென்றனர்.(31)
[3] "காந்தாரியின் பார்வை யுதிஷ்டிரனின் கட்டைவிரலில் பட்டதும், அதை மறைத்திருந்த நகம் எரிக்கப்பட்டுப் புண்ணானது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிறகு காந்தாரி, தன் கோபத்தைக் கைவிட்டு, ஒரு தாயைப் போலப் பாண்டவர்களுக்கு ஆறுதலளித்தாள். அகன்ற மார்புகளைக் கொண்ட அந்த வீரர்கள் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு, வீரர்களைப் பெற்றவளான தங்கள் தாயிடம் {குந்தியிடம்} சென்றனர்.(32) நீண்ட காலத்திற்குப் பிறக் தன் மகன்களைக் கண்ட குந்தி, அவர்களின் நிமித்தமாகக் கவலையில் நிறைந்து, தன் முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள். தன் பிள்ளைகளோடு சேர்ந்து சிறிது நேரம் அழுதபிறகு, பல ஆயுதங்களால் அவர்களின் உடல்களில் ஏற்பட்டிருந்த காயங்களையும், வடுக்களையும் கண்டாள்.(34) பிறகு அவள், மீண்டும் மீண்டும் அவர்களைத் தழுவி கொண்டு, தன் ஒவ்வொரு மகனையும், அன்பாகத் தட்டிக் கொடுத்தாள். பிறகு அவள் {குந்தி}, பிள்ளைகள் அனைவரையும் இழந்தவளும், வெறுந்தரையில் கிடந்து பரிதாபகரமாகப் புலம்பிக் கொண்டிருப்பவளுமான திரௌபதியைக் கண்டு, துக்கத்தால் பீடிக்கப்பட்டு அவளோடு சேர்ந்து அழுதாள்.(35)
அப்போது திரௌபதி {குந்தியிடம்}, "ஓ! மதிப்புக்குரிய பெருமாட்டியே, அபிமன்யுவுடன் சேர்த்து உன் பேரப்பிள்ளைகள் அனைவரும் எங்கே சென்றுவிட்டனர்? உன்னை இத்தகு துயரத்தில் கண்டும் அவர்கள் ஏன் உன் முன்பு தோன்றாமல் தாமதிக்கின்றனர்? பிள்ளைகளை இழந்த எனக்கு {அடையப்பட்டிருக்கும்} நாட்டால் என்ன தேவையிருக்கிறது {நாட்டால் என்ன ஆகப்போகிறது}?" என்று கேட்டாள்.(36) துயரத்தில் பீடிக்கப்பட்டு இவ்வாறு அழுதுகொண்டிருக்கும் பாஞ்சால இளவரசியை {திரௌபதியை} உயர்த்திய பிருதை {குந்தி}, அகன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண்ணுக்கு {திரௌபதிக்கு} ஆறுதலளிக்கத் தொடங்கினாள்.(37) பிறகு குந்தி, பாஞ்சால இளவரசியுடன், தன் மகன்களைப் பின்தொடர்ந்து சென்று, தானே பெருந்துயரில் இருந்தாலும், துயரில் பீடிக்கப்பட்டிருந்த காந்தாரியை நோக்கிச் சென்றாள்.(38)
அந்தச் சிறப்புமிக்கப் பெண்மணி {குந்தி} தன் மருமகளுடன் {திரௌபதியுடன்} இருப்பதை அறிந்த காந்தாரி, அவளிடம் {திரௌபதியிடம்}, "ஓ! மகளே, வருந்தாதே.(39) உன்னைப்போலவே நானும் துயரில் பீடிக்கப்பட்டிருப்பதைப் பார்.(39) இந்த அண்ட அழிவானது, தடுக்கப்பட முடியாத காலத்தின் வழியால் கொண்டுவரப்பட்டது என நான் நினைக்கிறேன். தவிர்க்கப்பட முடியாத இந்தப் பயங்கரப் படுகொலை வேண்டுமென்றே மனிதர்களால் செய்யப்பட்டதில்லை.(40) கிருஷ்ணனின் அமைதிக்கான தூது தோல்வியுற்றபோது, பெரும் ஞானியான விதுரரால் முன்னறிந்து சொல்லப்பட்டவையே இப்போது நடந்திருக்கின்றன.(41) எனவே, தவிர்க்க முடியாத இக்காரியத்திற்காக, அதிலும் குறிப்பாக அது நேர்ந்த பிறகு நீ வருந்தாதே. போரில் கொல்லப்பட்டவர்களுக்காக வருந்தக்கூடாது.(42) நானும் உன்னோடு சேர்ந்து அதே இக்கட்டான சூழ்நிலையிலேயே இருக்கிறேன். (நீயே இவ்வாறு நடந்து கொண்டால்) யார் எங்களுக்கு ஆறுதல் சொல்வது? என் தவறாலேயே இந்த முதன்மையான குலம் அழிவையடைந்தது" என்றாள் {காந்தாரி}".(43)
*********(ஜலப்ரதானிக உப பர்வம் முற்றும்)*********
ஸ்திரீ பர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 43
ஆங்கிலத்தில் | In English |