Dhritarashtra wrathfree! | Stri-Parva-Section-13 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 13) [ஸ்திரீ பர்வம் - 04]
பதிவின் சுருக்கம் : பீமனிடம் கோபத்தை வளர்ப்பதற்காகத் திருதராஷ்டிரனைக் கடிந்துரைத்த கிருஷ்ணன்; கோபத்தை விட்டு தன் தம்பியின் பிள்ளைகளை ஒருவர்பின் ஒருவராகத் தழுவிக் கொண்ட திருதராஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது சில பெண்பணியாட்கள் மன்னனைக் கழுவி விட அங்கே வந்தனர். அவன் முறையாகத் தூய்மைப்படுத்தப்பட்ட பிறகு, மதுசூதனன் {கிருஷ்ணன்}, அவனிடம் {திருதராஷ்டிரனிடம்} மீண்டும்,(1) "ஓ! மன்னா, நீர் வேதங்களையும், பல்வேறு சாத்திரங்களையும் படித்திருக்கிறீர். பழைய வரலாறுகள் அனைத்தையும், மன்னர்களின் கடமைகள் குறித்த அனைத்தையும் நீ கேட்டிருக்கிறீர்.(2) கல்விமானான நீர் பெரும் ஞானம் கொண்டவராகவும், பலம் மற்றும் பலவீனத்துக்குத் தகுந்தவராகவும் இருக்கிறீர். உமக்கு நேர்ந்தவை அனைத்தும் உமது தவறுகளின் விளைவே எனும்போது இத்தகு கோபத்தை ஏன் வளர்க்கிறீர்?(3) போருக்கு முன்பே நான் உம்மிடம் பேசினேன். ஓ! பாரதரே, பீஷ்மர், துரோணர், விதுரர், சஞ்சயன் ஆகியோரும் உம்மிடம் பேசினர். எனினும், நீர் எங்கள் அறிவுரையைப் பின்பற்றவில்லை.(4) உண்மையில், எங்களால் பரிந்துரைக்கப்பட்டாலும், உமக்கும், உமது பலம் மற்றும் துணிவுக்கும் பாண்டவர்கள் மேம்பட்டவர்கள் என்பதை அறிந்து, நாங்கள் சொன்ன ஆலோசனைகளின் படி நீர் செயல்படவில்லை.(5)
தன் குறைகளைக் காணவல்லவனும், கால, நேர வேறுபாடுகளை அறியவல்லவனுமான மன்னன் பெருஞ்செழிப்பை அடைகிறான்.(6) எனினும், எந்த மனிதன் நலன்விரும்பிகளால் ஆலோசனை கூறப்பட்டும், அவர்களது நல்ல {இனிமையான}, அல்லது தீய {கசப்பான} வார்த்தைகளை ஏற்கவில்லையோ, அவன் தன் தீய கொள்கையின் விளைவால் உண்டாகும் துயரை அடைந்து துன்பப்படுகிறான்.(7) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, இப்போது வாழ்வின் வேறு வழியைக் காண்பீராக. நீர் உமது ஆன்மாவைக் கட்டுப்படுத்தாமல், துரியோதனனின் ஆளுகைக்குள் இருந்து உம்மைத் துன்புறுத்திக் கொண்டீர்.(8) உமக்கு நேர்ந்திருப்பவை உமது தவறாலேயே உம்மை அடைந்தன. பிறகு ஏன் நீர் பீமரைக் கொல்ல முயல்கிறீர்? உமது சொந்த தவறுகளை நினைத்துப் பார்த்து, உமது கோபத்தை இப்போது அடக்குவீராக.(9) அற்பனான எவன் செருக்கினால் பாஞ்சால இளவரசியை {திரௌபதியைச்} சபைக்குக் கொண்டு வந்தானோ, அவன் நியாயமாகப் பழி தீர்க்கப்படவே பீமசேனரால் கொல்லப்பட்டான்.(10) உமது சொந்த செயல்பாடுகளையும், தீய ஆன்மா கொண்ட உமது மகனின் {துரியோதனனின்} செயல்பாடுகளையும் பார்ப்பீராக. பாண்டுவின் மகன்கள் முற்றிலும் அப்பாவிகளாவர். இருப்பினும், அவர்கள் உம்மாலும், அவனாலும் {துரியோதனனாலும்} மிகக் கொடூரமாக நடத்தப்பட்டார்கள்" என்றான் {கிருஷ்ணன்}".(11)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "கிருஷ்ணனால் இவ்வாறு உண்மை சொல்லப்பட்ட பிறகு, மன்னன் திருதராஷ்டிரன் அந்தத் தேவகியின் மகனிடம் {கிருஷ்ணனிடம்} மறுமொழியாக,(12) "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நீ சொன்னது போலத்தான் இருக்கிறது. ஓ! மாதவா, நீ சொல்வது முற்றிலும் உண்மையே. ஓ! அற ஆன்மாவே, பிள்ளை பாசமே என்னை அறத்திலிருந்து விழச் செய்தது.(13) மனிதர்களில் புலியும், உண்மை ஆற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனுமான பீமன், என் அணைப்புக்குள் வராமல் உன்னால் பாதுகாக்கப்பட்டது நற்பேற்றாலேயே.(14) இருப்பினும், நான் இப்போது கோபத்திலிருந்தும், நோயிலிருந்தும் விடுபட்டிருக்கிறேன். ஓ! மாதவா, வீரனான அந்தப் பாண்டுவின் இரண்டாம் மகனை {பீமனைத்} தழுவிக் கொள்ளும் விருப்பத்தால் ஆவலடைந்திருக்கிறேன்.(15) மன்னர்கள் அனைவரும் இறந்து, என் பிள்ளைகளும் இல்லையென்றான பிறகு, என் நல்வாழ்வும், மகிழ்ச்சியும் பாண்டுவின் மகன்களைச் சார்ந்தே இருக்கப் போகிறது" என்றான் {திருதராஷ்டிரன்}.(16) இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த முதிய மன்னன், அற்புத உடற்கட்டுகளைக் கொண்டோரான பீமன், தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகியோரையும், மனிதர்களில் முதன்மையானவர்களான மாத்ரியின் மகன்கள் {நகுலன், சகாதேவன்} இருவரையும் தழுவியழுது, ஆறுதலடைந்து, அவர்களை வாழ்த்தியருளினான்" {என்றார் வைசம்பாயனர்}.(17)
ஸ்திரீ பர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |