Gandhari beheld Duhshasana! | Stri-Parva-Section-18 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 03) [ஸ்திரீ பர்வம் - 09]
பதிவின் சுருக்கம் : தன் மருமகள்களின் பரிதாபகரமான நிலையைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக்காட்டிய காந்தாரி; துச்சாசனனைக் கொன்று அவனுடைய உயிர்க்குருதியைக் குடித்த பீமனை நினைத்தது; துச்சாசனன் செய்த தீமையைச் சொன்னது; பீமனைக் குறித்துத் துரியோதனனுக்குத் தான் எச்சரித்ததைக் கிருஷ்ணனிடம் நினைவுகூர்ந்த காந்தாரி...
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவா, (போர்முயற்சியில்) களைப்படைய இயலாத என் மகன்கள் நூறு பேரும், போரில் பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டனர்.(1) என் மகன்களை இழந்தவர்களான இளம் வயதுடைய என் மருமகள்கள், கலைந்த கேசங்களுடன் இன்று போர்க்களத்தில் திரிவதே எனக்குப் பெரும் துயரை அளிக்கிறது.(2) ஐயோ, பல ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கால்களுடன், சிறந்த மாளிகைகளின் உப்பரிகைகளிலேயே நடந்த இவர்கள், இப்போது, பெருந்துயரால் இதயம் பீடிக்கப்பட்ட நிலையில், குருதியால் சகதியாகியிருக்கும் இந்தக் கடும்பூமியைத் தங்கள் கால்களால் தீண்டுகின்றனர்.(3) கவலையில் சுழலும் இவர்கள், பெருஞ்சிரமத்துடன் கழுகுகளையும், நரிகளையும், காகங்களையும் விரட்டிக் கொண்டு, மதுவால் வெறியேற்றப்பட்டவர்களைப் போலத் திரிந்து கொண்டிருக்கின்றனர்[1].(4) பழுதற்ற அங்கங்களைக் கொண்டவர்களும், கொடியிடை கொண்டவர்களுமான இந்த மங்கையர், இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு, துயரத்தில் மூழ்கிக் கீழே விழுவதைப் பார்.(5)
[1] "வங்கப் பதிப்பு இதில் சற்றே மாறுபடுகிறது" என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தச் சுலோகம் கங்குலியில் உள்ளது போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "துக்கத்தால் பீடிக்கப்பட்டவர்களும், மதங்கொண்டவர்களைப் போலச் சுழலுகின்றவர்களுமான இந்தப் பெண்கள், கழுகுகளையும், நரிகளையும், காக்கைகளையும் பிரயாஸத்தினால் ஓட்டிக் கொண்டு திரிகின்றனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "துயரத்தால் பீடிக்கப்பட்டும், பைத்தியக்காரர்களைப் போலச் சுழன்றும் சுற்றிலும் திரிந்து கொண்டிருக்கும் அவர்கள், கழுகுகளையும், நரிகளையும், காகங்களையும் விரட்டிக் கொண்டிருக்கின்றன்னர்" என்றிருக்கிறது.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, லக்ஷ்மணனின் தாயான இந்த இளவரசியை {பானுமதியைக்} கண்டு என் இதயம் துயரத்தால் பிளக்கிறது.(6) அழகிய கரங்களைக் கொண்ட இந்த மங்கையரில் சிலர், வெறுந்தரையில் இறந்து கிடப்பவர்களான தங்கள் சகோதரர்களையும், சிலர் தங்கள் கணவர்களையும், சிலர் தங்கள் மகன்களையும் கண்டு, கொல்லப்பட்டவர்களின் கரங்களைப் பற்றிக் கொண்டு கீழே விழுகின்றனர்.(7) ஓ! வெல்லப்படாதவனே, இந்தப் பயங்கரப் பேரழிவைக் கண்டு கதறி அழும் முதிய மற்றும் நடுத்தர வயது பெண்களின் ஓலத்தைக் கேட்பாயாக.(8) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, அந்தக் காரிகையர், களைப்பால் மயங்கி, உடைந்த தேர்க்கூடுகளில் தங்களைத் தாங்கிக் கொண்டு ஓய்வதைப் பார்.(9) ஓ! கிருஷ்ணா, அவர்களில் சிலர், அழகிய மூக்கு மற்றும் காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டதும், துண்டிக்கப்பட்டதுமான தங்கள் சொந்தக்காரனின் தலையை எடுத்துக் கொண்டு துயரில் நிற்பதைப் பார்.(10)
ஓ! பாவமற்றவனே, ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, அவர்களுடையவர்களும், சிறுமதி கொண்டவளான என்னுடையவர்களுமான உறவினர்கள் மற்றும் சொந்தங்கள் அனைவரும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதால், நாங்கள் எங்கள் முந்தைய பிறவியில் பெரும்பாவங்களைச் செய்திருக்க வேண்டும். ஓ! விருஷ்ணி குலத்தோனே, நியாயமானவையாகவோ, நியாயமற்றவையாகவோ இருக்கும் எங்கள் செயல்பாடுகள் பலமில்லாமல் போகாது.(11,12) ஓ! மாதவா, அழகிய முலைகளையும், வயிற்றையும் கொண்டவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், பணிவுடையவர்களும், கரிய இமை முடிகளைக் கொண்டவர்களும், தங்கள் தலைகளில் கருங்குழலைக் கொண்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், அன்னப்பறவைகளைப் போல அன்பானவர்களுமான அந்த இளம்பெண்கள், பெருந்துயரத்தால் தங்கள் புலனுணர்வுகளை இழந்து, நாரைக் கூட்டத்தைப் போலப் பரிதாபகரமாக அழுவதைப் பார்.(13,14) ஓ! தாமரைக்கண் வீரா, முற்றுமுழுதாக மலர்ந்திருக்கும் தாமரைகளுக்கு ஒப்பான அவர்களுடைய அழகிய முகங்கள் சூரியனால் எரிக்கப்படுவதைப் பார்.(15)
ஐயோ, ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, செருக்குடையவர்களும், மதங்கொண்ட யானைகளைப் போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான என் பிள்ளைகளின் மனைவியர், இப்போது பொதுமக்களின் வெறித்த பார்வைக்கு வெளிப்பட்டு நிற்கின்றனர்.(16) ஓ! கோவிந்தா, என் மகன்களுக்குச் சொந்தமானவையான, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட கேடயங்கள், சூரியப் பிரகாசத்துடன் கூடிய கொடிமரங்கள், தங்கக் கவசங்கள், கழுத்தணிகள், தங்கத்தாலான மார்புக் கவசங்கள், தலைக்கவசங்கள் ஆகியன, தெளிந்த நெய்யிலான நீர்க்காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்பட்டு, காந்தியுடன் சுடர்விட்டெரியும் வேள்வி நெருப்புகளைப் போலப் பூமியில் சிதறிக் கிடப்பதைப் பார்.(17,18) பீமனால் வீழ்த்தப்பட்டு, எதிரிகளைக் கொல்லும் அந்த வீரனால் அங்கமெல்லாம் உள்ள குருதி குடிக்கப்பட்டு அங்கே துச்சாசனன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.(19) ஓ! மாதவா, பகடையாட்டத்தின் போது உண்டான தன் துயரங்களை நினைத்துப் பார்த்த திரௌபதியினால் தூண்டப்பட்டு, பீமனின் கதாயுதத்தால் கொல்லப்பட்ட என் மற்றொரு மகனை {துச்சாசனனைப்} பார்.(20)
ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, தன் அண்ணனுக்கும் {துரியோதனனுக்கும்}, கர்ணனுக்கும் ஏற்புடையதைச் செய்ய விரும்பிய இந்தத் துச்சாசனன், பகடையில் வெல்லப்பட்ட அந்தப் பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்}, சபைக்கு மத்தியில் வைத்து, "நீ இப்போது ஓர் அடிமையின் மனைவியாவாய். ஓ! பெண்ணே, சகாதேவன், நகுலன் மற்றும் அர்ஜுனனுடன் இப்போது நீ எங்கள் வீட்டுக்குள் நுழைவாயாக" என்றான்[2].(21,22) ஓ!கிருஷ்ணா, அச்சந்தர்ப்பத்தில் நான் மன்னன் துரியோதனனிடம், "ஓ! மகனே {துரியோதனா}, (உன் தரப்பில் இருந்து) கோபம் நிறைந்தவனான சகுனியைக் கைவிடுவாயாக.(23) உன் தாய்மாமன் மிகத் தீய ஆன்மாக் கொண்டவனும், சச்சரவை அதிகம் விரும்புபவனுமாக இருக்கிறான். ஓ! மகனே, தாமதமில்லாமல் அவனைக் கைவிட்டு, பாண்டவர்களுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்வாயாக.(24) ஓ! சிறு மதி கொண்டோனே, கோபம் நிறைந்த பீமசேனனைக் குறித்து நீ நினைத்துப் பார்க்கவில்லை. எரிப்பந்தங்களைக் கொண்டு யானையைத் தாக்கும் மனிதனைப் போல நீ உன் வார்த்தைகளெனும் கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைக்கிறாய்" என்றேன்.(25)
[2] கும்பகோணம் பதிப்பில், "ஜனார்த்தன, ப்ராதாவுக்கும், கர்ணனுக்கும் பிரியத்தைச் செய்ய விருப்பமுள்ள இந்தத் துச்சாஸனனால் சூதாட்டத்தால் ஜயிக்கப்பட்ட பாஞ்சாலியானவள், "ஓ, பாஞ்சாலி, ஸஹதேவனோடும், நகுலனோடும், அர்ஜுனனோடுங்கூடவே அடிமையாகிவிட்டாய். எம்முடைய அரண்மனையில் சிக்கிரமாக நுழை" என்று ஸபையில் சொல்லப்பட்டாள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலோ, "ஓ ஜனார்த்தனா, சபாமண்டபத்தில் பாஞ்சாலி பகடையில் வெல்லப்பட்டபோது, தன் அண்ணனையும், கர்ணனையும் நிறைவு கொள்ளச் செய்ய விரும்பிய அவன் {துச்சாசனன்}, அவளிடமும், சகாதேவன், நகுலன் மற்றும் அர்ஜுனனிடம் கடும் வார்த்தைகளைப் பேசினான். அவன், "ஓ பாஞ்சாலி நீ எங்கள் அடிமையும், மனைவியுமாவாய். விரைவாக வீட்டிற்குள் நுழைவாயாக" என்றான்" என்றிருக்கிறது.
ஐயோ, என் வார்த்தைகளை அலட்சியம் செய்த அவன் {துரியோதனன்}, பெருங்காளையின் மீது விஷத்தைக் கக்கும் பாம்பொன்றைப் போலத் தன் வார்த்தை நஞ்சை அவன் {பீமன்} மீதும், ஏற்கனவே சொல்லீட்டிகளால் துளைக்கப்பட்டிருந்த அவர்கள் {பாண்டவர்கள்} மீதும் கக்கினான்.(26) அதோ அங்கே சிங்கத்தால் கொல்லப்பட்ட பெரும் யானையொன்றைப் போல, பீமசேனனால் கொல்லப்பட்டுத் தன் பருத்த கரங்கள் இரண்டையும் விரித்தபடியே துச்சாசனன் உறங்கிக் கொடிருக்கிறான்.(27) பெருங்கோபம் கொண்டவனான பீமசேனனோ, தன் எதிரியின் {துச்சாசனனின்} குருதியைப் போரில் குடித்து மிகப் பயங்கரமான செயலைச்செய்துவிட்டான்" என்றாள் {காந்தாரி}.(28)
ஸ்திரீ பர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 28
ஆங்கிலத்தில் | In English |