The state of Bhanumathi! | Stri-Parva-Section-17 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 02) [ஸ்திரீ பர்வம் - 08]
பதிவின் சுருக்கம் : துரியோதனனின் உடலைக் கண்டு கதறி விழுந்த காந்தாரி; தன் மகனின் உடலைக் கண்ணீரால் நனைத்தது; ஆதரவற்ற திருதராஷ்டிரனுக்காக வருந்தியது; துரியோதனனின் மனைவியான பானுமதியின் நிலையைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணனிடம் புலம்பிய காந்தாரி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காந்தாரி, துரியோதனனைக் கண்டதும், துயரால் தன் உணர்வுகளை இழந்து, வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரத்தைப் போலத் திடீரெனப் பூமியில் விழுந்தாள்.(1) விரைவில் தன் உணர்வுகள் மீண்ட அவள், குருதியில் மறைந்து வெறுந்தரையில் கிடக்கும் தன் மகனைக் கண்டு மீண்டும் மீண்டும் உரக்க ஓலமிட்டபடியே அழத் தொடங்கினாள்.(2) தன் மகனை ஆரத்தழுவி கொண்ட காந்தாரி, அவனுக்காகப் பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டாள். துயரால் பீடிக்கப்பட்டவளும், அதிகமான புலன்கலக்கம் அடைந்தவளுமான அந்தக் குரு குல ராணி {காந்தாரி}, "ஐயோ, ஓ! மகனே", "ஐயோ, ஓ! மகனே" என்று சொல்லி அழுதாள்.(3) கவலையால் எரிந்த அந்த ராணி, பருத்த, அகன்ற தோள்களைக் கொண்டவனும், மாலைகளாலும், கழுத்தணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான தன் மகனின் {துரியோதனனின்} உடலைத் தன் கண்ணீரால் நனைத்தாள்.
அருகே நின்றிருந்த ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} அவள் {காந்தாரி},(4) "ஓ! பலமிக்கவனே, ஓ! விருஷ்ணி குலத்தோனே, இந்தக் குலத்திற்கு அழிவை ஏற்படுத்திய இந்தப் போரின் தொடக்கத்தில், இந்த மன்னர்களில் முதன்மையானவன் {துரியோதனன்} என்னிடம், "ஓ! தாயே, இந்த உட்பூசலில் எனக்கு வெற்றியை விரும்புவாயாக" என்றான். அவன் இவ்வார்த்தைகளை என்னிடம் சொன்னபோது, ஓ! மனிதர்களில் புலியே, பேரிடர் எங்களை அணுகியதை அறிந்த நான், அவனிடம் {துரியோதனனிடம்}, "எங்கே அறமிருக்கிறதோ, அங்கேயே வெற்றியுமிருக்கும்.(6) ஓ! மகனே, உன் இதயம் போரில் நிலைத்திருப்பதால், ஆயுதங்களால் ({ஆயுதங்களைப்} பயன்படுத்தி) அடையும் உலகை தேவர்களைப் போலவே நீ அடைவாயாக ({அடைந்து} அங்கே விளையாடிக் கொண்டிருப்பாயாக)" என்றேன்.(7) இவையே நான் அவனிடம் சொன்ன வார்த்தைகளாகும். இதன் காரணமாக நான் என் மகனுக்காக வருந்தவில்லை. எனினும், நண்பர்களையும், சொந்தங்களையும் இழந்து ஆதரவற்றவராக இருக்கும் திருதராஷ்டிரருக்காகவே நான் வருந்துகிறேன்.(8) ஓ! மாதவா, தேர்வீரர்களில் முதன்மையானவனும், கோபம் நிறைந்தவனும், ஆயுதங்களில் திறன்மிக்கவனும், போரில் தடுக்கப்பட முடியாதவனுமான என் மகன் {துரியோதனன்} வீரர்களின் படுக்கையில் உறங்குவதைப் பார்.(9) காலத்தால் கொண்டுவரப்பட்ட மாறுபாடுகளைப் பார். பழங்காலத்தில் மகுடம் தரித்தோர் அனைவரின் தலைகளிலும் நடந்து சென்ற இந்த எதிரிகளை எரிப்பவன், இப்போது புழுதியில் உறங்குகிறான்.(10)
வீரர்களுக்கான படுக்கையில் உறங்கும் வீரத் துரியோதனன், அடைதற்கு மிக அரிய கதியையே அடைந்திருக்கிறான் என்பதில் ஐயமில்லை.(11) முன்பு, பேரழகுப் பெண்கள் புடைசூழ அமர்ந்திருந்த அந்த இளவரசன் {துரியோதனன்}, இப்போது வீரர்களின் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு மங்கலமற்ற நரிகள் திளைக்கின்றன.(12) முன்பு, மகிழ்ச்சிப்படுத்துவதற்காக ஒருவரோடொருவர் போட்டிப் போட்டுக் கொண்ட மன்னர்களால் சூழப்பட்ட இவன், இப்போது கழுகுகளால் சூழப்பட்டுத் தரையில் கிடக்கிறான்.(13) முன்பு, அழகிய பெண்களால் அழகிய விசிறிகளைக் கொண்டு விசிறப்பட்டவன், இப்போது (ஊனுண்ணும்) பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(14) பெரும் பலத்தையும், உண்மை ஆற்றலையும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட இந்த இளவரசன் {துரியோதனன்}, போரில் பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு யானையைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறான்.(15)
ஓ! கிருஷ்ணா, பீமசேனனின் கதாயுதத்தால் கொல்லப்பட்டு, குருதியில் மறைந்து, வெறுந்தரையில் கிடக்கும் துரியோதனனைப் பார்.(16) ஓ! கேசவா, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட எவன், பதினோரு {11} அக்ஷௌஹிணி துருப்புகளைத் திரட்டினானோ, அவன் தன் தீயக் கொள்கையின் {தீய புத்தியின்} விளைவால் இப்போது கொல்லப்பட்டுக் கிடக்கிறான்.(17) ஐயோ, பெரும் வில்லாளியான, இந்த வலிமைமிக்கத் தேர்வீரன், பீமசேனனால் கொல்லப்பட்டு, சிங்கத்தால் கொல்லப்பட்ட ஒரு புலியைப் போல இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறான்.(18) அலட்சியம் செய்பவனும், மூடனுமான இந்தத் தீய இளவரசன் {துரியோதனன்}, விதுரன் மற்றும் தன் தந்தையை {திருதராஷ்டிரரை} அலட்சியம் செய்து, பெரியோரை அவமதித்ததன் விளைவாகவே மரணத்திற்கு அடிபணிந்திருக்கிறான்.(19) எவன் எந்த எதிரியுமில்லாமல் பதிமூன்று {13} ஆண்டுகள் இந்தப் பூமியை ஆண்டானோ, ஐயோ, என் மகனான அந்த இளவரசன், எதிரிகளால் கொல்லப்பட்டு இன்று வெறுந்தரையில் உறங்குகிறான்.(20)
ஓ! கிருஷ்ணா, சிறிது காலத்திற்கு முன்புதான் யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகள் நிறைந்த பூமியானது, துரியோதனனால் ஆளப்படுவதை நான் கண்டேன்.(21) ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, இன்றோ, யானைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளற்று வேறொருவனால் அவள் {பூமி} ஆளப்படுவதை நான் காணப் போகிறேன். ஓ! மாதவா, நான் உயிர்வாழ வேண்டிய தேவை என்ன இருக்கிறது?(22) கொல்லப்பட்ட வீரர்களின் அருகில் இந்த அழகிய பெண்களின அழுது கொண்டிருக்கும் காட்சியே என் மகன் கொல்லப்பட்டதைக் காட்டிலும் அதிகத் துன்பத்தைத் தருவதைப் பார்.(23) ஓ! கிருஷ்ணா, லக்ஷ்மணனின் தாயும், பெரும் இடையைக் கொண்டவளும், கலைந்த கேசத்துடன் இருப்பவளும், தங்கமயமான வேள்விப்பீடத்திற்கு ஒப்பானவளுமான துரியோதனனின் அன்புக்குரிய மனைவியை {பானுமதியைப்}[1] பார்.(24) பெரும் நுண்ணறிவைக் கொண்ட இந்தக் காரிகை, தன் வலிமைமிக்கத் தலைவன் {துரியோதனன்} உயிரோடிருந்த போது, தன் தலைவனின் அழகிய கரங்களின் அணைப்பிற்குள் விளையாடிக் கொண்டிருந்தாள்.(25)
[1] இங்கேயும், இந்தப் பகுதியில் வேறெங்கேயும் துரியோதனனுடைய மனைவியின் பெயரானது, கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும், கும்பகோணம் பதிப்பிலும் சொல்லப்படவில்லை.
போரில் கொல்லப்பட்ட என் மகனையும், பேரப்பிள்ளையையும் கண்டும், உண்மையில் என் இதயம் நூறு துண்டுகளாக ஏன் நொறுங்கவில்லை?(26) ஐயோ, அந்தக் களங்கமற்ற மங்கை {பானுமதி}, குருதியால் மறைந்திருக்கும் தன் மகனை (மகனின் தலையை) முகர்ந்து பார்க்கிறாள். மேலும், அழகிய தொடைகளைக் கொண்டவளான அந்த மங்கை, தன் அழகிய கரத்தால் துரியோதனனின் உடலை மென்மையாகத் தடவுகிறாள்.(27) ஒரு நேரம் தன் தலைவனுக்காகவும் {துரியோதனனுக்காகவும்}, மறுநேரம் தன் மகனுக்காகவும் {லக்ஷ்மணனுக்காகவும்} அவள் {பானுமதி} கவலையுறுகிறாள். ஒரே நேரம் அவள் தன் தலைவனையும், மறுநேரம் தன் மகனையும் பார்க்கிறாள்.(28) ஓ! மாதவா, தன் கரங்களால் தன் தலையை அடித்துக் கொண்டு, குருக்களின் மன்னனான தன் வீரத் துணைவனின் மார்பில் அவள் விழுவதைப் பார்.(29) தாமரையின் இதழ்களைப் போன்ற நிறத்தைக் கொண்டவளான அவள், ஒரு தாமரையைப் போலவே அழகாக இருக்கிறாள். நற்பேறற்ற அந்த இளவரசி இப்போது தன் மகனின் முகத்தையும், இப்போது தன் தலைவனின் முகத்தையும் தடவுகிறாள்.(30) சாத்திரங்களும், சுருதிகளும் உண்மையென்றால், ஆயுதப் பயன்பாட்டால் ஒருவன் வெல்லும் (அருள் நிறைந்த) உலகங்களையும் இந்த மன்னனும் {துரியோதனனும்} அடைந்திருப்பான் என்பதில் ஐயமில்லை" என்றாள் {காந்தாரி}.(31)
ஸ்திரீ பர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |