I fear Shakuni! | Stri-Parva-Section-24 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 09) [ஸ்திரீ பர்வம் - 15]
பதிவின் சுருக்கம் : பூரிஸ்ரவஸ், சோமதத்தன் மற்றும் சகுனி ஆகியோர் இறந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; பூரிஸ்ரவஸின் தாய் மற்றும் அவனது மனைவியர் ஆகியோரின் அழுகையை விவரித்துச் சொன்னது; சகுனி இறந்தாலும், அவனைக் குறித்து அஞ்சுவதாகக் கிருஷ்ணனிடம் சொன்ன காந்தாரி ...
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "யுயுதானனால் {சாத்யகியால்} கொல்லப்பட்ட சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, பெரும் எண்ணிக்கையிலான பறவைகளால் கொத்திக் கிழிக்கப்படுவதைப் பார்.(1) ஓ! ஜனார்த்தனா, (அங்கே கிடக்கும்) சோமதத்தன், தன் மகனின் மரணத்தால் துயரில் எரிந்து பெரும் வில்லாளியான யுயுதானனை {சாத்யகியை} நிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.(2) களங்கமற்ற பெண்ணும், துயரில் மூழ்கிருப்பவளுமான பூரிஸ்ரவஸின் தாய், அங்கே தன் தலைவன் சோமதத்தனிடம்,(3) "ஓ! மன்னா, யுகமுடிவில் நேரும் காட்சிகளுக்கு ஒப்பான குருக்களின் நிர்மூலத்தையும், பாரதர்களுக்கு ஏற்பட்ட இந்தப் பேரழிவையும் நீர் காணாதது நற்பேற்றாலேயே.(4) கொடியில் வேள்விக்கம்பத்தை {யூபத்தைக்} கொண்டவனும், அனைவருக்கும் பெருங்கொடைகள் கொடுக்கப்பட்ட எண்ணற்ற வேள்விகளைச் செய்தவனுமான உமது வீர மகன் {பூரிஸ்ரவஸ்} போர்க்களத்தில் கொல்லப்படுவதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே.(5)
கடலுக்கு மத்தியில் நாரைக்கூட்டம் கதறுவதைப் போல, இந்தப் பேரழிவுக்கு மத்தியில் அச்சம்நிறைந்திருப்பவர்களான உமது மருமகள்கள் துயரத்துடன் கதறுவதை நீர் கேட்காததும் நற்பேற்றாலேயே.(6) ஒற்றையாடை உடுத்தியிருப்பவர்களும், கருகுழல்கள் கலைந்தவர்களும், கணவர்கள் மற்றும் மகன்களை இழந்தவர்களான உமது மருமகள்கள், அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.(7) அர்ஜுனனால் வீழ்த்தப்பட்டுக் கரங்களை இழந்தவனும், உமது மகனுமான அந்த மனிதர்களில் புலி {பூரிஸ்ரவஸ்}, இரைதேடும் விலங்குகளால் இப்போது விழுங்கப்படுவதை நீர் காணாதது நற்பேற்றாலேயே.(8) போரில் கொல்லப்பட்ட உமது மகன் சலனையும், உயிரை இழந்த பூரிஸ்ரவஸையும், துயரில் மூழ்கி விதவைகளாகியிருக்கும் உமது மருமகள்களையும் இன்று நீர் காணாதது உமது நற்பேற்றாலேயே.(9) வேள்விக்கம்பத்தைத் தன் கொடிமரத்தில் கொண்டிருந்த அந்தச் சிறப்புமிக்கப் போர்வீரனின் தங்கக் குடை கிழிக்கப்பட்டு, அவனது தேர்த்தட்டில் நொறுக்கப்பட்டிருப்பதை நீர் காணாததும் நற்பேற்றாலேயே" என்கிறாள் {பூரிஸ்ரவஸின் தாய்}.(10)
பூரிஸ்ரவஸின் கருங்கண் மனைவியர், சாத்யகியால் கொல்லப்பட்ட தங்கள் தலைவனைச் சூழ்ந்து கொண்டு அங்கே பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.(11) ஓ! கேசவா {கிருஷ்ணா}, தங்கள் தலைவன் கொல்லப்பட்ட துயரால் பீடிக்கப்பட்டு, பயங்கரப் புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அம்மங்கையர், தரையை நோக்கிய முகங்களுடன் பூமியில் விழுந்து, மெதுவாக உன்னை அணுகுகின்றனர். அவர்கள்,(12) "ஐயோ, தூய செயல்பாடுகளைக் கொண்ட அர்ஜுனன், வேள்வி செய்வதில் அர்ப்பணிப்புள்ளவரான இந்தத் துணிச்சல்மிக்கப் போர்வீரர் {பூரிஸ்ரவஸ்} கவனமில்லாமல் இருந்தபோது, அவரது கரங்களைத் தாக்கி வீழ்த்தி இத்தகு நிந்திக்கத்தக்க செயலை ஏன் செய்தான்? ஐயோ, பிராய நோன்பை நோற்று அமர்ந்திருந்தவரும், தன்னடக்கம் கொண்டவருமான அந்த மனிதரின் உயிரை எடுத்ததன் மூலம் சாத்யகி இன்னும் அதிகப் பாவத்தைச் செய்திருக்கிறான்.(14) ஐயோ, ஓ! நேர்மையாளரே {அறவோனே}, நியாயமற்ற {அதர்மமான} முறையில் இரண்டு எதிரிகளால் கொல்லப்பட்டு, நீர் தரையில் கிடக்கிறீர்" என்கின்றனர். ஓ! மாதவா, பூரிஸ்ரவஸின் இரு மனைவியரும் இவ்வாறே துயரத்தால் உரக்க அழுகின்றனர்.(15)
அங்கே, கொடியிடை கொண்டோரான அந்தப் போர்வீரனின் மனைவியர், வெட்டப்பட்ட தன் தலைவனின் கரத்தைத் தங்கள் மடியில் வைத்துக் கொண்டு கடுமையாக அழுகின்றனர்.(16) அவர்களில் ஒருத்தி, "அழகிய பெண்களின் இடுப்புக்கச்சைக்குள் புகுந்து, பருத்த முலைகளைக் கசக்கி, தொப்பு, தொடைகள் மற்றும் இடைகளைத் தீண்டி, அவர்களால் உடுத்தப்படும் அரைக்கச்சின் முடிச்சுகளைத் தளர்த்தும் அந்தக் கரம் இதோ.(17) எதிரிகளைக் கொன்று, நண்பர்களின் அச்சத்தை அகற்றி, ஆயிரம் பசுக்களைக் கொடையளித்து, போரில் க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய அந்தக் கரம் இதோ.(18) களங்கமில்லாச் செயல்களைச் செய்யும் அர்ஜுனன், வேறொருவருடன் போரிட்டுக் கவனமில்லாமல் இருந்த உமது கரத்தை, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் வெட்டினான்.(19) ஓ! ஜனார்த்தனா, சபைகளுக்கு மத்தியில் பேசும்போது, அர்ஜுனனின் இந்தப் பெரும் சாதனையை எவ்வாறு நீ சொல்லப் போகிறாய்? அந்தக் கிரீடியே {அர்ஜுனனே} கூட என்ன சொல்லப் போகிறான்?" என்கிறாள்.(20) அந்தப் பெண்களில் முதன்மையானவள் {தன் புலம்பல்களை}, உன்னை இவ்வாறு நிந்தித்துவிட்டு, இறுதியாக நிறுத்திக் கொண்டாள். அந்தப் பெண்மணியின் சக்காளத்திகள், அவள் ஏதோ தங்கள் மருமகளைப் போல அவளுடன் சேர்ந்து பரிதாபகரமாக ஒப்பாரியிடுகின்றனர்.(21)
கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனும், காந்தாரர்களின் தலைவனுமான வலிமைமிக்கச் சகுனி, சகோதரியின் மகனால் கொல்லப்படும் தாய்மாமனாக, சகாதேவனால் கொல்லப்பட்டு இதோ கிடக்கிறான்.(22) முன்பெல்லாம் தங்கக் கைப்பிடிகளைக் கொண்ட இரு விசிறிகளால் இவன் எப்போதும் விசிறப்படுவான். ஐயோ, இப்போது நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கும் அவன் {சகுனி}, பறவைகளின் சிறகடிப்பால் விசிறப்படுகிறான்.(23) இவன் {சகுனி} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வடிவங்களை ஏற்பவனாவான். எனினும், பெரும் மாயசக்திகளைக் கொண்ட இவனது மாயைகள் அனைத்தும், பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} சக்தியால் எரிக்கப்பட்டுவிட்டன.(24) வஞ்சகத்தில் திறன்மிக்க அவன் {சகுனி}, தன் மாய சக்தியால் சபையில் யுதிஷ்டிரனை வென்று, பரந்த நாட்டை வென்றான். எனினும், இப்போது அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} சகுனியின் உயிர்மூச்சையே வென்றுவிட்டான்.(25)
ஓ! கிருஷ்ணா, பெரும் எண்ணிக்கையிலான பறவைகள் இப்போது சகுனியைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார். பகடையில் திறன் மிக்க இவன் {சகுனி}, ஐயோ, அத்திறனை என் மகன்களின் அழிவுக்காகவே அடைந்திருக்கிறான்.(26) என் பிள்ளைகளுக்கும், இந்தச் சகுனிக்கும், இவனைப் பின்தொடர்ந்தவர்களுக்கும், உறவினர்களுக்கும் அழிவை உண்டாக்கிய பாண்டவர்களுடனான இந்தப் பகைமையெனும் நெருப்பு இவனாலேயே {இந்தச் சகுனியாலேயே} தூண்டப்பட்டது.(27) ஓ! பலமிக்கவனே, ஆயுதம் பயன்படுத்துவதன் மூலம் என் மகன்கள் அடைந்ததைப் போலவே, தீயவனாக இருப்பினும், ஆயுதங்களைப் பயன்படுத்தி {அழிந்ததால்} அருள் உலகங்கள் பலவற்றை இவனும் அடைந்துவிட்டான்.(28) ஓ! மதுசூதனா, இந்தக் கோணல்புத்திக்காரன் {சகுனி}, நம்பிக்கையுள்ளவர்களும், பாகுபாடற்றவர்களுமான என் பிள்ளைகளுக்குள், அங்கேயும் சச்சரவை உண்டாக்கி விடக்கூடாதே என்பதே என் அச்சமாக இருக்கிறது" என்றாள் {காந்தாரி}.(29)
ஸ்திரீ பர்வம் பகுதி – 24ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |