முகநூல நண்பர் கிருஷ்ணா ருக்மிணி அனுப்பிய கட்டுரை பின்வருமாறு.
பரசுராமர், இந்திரன் முதலியவர்களையே குருவாகக் கொண்டவரும், யுத்தத்தில் பரசுராமரையே வென்றவருமான பெரும்பாட்டனார் பீஷ்மரும், பரசுராமர், அகஸ்தியர், அக்னிவேசியர்,பிரகஸ்பதி எனப் பலரிடமும் அஸ்திரங்கள் பெற்று குரு வம்சத்திற்குக் குலகுருவான துரோணாச்சாரியாரும், கௌதம முனிவரின் வம்சத்தில் பிறந்தவரும், சரத்வானரை தனது தந்தையாகவும், குருவாகவும் கொண்டவரும் சிரஞ்சீவிகளில் ஒருவருமான கிருபாச்சாரியாரும், துரியோதனனின் உற்ற நண்பனும், பரசுராமரிடம் பிரம்மாஸ்திரத்தை பெற்றவனும், கௌந்தேயர்களில் மூத்தவனுமான கர்ணனும் எனச் சிறந்த வீரர்கள் பலரை இப்பெருங்காப்பியம் கொண்டிருந்தாலும் வில்லுக்கு விஜயன் என்ற பெயர் இன்றும் எங்கும் பெரியோர்களால் சொல்லப்படுவதைப் பார்க்க முடிகிறது.
அத்தனை வீரர்களுக்கும் கிட்டாத இந்நிலை, குறிப்பாக விஜயனுக்குக் கிட்டியது. இது சரிதானா இல்லை தவறா எனப் பலரின் மனத்தில் இன்றும் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.
பார்த்தன் அவ்வாறு எதற்காக அழைக்கப்படுகிறான்?
முன்ஜென்மத்தில் நரனென்னும் ரிஷியாக இருந்தவன், அடுத்தப் பிறவியில் அர்ஜுனனாக அவதரித்தான். கிருஷ்ணனின் பிறப்பிற்கு அடுத்தபடியாகத் தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள் எனப்பலராலும் கொண்டாடப்பட்டது அர்ஜுனனின் பிறப்பே.
பாண்டுவின் மரணத்திற்குப் பின் அஸ்தினாபுரம் வரும் பாண்டவர்கள் முதலில் கிருபரிடமும், பின் துரோணரிடமும் கல்வி கற்கின்றனர்
துரோணர் பாஞ்சாலனால் மனம்நொந்து இருந்தபோது, அவரின் மனதிற்கு மருந்துபோடுவது போல அவரின் அனைத்து வார்த்தைகளையும் ஆணையாக ஏற்றான் அர்ஜுனன். இதனால் அர்ஜுனனை தனது மகனைவிட மேன்மையானவனாக்கினார் குரு துரோணர்.
வில்லின் விற்பண்ணனாக மாறத் துரோணரின் பங்கு ஒரு பக்கம் இருந்தாலும், அர்ஜுனனின் ஆர்வமும் திறனும் மறுபக்கம் இருந்தது
அர்ஜுனனின் வில் வித்தைக்கு
- பிறக்கும்போதே அசரீரியும்
- குருகுலத்தில் துரோணரும்
- குரு தட்சணையில் துருபதனும்
- காண்டவ வனத்தில் தேவ, தைத்திய, தானவ, யட்ச, நாகர்களும்
- இராஜசூய யாகத் திக்விஜயத்தில் பகதத்தனும்
- பாசுபதம் தரும்போது ஈசனும்
- ஈசனை தழுவியபின் திக் பாலகர்களும்
- தேவலோகத்தில் இந்திரனும்
- சமாதான தூதில் கிருஷ்ணனும்
- துரியனை சமாதானப்படுத்தும்போது பரசுராமரும்
- பாண்டவர்களைப் பகைத்ததிலிருந்தே திருதராஷ்டிரனும்
- ஒவ்வொரு முறையும் அஸ்வதாமனும்
- போருக்குப்பின் விதுரரும்
- திவ்ய திருஷ்டியை பெற்ற பின் சஞ்சயனும்
- அம்புபடுக்கையில் பீஷ்மரும்
- சேனாதிபதியானதும் கர்ணனும்
சான்றளித்தனர்
விராட யுத்தத்தில் அனைவரையும் அர்ஜுனன் வீழ்த்தியதும்,
அர்ஜுனனை போர்க்களத்தில் இருந்து அகற்று, யுதிஷ்டிரனை பிடிக்கிறேன் எனத் துரோணரின் வரமும்,
ஐந்து வியூகங்களை உடைத்து ஏழு அக்ரோணி சேனைகளை ஒரே நாளில் கொன்று ஜெயத்ரதனை பரலோகம் அனுப்பியது
எனப் பலவற்றிலும் அர்ஜுனனின் வில்வித்தை வென்று காட்டியது
1. அர்ஜுனன் பயின்ற வித்தை
அர்ஜுனன் தனது அடிப்படை கல்வியைத் தனது தந்தையான பாண்டுவிடம் கற்றான் எனக் கூறப்படுகிறது. ஆனால் கும்பகோண பதிப்பில் சர்யாதியின் மூத்த மகனும், நூறு அஸ்வமேத யாகங்களை நிகழ்த்தியவனும் மலையில் தவமியற்றியவனுமான சுகனிடம் கற்றான் எனக் கூறப்படுகிறது. அங்கு அப்போதே சுகன் தனக்கு நிகராக அர்ஜுனனை கருதி, தனது வில்லை அளித்தான் என்றும் கூறப்படுகிறது.
பாண்டுவின் மரணத்திற்குப் பிறகு அஸ்தினாபுரம் வருகின்றனர் பாண்டவர்கள். சஸ்திரங்களில் சிறந்தவரும் சிரஞ்சீவியுமான கிருபாச்சாரியாரிடம் கல்வியைத் தொடர்கின்றனர். கிருபரின் தந்தையான சரத்வானர் பிறக்கும்போதே வில்லுடனும் அம்புடனும் பிறந்தவர். முனிவர் என்ற நிலையும் மீறி தனுர் வித்தையில் இந்திரனே கலங்கும் நிலையை எட்டியவராவார். இவர் தான் கற்ற வித்தையின் நுணுக்கத்தைத் தனது மகனான கிருபருக்கு அளித்தார்.
கிருபரின் நுணுக்கங்கள் மட்டும் போதாது என்றென்னிய பீஷ்மர் பரசுராமரிடம் அஸ்திரங்களைத் தானமாகப் பெற்ற துரோணரிடம் குரு வம்ச இளவரசர்களைக் கல்விகற்க சேர்க்கிறார்.
இவ்விருவரிடம் கல்விகற்கும்போதும், பற்பல தேசங்களில் இருந்து பலரும் வந்து கற்றனர். ஆனால், அர்ஜுனன் அதில் முன்னவனாக இருந்தான்.
பிறகு, குபேரனின் பணியாளனான அங்காரப்பர்ணனை வீழ்த்தி, அவனைக் கொல்லாமல் விட்டதால் அவனிடமிருந்து சாக்ஷுஷி வித்தையைப் பெறுகிறான் அர்ஜுனன். ஆறுமாதம் ஒன்றைக் காலில் நின்று தவம்செய்து பெற்ற வித்தையை அங்காரப்பர்ணன் அர்ஜுனனுக்கு அளித்தான்.
இந்த வித்தையின் மூலம் ஒருவன் தான் பார்க்க விரும்புவதை, விரும்பியவாறு பாக்கலாம், மிகச்சரியாகச் சொன்னால் வியாசர் சஞ்சயனுக்கு அளித்த திவ்ய திருஷ்டியை போன்றதே இச்சக்தியாகும்.
வாசுதேவ கிருஷ்ணனிடம் குறிப்பிட்ட அஸ்திரங்களையும் நுணுக்கங்களையும் கற்றான்.
வியாசரின் மூலம், யுதிஷ்டிரன் பெற்ற பிரதிஸ்மிருதி வித்தையை யுதிஷ்டிரன் அர்ஜுனனுக்கு அளித்தான். இதன் மூலம் ஒருவன் முழு அண்டத்தையும், அதன் வழிகளுடன் அறிவான். (சரியான எடுத்துகாட்டாகக் கூறினால் நாம் தற்போது Google map வைத்திருப்பது போலத் தான்)
மகாதேவரின் அணைப்பால் வலி மற்றும் நோயிலிருந்து விடுபட்டவன்.
தூய்மையான நிலையை அடைந்ததால், தேவலோகம் சென்ற அர்ஜுனன் அங்கு இந்திரனிடம் வில்வித்தையின் பூரணக் கலைகளான ஐந்து விதிகளையும் கற்றான்
2. வித்தையில் அவன் காட்டிய நுணுக்கம்
இன்று பலரும் அர்ஜுனனின் பறவையின் கண்மேல் வைத்த குறியையே உவமையாகக் கொண்டு கார்யங்களை ஆற்ற வலியுறுத்துகின்றனர்.
இரவிலே கூட அம்பெய்யும் திறன் மற்றும் இரு கரங்களாலும் கடினமான பிரம்மதனுசிலேயே அம்பெய்யும் திறன்கொண்டதால் சவ்யசாசி என்றழைக்கப்பட்ட விஜயன் அரங்கத்தில் பிரவேசித்த பின்னரும் பயிற்சியை விடாதவன். அவனின் தினப்பயிற்சி அவனிற்கு மெருகூட்டியது.
விஜயன் அம்பை எடுப்பதையும், வில்லில் பூட்டுவதையும் விடுவதையும் காண இயலாது. அவனது வேகம் அனைவரையும் வியக்க வைக்கும். அதேபோலப் பார்த்தனின் கணைகள் பறவைகள் சாரம் சாரமாய்ச் செல்வதுபோல ஒன்றோடொன்னு ஒட்டிச்செல்லும். அத்தனை வேகமான செயல்பாடு மற்றும் கச்சிதமான குறியை அடிக்கும் திறன் கொண்டவன். காண்டீப தனுசில் ஒரே இழுவையில் 500 அம்புகளை விடக்கூடியவன். அதே சமயம் அவன் வில்லில் இருந்து புறப்படும் கணை இரண்டு மைல்களுக்கு அந்தப் பக்கம் இருக்கும் வீரனின் கவசத்தையும் பிளந்து கொல்லக்கூடியது.
காண்டவ தகனத்தில் தேவர்கள், அசுரர்கள், தானவர்கள், பிசாசுகள், தைத்தியர்கள் எனப்பலரும் எதிர்த்துவர தேவர்களையும், நாகர்களையும் அர்ஜுனன் எதிர்க்க மற்றவர்களைக் கிருஷ்ணன் கொல்கிறார். அப்போது அக்னியை அணைக்க இந்திரன் மழைபொழிய, இதனால் பார்த்தன் அம்புகளைக் கொண்டு காண்ட வனத்தை ஒரு சொட்டு நீர் போகாத அளவிற்கு மூடுகிறான்.
அதேபோல இந்திரன் அடர்த்தியான கல்மலையையும், மந்தர மலையின் ஒரு பெரும்சிகரத்தையும் அர்ஜுனன் மீது விழவைக்க அதைத் தன் கணைகளால் துண்டுதுண்டாக்குகிறான்.
கந்தர்வர்கள், துரியோதனனை சிறைப்பிடித்த போது அவர்களைக் காக்க தம்பியர் நால்வரை அனுப்புகிறார் யுதிஷ்டிரன். நால்வரின் வீரத்தையும் கண்ட சித்திரசேனன் சிறைப்பிடித்த கௌரவர்களைத் தூக்கிகொண்டு மேல் எழும்புகிறான். அப்போது கந்தர்வர்களைச் சுற்றி நாற்புறமும் அம்புகளைக் கொண்டு வலை அமைக்கிறான் விஜயன். கூண்டில் சிக்கிய பறவைபோல அகப்படுகின்றனர் கந்தர்வர்கள்.
வனவாசத்தின்போது, பாஞ்சாலியை கண்ட ஜெயத்ரதன் அவளைப் பாண்டவர்கள் இல்லாத சமயத்தில் கடத்துகிறான். இதை அறிந்த பாண்டவர்கள் ஜெயத்ரதனை பிடிக்கச்சென்று அவனின் படைகளை நாசம்செய்கின்றனர் இதனால் திரௌபதியை விட்டுவிட்டு ஒடுகிறான். பாண்டவர்களிடம் இருந்து இரண்டு மைல் தூரத்திற்கு அப்பால் தப்பியோடும் ஜெயத்ரதனின் ரதத்தில் உள்ள குதிரைகளை, இருந்த இடத்தில் இருந்தே தனது கணைகளைக் கொண்டு கொல்கிறான் பார்த்தன்.
ஜெயத்ரதனைக் கொல்ல சபதம் எடுத்துச் செல்லும்போது, வேகத்தினாலும் எதிரிகளின் அம்புகளினாலும் குதிரைகள் களைப்படைகின்றன இதைக் கண்ணுற்ற சாரதி பொறுப்பை ஏற்ற வாசுதேவன் அர்ஜுனனிடம் குதிரை களைப்பார வேண்டும் எனக் கூறுகிறார் இதைகேட்ட விஜயன் குதிரைகள் நீர் அருந்த அடியற்ற தாமரை முதலிய பூக்கள் நிறைந்த அன்னம் முதலிய பறவைகள் நிறைந்த பற்பல மீன்கள் நிறைந்த தடாகத்தை நொடிப்பொழுதில் உண்டாக்குகிறான் அவ்வாறே தனது கணைகளைக் கொண்டே தேவசிற்பி விஸ்வகர்மாவை போல ஒரு அற்புதமான கூடத்தை அமைக்கிறான் பார்த்தன்.
ஜெயத்ரதனை நெருங்கிய பின் கொல்லப்போகும் வேளையிலே வாசுதேவர் ஜெயத்ரதன் பெற்ற வரத்தை சொல்லி அவனின் தந்தை இருக்கும் இடத்தைச் சொல்கிறார் மிகச்சரியாக ஜெயத்ரதனின் தலையைக் காட்டில் தவம்செய்யும் அவன் தந்தையின் மடியில் போட வேண்டும் இங்கு அம்மி பிசகினாலும் அர்ஜுனன் தலை சிதறும் இதனால் மிகக் கவனத்துடன் அம்புகளைக் கொண்டு ஜெயத்ரதனின் தலையைக் கீழே விழாமல் அவன் தந்தையின் மடியில் சேர்ப்பான்.
இங்கு எவ்வாறு இது சாத்தியமெனப் பல குழப்பங்கள் உள்ளன காரணம் ஜெயத்ரதனின் வரம் மற்றும் அவன் தந்தையைப் பற்றிய விவரமும் கிரீடிக்கு கடைசி நேரத்திலேயே சொல்லப்பட்டன இதைகொண்டு 24 மைல்களை விட அதிகத் தூரத்தில் அதுவும் சரியாகத் தவமியற்றும் அவரின் மடியில் எவ்வாறு சேர்த்தான் அதுவும் ஜெயத்ரதனின் தந்தையான விருத்தக்ஷத்திரன் அறியாமல் சேர்க்க வேண்டும்.
இதை மிகச்சரியாகப் பார்த்தால் அர்ஜுனன் கந்தர்வனிடம் பெற்ற சாக்ஷுஷி வித்தையைக் கொண்டு விருத்தக்ஷத்திரன் தவம் இருப்பதைக் கண்டான். (இந்த வித்தையைக் கொண்டு எதையும் பார்க்கலாம்) மேலும் யுதிஷ்டிரன் மூலம் வியாசரால் அருளப்பட்ட பிரதிஸ்மிருதி வித்தையின் மூலம் இடத்தின் தொலைவையும் திசையையும் அறிந்தான் பார்த்தன். இவை இரண்டின் மூலம் சரியான இருப்பிடத்தை உணர்ந்தான் அத்தனை தொலைவு செல்ல வேண்டும் எனக்கணக்கிட்ட பார்த்தன் தலை விழாமல் அம்புகளைக் கொண்டே மிதந்தவாறே சரியாக அவரின் மடியில் விழ வைத்தது அவன் கொண்ட தனுர் வித்தையின் உச்சம்
3. அஸ்திர சஸ்திரங்களில் அவன் அடைந்த உச்சம்
மந்திரங்களால் ஆயுதங்களாக மாற்றப்படுவதை அஸ்திரங்கள் என்றும் எப்போதும் தன்னுள் சக்தியை கொண்டு விளங்கும் பொருட்களைச் சஸ்திரம் என்றும் அழைப்பர்
அஸ்திரங்கள்
திவ்ய அஸ்திரங்கள் கணக்கிலடங்கா அதைப் பலரும் அறிவர் ஆனால் இங்கு நாம் பார்க்கபோவது தனித்தன்மையான மகாஸ்திரங்கள்.
மஹாபாரதத்தில் பீஷ்மர் பரசுராமரின் பூரணச் சீடர் ஆவார். குரு துரோணர் பரசுராமரிடம் அஸ்திரங்களைத் தானமாகப் பெற்றார். கர்ணனோ அடிப்படையைத் துரோணரிடம் பெற்றுப் பிரம்மாஸ்திரத்தை பரசுராமரிடம் பெற்றான்
இங்கு மும்மூர்த்திகளின் அதிசக்தி வாய்ந்த அஸ்திரங்களையும் பெற்றவன் விஜயன் ஒருவனே
அதாவது பிரம்மதேவரின் பிரம்மசிரஸ்
விஷ்ணுவின் வைஷ்ணவாஸ்திரம்
ஈசனின் பாசுபதாஸ்திரம்
மேலும் நரனின் அம்சமாவதால் சுதர்சனத்தையும் ஏந்த வல்லவன். (இது கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சுதர்சனத்தைப் பயன்படுத்த கூறி அதை அர்ஜுனன் வேண்டாமென்பதில் அறியலாம்)
விஜயனுக்கு அடுத்தபடியாக, துரோணரும் அஸ்வதாமானுமாவர் அதாவது பிரம்மசிரஸ் மற்றும் நாராயணாஸ்திரத்தை அறிந்தவர்கள்.
மும்மூர்த்திகளின் அஸ்திரத்திற்கு அடுத்தபடியாகப் பார்த்தால் திக்குகளைக் காக்கும் திக்பாலகர்களின் தனிப்பட்ட ஆயுதங்கள். திக்குகளைத் தாங்கி அதைப் பாதுகாக்கும் பொறுப்பை இவர்கள் சிவபெருமான் மற்றும் நாராயணரிடம் இருந்து பெறுவார்கள். (உதாரணம் வளங்களுக்கு அதிபதியான குபேரன் அப்பொறுப்பையும் உயிர்களைக் கொல்லும் யமன் அந்தப் பொறுப்பையும் ஈசனிடமும் இந்திரப்பதவியை இந்திரனும் ஜலத்திற்கு அதிபதியான வருணன் அந்த நிலையை விஷ்ணுவிடமும் பெற்றனர்)
திக்குகளைக் காக்கப்போவதால் இவர்களுக்கு எனத் தனிசக்திகளையும் எவரும் வெல்ல இயலாத தனிப்பட்ட ஆயுதங்களையும் சூலபாணியும் சக்கரபாணியும் தந்தார்கள் இந்த ஆயுதங்களை ஈசன் மற்றும் விஷ்ணுவின் சக்திவாய்ந்த அஸ்திரங்களால் மட்டுமே தடுக்க முடியும் மற்றபடி பிரம்மாஸ்திரத்தாலும் முடியாது.
இந்திரனின் வஜ்ரம், அக்னியின் ஆக்நேயம், யமனின் கதை {யமதண்டம்}, வருணனின் வருணபாசம், குபேரனின் அந்தர்தானாயுதம் முதலிய ஆயதங்களை நேரடியாகத் திக்பாலகர்களிடம் இருந்தே பெற்றான்
இந்திர லோகத்தில் வாயு, அக்னி, வசு, வருண, மருத, சித்த, பிரம்ம, கந்தர்வ, உரக, ராட்சச, விஷ்ணு, நைரிதர்களின் (அரக்க இனத்தின் ஒரு வகையினர்) ஆயுதங்களைப் பெற்றான்.
இதில் ஐந்திரியம் பார்த்தனுக்குப் பிரியமானதும் கௌரவச் சேனாதிபதிகளாலே தடுக்கப்பட முடியாதது ஆகும்.
துவஷ்டதாரி அஸ்திரம்: இது ஏவப்பட்டால் வீரர்களுக்குத் தங்களின் அருகில் இருப்பவர் கூட அர்ஜுனன் போலத் தெரிவார்கள். இதனால் ஒருவரை ஒருவர் அடித்துகொண்டு வீழ்வர். கிருஷ்ணனின் நாராயணர்கள் சேனையை இவ்வாறே அர்ஜுனன் கொல்வான். காண்டவ வனத்தில் இந்திரன் வரம்கேட்ட போது, இந்த அஸ்திரங்களை அர்ஜுனன் வரமாக வேண்டுவான்
கந்தர்வ அஸ்திரம்: இது ஒரு வீரனுக்கு நினைத்து பார்க்க முடியாத வேகத்தைக் கொடுக்கும் இந்த வேகத்தினால் அவன் சிறுது நேரத்திலேயே பலரை கொல்வான். அர்ஜுனன் இதைத் தும்புரு என்ற கந்தர்வனிடம் பெற்றான். இந்தக் கந்தர்வ அஸ்திரத்தை இராமபிரான் உபயோகித்து உள்ளார். இராமாயணத்தில் அனைவரும் வீழ்வதைக் கண்ட இராவணன் மூவுலங்களையும் வென்ற மாவீரம் கொண்ட அரக்க சிரேஷ்டர்களால் நிறைந்த மூலபல சேனையை இராமனை வதைக்க அனுப்புகிறான். வானர சேனையில் அவர்களில் ஒருவன் ஏற்படுத்திய அழிவும் கூட மிகக்கொடுமையாக இருந்தது இதனால் ஜகத்ரட்சகனாகிய தசரசநந்தனிடம் சரணடைகிறார்கள் வானர வீரர்கள். வனத்தில் சூறாவளி மரத்தின் கிளைகளை உடைத்தாலும் அதைக் காண முடியாதது போல, அசுரர்களின் சேனையில் இராமன் ஏற்படுத்திய அழிவை காணமுடிந்தாலும் இராமனை மட்டும் எவராலும் காண முடியவில்லை.
வாயு வேகமுடைய ரதங்கள் 7 கோடியே 28 லட்சமும்
மிகுந்த பலம் கொண்ட யானைகள் 13 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரமும்
சிறந்த வீரர்களுடன் உள்ள குதிரைகள் 10 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரமும்
கையில் கதாயுதம், ஈட்டி போன்ற ஆயுதங்களை ஏந்திய காலாட் படையினர் 145 கோடியே 80 லட்சமும்
என ரத, கஜ, துரக, பதாதிகளையும் கொண்ட சதுரங்க பல சேனையை
இராமன் மிகச்சரியாக #மூன்றே_முக்கால்_நாழிகையில் முடித்தார்.
பீஷ்மருக்கு நீரளித்த பர்ஜன்ய அயுதமே பலரிடம் இல்லாதது
நிவாதகவசர்களில் இருந்து சித்திரசேனன் சகுனி வரை எவராலும் உருவாக்கப்படும் மாயையை அகற்ற கூடியவன்
சிவகவசம் இது சிவபெருமானே இந்திரனை காக்க அளித்த கவசமாகும் இதைத் துரோணரின் மூலம் அர்ஜுனன் அறிவான் இதைப் பிளக்க வழியே இல்லை எனத் துரோணர் கூறுவார்
இதையும் விஜயன் தர்மயுத்தத்தில் உபயோகிக்க வில்லை
(துரியோதனன் கதாயுத்ததில் பீமனால் மட்டுமல்லாமல் எவராலும் வீழ்த்த முடியாதவன் ஆவான் அதற்கான காரணங்களில் சிவகவசமும் ஒன்றாகும்.
காரணம் துரியன் பிறக்கும்போதே இடுப்பிற்கு மேல்பகுதி வஜ்ரமாகப் பிறந்தவன் மேலும் சிவகவசமும் பூட்டப்பட்டதால் இடுப்பிற்கு மேல்பகுதி பெரும் சக்திவாய்ந்தது
கதாயுத்த நியதிப்படி இடுப்பிற்கு மேல்மட்டுமே தாக்க வேண்டும் துரியனின் மேல்பகுதிகொண்ட பாதுகாப்பின் காரணமாக அவனைக் கதாயுத்தத்தில் எவராலும் வீழ்த்த இயலவில்லை)
நான்முகப் பிரம்மாவின் பிரம்மசிரஸ் அஸ்திரத்தை திருப்பியழைத்தவன் பார்த்தனே அது தேவர்த்தலைவனான இந்திரனாலும் முடியாத காரியம்
சஸ்திரங்கள்
காண்டவ வனத்தில் அக்னியை நிறைவுசெய்ததால் காண்டீபத்தையும் வற்றாத அம்பறாத்தூணி மற்றும் தேரையும் அக்னியிடம் பெற்றான்
காண்டீபம் - கன்வ முனிவர் அகில நன்மைக்காகத் தவம்செய்யும்போது அவரின்மேல் புற்றுவளர அதில் மூங்கில்கள் வளர்கின்றன தவத்தில் வளர்ந்ததால் அவற்றின் சக்தியை உணர்ந்த பிரம்மதேவர் அவற்றில் சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவிற்குப் பிநாகம் மற்றும் சாரங்கம் என்ற இருமாபெரும் விற்களைச் செய்தார் அதன்பின்பும் மீதமிருந்த மூங்கில்களைக் கொண்டு தர்மத்தை காக்க செய்த வில்லே காண்டீபம் ஆகும்
விற்களில் ரத்தினமான இதை முறையே பிரம்மதேவர், ஈசன், பிரஜாதிபதி, இந்திரன், சந்திரன், வருணன், அர்ஜுனன் ஆகியோர் ஏந்தியுள்ளனர் (ஆனால் ஈசன் அர்ஜுனனிடம் நீ நரனாய் இருக்கும்போது ஏந்திய வில்லே இது எனக்கூறுவார்)
எடுக்க எடுக்க வற்றாத அம்பறாத்தூணிகள் இரண்டு இதனால் யுத்தத்தில் அம்புகள் தீரும் பிரச்சனை வராது
அக்னி அளித்த ரதம் - இது பெரும் தவத்திற்குப் பின் தேவசிற்பி விஸ்வகர்மா உருவாக்கியது ஆகும் பெரும் குரங்கை கொடியாகக் கொண்ட இந்த ரதம் பிறகு பீமசேனரின் வேண்டுதலால் அனுமக்கொடியை கொண்டதாக மாறும்
குருசேத்திரத்திற்கு முன் தேவசிற்பியினால் இந்திரன் மற்றும் ஆரோக்கியத்திற்குத் தேவதையான தாத்ரி மூலம் இந்த ரதம் மேலும் மெருகூட்டப்படும்
சித்திர ரதன் கொடுத்த சாரதியின் விருப்பதற்கு ஏற்ற நிறத்தை மாற்றிகொள்ளும் திறன் உடையதும் மனோ வேகத்தைக் கொண்டதும் நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும் பறக்கும் திறன்கொண்ட நூறு குதிரைகள் இந்த ரதத்தை இழுத்துச்சென்றன. சூரிய பிரகாசத்தைக் கொண்ட இந்த ரதம் போருக்குப் பின் பஸ்மமாக்கப்பட்டது
தனது கை நளினத்தைத் தாங்காமல் விற்கள் உடைவதால் ஒரு வில்லும்
கணைமழையைப் பொழிவதால் தீராத அம்பறாத்தூணியும்
பல ஆயுதங்கள் எடுத்துசெல்வதால் சிறந்த ரதமும்
பார்த்தனால் கேட்கப்பட்டதால் அக்னி அதை உவந்து அளிப்பார் காண்டவ வனத்தில் தேவர்கள், தானவர்கள், தைத்தியர்கள் முதலிய பலரையும் தனது உயிரை பொருட்படுத்தாமல் எதிர்க்க போவதிற்காக அளித்த சன்மானம்.
முடிவுரை
அர்ஜுனன் பற்பல யுகங்கள் வாழும் தேவர்கள், அசுரர்கள், தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் என அனைவரும் சேர்ந்து வந்தாலும் வெல்லப்பட முடியாதவன்
போருக்குமுன் பாசுபதம் போன்ற தெய்வீக ஆயுதங்களைப் போரில் உபயோகிக்காமல் தர்மயுத்தத்தில் வெற்றி பெறலாம் எனக்கூறியவன்
அர்ஜுனன் அறிந்த அஸ்திரங்களில் 80% அவன் தர்மயுத்தத்தில் உபயோகிக்க வில்லைப் பாசுபதம், வைஷ்ணவம், பிரம்மசிரஸ் மற்றும் திக் பாலகர்களின் வஜ்ரம், அக்நேயம் முதலிய ஆயுதங்கள் போரை தனியாளாக முடிக்க வல்லவை
ஆனால் தர்மயுத்ததில் அவனும் உபயோகிக்கவில்லை வாசுதேவனும் அவனை உபயோகிக்கவிடவில்லை
ஜெயத்ரதனை கொல்ல போகும்போதே ஒரே நாளில் ஏழு அக்ரோணிகளைக் கொன்றான்
இந்தச் சமயம் கந்தர்வ ஆயுதத்தை உபயோகித்து இருப்பானேயானால் அன்றே போர் முடிந்து இருக்கும்
இல்லை விராடத்தைப் போன்று மயங்க வைத்தால் நொடிப்பொழுதில் ஜெயத்ரதனை நெருங்கி இருக்கலாம்
அர்ஜுனன் அறிந்த மாயத்தைக் கூட அவன் அங்கு உபயோகிக்க வில்லை
(கிருஷ்ணன் சூரியனை மறைத்தது இடைசொருகல் என Bori நீக்கி விட்டனர்)
சர்வேஸ்வரனான ஈசனிடமும், வசுக்களின் சாபப்படி தனது மகன் பாப்ருவாகனனிடமும்,கிருஷ்ணன் மறைந்தபிறகும் அஷ்ட வக்ரரின் சாபத்தினால் துவாரகை கொள்ளையர்களிடமும்மட்டுமே அர்ஜுனன் தோல்வியைத் தழுவினான். வேறு எங்குமே அவனது தோல்வியோ இல்லை புறமுதுகிட்டான் என்றோ மூல நூலில் கூறப்படவில்லை இக்காரணத்தாலேயே அவன் விஜயன் என்ற பெயரும் பெற்றான்
இவையே அர்ஜுனனை நமது முன்னோர்கள் வில்லிற்கு விஜயன் எனக்கூற காரணங்களாகும்.