The wife of Janaka! | Shanti-Parva-Section-18 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 18)
பதிவின் சுருக்கம் : ஜனகனின் மனைவியான சுநைனா, சந்நியாசம் செல்ல விரும்பிய ஜனகனிடம் கேட்ட கேள்விகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன அர்ஜுனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "யுதிஷ்டிரன் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தபோது, மன்னனின் அப்பேச்சால் பீடிக்கப்பட்ட அர்ஜுனன், சோகத்தாலும், துயராலும் எரிந்து மீண்டும் தன் அண்ணனிடம்,(1) "ஓ! பாரதரே {யுதிஷ்டிரரே}, விதேஹர்களின் ஆட்சியாளனுக்கும் {ஜனகனுக்கும்}, அவனது ராணிக்குமிடையில் {சுநைனாவுக்கும் இடையில்} நடைபெற்ற உரையாடல் அடங்கிய இந்தப் பழைய வரலாற்றை மக்கள் உரைக்கின்றனர்.(2) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்} தன் நாட்டைத் துறந்து, பிச்சாடன வாழ்வை நோற்கத் தீர்மானித்த போது, அவனுடைய மனைவி துயரால் பீடிக்கப்பட்டுச் சொன்ன வார்த்தைகளின் குறிப்பு அவ்வரலாற்றில் இருக்கிறது.(3) மன்னன் ஜனகன், தனது செல்வம், பிள்ளைகள், மனைவியர், பல்வேறு வகை உடைமைகள், அறத்தகுதியையும், நெருப்பையும் அடைய நிறுவப்பட்ட வழி ஆகியவற்றைத் துறந்து, தன் தலையைச் சிரைத்துக் கொண்டான் (பிச்சைக்காரத் தோற்றத்தை {துறவியின் வடிவை} ஏற்றுக் கொண்டான்). அவனது துணைவியானவள் {சுநைனா}, செல்வத்தை இழந்தவனாக, பிச்சைக்கார நோன்பை நோற்பதில் நிறுவப்பட்டவனாக, எந்த வகைத் தீங்கையும் பிறருக்கு இழைப்பதில் இருந்து விலகும் தீர்மானத்துடன் கூடியவனாக, அனைத்து வகைப் போலித்தனங்களையும் கைவிட்டவனாக, தண்டில் இருந்து விழுந்தவையும், (வயலின் பிளவுகளில் இருக்கும் தானியங்களைப் பொறுக்கிப் பெறப்பட்ட) கைநிறைந்தவையுமான தானியங்களை உண்டு வாழத் தயாராக இருப்பவனாகவும் அவனைக் கண்டாள்.(5)
தன் தலைவனுடன் யாருமற்ற வேளையில் அவனை {ஜனகனை} அணுகிய ராணி {சுநைனா}, பெரும் மனோ பலத்துடனும், அச்சமற்ற வகையிலும், கோபத்துடனும், அறிவு நிறைந்த இவ்வார்த்தைகளை அவனிடம் சொன்னாள்:(6) "செல்வமும், தானியமும் நிறைந்த உமது நட்டைக் கைவிட்டு, பிச்சைக்கார வாழ்வை ஏன் நோற்கிறீர்? கைநிறைந்தவையும், வீழ்ந்தவையுமான {உதிர்ந்தவையுமான} தானியங்கள் உமக்குப் போதுமானவையல்ல.(7) ஓ! மன்னா, உமது பெரும் நாட்டைக் கைவிட்டு, கைப்பிடி தானியதை விரும்புகிறீராதலால், உமது தீர்மானமும், உமது செயல்களும் பொருந்தவில்லை.(8) ஓ! மன்னா, இந்தக் கைப்பிடி தானியத்தைக் கொண்டு, உம்மால் உமது விருந்தினர்களையும், தேவர்களையும், முனிவர்களையும், பித்ருக்களையும் நிறைவு செய்ய முடியுமா? எனவே, இந்த உமது முயற்சி புதைமிதியற்றதாகும் {வீணானதாகும்}.(9) ஐயோ, தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் பித்ருக்கள் ஆகியோர் அனைவராலும் கைவிடப்பட்டு, செயல்பாடு அனைத்தையும் கைவிட்டுத் திரியும் பிச்சாடன வாழ்வை நோற்கப் போகிறீர்.(10)
முன்பு நீர் மூன்று வேதங்களை அறிந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களையும், இன்னும் பலரையும் ஆதரித்து வந்தீர். இன்று உமது உணவுக்காக அவர்களிடம் நீர் எவ்வாறு பிச்சை எடுப்பீர்?(11) இந்தச் சுடர்மிகு செழிப்பைக் கைவிட்டு, ஒரு நாயைப் போல (உணவுக்காகச்) சுற்றிலும் கண்களைச் சுழல விடப்போகிறீர். இப்போது இந்த உமது தாய் உம்மால் மகனற்றவளானால், உமது மனைவியான கோசல இளவரசியோ ஒரு விதவையானாள் {சுநைனா ஆகிய நானோ இப்போது கணவனற்ற விதவையானேன்}.(12) இந்த ஆதரவற்ற க்ஷத்திரியர்கள், கனியையும், அறத்தகுதியையும் எதிர்பார்த்து, தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் உம் மேல் கொண்டு உமக்காகக் காத்திருக்கின்றனர்.(13) ஓ! மன்னா, அவர்களது அந்த நம்பிக்கைகளைக் கொன்றுவிட்டு, நீர் எந்த உலகத்திற்குச் செல்லப் போகிறீர்? அதிலும் குறிப்பாக விடுதலை {முக்தியானது} ஐயம் நிறைந்தது, உயிரினங்கள் அனைத்தும் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன எனும்போது நீர் எங்குச் செல்லப் போகிறீர்?[1](14) நீர் மணந்து கொண்ட மனைவியைக் கைவிட்டு வாழ விரும்புவதால், பாவம் நிறைந்த உமக்கு இம்மையோ மறுமையோ கிடையாது[2].(15)
[1] "இங்கே கையாளப்பட்டிருக்கும் Paratantreshu பரதந்திரேஷு என்ற வார்த்தையை நீலகண்டர், ‘விதியைச் சார்ந்தது’ என்று பொருள் கொள்கிறார். இஃது ஒருவனுடைய தற்போதைய வாழ்வையும், முந்தைய வாழ்வையும் இணைக்கும் விதி என்றானால், இந்த விளக்கம் தவறானதாக இருக்கும். எனினும், இதன் வெளிப்படையான பொருளானது, "செயலைச் சார்ந்தது" என்பதேயாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பராதீனர்களாயிருக்கும் மனிதர்களுக்கு மோக்ஷம் ஸந்தேஹப்படக்கூடியதே. ஆகையால், இவ்விதமான பாவஞ்செய்யும் உமக்கு மேலுகமுமில்லை; கீழுலகமுமில்லை" என்றிருக்கிறது.[2] "ஒருவன் மணந்து கொண்ட மனைவியானவள், அவனது அறச் செயல்கள் அனைத்திலும் துணைவியாக இருப்பவளாவாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மையில், பல்வேறு வகையான மாலைகள், நறுமணப்பொருட்கள், ஆபரணங்கள், ஆடைகள் ஆகியவற்றைத் தவிர்த்து, நீர் ஏன் பிச்சாடனராகத் திரியப் போகிறீர்?(16) அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பரந்த புனிதமான தடாகத்தைப் போல இருந்துவிட்டு, (அனைவருக்கும் உறைவிடத்தைத் தரும்) புகழத்தக்க ஒரு பெரும் மரமாக இருந்துவிட்டு, எவ்வாறு உம்மால் மற்றவர்களுக்காகக் காத்திருக்கவும், அவர்களை வழிபடவும் முடியும்?(17) ஒரு யானையானது தனது வேலைகள் அனைத்தையும் தவிர்த்தால், கூட்டமாக வரும் ஊனுண்ணும் விலங்குகளும், எண்ணற்ற புழுக்களும் அஃதை உண்டுவிடும். அவ்வாறிருக்கையில், சக்தியற்றவரான உம்மைக் குறித்து என்ன சொல்வது?[3](18) மண்குடத்தையும், மூன்றுதலை கொண்ட தண்டத்தையும் பரிந்துரைப்பதும், தன் ஆடைகளையே கைவிடச் சொல்வதும்,(19) அனைத்தையும் துறந்த பிறகு கைப்பிடி தானியத்தை மட்டுமே ஏற்க அனுமதிப்பதுமான இந்த வாழ்வுமுறையில் உமது இதயம் எவ்வாறு நிலைக்கலாம்? மேலும், நாடும், கைப்பிடி தானியமும் ஒன்றேயென நீர் சொல்வீரானால், முன்னதை {நாட்டை} நீர் ஏன் கைவிடவேண்டும்?[4](20)
[3] "எனவே நீர் செயலைக் கைவிடக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளது போல மேற்கண்டவாறே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "ஒருவன் இந்தக் கடத்தையுடையத்தாலும், மூன்றாகச் சேர்ந்த இந்தத் தண்டத்தையும், உமது காஷாயத்தையும் பிடுங்கினாலும், உமது மனம் அவன் மீது எங்ஙனமிருக்கும்? யாவற்றையும் விட்ட உமக்கு இப்படி அரிசியில் என்ன ஆசை வேண்டியிருக்கிறது? இந்த அரிசிக்குச் செய்யும் வேலையும், ராஜ்ய முழுமவதற்குஞ் செய்யும் வேலையும் ஒன்றன்றோ? அங்ஙனமிருக்கையில் இதனை எதற்காக நிச்சயித்தீர்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கும்பகோணம் பதிப்பில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
மேலும், கைப்பிடி தானியமானது பற்றுக்கான பொருள் ஆகுமென்றால், (அனைத்தையும் கைவிட்ட) உமது உண்மை தீர்மானம் தரையில் விழுந்துவிடும். அனைத்தையும் கைவிடும் உமது தீர்மானத்தின்படி நீர் செயல்பட்டால், உமக்கு நான் யார்? எனக்கு நீர் யார்? நீர் என்னிடம் கொண்டுள்ள அருள் என்னவாக இருக்க முடியும்?(21) நீர் அருளைக் கொள்ள விரும்பினால், இந்தப் பூமியை ஆள்வீராக. வறுமை நிறைந்த ஏழையாக, நண்பர்களால் கைவிடப்பட்டவர்களாக இருப்பவர்கள், மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் துறவை பின்பற்றலாம்.(22) அரண்மனை போன்ற மாளிகைகளையும், படுக்கைகளையும், வாகனங்களையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் கைவிடுவதாக நடிக்கும் மனிதர்கள் உண்மையில் முறையற்றே செயல்படுகிறார்கள்.(23) ஒருவன் எப்போதும் பிறரால் கொடுக்கப்படும் கொடைகளை ஏற்கிறான்; மற்றொருவன் எப்போதும் கொடைகளை அளிக்கிறான். இந்த இருவருக்குள்ளும் உள்ள வேறுபாடுகளை நீர் அறிவீர். உண்மையில் இவர்கள் இருவரில் எவர் மேன்மையாக மதிக்கப்பட வேண்டும்?(24) எப்போதும் கொடைகளை ஏற்பவர்களுக்கோ, செருக்குடையவனுக்கோ ஒரு கொடை கொடுக்கப்படுமாயின், அந்தக் கொடையானது காட்டு நெருப்பில் ஊற்றப்பட்ட தெளிந்த நெய்யைப் போல வீணாகவே ஆகும்.(25)
ஓ! மன்னா {ஜனகரே}, தனக்குள் வீசப்படும் அனைத்தையும் எரிக்காமல் அடங்காத நெருப்பைப் போல, நன்கொடையைப் பெறாமல் ஒருபோதும் ஒரு பிச்சைக்காரன் {யாசகன்} அமைதியடையமாட்டான்.(26) இவ்வுலகில், ஈகையாளன் ஒருவனால் கொடுக்கப்படும் உணவே, நிச்சயம் பக்திமான்களை ஆதரிக்கும். எனவே, ஒரு மன்னன் (உணவைக்) கொடுக்கவில்லையெனில், முக்தியை விரும்பும் பக்திமான்கள் எங்கே செல்வார்கள்?(27) (தங்கள் இல்லங்களில்) உணவைக் கொண்டிருப்போர் இல்லறவாசிகளாவர். அவர்களே பிச்சைக்காரர்களை {சந்நியாசிகளை} ஆதரிக்கிறார்கள். உணவிலிருந்தே உயிர் பாய்கிறது. எனவே, உணவைக் கொடுப்பவன், உயிரைக் கொடுப்பவனாவான்.(28) இல்லற வாழ்வை நோற்போரிடம் இருந்து வெளியேறும் துறவிகள் {பிச்சைக்காரர்கள்}, அவர்கள் எங்கிருந்து {எவர்களிடமிருந்து} வந்தனரோ அவர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள். தன்னடக்கம் கொண்ட மனிதர்கள் இதைச் செய்வதால் புகழையும், பலத்தையும் அடைந்து இன்புறுகிறார்கள்.(29) தன் உடைமைகளை மட்டுமே துறப்பதாலோ, பிச்சையேற்கும் வாழ்வை நோற்க ஆயத்தமடைவதாலோ ஒருவன் துறவி என்றழைக்கப்பட மாட்டான். உண்மையான மனநிலையுடன் தன் உடைமைளையும், இவ்வுலக இன்பங்களையும் துறப்பவனே உண்மையான துறவியாகக் கருதத்தக்கவனாவான்.(30) வெளிப்பார்வையில் பற்றுடன் இருப்பதாகத் தெரிந்தாலும், இதயத்தில் பற்றற்றவனாகவும், உலகத்தில் இருந்து தனித்து நிற்பவனாகவும், பற்றுகள் அனைத்தையும் உடைத்தெறிந்தவனாகவும், நண்பனையும், எதிரியையும் சமமாகக் கருதுபவனாகவும் இருக்கும் மனிதனே உண்மையில் துறவியாகக் கருதத்தக்கவனாவான்.(31)
பல்வேறு பற்றுகளில் கட்டப்பட்டவர்களாக, வீணாகப் போகும் செல்வத்தைத் தேடுபவர்களாக இருந்தாலும், தங்கள் தலைகளைச் சிரைத்துக் கொண்டு, காவியுடை உடுத்திக் கொண்டு துறவியாகத் திரியும் மனிதர்களை நாம் காணலாம்.(32) மூன்று வேதங்களையும், தங்கள் வழக்கமான தொழில்களையும், பிள்ளைகளையும் கைவிட்டு மூன்று தலை தண்டத்தை எடுத்துக் கொண்டு, காவி உடை உடுத்திக் கொண்டு, துறவு வாழ்வைப் பின்பற்றுபவர்களான அவர்கள் உண்மையில் சிறுமதி கொண்ட மனிதர்களே.(33) ஓ! மன்னா {ஜனகரே}, கோபத்தையும், பிற குற்றங்களையும் கைவிடாத அவர்கள், வாழ்வாதாரத்தை ஈட்டும் விருப்பத்தால் மட்டுமே காவி உடை உடுத்தியவர்கள் என்பதை அறிவீராக. முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடன் அறக்கொடியை நிறுவும் அவர்கள், இதை (வாழ்வாதாரத்தை அடைவதை) மட்டுமே தங்கள் வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர்களாவர்.(34) எனவே, ஓ !மன்னா {ஜனகரே}, சடாமுடி தரித்தோ, முற்றாக மழிக்கப்பட்ட தலைகளுடனோ, மரவுரி தரித்தோ, தோலாடை தரித்தோ, காவி உடை தரித்தோ இருக்கும் உண்மையான பக்திமான்களை ஆதரித்து, உமது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மறுமையில் அருள் உலகங்களை வெல்வீராக.(35) தன் புனித நெருப்பைப் பராமரிப்பவனும், விலங்குகளையும், தக்ஷிணைகளையும் கொடுத்து வேள்விகள் செய்பவனும், பகலும் இரவும் ஈகையில் ஈடுபடுபவனுமான ஒருவனை {ஒரு நல்ல மன்னனை} விட மேம்பட்ட அறவோன் வேறு எவன் இருக்க முடியும்?" என்று கேட்டாள் {ஜனகனின் மனைவி சுநைனா}".(36)
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "மன்னன் ஜனகன் இவ்வுலகில் உண்மையறிந்த மனிதனாகக் கருதப்படுகிறான். அவனே கூட (கடமையை உறுதி செய்யும்) இக்காரியத்தில் திகைப்படைந்தான். {அவனைப் போலவே} நீர் திகைப்படையாதீர்.(37) இவ்வாறே இல்லறத்தின் கடமைகளை ஈகையாளர்கள் நோற்கின்றனர். அனைத்து வகைகளிலான தீங்குகளையும் தவிர்த்து, ஆசை மற்றும் கோபத்தைக் கைவிட்டு,(38) அனைத்து உயிரினங்களையும் காப்பதில் ஈடுபட்டு, பெரியோரையும், வயதால் முதிர்ந்தோரையும் பேணியபிறகு, இறுதியாக நாம் அடைய விரும்பும் அருள் உலகங்களை அடைவதில் வெல்வோம்.(39) தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் உயிரினங்கள் அனைத்தையும் முறையாக நிறைவு கொள்ளச் செய்து, பிராமணர்களை வழிபட்டு, பேச்சில் உண்மையுடன் நாம் நிச்சயம் விரும்பத்தக்க அருள் உலகங்களை அடைவோம்" {என்றான் அர்ஜுனன்}.(40)
சாந்திபர்வம் பகுதி – 18 ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |