Everything rests on understanding! | Shanti-Parva-Section-17 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 17)
பதிவின் சுருக்கம் : துறவே சிறந்ததெனப் பீமனுக்குச் சொன்ன யுதிஷ்டிரன்; பசியை வெல்ல வேண்டும்; ஆசை மற்றும் இன்பங்களைத் துறக்க வேண்டும் என்று சொன்னது; பண்பட்ட அறிவிலேயே அனைத்தும் நிலைத்திருக்கின்றன என்று சொன்ன யுதிஷ்டிரன்...
யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "ஓ! பீமா, நிறைவின்மை, அலட்சியம், பூமிசார்ந்த பொருட்களில் பற்று, அமைதியின்மை, வலிமை, மடமை, போலிச் செருக்கு {வறட்டு பெருமை}, கவலை ஆகிய இந்தப் பாவங்களால் பீடிக்கப்பட்டு, நீ அரசுரிமையில் நாட்டங்கொள்கிறாய். ஆசையில் இருந்து விடுபட்டு, இன்பம் மற்றும் துன்பம் ஆகியவற்றைக் கடந்து, அமைதியை அடைந்து, மகிழ்ச்சியடைய {சுகமாக இருக்க} முயல்வாயாக.(1,2) கட்டற்ற இந்தப் பூமியை எந்த ஒப்பற்ற ஏகாதிபதி ஆட்சி செய்வானோ, அவனும் ஒரே வயிற்றைத் தான் கொண்டிருப்பான். பிறகு ஏன் நீ இந்த வாழ்வுமுறையைப் புகழ்கிறாய்?(3) ஓ! பாரதர்களில் காளையே {பீமா}, ஒருவனுடைய ஆசைகள் ஒரு நாளிலோ, பல மாதங்களிலோ நிறைவடையாது. உண்மையில், நிறைவடைய இயலா ஆசையானது, ஒருவனுடைய மொத்த வாழ்நாளிலும் கூட நிறைவையடையாது.(4) நெருப்பில் விறகு ஊட்டப்படும்போது அது சுடர்விட்டு எரிகிறது; ஊட்டப்படாதபோதோ அணைந்துவிடுகிறது. எனவே, உன் வயிற்றில் நெருப்பு எரியும்போது {பசிக்கும்போது}, சொற்ப உணவே அளித்து {உணவைக் குறைத்து} அஃதை அணைப்பாயாக.(5) ஞானமற்றவனே தன் வயிற்றுக்கு அதிக உணவைத் தேடுகிறான். முதலில் உனது வயிற்றை வெல்வாயாக. (பிறகு உன்னால் இந்தப் பூமியையே வெல்ல இயலும்). உனது நிரந்தர நன்மைக்கான பூமியை, அப்போது உன்னால் வெல்ல முடியும்[1].(6)
[1] கும்பகோணம் பதிப்பில், "எரியத் தொடங்கும் வயிற்றிலுள்ள அக்கினியை ஆகாரத்தைக் குறைத்து நீ சாந்தமாகச் செய். புத்தியில்லாதவன் தன் வயிற்றினிமித்தம் பல ஹிம்ஸையைச் செய்கிறான். வயிற்றை ஜயித்தால் அதனாலுண்டாகும் நற்கதியால் இந்தப் பூமியும் உனக்கு ஜயிக்கப்பட்டதாகும்.
உலகம் சார்ந்த ஆசைகள், இன்பங்கள் மற்றும் செழிப்பை நீ புகழ்கிறாய். எனினும், அனைத்து இன்பங்களையும் துறந்தவர்கள், தவங்களால் தங்கள் உடல்களைக் குறைத்துக் கொண்டு பேரின்பம் நிறந்த உலகங்களை அடைகின்றனர்.(7) நாட்டை அடைந்து அதைப் பராமரிப்பதில் நியாயமான மற்றும் நியாயமில்லா இரண்டு வழிகளும் பின்பற்றப்படுகின்றன. அவற்றிற்கான ஆசை உன்னுள் இருக்கிறது[2]. எனினும், உன் பெருஞ்சுமைகளில் இருந்து உன்னை விடுவித்துக் கொண்டு நீ துறவை பின்பற்றுவாயாக.(8) ஒரு புலியானது, தன் வயிற்றை நிரப்புவதற்காகப் பல விலங்குகளைக் கொல்கிறது. பலமற்ற பிற விலங்குகள், உயிர்வாழும் ஆசையால் உந்தப்பட்டு, புலியின் இரையாக வாழ்கின்றன.(9) உலகம் சார்ந்த பொருட்களை ஏற்கும் மன்னர்கள் துறவை பயின்றால், அவர்களால் ஒருபோதும் மனநிறைவை அடைய முடியாது. அவர்களின் புத்தியின்மையைப் பார்.(10) எனினும், மரத்தின் இலைகளை உண்டு வாழ்பவர்களோ, தானியங்களில் உமி நீக்க இரு கற்களை மட்டுமே, அல்லது தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துபவர்களோ, நீரை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களோ, காற்றை மட்டுமே உட்கொண்டு வாழ்பவர்களோ, நரகத்தை வெல்கிறார்கள் {நரகை அடையாமல் சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்} என்பது உண்மைச் செய்தியாகும்.(11) கட்டற்ற இந்தப் பரந்த உலகை ஆள்பவனான மன்னனும், தங்கத்தையும், கூழாங்கற்களையும் சமமாகக் கருதும் ஒரு மனிதனு ஆகிய இவர்கள் இருவருக்குள், பின்னவனே {துறவியே} தன் வாழ்வின் நோக்கத்தையடைந்ததாகச் சொல்லப்படுகிறானேயன்றி முன்னவன் {மன்னன்} அல்ல.(12)
[2] கும்பகோணம் பதிப்பில், "தன்னிடத்தில் இல்லாத திரவியத்தை அடைவதும், அடைந்ததைப் பரிபாலிப்பதுமான ராஜ்யத்தின் யோகக்ஷேமமும், புண்ணியப் பாபங்களும் உன்னிடத்திலிருக்கின்றன" என்றிருக்கிறது.
எனவே, நீ இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தைத் தரும் நிரந்தர புகலிடத்தைச் சார்ந்தவனாகி, செயலை நிறுத்தி, ஆசைகளில் கொண்டுள்ள பற்றைத் துறப்பாயாக.(13) ஆசையையும், இன்பத்தையும் கைவிட்டவர்கள் ஒருபோதும் வருந்த வேண்டியதில்லை[3]. எனினும், நீ இன்பங்களுக்காக வருந்துகிறாய். ஆசையையும், இன்பத்தையும் விலக்கினால், பொய் பேச்சில் இருந்து விடுபடுவதில் நீ வெல்லலாம்[4].(14) பித்ருக்களின் பாதை மற்றும் தேவர்களின் பாதை என நன்கறியப்பட்ட இருபாதைகள் (நமக்காக) இருக்கின்றன. வேள்விகளைச் செய்வோர் பித்ரு பாதையில் செல்கின்றனர், அதே வேளையில், விடுதலை {முக்தியை} வேண்டுவோர், தேவ பாதையில் செல்கின்றனர்[5].(15) தவங்கள், பிரம்மச்சரியம், (வேத) கல்வி, ஆகியவற்றின் மூலம் தங்கள் உடல்களைத் துறக்கும் பெரும் முனிவர்கள், காலனின் சக்திக்கும் மேலான உலகங்களுக்குச் செல்கின்றனர்.(16)
[3] "அதாவது, நீ ஆசையிலிருந்து விடுபடவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "இவ்விடத்தில், பொய்ப்பேச்சென்பது, ஒருவன் செல்வத்தையும், அதிகாரத்தையும் அனுபவித்துக் கொண்டே அவற்றில் பற்றில்லாதவன் போலப் பேசுவது. அஃதாவது, ஆடம்பரங்களுக்கு மத்தியில் பயிலப்படும் போலித் துறவு. யுதிஷ்டிரனால் ஏற்கனவே சொல்லப்பட்டதைப் போல அத்தகு துறவு பயிலத்தகாததாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[5] "வேத சடங்குகளின் மூலம் மறுமையில் ஒருவனை அருளை அடையச் செய்வது பித்ருக்களின் பாதையாகும். தேவர்களின் பாதை என்பது, ஆழ்ந்த தியானம் மற்றும் பக்திக்காகச் செய்யப்படும் அறச்சடங்குகளைக் கைவிடுவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உலகம் சார்ந்த இன்பங்கள் கட்டுகளின் {பற்றின்} தன்மையைக் கொண்டனவாகும். அவை செயல்பாடு என்றும் அழைக்கப்படுகின்றன. (பற்று மற்றும் செயல்பாடு ஆகிய) அவ்விரு பாவங்களில் இருந்து விடுபடும் ஒருவனே உயர்ந்த கதியை அடைகிறான்[6].(17) முரண்பட்ட இரட்டைகளிலிருந்து {த்வந்துவங்களில் இருந்து} விடுபட்டவனும், ஆசை மற்றும் இன்பங்களில் இருந்து விடுபட்டவனும், மோக்ஷதர்மத்தை நோற்பவனுமான ஜனகனால் (பழங்காலத்தில்) பாடப்பட்ட ஒரு வரியில் இக்குறிப்பிருக்கிறது.(18) (அவ்வாறு இவ்வாறு அமைந்திருக்கிறது:) "என் செல்வங்கள் ஏராளம், இருப்பினும் என்னிடம் ஒன்றுமில்லை. மேலும், மொத்த மிதிலையும் எரித்துச் சாம்பாலக்கப்பட்டாலும், என்னுடையது ஏதும் எரிக்கப்படவில்லை" {என்றிருக்கிறது}.(19)
[6] கும்பகோணம் பதிப்பில், "இவ்வுலகில் ஆசையும், அப்படியே கர்மாவும் போகத்திற்குரிய பாபமென்று சொல்லப்படுகின்றன. அவ்விரண்டு பாபங்களிலிருந்தும் விடுபட்டவன் அந்தப் பெரிய பதவியை அடைகிறான்" என்றிருக்கிறது.
மலையின் உச்சியில் இருக்கும் ஒரு மனிதன், சமவெளியில் இருக்கும் மனிதர்களைக் கீழ் நோக்கிப் பார்ப்பதைப் போல, அறிவு மாளிகையின் உச்சத்தை அடைந்த ஒருவன், துன்பப்பட்ட சொல்லாத {துன்பப்படத்தகாத} பொருட்களுக்காக மக்கள் துன்புற்றுக் கொண்டிருப்பதைக் காண்கிறான்.(20) {கண்களுக்குப்} புலப்படும் பொருட்களில் தன் கண்களைச் செலுத்தி, அவற்றை உண்மையில் காணும் ஒருவனே கண்களையும், அறிவையும் கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்[7]. அறிவு என்றழைக்கப்படும் புலமானது, அறியப்படாத, புரிந்து கொள்ளமுடியாத பொருட்களைக் குறித்து அது கொடுக்கும் அறிவாலும், புரிதலாலுமே அவ்வாறு அழைக்கப்படுகிறது.(21) தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், பிரம்ம நிலையை அடைந்தவர்களுமான கல்விமான்களின் வார்த்தைகளை அறிந்த ஒருவன், உயர்ந்த பெருமைகளை அடைவதில் வெல்கிறான்.(22) ஒருவன், முடிவிலா வேற்றுமைகளைக் கொண்ட உயிரினங்கள் அனைத்தும் ஒன்றெனவும், ஒரே சாற்றின் பல்வேறு வெளிப்பாடுகளே அவை {அவ்வுயிரினங்கள்} எனவும் காணும்போது, அவன் பிரம்மத்தை அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான்[8].(23) இந்த உயர்ந்த பண்பட்ட நிலைய அடைபவர்களே, மிக உயர்ந்த, அருள்நிறைந்த கதியை அடைகிறார்களேயன்றி, அறிவற்றவர்களோ, குறுகிய ஆன்மா கொண்டவர்களோ, சிற்றறிவு கொண்டவர்களோ, தவங்களற்றவர்களோ அல்ல {அந்நிலையை அடைவதில்லை}. உண்மையில், அனைத்தும் (பண்பட்ட) அறிவிலேயே {புத்தியிலேயே} நிலைத்திருக்கின்றன" என்றான் {யுதிஷ்டிரன்}".(24)
[7] கும்பகோணம் பதிப்பில், "ஞானமென்னும் உப்பரிகையிலேறினவன், சோகப்படும் ஜனங்களைக் கண்டு, தான் சோகமடையான். மந்தபுத்தியுள்ளவன் பூமியிலிருந்தாலும் மலையின் மேலிருந்தாலும் (உண்மையைக்) காண மாட்டான். தெரிந்து கொள்ள வேண்டியதைத் தெரிந்து கொள்ளுகிறவன்தான் கண்ணுள்ளவனும் புத்தியுள்ளவனுமாவான்" என்றிருக்கிறது.[8] "இந்த உண்மை, மஹாபரதத்தின் பல்வேறு வாக்கியங்களில், மொழியின் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. முடிவிலா வேற்றுமைகளின் ஒன்றிணைப்பை பரமாத்மாவின் அடையாளமாகக் காண்பதே பிரம்மத்தை அடைதல் என்பதே இங்கு செய்தி. எனவே, பிரம்மத்தை அடைந்த ஒருவன், அண்டத்தில் இருந்து தன்னைத் தனியாகக் கருதுவதை நிறுத்திக் கொள்கிறான். பாவம் மற்றும் தீங்கின் {ஹிம்சையின்} வேரான தன்னலம் அவனிடம் இருந்து மறைகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |