நாங்கள் நண்பர்கள் ஐவராக 15ந்தேதி இரவே கோவையை அடைந்தோம். நண்பர் சார்லஸ் ஆர்ஆர்கிராண்டில் அறைகளை முன்பதிவு செய்திருந்தார். சிறிது இளைப்பாறியதும், நண்பர் ஜெயவேலன் நடைபயிற்சி செல்லப்போகிறேன் வருகிறீர்களா? என்று கேட்டார். நான் நடைபயிற்சி செய்வதில்லை இருப்பினும், அவருடன் பேசிக் கொண்டிருக்கலாமே என்று சென்றேன். மனிதர் நேராக ராஜஸ்தானி சங்கம் வரையே அழைத்துச் சென்றுவிட்டார். கடந்த தொலைவு 4 கிலோமீட்டர். அறைக்குத் திரும்பியதோடு சேர்த்து மொத்தம் 8 கிலோமீட்டர். காலில் பயங்கர வலி ஏற்பட்டிருந்தாலும், இவ்வளவு தூரம் நடந்துவிட்டேனா என்ற மலைப்பு அதை மறக்கடித்தது. அதையும், அனைத்தையும் மறக்கடித்தது அடுத்த நாள் விழாவில் கலந்து கொண்ட படைப்பாளிகளையும், வாசகர்களையும் கண்ட பெருமலைப்பு.
ஓர் எழுத்தாளரால் எவ்வளவு சிறப்பான வாசகர்களை உருவாக்க முடியும் என்பதற்கு வாழும் எடுத்துக் காட்டு திரு.ஜெயமோகன் அவர்கள். அவரது வாசகர்கள் ஒவ்வொருவரும் ஓர் எழுத்தாளருக்கான தரத்துடன் இருப்பதைக் காணும் எவராலும் வியப்படையாமல், மலைப்படையாமல் இருக்க முடியாது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பாக ஏற்பாடாகும் எந்த இலக்கிய நிகழ்ச்சியிலும் இதைக் காண முடியும் எனும்போது, வருடாவருடம் நடைபெறும் ஓர் இலக்கியத் திருவிழாவில் அஃது எந்த அளவுக்கு இருக்க முடியும்?
16ந்தேதி சற்றுத் தாமதமாகத் தான் விழா அரங்கை அடைந்தோம். அரங்கினுள் நுழையும்போதே தற்செயலாக வெளியே வந்த அரங்கா எங்களை வரவேற்றார். ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் எப்படியேனும், அரங்காவின் வரவேற்பு எனக்குக் கிடைத்து விடுவது நற்பேறே. இராஜகோபாலன், கே.ஜெ.அசோக்குமார், தூயன் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். இராஜகோபாலன் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். தேனொழுகும் பேச்சுநடை அவருடையது. இப்போது படைப்பாளிகள் இருவரையும் அறிமுகம் செய்து அவர்களைப் பேட்டியெடுத்து, பிறரையும் கேள்வி கேட்க வைக்கும் தொகுப்பாளராக இருந்தார்.
அடுத்து ஆர்.அபிலாஷ் அவர்கள் மேடையேறினார். காலை எழுந்ததும் என்ன எழுதப்போகிறோம் என்ற சிந்தனையில் கணினித் திரையின் முன்பு அமரும் தன் அனுபவத்தை அவர் சொன்னபோது, எழுத்துக்காகத் தங்கள் வாழ்வையே எப்படி அர்ப்பணித்திருக்கிறார்கள் இன்றைய எழுத்தாளர்கள் என்பதை உணர முடிந்தது. பலர் கேள்வி கேட்டனர். அதில் ஒருவர் அபிலாஷ் அவர்கள் சொன்ன சில வார்த்தைகளைச் சுட்டிக் காட்டி, "உங்கள் பதில்கள் எதிர்மறை சிந்தனைகளையும், பொறுப்பற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுவதாக இருக்கிறதே" என்று கேட்டார். "நாமாக இருந்தால் இந்தக் கேள்வியை எவ்வாறு எதிர்கொண்டிருப்போம்" என்று நினைத்த வேளையிலேயே எழுத்தாளர் அழகாக அந்தக் கேள்வியை எதிர்கொண்டார். தினந்தோறும் எழுத்துகளும், சொற்களும், வாக்கியங்களும் என மொழியுடனேயே தொடர்பிலிருப்பவர்களுக்கு இஃது எளிதானதே என்பது அடுத்தடுத்து பேசிய படைப்பாளிகளின் பேச்சுகளிலும் எதிரொலித்தது.
அபிலாஷ் அவர்கள் பேசி முடித்ததும் தேனீர் இடைவேளை. அரங்கிற்கு வந்ததிலிருந்தே திரு.ஜெயமோகன் அவர்கள் அமர்ந்திருந்த இடத்தையும் அடிக்கடி பார்த்துக் கொண்டேயிருந்ததால், அவர் எழுந்ததும் அவரிடம் சென்று என் வரவை அவரிடம் உறுதிசெய்து கொண்டேன். மகிழ்ச்சியாக வரவேற்று, என்னைச் சுவாமி பிரம்மானந்தா அவர்களிடமும், நவீன் அவர்களிடமும் அறிமுகம் செய்து வைத்தார். முழுமஹாபாரதம் குறித்தும் அவர்களிடம் சொன்னார். "நான் படிக்கிறேனே" என்று சுவாமி சொன்னார். அந்த வார்த்தைகள் மகிழ்ச்சியளித்தன.
தேனீர் இடைவேளைக்குப் பிறகு, "ஒளிர்நிழல்" சுரேஷ் மற்றும் விசால் ஆகியோர் மேடையேறினர். இளம் படைப்பாளிகளின் மேடை அனுபவத்தையும், ஒவ்வொரு கேள்வியை அவர்கள் எதிர்கொண்ட விதத்தையும் கண்டது மனத்திற்குக் களிப்பையளித்தது. சுரேஷிடம், ஒரு பெண்மணி, "உங்கள் படைப்புகளில் ஏன் இவ்வளவு நுணுக்கமான தகவல்களை அளிக்கிறீர்கள். உங்கள் படைப்பைப் படிக்கும்போதே அடுத்த வரியில் என்ன சொல்லப் போகிறாரோ என்ற நினைப்பே மனத்திற்கு அச்சத்தையளிக்கிறது. இதைத் தவிர்க்க முடியாதா?" என்று கேட்டார். ஜெயமோகன் பாசறையில் இருந்து வந்த ஒருவர் நுணுக்கமான தகவல்களை அளிக்கவில்லை என்றால்தானே அது பிழையாகும். அந்தக் கேள்வியே அந்தப் படைப்பாளியின் வெற்றியை உறுதி செய்தது. இரு படைப்பாளிகளும் அறிவார்த்தமுள்ள பதில்களைக் கொடுத்தனர்.
உணவு இடைவேளையின் போது, எழுத்தாளர் பிஏகே அவர்களைச் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. மனத்திற்குப் பிடித்த பெரும் ஆளுமைகளை மிக நெருக்கமாகக் காணும்போது சிலையாகச் சமைந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருப்பது என் வாடிக்கையாகிவிட்டது. ஒரு வார்த்தையும் வெளியே வருவதில்லை. உடனிருந்தவருடன் அவர் பேசிக் கொண்டிருப்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் அருகாமையை உணர முடிந்தது என் வாழ்வில் மகிழ்ச்சிமிக்கத் தருணங்களில் ஒன்று. நாஞ்சில் நாடன் அவர்களை எத்தனையோ முறை கண்டிருக்கிறேன். ஒருபோதும் அவரை நெருங்கத் துணிந்ததில்லை. இம்முறை மனத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவரருகே சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். பிஏகே, நாஞ்சில் நாடன் ஆகியோரின் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். ஒருவேளை அவர்களிடம் கொண்ட பெருமதிப்பே மனத்திற்குள் அச்சத்தை ஏற்படுத்துகிறதோ என்னவோ.
மேடையில் போகன் பேசத் தொடங்கினார். நண்பர்களின் முகநூல் பதிவுகளில் அவரது பின்னூட்டங்களைக் கண்டிருக்கும் எனக்கு அவருடைய பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது. வாழ்க்கையில் தான் காணும் அனுபங்களையே எழுத்துகளாக வடிப்பதாகச் சொன்னார். ஆவிகள் மற்றும் அவற்றின் மீது கொண்ட நம்பிக்கை குறித்த பேச்சு எழுந்தது. கேள்விகளும், பதில்களும் தொடர்ந்தன. அவருடைய பேட்டி சிந்திக்கத்தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது.
அடுத்ததாகக் கவிஞர் வெய்யில் மேடையேறினார். தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கவிதைகளை அவர் அணுகும் விதத்தை அறிய முடிந்தது. புதுக்கவிதைகளைப் பொறுத்தமட்டில் நான் எப்போதும் அவற்றில் பேராவல் கொண்டதில்லை. ஆனால் வெய்யில் தன் கவிதைகளின் ஓரிரு வரிகளைச் சொன்னபோது, அவற்றின் பொருளில் உள்ள கவித்துவத்தை உணர முடிந்தது. புதுக்கவிதைகளைக் குறித்துப் புதிய திறப்புகள் கிடைத்தன. மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர், முடிவில் தன்னை அறியாமல் "இவ்வளவு எதிரிகளுக்கு மத்தியில் நான் உரையாற்றியதில்லை" என்று சொல்லிவிட்டார். அரங்கை சிரிப்பொலியும், கரவொலியும் கவ்விக் கொண்டன. அவரிடம் கேட்பதற்கு என்னிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. இருப்பினும் அரங்கு நிறைந்த கூட்டத்தில் எழுந்து நிற்கவே துணிச்சல் தேவைப்படும்போது வார்த்தைகள் வெளிவந்துவிடுமா என்ன? நல்ல வேளை, நான் கேட்க நினைத்த அனைத்துக் கேள்விகளையும் ஒருவர் கேட்டார். கிட்டத்தட்ட "நான் மார்க்சியவாதி அல்ல" என்று படைப்பாளியே ஏற்கும் நிலையை அவர் ஏற்படுத்தினார்.
மாலை ஆறு மணியாகிவிட்டது. உடன் வந்திருந்த நண்பர்கள் மருதமலை சென்றிருந்தனர். அறைக்குத் திரும்பிவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர். நானும், நண்பர் ஜெயவேலன் அவர்களும் அறைக்குத் திரும்பலாம் என நினைத்தோம். பேருந்தில் செல்லலாமா? கேப் புக் செய்யலாமா? "வேண்டாம் நடந்தே சென்று விடலாமே. இன்று நடைபயிற்சியும் செய்ததுபோலாகுமே" என்றார் நண்பர் ஜெயவேலன். சரியென நடந்தே சென்றோம். வழியெங்கும் அந்த நாளின் நினைவுகளையே பேச்சில் அசைபோட்டுக் கொண்டு சென்றோம். "இப்படி ஒரு விழாவை வேறு எந்தப் படைப்பாளியாலும் செய்து காட்ட முடியுமா?", "ஜெயமோகன் எவ்வாறெல்லாமல் சிறந்த விளங்குகிறார்?" மேலும், "எஸ்.ராமகிருஷ்ணன்", "சாரு" என நண்பர் பேசிக் கொண்டே வந்தார். நாள் முழுவதும் இலக்கியங்களைக் குறித்தே கேட்டுக் கொண்டிருந்தது தியானம் போலல்ல; தவம் போலிருந்தது.
அடுத்த நாள் 17ந்தேதி காலை, நண்பர்கள் ஈஷா யோகமையம் செல்ல வேண்டும் என்றனர். மாலைதானே விருதுவழங்கும் விழா என்று அங்கே சென்றுவிட்டோம். தியான லிங்கத்தின் முன்பு அரைமணிநேரம் அமர்ந்திருந்தது மனத்தில் பேரமைதியைத் தந்தது. (அங்கு ஏற்பட்ட பரவச நிலையை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்). அன்று அமாவாசையாம். "ஆதியோகியின் அருள் கிடைத்தது பெரும் வரம்" என்று சொன்னார்கள் நண்பர்கள். கோவை வந்ததிலிருந்து மொபைல் டவர் எடுக்கவில்லை. ஆதியோகி சிலையின் முன்பு புகைப்படம் எடுத்து ஜியோ கனெக்ட் செய்து முகநூலில் பகிர்ந்தேன். தற்செயலாக ஜிமெயில் நோட்டிஃபிகேஷன் கண்டேன். "என்ன ஆயிற்று? ஏன் உங்களைக் காணவில்லை" என்று ஜெயமோகன் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். "பெரும் பிழை செய்துவிட்டோமே?" என்று மனம் கூசியது. "ஈஷாவில் இருக்கிறேன். வந்துவிடுவேன்" என்று அவருக்குப் பதில் அனுப்பினேன். தன் விழாவிற்காக வெளியூரிலிருந்து வந்திருந்த ஒருவனைக் காணவில்லை. அவனுக்கு என்ன ஆயிற்றோ? என்ற அவரது அக்கறையை, ஒரு மூத்த சகோதரனின் பாசமாக உணர்ந்தேன்.
மாலை 6.30க்கு விழா அரங்கை அடைந்தேன். எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தார். விரைந்து சென்று பின் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். அடுத்து நவீன் பேசினார். மலேசியாவில் தமிழ் மற்றும் தமிழிலக்கியம் ஆகியவற்றைக் குறித்துப் பேசினார். விருது பெறும் எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களைக் குறித்தும் பெருமைப்படும் விதத்தில் பேசினார். இவர் போன்றவர்கள் இளமையிலேயே அடைந்திருக்கும் ஆளுமைத்திறனைக் கண்டு மனம் ஏங்கியதைத் தவிர்க்க முடியவில்லை.
அடுத்து மேகாலய எழுத்தாளர் ஜெனிஸ் பரியத் தன் இனிமையான குரலில் பேசத் தொடங்கினர். பேச்சிலும் இனிமையே தொடர்ந்தது. மொழிபெயர்ப்புகள் குறித்தும், மொழிபெயர்ப்புகளின் மூலம் மொழியடையும் உச்சத்தையும் குறித்துப் பேசினார். அவரது பேச்சு அருமையாக இருந்தது. அடுத்து இராஜகோபாலன் அவர்கள் பேசினார். சீ.முத்துசாமி அவர்களின் படைப்புகளான, "மண்புழுக்கள்" நாவலையும், அவரது சிறுகதைகளையும் முன்வைத்துப் பேசினார். அவரது அருமையான பேச்சைக் குறித்து நான் உணர்ந்ததைத்தான் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் மேடையில் அறிவித்தார் என நினைத்தேன்.
ஜெயமோகன் பேச எழுந்ததும், பெரும் கரவொலி அரங்கை நிறைத்தது. அவருடைய பேச்சைக் கேட்பதற்காகவே அரங்கிலிருந்தோர் அத்தனை பேரும் காத்திருந்ததாகப் பட்டது. பெரும் திரைப்பட நட்சத்திரம் எழுந்ததும், ரசிகர்களுக்கிடையே ஏற்படும் ஆர்ப்பரிப்பை ஒத்திருந்தது அந்த அரங்கம் நிறைந்த கரவொலி. பிஜி தீவைச் சார்ந்த தமிழர்களின் நிலை குறித்த பாரதியின் வரிகளைச் சுட்டிக் காட்டிப் பேசத் தொடங்கினார். புலம் பெயர்ந்த தமிழர்களின் தமிழ் மறந்த நிலை; தமிழ் அங்கே எச்சமாக மீந்திருப்பது; போற்றி வரிசையிலான மேற்குத் தீவுகளின் பாடல்கள்; கனடா மண்ணின் இயல் விருதை ஏற்றபோது அடைந்த அனுபவங்கள்; தென்னாப்பிரிக்காவில் தமிழும், தமிழர்களும்; டீனா படையாச்சி என்ற ஒரு தமிழர், தன்னைத் தமிழர் என்பதைக் கூட உணராமல் "தன் மூதாதையர்கள் இந்தியாவில் ஏதோ ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள்" என்று குறிப்பிட்டதைச் சொல்லி, புலம் பெயர் தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழப்பதைக் குறிப்பிட்டு, நவீனத் தமிழ் இலக்கியம் எதை நோக்கி நகரவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்து. புலம்பெயர்ந்த தமிழர்களிடையே சீ.முத்துசாமி அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைச் சொல்லி, விருது எதற்காகத் தரப்பட்டது என்பதை ஆழப் பதிந்தார் ஜெயமோகன்.
சீ.முத்துசாமி அவர்களின் ஏற்புரை, புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலையை வெளிப்படையாக விமர்சித்தது. தமிழகத்தில் தமிழ் இலக்கியத்திற்கு இருக்கும் வரவேற்பை எண்ணி அவர் வியந்தது முரண்நகையைத் தந்தது. விழாவின் பிரம்மாண்டம் அவரை அவ்வாறு உணரச் செய்ததில் பிழையேதும் இல்லை. தமிழுலகின் இந்தப் பெருமிதத்திற்கு முற்றான காரணம் ஜெயமோகன் அவர்களே.
விழா முடிந்ததும், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் மற்றும் ஏனைய வாசகர்களால் சூழப்பட்டார் ஜெயமோகன். அனைவரின் முகத்தில் அப்படியொரு முதிர்ச்சியான மகிழ்ச்சிப் புன்னகை. இரண்டாம் நாள் மாலை வரை நடந்த நிகழ்வுகளை நான் தவறியது மாபெரும் பிழை என்றாலும், வேறொரு பிரம்மாண்டம் அன்று காலை முதல் மாலை வரை என் மனத்தை நிறைத்திருந்தது. இதுபோன்ற விழாக்களை என் வாழ்நாளில் இனி எப்போது காணப் போகிறேன்? அடுத்த விஷ்ணுபுரம் விழாவாக அஃது இருக்கும் என நம்புகிறேன்.
இன்று வீட்டை அடைந்ததும், புகைப்படங்களைப் பார்த்து, "இவர்தானே ஜெயமோகன் அங்கிள்" என்று என் மகன் கேட்டான். என் வீட்டில் மற்றொரு வாசகன் உருவாகி வருகிறான். பேருணர்வை உவந்தளித்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றியும், வணக்கமும்.
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்