Krishna's boon to Bhishma! | Shanti-Parva-Section-52 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 52)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனை மீண்டும் துதித்து, அவன் கேட்டதைச் செய்ய இயலாத தமது பலவீனத்தைச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மரின் களைப்பகற்ற அவருக்கு வரமளித்த கிருஷ்ணன்; சூரியன் மறைந்ததும் பீஷ்மரை விட்டகன்று தங்கள் மாளிகைகளுக்கு வந்த பாண்டவர்களும் கிருஷ்ணனும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அறம் மற்றும் பொருள் நிறைந்த கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மைந்தர் பீஷ்மர் பின்வரும் வார்த்தைகளில் அவனுக்குப் பதிலளித்தார்.(1)
பீஷ்மர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! உலகங்கள் அனைத்தின் தலைவா, ஓ! வலிய கரத்தோனே, ஓ! சிவா, ஓ! நாராயணா, ஓ! மங்கா மகிமை கொண்டோனே, நீ பேசும் வார்த்தைகளைக் கேட்டு நான் இன்பத்தில் நிறைந்திருக்கிறேன்.(2) ஓ! பேச்சின் தலைவனே, உன் முன்னிலையில், அதிலும் குறிப்பாகச் சொல்லத்தக்க அனைத்தும் உன் பேச்சிலேயே அடங்கியிருக்கும்போது, நான் என்ன {போதனைகளை} வார்த்தைகளைச் சொல்ல முடியும்?[1](3) ஓ! தேவா, இம்மையிலும், மறுமையிலும் என்ன செய்ய வேண்டுமோ, என்ன செய்யப்படுகிறதோ அஃது உன் நுண்ணறிவின் வடிவில் இருந்தே எழுகிறது.(4) தேவர்களின் தலைவனுக்கு முன்னிலையில் சொர்க்கம் குறித்து எந்த மனிதன் பேசத்தகுந்தவனோ, அவனே உன் எதிரில் அறநெறி, இன்பம், பொருள் மற்றும் முக்தி குறித்துப் பேசத் தகுந்தவனாவான்.(5) ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, என் மனம் கணை தைத்த காயங்களால் உண்டான வலியால் மிகவும் கலக்கமடைந்திருக்கிறது. என் உறுப்புகள் பலவீனமாக இருக்கின்றன. என் புத்தி தெளிவாக இல்லை.(6)
[1] "வேதங்களில் பரம்பொருளின் பேச்சு அடங்கியிருக்கிறது. அறநெறி குறித்த அனைத்தும் அவற்றில் இருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நஞ்சுக்கோ, நெருப்புக்கோ ஒப்பான இந்தக் கணைகளால் பீடிக்கப்பட்டிருக்கும் எனக்கு எதையும் சொல்லும் சக்தியில்லை.(7) என் பலம் என்னைக் கைவிடுகிறது. உன் உயிர்மூச்சு என்னைவிட்டகல விரைகிறது. என் உடலின் முக்கிய அங்கங்கள் எரிகின்றன. என் புத்தி மயக்கமடைகிறது.(8) பலவீனத்தால் என் பேச்சுத் தெளிவற்றதாக இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் நான் எவ்வாறு பேசத் துணிவேன்?(9) ஓ! வலிய கரத்தோனே, நான் எதையும் சொல்ல மாட்டேன். (என் விருப்பமின்மைக்காக) என்னை மன்னிப்பாயாக. பேச்சின் தலைவனே (பிருஹஸ்பதியே) உன் எதிரில் பேசத் தயங்குவான்.(10) என்னால் இப்போது பூமியிலிருந்து திசைப்புள்ளிகளையோ, வானத்தையோ வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஓ! மதுசூதனா, உன் சக்தியால் மட்டுமே நான் உயிரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.(11) எனவே, விதிகள் அனைத்தையும் விதித்தவன் நீயே என்பதால் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் நன்மைக்காக நீயே பேசுவாயாக.(12) ஓ! கிருஷ்ணா, அண்டத்தின் அழிவில்லா படைப்பாளனான நீ இருக்கும்போது, ஆசானின் முன்பு பேசும் சீடனைப் போல எவனால் பேச முடியும்" என்று கேட்டார் {பீஷ்மர்}".(13)
வாசுதேவன் {கிருஷ்ணன் பீஷ்மரிடம்}, "குரு குலத்தில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவரும், பெரும் ஆன்மா கொண்டவரும், பெரும் பொறுமையும், அனைத்தைக் குறித்த அறிவும் கொண்டவருமான உம்மால் உமக்குத் தகுந்த வார்த்தைகளே பேசப்பட்டன.(14) ஓ! பீஷ்மரே, கணைக் காயங்களால் உண்டான வலி குறித்து நீர் சொன்னீர். ஓ! பலமிக்கவரே, கருணையால் நான் உமக்கு அளிக்கும் இந்த வரத்தைப் பெற்றுக் கொள்வீராக.(15) ஓ! கங்கையின் மைந்தரே, ஓ! மங்கா மகிமை கொண்டவரே, சோர்வு, மயக்கம், எரிச்சல், வலி, பசி, தாகம் ஆகியன உமக்கு உண்டாகாதிருக்கட்டும்.(16) ஓ! பாவமற்றவரே, உள்ளுணர்வுகளும், நினைவும் தெளிவு அடையட்டும்[2]. உமது புத்தி உம்மைக் கைவிடாதிருக்கட்டும்.(17) ஓ! பீஷ்மரே, மேகங்களில் இருந்து வெளிப்படும் நிலவைப் போல, உமது மனம் ஆசை {ரஜோகுணம்}, இருள் {தமோகுணம்} ஆகிய பண்புகளில் இருந்து விடுபட்டு, எப்போதும் நற்பண்புடன் {சத்வகுணத்துடன்} இருக்கட்டும்.(18) கடமை, அறநெறி, பொருள் என நீர் நினைப்பனவற்றுக்குத் தொடர்புடைய அனைத்திலும் உமது புத்தி ஊடுருவட்டும்.(19) ஓ! மன்னர்களில் புலியே, ஓ! அளவிலா ஆற்றல் கொண்டவரே, தெய்வீகப் பார்வையை அடைந்து, படைப்பின் நால்வகைப் பொருட்களைக் காண்பதில் வெல்வீராக.(20) ஓ! பீஷ்மரே அறிவுக் கண் கொண்ட நீர், தெளிந்த நீரில் உள்ள மீன்களைப் போல, நீர் நினைக்க முயலும் படைப்பின் பொருட்கள் அனைத்தையும் காண்பீராக" என்றான்{கிருஷ்ணன்}".(21)
[2] "அதாவது, ‘நீர் அறிந்த அனைத்தும் உள்ளொளியின் மூலம் உமக்குத் தோன்றும்’ என்பதே சொல்லப்படும் கருத்து" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அப்போது வியாசருடன் கூடிய பெரும் முனிவர்கள், ரிக், யஜுர், சாமங்களின் பாடல்களைக் கொண்டு கிருஷ்ணனைத் துதித்தனர்.(22) கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} மற்றும் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} ஆகியோரோடு அந்த விருஷ்ணி குலத்தோன் {கிருஷ்ணன்} இருந்த இடத்தில் அனைத்து பருவகாலத்தையும் சேர்ந்த மலர்களின் தெய்வீகமாரி பொழிந்தது.(23) ஆகாயத்தில் அனைத்துவகைத் தெய்வீக இசைக்கருவிகளும் முழங்கின, அப்சரஸ் இனங்கள் பாடத்தொடங்கின. எந்தத் தீமையோ, தீய வகைச் சகுனமோ அங்கே காணப்படவில்லை.(24) அனைத்து வகை நறுமணத்தையும் தாங்கியபடி மங்கலமான, இனிமையான தூய தென்றல் அங்கே வீசத்தொடங்கியது. திசைப்புள்ளிகள் அனைத்தும் தெளிவையும், அமைதியையும் அடைந்தன. விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் அமைதியாகத் திரியத் தொடங்கின.(25)
விரைவில், பெருங்காட்டின் விளிம்பில் உள்ள நெருப்பைப் போல ஆயிரங்கதிர்களைக் கொண்ட தெய்வீக சூரியன் மேற்கில் இறங்குவது காணப்பட்டது.(26) அப்போது பெரும் முனிவர்கள் எழுந்து நின்று, ஜனார்த்தனன், பீஷ்மர் மற்றும் மன்னன் யுதிஷ்டிரனை வணங்கினர்.(27) அதன் பேரில், பாண்டுவின் மகன்கள், சாத்யகி, சஞ்சயன், சரத்வானின் மகன் கிருபர் ஆகியோருடன் கூடிய கேசவன், பதிலுக்கு மரியாதையுடன் அத்துறவிகளை வணங்கினான்.(28) அறப்பயிற்சியில் அர்ப்பணிப்புமிக்க அந்தத் தவசியர், கேசவனாலும், பிறராலும் இவ்வாறு வணங்கப்பட்டு, "நாளை திரும்புகிறோம்" என்று சொல்லிவிட்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.(29) அதன்பிறகு, பீஷ்மரை வணங்கி, அவரை வலம் வந்த கேசவனும், பாண்டவர்களும், தங்கள் அழகிய தேர்களில் ஏறினர்.(30)
தங்கக் கூபரங்களால் அலங்கரிக்கப்பட்ட வேறு பல தேர்கள், மலைகளைப் போலத் தெரிந்த மதங்கொண்ட யானைகள், கருடர்களைப் போன்ற வேகமான குதிரைகள், விற்கள் மற்றும் ஆயுதங்கள் தரித்த காலாட்படை வீரர்கள் ஆகியோருடன் அந்த வீரர்கள் சென்றனர்.(31) பெரும் வேகத்தில் நகர்ந்த அந்தப் படை, இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, ஒன்று அந்த இளவரசர்களின் முன்பும், மற்றொன்று அவர்களுக்குப் பின்பும் சென்றன. ஓரிடத்தில் குறுக்கே நிற்கும் ரிக்ஷவான் மலைகளால் பிரிக்கப்பட்ட பெரும் ஆறான நர்மதையின் இரண்டு ஓடைகளைக்கு ஒப்பாக அக்காட்சி இருந்தது.(32) அந்தப் பெரும்படையைத் திளைக்கச் செய்யும் வகையில், சூரியனின் வெப்பத்தால் சாறு உறிஞ்சிப்பட்ட மூலிகைகளைத் தன் சக்தியால் ஈரப்பதமடையச் செய்தபடியே அவர்களுக்கு முன்பு சந்திரமாஸ் {சந்திரன்} எழுந்தான்.(33) அப்போது, அந்த யதுகுலக் காளையும் {கிருஷ்ணனும்}, பாண்டுவின் மகன்களும், இந்திரனின் நகரத்திற்கு {அமராவதிக்கு} ஒப்பான காந்தியுடன் கூடிய (குரு) நகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்து, தங்கள் குகைகளை நாடும் களைத்த சிங்கங்களைப் போலத் தங்கள் தங்கள் மாளிகைகளுக்குச் சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(34)
சாந்திபர்வம் பகுதி – 52ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |