Krishna awoke! | Shanti-Parva-Section-53 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 53)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் திருப்பள்ளியெழுச்சி; அதிகாலையில் விழித்தெழுந்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனிடம் சாத்யகியை அனுப்பிய கிருஷ்ணன்; கிருஷ்ணன் பீஷ்மரிடம் செல்லக் காத்திருப்பதாக யுதிஷ்டிரனிடம் சொன்ன சாத்யகி; பாதுகாவலர்கள் வேண்டாம் என அர்ஜுனனிடம் மறுத்த யுதிஷ்டிரன்; பீஷ்மரை அடைந்து முனிவர்களை வணங்கிய கிருஷ்ணன், சாத்யகி மற்றும் பாண்டவர்கள் ஆகியோர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மதுசூதனன் {கிருஷ்ணன்} தன் படுக்கைக்குச் சென்று மகிழ்ச்சியாக உறங்கினான்.(1) பொழுது விடிய அரை யாமம் {ஜாமம்} இருக்கும்போது, அவன் ஆழ்ந்த தியானத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். அவன் {கிருஷ்ணன்}, தன் புலன்கள் அனைத்தையும் நிலைநிறுத்தி, அழிவற்ற பிரம்மத்தைத் தியானித்தான்.(2) நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களும், இனிய குரலைக் கொண்டவர்களும், பாடல்கள் மற்றும் புராணங்களை அறிந்தவர்களுமான ஒரு குழுவினர், உயிரினங்கள் அனைத்தின் தலைவனும், அண்டத்தின் படைப்பாளனுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} புகழைச் சொல்லத் தொடங்கினர்.(3) வேறு சிலர் கைகளைத் தட்டிக் கொண்டு இனிய பாடல்களைப் பாடத் தொடங்கினர். வாய்ப்பாட்டுக்காரர்களும் பாடத் தொடங்கினர். சங்குகளும், பேரிகைகளும் ஆயிரக்கணக்கில் முழக்கி இசைக்கப்பட்டன.(4) வீணைகள், பணவங்கள், மூங்கில் புல்லாங்குழல்கள் ஆகியவற்றின் இனிய ஒலியும் கேட்கப்பட்டது. இவற்றின் விளைவால் கிருஷ்ணனின் அகன்ற அறையானது, இசையால் சிரிப்பது போலத் தெரிந்தது.(5)
மன்னன் யுதிஷ்டிரனின் அரண்மனையிலும், மங்கல வாழ்த்துகளைச் சொல்லும் இனிய குரல்களும், பாடல்கள், மற்றும் இசைக்கருவிகளின் ஒலிகளும் கேட்கப்பட்டன.(6) பிறகு தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} தன் தூய்மைச் சடங்குகளைச் செய்தான். மங்கா மகிமை கொண்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் தன் கரங்களைக் கூப்பி அமைதியாகத் தன் இரகசிய மந்திரங்களைச் சொல்லி, ஒரு நெருப்பை மூட்டி, அதில் தெளிந்த நெய்க்காணிக்கைகளை ஊற்றினான்.(7) நான்கு வேதங்களையும் முழுமையாக அறிந்த ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு ஓராயிரம் பசுக்களைக் கொடையளித்து, அவர்களைத் தன்னை வாழ்த்தச் செய்தான்.(8) அடுத்தாகக் கிருஷ்ணன், பல்வேறு வகை மங்கலப் பொருட்களைத் தீண்டி, ஒரு தெளிவான கண்ணாடியில் தன்னையே கண்ட பிறகு, சாத்யகியிடம்,(9) "ஓ! சிநியின் வழித்தோன்றலே, யுதிஷ்டிரரின் வசிப்பிடத்திற்குச் சென்று, பெருஞ்சக்தி கொண்ட அம்மன்னர் பீஷ்மரைச் சந்திப்பதற்கு உடுத்திவிட்டாரா என்பதை உறுதி செய்வாயாக" என்றான்.(10)
கிருஷ்ணனின் இந்த வார்த்தைகளின் பேரில் பாண்டுவின் அரச மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} விரைவாகச் சென்ற சாத்யகி, அவனிடம்,(11) "ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ஜனார்த்தனர் {கிருஷ்ணர்}, கங்கையின் மைந்தரைக் {பீஷ்மரைக்} காணச் செல்கிறார் என்பதால், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த வாசுதேவருடைய முதன்மையான தேர் ஆயத்தமாக இருக்கிறது. (12) ஓ !பெரும் காந்தி கொண்ட அறமன்னா {தர்மராஜா}, அவர் உமக்காகக் காத்திருக்கிறார். அடுத்ததாக என்ன செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்வதே உமக்குத் தகும்" என்றான். இவ்வாறு சொல்லப்பட்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன் பின்வருமாறு பதிலளித்தான்.(13)
யுதிஷ்டிரன், "ஓ! ஒப்பற்ற காந்தி கொண்ட பல்குனா {அர்ஜுனா}, என் முதன்மையான தேர்கள் ஆயத்தமாகட்டும். நாம் (இன்று) படைவீரர்களின் துணையில்லாமல் தனியாகவே செல்ல வேண்டும்.(14) அறவோரில் முதன்மையான பீஷ்மர் எரிச்சலடையக்கூடாது. எனவே, ஓ! தனஞ்சயா, இன்று பாதுகாவலர்கள் வர வேண்டாம்.(15) இந்த நாள் முதல் பெரும் புதிர்களாலான பொருள்களைக் குறித்துக் கங்கையின் மைந்தர் பேசப்போகிறார். எனவே, ஓ! குந்தியின் மகனே, வேறு கூட்டம் (பீஷ்மரின் முன்னிலையில்) அங்கிருப்பதை நான் விரும்பவில்லை" என்றான்".(16)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "மனிதர்களில் முதன்மையானவனும், குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, மன்னனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, (வெளியே சென்று, திரும்பி வந்து) சிறந்த தேர்களில் சேணம் பூட்டப்பட்டத்தைத் தெரிவித்தான்.(17) ஐம்பூதங்களுக்கு ஒப்பான மன்னன் யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுல சகாதேவன்}, பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகிய ஐவரும், கிருஷ்ணனின் வசிப்பிடத்தை நோக்கிச் சென்றனர்.(18) உயர் ஆன்ம பாண்டவர்கள் வந்து கொண்டிருந்தபோது, சிநியின் பேரனுடனும் {சாத்யகியுடனும்}, பெரும் நுண்ணறிவுடனும் கூடிய கிருஷ்ணன் தன் தேரில் ஏறினான்.(19) தங்கள் தேர்களில் இருந்து ஒருவரையொருவர் வணங்கி, இரவு மகிழ்ச்சியாகக் கடந்ததா என்பதை விசாரித்துக் கொண்ட அந்த மனிதர்களில் காளையர், மேகங்களின் முழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்ட முதன்மையான தேர்களில் நிற்காமல் சென்றனர்.(20)
கிருஷ்ணனின் குதிரைகளான வலாஹம், மேகபுஷ்பம், சைப்யம் மற்றும் சுக்ரீவம் ஆகியன தாருகனால் தூண்டப்பட்டன.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவனால் தூண்டப்பட்ட விலங்குகள், தங்கள் குளம்புகளால் பூமியைப் பறித்துக் கொண்டு சென்றன.(22) பெரும் பலமும், பெரும் வேகமும் கொண்டு, வானத்தையே விழுங்கிவிடுவன போல அவை வேகமாகச் சென்றன. குருவின் புனிதக் களத்தின் ஊடாகச் சென்ற அந்த இளவரசர்கள்,(23) தேவர்களுக்கு மத்தியில் இருக்கும் பிரம்மனைப் போலப் பலமிக்கப் பீஷ்மர், பெருமுனிவர்கள் சூழ தமது கணைப்படுக்கையில் கிடக்கும் இடத்திற்குச் சென்றனர்.(24)
பிறகு, தங்கள் வாகனங்களில் இருந்து இறங்கிய கோவிந்தன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரன், பீமன், காண்டீவதாரி {அர்ஜுனன்}, இரட்டையர்கள் {நகுல சகாதேவன்}, சாத்யகி ஆகியோர், தங்கள் வலக் கரங்களை உயர்த்தி முனிவர்களை வணங்கினர்[1].(25) அவர்களால் சூழப்பட்டு, நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருக்கும் நிலவைப் போல இருந்த மன்னன் யுதிஷ்டிரன், பிரம்மனை நோக்கிச் செல்லும் வாசவனைப் {இந்திரனைப்} போலக் கங்கையின் மைந்தரை நோக்கிச் சென்றான்.(26) அச்சத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, ஆகாயத்தில் இருந்து விழுந்திருக்கும் சூரியனைப் போலக் கணைப் படுக்கையில் கிடக்கும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரரின் மேல் மருட்சியுடன் தன் கண்களைச் செலுத்தினான்" {என்றார் வைசம்பாயனர்}.(27)
[1] வலக்கையை உயர்த்தி வணங்குவது மிகப் பிற்காலத்திய வழக்கம். ஒருவேளை இப்பழக்கம் ஆதியிலேயே இருந்ததோ என்னவோ. கும்பகோணம் பதிப்பிலும், "அங்கு சென்ற ஸ்ரீகிருஷ்ணனும், ஸாத்யகியும், யுதிஷ்டிரரும், பீமசேனனும், அர்ஜுனனும், இரட்டையரும் ரதத்திலிருந்து இறங்கித் தமது வலக்கரங்களைத் தூக்கி அங்குள்ள ரிஷிகளைப் பூஜித்தார்கள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பிலும், "அவர்கள் தங்கள் வலக்கரங்களை உயர்த்தி முனிவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 53ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |