Kingly duties in orders and modes of life! | Shanti-Parva-Section-66 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 66)
பதிவின் சுருக்கம் : வாழ்வுமுறைகள் அனைத்தின் கடமைகளையும் மீண்டும் விரிவாகச் சொல்லும்படி பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பிற கடமைகள் அனைத்தும் அரச கடமைகளிலேயே அடங்கியிருக்கின்றன என்ற பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மனித வாழ்க்கையின் வாழ்வுமுறைகளை {ஆசிரமங்களைக்} குறித்து நீர் என்னிடம் சொன்னீர். நான் அவற்றைக் குறித்து அதிகம் அறிய விரும்புகிறேன். அவற்றை விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, இவ்வுலகில் நல்லோரால் பயிலப்படும் கடமைகள் அனைத்தையும் நான் அறிந்த அளவுக்கு நீயும் அறிவாய்.(2) ஓ! அறவோரில் முதன்மையானவனே, வேறு வாழ்வுமுறைகளைப் பின்பற்றும் வேறு சிலரால் பயிலப்படும் கடமைகளின் விளைவாக (ஒரு மன்னன்) அடையும் தகுதி குறித்துக் கேட்பாயாக.(3) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகளைப் பயிலும் மனிதர்களுக்குரிய தகுதிகள் அனைத்தும் அறம்சார்ந்த மன்னர்களைப் பற்றுகின்றன.(4)
ஓ! யுதிஷ்டிரா, காமம் மற்றும் வெறுப்பின் ஆளுகைக்குட்படாமல், தண்டனை அறிவியலின் துணை கொண்டு ஆட்சி செய்து, அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதும் ஒரு மன்னன், பைக்ஷிய வாழ்வுமுறையின் இலக்கை (பிரம்மத்தை) அடைகிறான்.(5) அறிவுடையவனும், சரியான சந்தர்ப்பங்களில் தகுந்தோருக்குக் கொடை அளிப்பவனும், எவ்வாறு உதவுவது, எவ்வாறு தண்டிப்பது என்பதை அறிந்தவனும், சாத்திர விதிகளின் படி அனைத்திலும் நடந்து கொள்பவனும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(6) ஓ! குந்தியின் மகனே, வழிபாட்டுக்குத் தகுந்தோருக்கு உரியதைக் கொடுத்து எப்போதும் வழிபடுபவன் பைக்ஷிய வாழ்வு முறையின் இலக்கை முழுமையாக அடைகிறான்.(7) ஓ! யுதிஷ்டிரா, தன்னாலான சக்தியுடன் தன் சொந்தங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் துயரில் இருந்து மீட்கும் மன்னன், வானப்ரஸ்த வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(8) ஓ! குந்தியின் மகனே, மனிதர்களில் முதன்மையானோரையும், யதிகளில் முதன்மையானோரையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கௌரவிக்கும் மன்னன், வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(9) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, தினமும் பித்ருக்களுக்குக் காணிக்கையளிப்பவனும், மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் காணிக்கைகளை அளிப்பவனுமான மன்னன், அதே {வானப்ரஸ்த} வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(10,11)
ஓ! மனிதர்களில் புலியே, நல்லோரைக் காக்க வேறு நாடுகளைக் கலங்கடிக்கும் மன்னன், அதே {வானப்ரஸ்த} வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(12) அனைத்துயிரினங்களின் பாதுகாப்பின் விளைவாகவும், தன் நாட்டை முறையாகப் பாதுகாப்பதன் விளவாகவும், ஒரு மன்னன், காக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையின் அளவுக்குப் பல வேள்விகளின் தகுதிகளை அடைந்து, அதன்படியே சந்நியாச வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(13) தினமும் வேதங்களைக் கற்பது, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, ஆசான்களை வழிபடுவது, தன் குருவுக்குத் தொண்டாற்றுவது ஆகியன பிரம்மச்சரியத்தின் இலக்கை அடைய வழிவகுக்கும்.(14) ஓ! மனிதர்களில் புலியே, தினமும் தன் மந்திரங்களை அமைதியாக ஓதுபவனும், விதிப்படி தேவர்களை எப்போதும் வழிபடுபவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் நோக்கத்தை அடைகிறான்.(15)
தன் நாட்டைப் பாதுகாக்கத் தீர்மானித்துப் போரில் ஈடுபடவோ, மரணமடையவோ நேரும் மன்னன் வானப்ரஸ்த வாழ்வு முறையின் இலக்கை அடைகிறான்.(16) ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களிடமும் நேர்மை மற்றும் உண்மையுடன் எப்போதும் நடந்து கொள்பவனான மன்னன் வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(17) வானப்ரஸ்த வாழ்வுமுறை வாழ்பவர்களுக்கும், மூன்று வேதங்களை அறிந்த பிராமணர்களுக்கும் கொடையளிக்கும் மன்னன் வானப்ரஸ்த வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(18) ஓ! பாரதா, அனைத்துயிரினங்களிடமும் கருணையைக் காட்டி, கொடூரத்தை முற்றிலும் தவிர்க்கும் மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் இலக்குகளையும் அடைகிறான்.(19) ஓ! யுதிஷ்டிரா, ஓ! குந்தியின் மகனே, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இளையவர்களுக்கும், முதியவர்களுக்கும் கருணை காட்டும் மன்னன் அனைத்து வாழ்வுமுறைகளின் இலக்குகளையும் அடைகிறான்.(20)
ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, தன் பாதுகாப்பை நாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணத்தை வழங்கும் மன்னன் கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(21) அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாப்பவனும், தகுந்தோரைக் கௌரவிப்பவனுமான மன்னன், கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைகிறான்.(22) மூத்த மற்றும் இளைய சகோதரர்களின் மனைவிமார், அவர்களுடைய பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு உதவிகளை அளிப்பதும், தண்டனைகளால் பீடிப்பதும், ஒரு மன்னனின் இல்லறக் கடமைகளாகும், இவையே அவனது சிறந்த தவமுமாகும்[1].(23) ஓ! மனிதர்களில் புலியே, நல்லோரையும், வழிபாட்டுக்குத் தகுந்தோரையும் கௌரவிப்பவனும், (தவத்தின் மூலம்) தன்னறிவு அடைந்தோரைப் பாதுகாப்பவனுமான மன்னன் கார்ஹஸ்த்ய வாழ்வுமுறையின் இலக்கை அடைவான்.(24) ஓ! பாரதா, வானப்ரஸ்த வாழ்வுமுறையில் வாழும் மனிதர்களையும், பிற வாழ்வு முறைகளில் வாழ்வோரையும் தன் இல்லத்துக்கு அழைத்து, அவர்களுக்கு உணவளிப்பது ஒரு மன்னனின் இல்லறக் கடமையாகும்.(25)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஏ! பார்த்த! இளையவளும், மூத்தவளுமான பத்னிகளையும், உடன்பிறந்தாரையும், பிள்ளைகளையும் பேரர்களையும் சிக்ஷிப்பதும், ரக்ஷிப்பதும் கிருகஸ்ததர்மங்களில் உத்தம தர்மமாகும்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "மூத்த மற்றும் இளைய மனைவிகள், சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு ஊக்கமளிக்கவும், தடுக்கவும் செய்தால் அவன் கார்ஹஸ்தய ஆசிரமத்தினருக்கானவற்றைப் போன்ற தவங்களை அடைகிறான்" என்றிருக்கிறது. எனவே, கங்குலியில் உள்ளதைப் போல "சகோதரர்களின் மனைவியர்" என்று இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை.
படைப்பாளனால் விதிக்கப்பட்ட கடமைகளை முறையாகப் பின்பற்றும் மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் அருள் தகுதிகளை அடைகிறான்.(26) ஓ! குந்தியின் மகனே, ஓ! யுதிஷ்டிரா, எந்த நற்குணமும் அழியாமல் இருக்கும் மன்னன் வானப்ரஸ்தம் மற்றும் வேறு வாழ்வுமுறைகள் அனைத்தையும் நோற்பவனாகக் கல்விமான்களால் சொல்லப்படுகிறான்.(27) குலம், வயது, பதவி, நிலை ஆகியவற்றில் தகுந்தவர்களுக்குக் கௌரவமளிக்கும் மன்னன் அனைத்து வாழ்வு முறைகளிலும் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்[2].(28) ஓ! குந்தியின் மகனே, ஓ! மனிதர்களில் புலியே, தன் நாட்டின் கடமைகளையும், தன் குடும்பத்தின் கடமைகளையும் செய்யும் ஒரு மன்னன், அனைத்து வாழ்வுமுறைகளின் தகுதியையும் அடைகிறான்.(29) ஓ! மன்னா, முறையான காலங்களில் நல்லோருக்கு வெகுமதிகளையோ, மதிப்புமிக்கப் பரிசுகளையோ அளிக்கும் மன்னன், அனைத்து வகை வாழ்வுமுறைகளின் தகுதிகளையும் அடைகிறான்.(30)
[2] "அனைத்து வாழ்வுமுறைகளின் தகுதிகளையும் {புண்ணியங்களையும்} ஈட்டுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஆபத்தையும், அச்சத்தையும் அடைந்த போதிலும், மனிதர்கள் அனைவரின் கடமைகளில் {தர்மத்திலும்} கண் கொண்ட மன்னன், அனைத்து வகை வாழ்வுமுறைகளின் {ஆசிரமங்களின்} தகுதியையும் ஈட்டுகிறான்.(31) ஒரு மன்னன், தன் ஆட்சிப்பகுதிகளில் உள்ள நல்லோரைப் பாதுகாப்பதால் ஈட்டப்படும் தகுதிகளின் பங்கை அடைகிறான்.(32) மறுபுறம், ஓ! மனிதர்களில் புலியே, தங்கள் ஆட்சிப்பகுதிகளில் உள்ள நல்லோரை மன்னர்கள் காக்கவில்லையெனில், அவர்கள் (அந்தச் செயல் அல்லது புறக்கணிப்புக்கான) பாவத்தையே ஈட்டுகிறார்கள்.(33) ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாவமற்றவனே, (தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதில்) மன்னர்களுக்கு உதவி புரியும் மனிதர்களும், (அந்தப் பாதுகாப்பின் விளைவாக) பிறரால் ஈட்டப்படும் தகுதிகளின் பங்கை அடைவதற்கு {மன்னர்களைப் போலவே} சமமான தகுதியைப் பெறுகிறார்கள்.(34) நாம் பின்பற்றும் கார்ஹஸ்த்தியமே வாழ்வுமுறைகள் அனைத்திலும் மேன்மையானது எனக் கல்விமான்கள் சொல்கின்றனர். அதுகுறித்த தீர்மானங்கள் மிகத் தெளிவானவையாகும். ஓ! மனிதர்களில் புலியே அது நிச்சயம் புனிதமானதே.(35)
தன்னைப் போலவே பிற உயிரினங்கள் அனைத்தையும் கருதுபவனும், எத்தீங்கையும் செய்யாதவனும், கோபத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவனுமான மனிதன் இம்மையிலும், மறுமையிலும் பேரின்பத்தை அடைகிறான்[3].(36) ஒரு மன்னன், தன் அரச கடமைகளையே பெரும் வேகம் மிக்கக் கப்பலாகக் கொண்டு, கொடைகள் எனும் காற்றால் தூண்டப்பட்டு, சாத்திரங்களைத் துடுப்பாகக் கொண்டு, நுண்ணறிவையே கப்பல் அதிகாரியின் பலமாகக் கொண்டு, அறத்தின் சக்தியால் உலகமெனும் பெருங்கடலை எளிதாகக் கடப்பான்[4].(37) ஒருவனுடைய இதயத்தில் உலகப்பொருள் ஒவ்வொன்றின் மீதும் இருக்கும் ஆசை விலகினால் அவன் தன்னறிவை {தன் நற்குணத்தை} மட்டுமே சார்ந்திருப்பவனாகக் கருதப்படுகிறான். இந்நிலையில் அவன் விரைவில் பிரம்மத்தை அடைகிறான்[5].(38) ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, ஒரு மன்னன், இதயத்தில் உள்ள விருப்பங்களையும் ஆசைகளையும் கட்டுப்படுத்தி, தியானத்தின் மூலம் உற்சாகமடைந்து, {குடிமக்களைப்} பாதுகாக்கும் கடமையை வெளிப்படுத்தினால், அவன் பெரும் தகுதியை அடைவதில் வெல்கிறான்.(39) எனவே, ஓ! யுதிஷ்டிரா, பக்தி செயல்பாடுகளைக் கொண்டோரும், வேத கல்விக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டோருமான பிராமணர்களையும், பிற மனிதர்கள் அனைவரையும் கவனமாகப் பாதுகாக்க முயல்வாயாக.(40) ஓ! பாரதா, ஒரு மன்னன், பாதுகாப்பு எனும் கடமையைச் செய்வதன் மூலம், காட்டில், ஆசிரமங்களில் உள்ள துறவிகள் ஈட்டும் தகுதியைவிட நூறு மடங்கு தகுதியை ஈட்டுகிறான்.(41)
[3] "இவ்வரியில் மன்னர்களைக் குறிப்பிடும் வகையில் உள்ள நியாஸ்தண்டஹம் (nyastandandah) என்ற பதம் ‘கோபமில்லாமல் தண்டனை அளிப்பன்’ என்ற பொருளைக் கொண்டதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] கும்பகோணம் பதிப்பில், "ஸ்த்யமென்னும் ஜலமும், சீலமென்னும் துடுப்பும், தர்மமென்னும் கொடியுமுள்ளதும், தியாமென்னும் வாயுவால் மார்க்கத்தில் செல்லுகிறதும், வேகமுள்ளதுமான தர்மமென்னும் கப்பலேறி யாவற்றையும் கடந்து போக முடியும்" என்றிருக்கிறது.[5] "இந்த வரியில் சொல்லப்படும் சத்வம் என்னும் பதம், நுண்ணறிவு என்று கொள்ளப்படவில்லையெனில், ‘நற்குணம்’ என்ற பொருளிலும் எடுத்துக் கொள்ளலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! பாண்டுவின் மூத்த மகனே {யுதிஷ்டிரனே}, மனிதர்களின் பல்வேறு கடமைகளை நான் உனக்கு விளக்கிவிட்டேன். நித்தியமானவையும், பழங்காலத்தில் இருந்து பெரும் மனிதர்களால் பயிலப்படுபவையுமான அரசகடமைகளை நீ பின்பற்றுவாயாக.(42) ஓ! மனிதர்களில் புலியே, (உன் குடிமக்களைப்) பாதுகாக்கும் கடமையில் குவிந்த கவனத்துடன் நீ ஈடுபட்டால், நான்கு வாழ்வுமுறைகள் {ஆசிரமங்கள்} மற்றும் நான்கு வகைகள் {வர்ணங்கள்} சார்ந்த மனிதர்கள் அனைவரின் தகுதியையும் நீ அடைவாய்" என்றார் {பீஷ்மர்}.(43)
சாந்திபர்வம் பகுதி – 66ல் உள்ள சுலோகங்கள் : 43
ஆங்கிலத்தில் | In English |