The duties of robbers! | Shanti-Parva-Section-65 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 65)
பதிவின் சுருக்கம் : க்ஷத்திரியக் கடமைகளின் மேன்மை; கள்வர்களும் பின்பற்ற வேண்டிய கடமைகள்; அரசகடமைகள் மற்றும் தண்டநீதியின் முக்கியத்துவம் ஆகியவற்றை மாந்தாதாவுக்குச் சொன்ன இந்திரன்; பழங்காலத்தில் நடந்த இந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
இந்திரன் {மந்தாதாவிடம்}, "ஓ! மன்னா {மந்தாதா}, இத்தகு சக்தியைக் கொண்டவையும், பிற கடமைகள் அனைத்தையும் உள்ளடக்கியவையும், கடமைகள் அனைத்திலும் முதன்மையானவையுமான க்ஷத்திரியக் கடமைகள், உலகின் நன்மையை நாடுபவர்களும், உயர் ஆன்மா கொண்டோர்களுமான உன்னைப் போன்ற மனிதர்களால் நோற்கப்பட வேண்டும். அந்தக் கடமைகள் முறையாகச் செயல்படுத்தப்படவில்லையென்றால், அனைத்து உயிரினங்களும் அழிவையடையும்.(1) அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்ட மன்னன், உழவுக்கான நிலத்தை மீட்பது, அதற்கு உரமிடுவது, தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளப் பெரும் வேள்விகளைச் செய்வது, கையேந்துவதைப் புறக்கணிப்பது {துறவைப் புறக்கணிப்பது}, குடிமக்களைப் பாதுகாப்பது போன்றவற்றையே தன் முதன்மையான கடமைகளாகக் கருத வேண்டும்.(2) (கொடைபெறுதலைக்) துறப்பதே அறங்களில் முதன்மையானது எனத் தவசிகள் சொல்கின்றனர். அனைத்து வகைத் துறவுகளிலும், போரில் உடலைக் கைவிடுவதே முதன்மையானது. எப்போதும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்றவர்களும்,(3) தங்கள் ஆசான்களிடம் முறையாகக் காத்திருந்தவர்களும், பெரும் கல்வி பெற்றவர்களுமான பூமியின் ஆட்சியாளர்கள், ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டு, இறுதியில் எவ்வாறு தங்கள் உடல்களைத் துறந்தனர் என்பதை உன் கண்களாலேயே கண்டாய். அறத்தகுதி ஈட்ட விரும்பும் க்ஷத்திரியன், பிரம்மச்சரிய வாழ்வுமுறையை வாழ்ந்து, பிறகு எப்போதும் தகுதியைத் தரக்கூடியதான இல்லற வாழ்வையே நோற்க வேண்டும்.(4) (குடிமக்களுக்கிடையே) நீதி தொடர்புடைய சராசரி கேள்விகளின் வழக்கில் தீர்ப்பளிப்பதில் அவன் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். அனைத்து வகையினரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதற்கும், அனைவரையும் பாதுகாப்பதற்கும், பல்வேறு திட்டங்கள், வழிமுறைகள், ஆற்றல்,(5) (நோக்கங்கள் நிறைவடைய நாடும்) உழைப்பு ஆகியவற்றுக்கும், அனைத்துக் கடமைகளையும் தங்கள் இலக்கினுள் கொண்ட க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. அரச கடமைகளின் விளைவாகவே பிற வகையினர் தங்களுக்குரிய கடமைகளைப் பின்பற்ற இயலும். இதன்காரணமாகவே தகுதியை உண்டாக்குவதில் அரச கடமைகளைச் சார்ந்தே பிற கடமைகள் இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(6)
நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் அலட்சியம் செய்வோரும், இவ்வுலகம் சார்ந்த பொருட்களைப் பின்தொடர்ந்து அவற்றில் பெரும்பற்றோடிருப்போரும் அறிவிலிகளின் {விலங்குகளின்} இயல்பைக் கொண்டோராகச் சொல்லப்படுகிறார்கள். அரச கடமைகளின் செயல்பாட்டாலேயே அவர்கள் நீதியுடன் நடந்து கொள்ளும் வற்புறுத்தலுக்கு உட்படுகிறார்கள். எனவே அக்கடமைகளே {அரசகடமைகளே} அனைத்திலும் முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன.(7) மூன்று வேதங்களைப் பின்பற்றும் பிராமணர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் நடத்தைமுறைகளும், பிராமணர்களுக்காக விதிக்கப்படும் வாழ்வுமுறைகளும் அனைத்திற்கும் முன்பாக ஒவ்வொரு பிராமணனாலும் நோற்க வேண்டும். ஒரு பிராமணன் வேறு வகையில் நடந்து கொண்டால், ஒரு சூத்திரனைப் போலவே அவன் தண்டிக்கப்பட வேண்டும்[1].(8) ஓ! மன்னா {மந்தாதா}, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகளும், வேதங்களால் பரிந்துரைக்கப்படும் சடங்குகளும் எப்போதும் ஒரு பிராமணனால் பின்பற்றப்பட வேண்டும். அவனுக்கு வேறேதும் கடமைகள் கிடையாது என்பதை அறிவாயாக.(9) வேறு வகையில் செயல்படும் பிராமணனுக்கு எந்த வாழ்வாதாரத்தையும் ஒரு க்ஷத்திரியன் அமைத்துக் கொடுக்கக்கூடாது. அவனது அறத்தகுதிகள் அவனது செயல்பாடுகளின் விளைவாகவே வளரும். உண்மையில் ஒரு பிராமணன் தர்மத்தின் தன்வடிவமாவான்.(10) தனக்காக விதிக்கப்படாத செயல்பாடுகளில் ஈடுபடும் பிராமணன் எந்த மதிப்புக்கும் தகுந்தவனாகான். அவன் {பிராமணன்} முறையான செயல்பாடுகளில் ஈடுபடவில்லையெனில், அவனை ஒருபோதும் நம்பக்கூடாது.(11)
[1] பிபேக்திப்ராயின் பதிப்பில், "இதற்கு மாறாக நடப்பவர்கள் ஒரு சூத்திரன் ஆயுதத்தால் கொல்லப்படுவதைப் போலக் கொல்லப்பட வேண்டும்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் முற்றிலும் வேறுவிதமாக, "மூன்று வேதங்களையுங்கற்ற அந்தணர்களுக்குத்தக்க ஆஸ்ரமங்களும், அவர்களுக்குறிய நற்கதியும் ஸித்திபெறத்தக்க க்ஷத்திரியனுக்கு உரியதாகையால் அது யாவற்றிற்கும் முந்தியதாகும். ஐய! அந்தத் தர்மமின்றி வேறுவிதஞ்செய்யும் அரசன் சூத்திரன் போல ஆயுதத்தால் கொல்லப்படத்தக்கவன்" என்றிருக்கிறது.
பல்வேறு வகையினருக்கும் உரிய கடமைகள் இவையே. (மக்களை) அவற்றைக் கடைப்பிடிக்கச் செய்வதில் முன்னேற்றமடையும் வகையில் க்ஷத்திரியர்கள் அவற்றைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இவையே க்ஷத்திரியர்களின் கடமைகளுமாகும். இதன்காரணமாகவே, வேறு எவற்றையும்விட அரசகடமைகளே அனைத்திலும் முதன்மையானவையாகச் சொல்லப்படுகின்றன. இவையே வீரர்களின் கடமைகள் என்றும், வீரர்களே இவற்றை நடைமுறைப்படுத்துவதில் முதன்மையானவர்கள் என்றும் நான் நம்புகிறேன்" என்றான் {இந்திரன்}.(12)
மாந்தாத்ரி {மாந்தாதா இந்திரனிடம்}, "யவனர்கள், கிராதர்கள், காந்தாரர்கள், சீனர்கள், சபரர்கள், பர்ப்பரர்கள், சகர்கள், துஷாரர்கள், கங்கர்கள், பஹ்லவர்கள் {பல்லவர்கள்}[2], ஆந்திரர்கள், மத்ரகர்கள், பௌண்டரர்கள், புளிந்தர்கள் {உஷ்ட்ரர்கள்}, ராமதர்கள், காம்போஜர்கள், {ஆரட்டர்கள், காசர்கள், மிலேச்சர்கள்} ஆகியோராலும், (ஆரிய) மன்னர்களின் ஆட்சிப்பகுதிகளில் வசிக்கும் பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களில் இருந்து எழுந்த பலர், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோராலும் செய்யப்பட வேண்டிய கடமைகள் என்ன? மேலும் களவையே வாழ்வாதாரமாகக் கொண்ட இனங்களை அடக்குவோரான எங்களைப் போன்ற மன்னர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கடமைகள் என்ன?(13-15) இவை யாவற்றையும் நான் கேட்க விரும்புகிறேன். ஓ! சிறப்புமிக்கத் தேவா {இந்திரா}, எனக்கு அறிவுறுத்துவாயாக. ஓ! தேவர்கள் அனைவரின் தலைவனே {இந்திரனே}, க்ஷத்திரியர்களான எங்களின் நண்பன் நீயே" என்றான் {மாந்தாதா}.(16)
[2] கங்குலியில் Palhavas என்று இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் பல்லவர்கள் என்று இருக்கிறது. இவர்கள் பகலவர்களாக இருக்க வேண்டும் https://ta.wikipedia.org/wiki/பகலவர்கள்
இந்திரன் {மந்தாதாவிடம்}, "களவைச் செய்யும் இனக்குழுக்கள் அனைத்தும் தங்கள் தாய்மாருக்கும், தந்தைமாருக்கும், தங்கள் ஆசான்களுக்கும், பெரியோர்களும், காடுகளில் உள்ள ஆசிரமங்களில் வாழும் துறவிகளுக்கும் தொண்டாற்ற வேண்டும்.(17) கள்வர் இனக்குழுக்கள் அனைத்தும் தங்கள் மன்னர்களுக்கும் தொண்டாற்ற வேண்டும். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள கடமைகள் மற்றும் சடங்குகள் அவர்களாலும் பின்பற்றப்பட வேண்டும்.(18) அவர்கள் பித்ருக்களைக் கௌரவிக்க வேள்விகளைச் செய்ய வேண்டும், கிணறுகள் வெட்ட வேண்டும், (உலகத் தொண்டில் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்), தாகத்துடன் இருக்கும் பயணிகளுக்கு நீர் கொடுக்க வேண்டும், படுக்கைகள் மற்றும் பருவகாலத்திற்கேற்ற பிற கொடைகளைப் பிராமணர்களுக்கு அளிக்க வேண்டும்.(19) தீங்கிழையாமை, உண்மை, கோபத்தை அடக்குதல், பிராமணர்களுக்கும், சொந்தங்களுக்கும் அவர்களுக்குரியதைக் கொடுத்து ஆதரித்தல், மனைவியர் மற்றும் பிள்ளைகளைப் பராமரித்தல், தூய்மை, அமைதி,(20) அனைத்து வகை வேள்விகளில் பிராமணர்களுக்குக் கொடையளித்தல் ஆகியவை தன் செழிப்பை விரும்பும் இந்த வகையின் ஒவ்வொரு மனிதனாலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அத்தகு மனிதன் உணவு மற்றும் செல்வத்துடன் கூடிய அனைத்து வகைப் பாகயக்ஞங்களைச் செய்ய வேண்டும்.(21) ஓ! பாவமற்றவனே, இவையும், இன்னும் இதைப் போன்ற கடமைகளும் பழங்காலத்தில் இவ்வகையினருக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! மன்னா, பிறர் அனைவருக்கும் விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் அனைத்தும் கள்வர் வகையினராலும் செய்யப்பட வேண்டும்" என்றான் {இந்திரன்}.(22)
மாந்தாத்ரி {இந்திரனிடம்}, "மனிதர்களின் உலகில், நால்வகையினர் மற்றும் நான்கு வாழ்வுமுறைகள் அனைத்திலும் இத்தகு தீய மனிதர்கள் மறைந்து வாழ்வது காணப்படுகிறது" என்றான்.(23)
இந்திரன், "ஓ! பாவமற்றவனே, அரசகடமைகளும், தண்டனை அறிவியலும் {தண்டநீதியும்} மறைந்தால், மன்னர்களின் கொடுங்கோன்மையின் விளைவால் அனைத்து உயிரினங்களும் வெகுவாகப் பாதிக்கப்படும்.(24) கிருத யுகத்திற்குப் பிறகு, பல்வேறு வாழ்வுமுறைகளைப் பொறுத்தவரையில் பெருங்குழப்பம் ஏற்படும், பல்வேறு வகைச் சமுதாயக்குழுக்கள் சார்ந்த அடையாளங்களுடன் எண்ணற்ற பிக்ஷுகள் {துறவிகள்} தோன்றுவார்கள்.(25) புராணங்களையும், அறத்தின் உயர்ந்த உண்மைகளையும் அலட்சியம் செய்து, காமம் மற்றும் கோபத்தால் தூண்டப்பட்டுத் தவறான பாதைகளுக்கு மனிதர்கள் பிறழ்வார்கள்.(26) பாவம் நிறைந்த மனிதர்கள், தண்டனை அறிவியலின் துணையுடன் கூடிய உயர் ஆன்ம மனிதர்களால் (தீச்செயல்களிலிருந்து) தடுக்கப்படும்போதுதான், அனைத்திலும் மேன்மையானதும், அழிவற்றதும், அனைத்து நன்மைக்கும் ஊற்றுக்கண்ணாயிருப்பதுமான அறம் உறுதியுடன் நிறுவப்படும்.(27) அனைவருக்கும் மேன்மையான மன்னனை அவமதிக்கும் மனிதன் செய்யும் கொடைகள், ஆகுதிகள், பித்ருக்களுக்கான காணிக்கைகள் ஆகியவை கனியற்றதாகும்.(28) உண்மையில் நித்திய தேவனேயான ஓர் அறம்சார்ந்த மன்னனை தேவர்களேகூட அவமதிக்கமாட்டார்கள்.(29) அனைத்து உயிரினங்களின் தெய்வீகத்தலைவன், அண்டத்தைப் படைத்த பிறகு, மக்களின் கடமைகள் சார்ந்து ஒரு க்ஷத்திரியன் அவர்களை ஆள வேண்டும் என்று விரும்பினான்.(30) மனிதர்கள் செய்யும் கடமைகளின் போக்கைத் தன் அறிவின் துணை கொண்டு கண்காணிக்கும் மனிதனை {மன்னனை} நான் மதிக்கிறேன், வழிபடுகிறேன். அத்தகு கண்காணிப்பிலேயே க்ஷத்திரியக் கடமைகள் இருக்கின்றன" என்றான் {இந்திரன்}".(31)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இந்திரனின் வடிவிலிருந்தவனும், பலமிக்கவனுமான அந்தத் தெய்வீக நாராயணன் இந்த வார்த்தைகளைச் சொன்னபிறகு, மருத்துகளின் துணையுடன், வற்றாத அருளுள்ள தன் நித்திய வசிப்பிடத்திற்குத் திரும்பினான்.(32) ஓ! பாவமற்றவனே, நல்லோரால் பின்பற்றப்படும் கடமைகள் பழங்காலத்தில் இவ்வழியில் இருந்தபோது, தூய ஆன்மாவும், கல்வியும் கொண்ட எந்த மனிதன்தான் ஒரு க்ஷத்திரியனை அலட்சியம் செய்ய முடியும்?(33) பார்வையற்ற மனிதர்கள் தங்கள் வழியில் செல்ல முடியாததைப் போல, நீதியற்ற செயல்பாடும், நீதியற்ற தவிர்த்தலும் அழிவையே அடைகின்றன.(34) ஓ! மனிதர்களில் புலியே, ஆதிகாலத்தில் இருந்து செயல்படத் தொடங்கியதும், முன்னோர்களுக்கு மிக முக்கியமுமான இந்த (கடமைகள் எனும்) சக்கரத்தை {தர்மச்சக்கரத்தை} நீ பின்பற்ற வேண்டும். ஓ! பாவமற்றவனே, இதைச் செய்ய நீ தகுந்தவனாவாய் என்பதை நான் அறிவேன்" என்றார் {பீஷ்மர்}.(35)
சாந்திபர்வம் பகுதி – 65ல் உள்ள சுலோகங்கள் : 35
ஆங்கிலத்தில் | In English |