Manu and anarchy! | Shanti-Parva-Section-67 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 67)
பதிவின் சுருக்கம் : அரசற்ற நாட்டின் நிலையை வர்ணித்த பீஷ்மர்; மன்னனால் உண்டாகும் நன்மையையும், அரசற்ற நிலையால் உண்டாகும் தீமையையும் சொன்னது; பழங்காலத்தில் அரசற்ற நிலையில் எவ்வாறு மனு மன்னனானான் என்பதைச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "{இதுவரை} நான்கு வாழ்வு முறைகள் மற்றும் நான்கு வகையினரின் கடமைகள் குறித்து நீர் சொன்னீர். ஓ! பாட்டா, ஒரு நாட்டின் முக்கியக் கடமைகள் என்னென்ன என்பதை எனக்கு இப்போது சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு மன்னனை (தேர்ந்தெடுத்து) பட்டமேற்கச் செய்வதே, ஒரு நாட்டின் முதற்கடமையாகும். அரசற்ற நிலையிலேயே தொடரும் நாடு பலவீனமடைந்து விரைவில் கள்வர்களால் பீடிக்கப்படும்.(2) அரசற்ற நிலையால் பீடிக்கப்படும் நாடுகளில் அறம் நிலைபெறாது. குடிமக்கள் ஒருவரையொருவர் விழுங்குவார்கள். சாத்தியமான நிலைகளில் மிகவும் கீழ்நிலை அரசற்ற நிலையே ஆகும்.(3) ஒரு மன்னனுக்கு முடிசூட்டுவதால், (அந்த மன்னனின் உள்ளிருக்கும்) இந்திரனே முடிசூட்டப்படுகிறான் என்று சுருதிகள் {வேதங்கள்} அறிவிக்கின்றன. செழிப்பில் விருப்பம் இருக்கும் ஒரு மனிதன், இந்திரனை வழிபடுவதைப் போலவே மன்னனை வழிபட வேண்டும்.(4) அரசற்ற நிலையால் பீடிக்கப்படும் நாட்டில் ஒருவரும் வசிக்கக்கூடாது. அரசற்ற நிலை நீடிக்கும் நாடுகளில் ஊற்றப்படும் காணிக்கைகளை {ஆகுதிகளை} அக்னி (தேவர்களுக்குக்) கொடுப்பதில்லை.(5)
அரசற்ற நிலையால் பலவீனமடைந்த நாடுகளைத் தன் ஆட்சிப்பகுதிகளோடு இணைத்துக் கொள்ளும் விருப்பத்தோடு ஒரு பலமிக்க மன்னன் அவற்றை அணுகினால், மக்களே முன்வந்து அந்தப் படையெடுப்பாளனை மரியாதையுடன் வரவேற்க வேண்டும். இத்தகு நடத்தையே நல்லறிவுக்குப் பொருந்துவதாக இருக்கும். அரசற்ற நிலையைவிட வேறு பெரிய தீமை எதுவுமில்லை[1].(7) அந்தப் பலமிக்கப் படையெடுப்பாளன் தகைமையாளனாக {நேர்மைநெறியுடன் கூடியவனாக} இருந்தால், அனைத்தும் சரியாக இருக்கும். மறுபுறம் கடும்கோபம் கொண்டவனாக இருந்தால் {கோபம் மூட்டப்பட்டால்} அவன் அவனைவரையும் கொல்லக்கூடும்.(8) எளிதாகப் பால்கறக்க முடியாத பசு அதிகத் துன்பத்துக்கு ஆளாகும். மறுபுறம், எளிதாகப் பாலைக் கறக்கவிடும் பசு, எந்தத் துன்பத்துக்கும் ஆளாக நேராது.(9) எளிதாக வளையும் பொருளைச் சுட வேண்டிய தேவையில்லை. எளிதாக வளையும் மரம், (தோட்டக்காரனின் கைகளில்) எந்தத் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டியதில்லை.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "அரசனும் வீரர்களுமில்லாத ஒரு ராஜ்யத்தை ஆளும் எண்ணத்துடன் மிகப்பலசாலியான ஒருவன் ஒருகால் வரத் தொடங்கினால் ராஜ்யத்திலிருப்பவர்கள் அவனை எதிர்கொண்டு ஆராதிப்பது மிக நன்று. அரசனில்லாத ராஜ்யத்தைவிடப் பெரும்பாவம் வேறு இல்லாமையால் அந்தச்சூரன் இதை நன்கு கவனித்தால் நிறைந்த க்ஷேமமுண்டாகும்" என்றிருக்கிறது.
ஓ! வீரா {யுதிஷ்டிரா}, இந்த எடுத்துக்காட்டுகளால் வழிநடத்தப்படும் மனிதன், பலமிக்கவர்கள் முன்பு பணிய வேண்டும். பலமிக்க மனிதனின் முன்பு தன் தலையை வணங்கும் மனிதன் உண்மையில் இந்திரனிடமே தலைவணங்குகிறான்.(11) செழிப்பை விரும்பும் மனிதர்கள், இந்தக் காரணங்களுக்காகவே, ஒரு மனிதனை (தேர்ந்தெடுத்து) தங்கள் மன்னனாக முடிசூட்ட வேண்டும். அரசற்ற நாடுகளில் வாழ்வோரால் தங்கள் செல்வத்தையோ, மனைவியரையோ அனுபவிக்க முடியாது.(12) பாவம் நிறைந்த மனிதன், அரசற்ற காலங்களில் பிற மக்களின் செல்வத்தைக் கவர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறான். எனினும் (தவறான வழியில் அடையப்பட்ட) தன் செல்வம் பிறரால் பறிக்கப்படும்போது அவன் ஒரு மன்னனை விரும்புகிறான்.(13) எனவே, அரசற்ற காலங்களில் மிகத் தீமையானவர்கள்கூட மகிழ்ச்சியாக {பாதுகாப்பாக} இருக்கமுடியாது என்பது தெளிவாகத் தெரிகிறது[2]. ஒருவனுடைய செல்வமானது இருவரால் பறிக்கப்படும். அந்த இருவருடையது, ஒன்றாகச் செயல்படும் பலரால் பறிக்கப்படும்.(14) அடிமையாக இல்லாதவன் அடிமையாக்கப்படுவான். மேலும் பெண்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படுவார்கள். இந்தக் காரணங்களுக்காகவே, தேவர்கள், மக்களைப் பாதுகாப்பதற்காக மன்னர்களைப் படைத்தார்கள்.(15)
[2] கும்பகோணம் பதிப்பில், "அரசனில்லாத ஜனங்கள் பொருளாட்சியையும் பெண்டிர்களின் போகத்தையும் அடைய முடியாது. அராஜகமான ராஜ்யத்தில் பாபியானவன் பிறர் பொருளை அபகரித்து ஸந்தோஷிப்பான். இவன் பொருளையும் மற்ற பாவிகள் கவர்ந்து கொள்வார்கள். இவ்விதமிருக்குங்கால் ராஜ்யத்திற்கு அரசனை விரும்பாமல் பாபிகளான மனிதர்களும் க்ஷேமத்தை அடைவதென்பது எந்தச் சமயமும் முடியாது" என்றிருக்கிறது.
பூமியில் தண்டனை வழங்கும் கோலை {செங்கோலைத்} தரித்த மன்னன் எவனும் இல்லையென்றால், நீரில் உள்ள மீன்களைப் போலப் பலமானவர்கள் பலமற்றவர்களை இரையாக்குவார்கள்.(16) நீரில் இருக்கும் பலமிக்க மீன்கள், பலமற்றவையை விழுங்குவதைப் போல, பழங்காலத்தில் அரசற்ற நிலையின் விளைவால் மனிதர்கள் ஒருவரையொருவர் விழுங்கி அழிவைச் சந்தித்தனர் என்று நாம் கேள்விப்படுகிறோம். அப்போது அவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து, சில குறிப்பிட்ட உடன்படிக்கைகளைச் செய்தனர் என்றும் நாம் கேள்விப்படுகிறோம். {அந்த உடன்படிக்கை பின்வருமாறு} அவர்கள் "எவன் கடுஞ்சொல் பேசுகிறானோ, வன்முறை உணர்வு கொள்கிறானோ, எவன் அடுத்தவரின் மனைவியரை நெறிதவறவோ, அபகரிக்கவோ செய்கிறானோ, எவன் பிறருக்குச் சொந்தமான செல்வத்தைக் களவாடுகிறானோ, அவன் நம்மால் கைவிடப்பட வேண்டும்" என்று சொன்னார்கள். அனைத்து வகை மக்களுக்கும் நம்பிக்கை ஊட்டுவதற்காக அவர்கள் இத்தகு உடன்படிக்கையைச் செய்து கொண்டு சில காலம் வாழ்ந்தனர்.(19) அவர்கள் சிலகாலம் கழித்துத் துன்பத்துடன் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, "ஓ! தெய்வீகத் தலைவா, ஒரு மன்னனில்லாமல் நாங்கள் அழிவடையப் போகிறோம். எவனாவது ஒருவனை எங்கள் மன்னனாக நியமிப்பீராக.(20) நாங்கள் அனைவரும் அவனை வழிபடுவோம். அவன் எங்களைப் பாதுகாக்க வேண்டும்" என்றனர். இவ்வாறு கேட்கப்பட்ட பெரும்பாட்டன் {பிரம்மன்} மனுவிடம் கேட்டார். எனினும், மனு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.(20)
மனு {பிரம்மனிடம்}, "பாவம்நிறைந்த செயல்கள் அனைத்துக்கும் நான் அஞ்சுகிறேன். ஒரு நாட்டை ஆள்வது மிகக் கடினமானதாகும். அதிலும் குறிப்பாக, தங்கள் நடத்தையில் எப்போதும் பொய்யர்களாக, வஞ்சகர்களாக இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நாட்டை ஆள்வது மிகக் கடினமானதாகும்" என்றான்.(22)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அப்போது பூமியில் வசித்தோர் அவனிடம், "அஞ்சாதே. மனிதர்கள் இழைக்கும் பாவங்கள், (உன்னைக் கிஞ்சிற்றும் களங்கப்படுத்தாமல்) அவற்றை இழைப்போரை மட்டுமே தீண்டும். உன் கருவூலத்தைப் பெருக்குவதற்காக நாங்கள் எங்கள் விலங்குகளிலும் மதிப்புமிக்க உலோகங்களிலும் ஐம்பதில் ஒரு {1/50} பங்கைத் தருகிறோம். எங்கள் தானியங்களில் பத்தில் ஒரு {1/10} பங்கைத் தருகிறோம். எங்கள் கன்னிகையர் மணம் செய்து கொள்ள விரும்பும்போது, அவர்களில் மிக அழகானவர்களை உனக்கு அளிக்கிறோம்.(23,24) ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும், விலங்குகள் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதிலும் முதன்மையானோராக இருக்கும் மனிதர்கள், இந்திரனுக்குப் பின்னால் வரும் தேவர்களைப் போல உனக்குப் பின் நடப்பார்கள்.(25) இவ்வழியில் பெருகும் உன் பலத்துடன், வெல்லப்பட முடியாதவனாகி, பேராற்றலுடன் எங்கள் மன்னனாக இருந்து, யக்ஷர்களையும், ராட்சசர்களையும் காக்கும் குபேரனைப் போல மகிழ்ச்சியாக எங்களைப் பாதுகாப்பாயாக.(26) உன் பாதுகாப்பின் கீழ் மனிதர்கள் ஈட்டும் தகுதியில் {புண்ணியத்தில்}, நான்கில் ஒரு பங்கு உனதாகட்டும்.(27) ஓ! மன்னா {மனு}, உன்னால் எளிதாக அடையப்படும் அத்தகுதியால் பலமடைந்து, ஆயிரம் வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்} தேவர்களைக் காப்பதைப் போல எங்களை நீ பாதுகாப்பாயாக.(28) தன் கதிர்களால் அனைத்தையும் எரிக்கப்புறப்படும் சூரியனைப் போல வெற்றிகளை அடையப் புறப்படுவாயாக. எதிரிகளின் செருக்கை நொறுக்குவாயாக. (இவ்வுலகில்) நல்லோர் என்றும் வெல்லட்டும் {வெல்ல வேண்டும்}" என்றனர்.(29)
பூமியில் வசிப்போரால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், பெருஞ்சக்தி படைத்தவனுமான அந்த மனு, பெரும் படையின் துணையுடன் புறப்பட்டான். உயர் பிறப்பைக் கொண்ட அவன் {மனு}, அப்போது ஆற்றலால் சுடர்விடுவதாகத் தெரிந்தது.(30) இந்திரனின் வலிமையைக் காணும் தேவர்களைப் போல மனுவின் வலிமையைக் கண்ட பூமிவாசிகள், அச்சமடைந்தவர்களாக, தங்கள் தங்களுக்குரிய கடமைகளில் தங்கள் இதயங்களை நிலைநிறுத்தினர்.(31) பிறகு மனு, அனைத்து இடங்களில் நேரும் தீச்செயல்களைத் தடுத்து, அனைத்து மனிதர்களையும் தங்கள் தங்கள் கடமைகளில் நிறுவி, (நல்ல காரியத்திற்காகத் திரியும்) மழைநிறைந்த மேகத்தைப் போல உலகையே வலம் வந்தான்.(32)
ஓ! யுதிஷ்டிரா, செழிப்பை விரும்புவோரான பூமியில் உள்ள மனிதர்கள் முதலில் ஒரு மன்னனைத் தேர்ந்தெடுத்து, அனைவரின் பாதுகாப்புக்காக அவனுக்கு முடிசூட்ட வேண்டும்.(33) ஆசான்களின் முன்னிலையில் பணியும் சீடர்களைப் போலவோ, இந்திரனின் முன்னிலையில் தேவர்களைப் போலவோ மனிதர்கள் அனைவரும் மன்னனின் முன்பு பணிவாக நடந்து கொள்ள வேண்டும்.(34) தன் மக்களால் கௌரவிக்கப்பட்ட ஒருவன், தன் எதிரிகளிடமும் மதிப்புமிக்கவனாவான். தன் மக்களால் அவமதிக்கப்படுபவனோ, எதிரிகளாலும் அவமதிக்கப்படுவான்.(35) மன்னன் தன் எதிரிகளால் அவமதிக்கப்பட்டால், அவனது குடிமக்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களாவார்கள். எனவே, குடைகள், வாகனங்கள், வெளிப்புற ஆபரணங்கள்,(26) உணவு, பானங்கள், மாளிகைகள், இருக்கைகள், படுக்கைகள் மற்றும் பயன்பாட்டுக்கும், காட்சிக்கும் உரிய அனைத்துப் பொருட்களும் மன்னனுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.(37) அத்தகு வழிமுறைகளிலாலேயே ஒரு மன்னன் (சிறந்த) பாதுகாப்பைத் தரும் தன் கடமைகளை ஆற்ற முடிந்தவனாகவும், தடுக்கப்பட முடியாதவனாகவும் ஆக முடியும். அவன் புன்னகையுடனே பேச வேண்டும்(38) பிறரால் இனிமையாகப் பேசப்படும் அவன், பிறரிடம் இனிமையாகவே பேச வேண்டும்.(38) அவன், (தனக்குத் தொண்டாற்றுபவர்களிடம்) நன்றியுணர்வுமிக்கவனாகவும், (தன் மரியாதைக்குரியவர்களிடம்) உறுதியான அர்ப்பணிப்புமிக்கவனாகவும், ஆசைகளைக் கட்டுக்குள் கொண்டவனாகவும் இருந்து, அவர்களுக்கு உரியதைக் கொடுக்க வேண்டும். பிறரால் பார்க்கப்படும் அவன், அவர்களை மென்மையாகவும், இனிமையாகவும், அழகாகவும் பார்க்க வேண்டும்" {என்றார் பீஷ்மர்}.(39)
சாந்திபர்வம் பகுதி – 67ல் உள்ள சுலோகங்கள் : 67
ஆங்கிலத்தில் | In English |