The importance of a king! | Shanti-Parva-Section-68 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 68)
பதிவின் சுருக்கம் : மன்னர்கள் தேவர்களுக்கு இணையாகப் போற்றப்படுவது ஏன் என்று கேட்ட யுதிஷ்டிரன்; ஒரு நாட்டுக்கு மன்னன் ஏன் அவசியம் என்று வசுமனஸுக்குப் பிருஹஸ்பதி சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, மனிதர்களின் ஆட்சியாளனான மன்னன் ஒரு தேவன் என்று ஏன் பிராமணர்கள் சொன்னார்கள்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, இது தொடர்பாகப் பழங்கதையில் பிருஹஸ்பதிக்கும், வசுமனசுக்கும்[1] இடையில் நடந்த உரையாடல் தென்படுகிறது.(2) வசுமனஸ் என்ற பெயரில், பெரும் நுண்ணறிவு கொண்ட ஒருவன் கோசலத்தின் மன்னனாக இருந்தான். ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அவன் பேரறிவைக் கொண்ட பெரும் தவசி பிருஹஸ்பதியிடம் கேள்வி கேட்டான்.(3) பணிவின் தேவைகளை அறிந்தவனும், அனைவரின் நன்மையிலும் அர்ப்பணிப்புள்ளவனுமான மன்னன் வசுமனஸ் உரிய பணிவுடன் அந்தப் பெரும் தவசியை வலம் வந்து, முறையாக அவரை வணங்கி, மனிதர்கள் மகிழ்ச்சி அடைவதற்கான விருப்பத்தால் உந்தப்பட்டு ஒரு நாட்டிற்கு உண்டான விதிகளைக் குறித்து அந்த அறம்சார்ந்த பிருஹஸ்பதியிடம் விசாரித்தான்.(4,5)
[1] வசுமனஸ், யயாதியின் மகளான மாதவிக்கும் அயோத்யாவின் மன்னன் ஹர்யஸ்வனுக்கும் பிறந்தவனாவான். http://mahabharatham.arasan.info/2015/06/Mahabharatha-Udyogaparva-Section115.html
வசுமனஸ் {பிருஹஸ்பதியிடம்}, "உயிரினங்கள் என்ன வழிமுறைகளில் வளர்கின்றன? அவை எதனால் அழிவை அடைகின்றன? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, யாரைத் துதித்து அவை நித்திய மகிழ்ச்சியை அடைகின்றன?" என்று கேட்டான்.(6) அளவிலா சக்தி கொண்ட கோசல மன்னனால் இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் ஞானம் கொண்டவருமான பிருஹஸ்பதி, மன்னர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் குறித்துப் பொறுமையாக அவனிடம் உரையாடினார்.(7)
பிருஹஸ்பதி {வசுமனஸிடம்}, "ஓ! பெரும் ஞானம் கொண்டவனே, மனிதர்கள் அனைவரின் கடமைகளும் மன்னனிடமே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன. மன்னன் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகவே மனிதர்கள் ஒருவரையொருவர் விழுங்காதிருக்கிறார்கள்.(8) நலந்தரும் கட்டுப்பாடுகளில் உள்ள அலட்சியத்தையும், அனைத்து வகைக் காமங்களையும் தடுத்துத் தன் கடமைகளை நோற்பதின் மூலம் ஒரு மன்னனே பூமியில் அமைதியைக் கொண்டுவருகிறான். இஃதை அடையும் அவன் மகிமையில் ஒளிர்கிறான்.(9) ஓ! மன்னா {வசுமனஸ்}, சூரியனும், சந்திரனும் எழவில்லையெனில் ஒற்றையொன்று காண முடியாமல் முற்றான இருளில் மூழ்கும் உயிரினங்கள் அனைத்தும்,(10) ஆழமில்லாத நீரில் மீன்களும், ஆபத்தில்லாத இடத்தில் பறவைகளும் (ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குத்) தங்கள் விருப்பம் போலத் விளையாடித் திரிந்து, மோதி மீண்டும் மீண்டும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டு உறுதியான அழிவை அடைவதைப் போலவே,(12) தங்களைப் பாதுகாக்க எந்த மன்னனும் இல்லாத மனிதர்கள், இடையனின் கண்காணிப்பில்லாத கால்நடை மந்தையைப் போல இருளில் மூழ்கி அழிவையே அடைவார்கள்.(13)
மன்னன் {குடிமக்களைப்} பாதுகாக்கும் தன் கடமையைச் செய்யவில்லையெனில், பலமிக்கவர்கள் பலவீனமானவர்களின் உடைமைகளைப் பலவந்தமாக அபகரிப்பார்கள், பலவீனர்கள் எளிதாக எதையும் கொடுக்கவில்லையெனில் அவர்களின் உயிரையே கூட எடுப்பார்கள்.(14) எவராலும், தன் உடைமைகளில் எதையும், "இஃது எனது" என்று சொல்ல முடியாது. அப்போது மனைவியர், மகன்கள், உணவு, பிற வகை உடைமைகள் ஆகியன {எவனுக்கும்} நிலைக்காது.(15) மன்னன் பாதுகாப்பை அளிக்கவில்லையெனில் அனைத்தும் அழிவுக்குள்ளாகும். மன்னன் பாதுகாக்கவில்லையெனில் பிறருக்குச் சொந்தமான வாகனங்கள், ஆடைகள், ஆபரணங்கள், மதிப்புமிக்கக் கற்கள், பிறவகை உடைமைகள் ஆகியவற்றைத் தீய மனிதர்கள் பலவந்தமாக அபகரிப்பார்கள்.(16) மன்னனின் பாதுகாப்பில்லாத போது, தங்கள் செயல்பாடுகளில் நியாயமாக நடந்து கொள்வோர் மீது பல்வேறு ஆயுதங்கள் பாயும், அநீதியே அனைவராலும் பின்பற்றப்படும்.(17) அரசபாதுகாப்பில்லாத போது, மனிதர்கள் தங்கள் தாய்மாரையும், வயதுமுதிர்ந்த தங்கள் தந்தைமாரையும் கூட அவமதிக்கவோ, அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ செய்வார்கள். ஆசான்கள் விருந்தினர்கள் மற்றும் முதியோரையும் அவமதிக்கவோ, அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ செய்வார்கள்.(18) மன்னன் பாதுகாப்பை வழங்கவில்லையெனில், செல்வமுடைய அனைவரும், மரணம், அடைக்கப்படுதல் {சிறை}, சமய தண்டனை ஆகியவற்றுக்கு உள்ளாக நேரிடும். உடைமை என்ற கருத்தேகூட மறைந்து போகும்.(19) மன்னன் பாதுகாக்கவில்லையெனில், உரிய காலத்திற்கு முன்பே அனைத்தும் அழிவடையும், நாட்டின் ஒவ்வொரு பகுதியும் கள்வர்களால் மேலாதிக்கம் செய்யப்படும் {ஆளப்படும்}, அனைவரும் பயங்கர நரகில் வீழ்வார்கள்.(20)
மன்னன் பாதுகாக்கவில்லையெனில், திருமணம், கலவி குறித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் (இரத்த உறவு மற்றும் பிற வகை உறவுகள் ஆகியவற்றின் மூலம்) இல்லாமல் போகும்[2]. உழவு, வணிகம் ஆகியன அனைத்தும் குழப்பத்தில் வீழும்; அறநெறி தாழ்ந்து தொலைந்து போகும்; மூன்று வேதங்களும் மறைந்துவிடும்.(21) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், அதற்கு மேலும் விதிப்படி காணிக்கைகள் அளித்து முறையாக நிறைவு செய்யப்படும் வேள்விகள் ஏதும் நடைபெறாது; திருமணங்கள் நடைபெறாது; சமூகம் என்பதே இல்லாமல் போகும்.(22) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், காளைகள் பசுக்களை அணையாது, பால்சட்டிகளும் கடையப்படாது. பசு வளர்ப்பில் வாழும் மனிதர்கள் அழிவை அடைவார்கள்.(23) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அச்சமும் கவலையும் அடையும் அனைவரும், உணர்வையிழந்தவர்களாகத் துன்ப ஓலமிட்டுக் குறைந்த காலத்திலேயே அழிவை அடைவார்கள்.(24) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் செய்யவில்லையெனில், விதிப்படி கொடைகள் அளித்து, ஒரு வருடம் நீளும் வேள்விகள் ஏதும் நிறைவுபெறாது.(25)
[2] கும்பகோணம் பதிப்பில், "ஸ்திரீகளின் வ்யபிசாரமும் தோஷமாகாது" என்றிருக்கிறது.
அரச பாதுகாப்பு இல்லாதபோது, பிராமணர்கள் ஒருபோதும் நான்கு வேதங்களையும் படிக்கவோ, தவங்கள் செய்யவோ, அறிவால் தூய்மையடையவோ, கடும் நோன்புகளை நோற்கவோ மாட்டார்கள்.(26) அரச பாதுகாப்பு இல்லாதபோது, பிராமணனைக் கொன்ற குற்றம் செய்த கொலையாளியைக் கொன்றவன் எந்த வெகுமதியையும் அடைய மாட்டான்; மறுபுறம், பிராமணக்கொலை செய்த குற்றவாளி, முற்றான சட்ட விலக்களிப்பை அனுபவிப்பான்.(27) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அடுத்தவர் செல்வத்தை அவர்களது கரங்களிலிருந்தே மனிதர்கள் பிடுங்குவார்கள், மேலும் நலம்சார்ந்த கட்டுபாட்டுகள் துடைத்தெறியப்படும், அச்சமடையும் அனைவரும் தப்பி ஓடுவதிலேயே பாதுகாப்பைத் தேடுவார்கள்.(28) அரச பாதுகாப்பு இல்லாதபோது, அனைத்து வகை அநீதிகளும் நடக்கும்; வர்ணக்கலப்பு ஏற்படும்; பஞ்சம் நாட்டைச் சூறையாடும்.(9) அரச பாதுகாப்பின் விளைவால், மனிதர்கள் தங்கள் வீடுகளில் வாயிற்கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டே அச்சமில்லாமல் எங்கும் உறங்கலாம்.(30)
மன்னன் நீதியுடன் பூமியைப் பாதுகாக்கவில்லையெனில், உண்மையாக வலிந்து தாக்குவதைவிடச் சற்றே குறைந்ததான பிறரின் தீய பேச்சை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது[3].(31) மன்னன் பாதுகாப்பை வழங்கும் தன் கடமையைச் செய்தால், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட பெண்டிர், தங்களைக் கவனித்துக் கொள்ள எந்த ஆண் உறவினர்களும் இன்றி அச்சமில்லாமல் எங்கும் திரிய முடியும்.(32) மன்னன் பாதுகாப்பை வழங்கும் தன் கடமையைச் செய்வதால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் தீங்கிழைக்காமல் ஒருவருக்கொருவர் தொண்டுகளைச் செய்யும் நல்லோராக ஆவார்கள்.(33) அரச பாதுகாப்பின் விளைவால், மூன்று வகையைச் சேர்ந்தோரும், உயர்வான வேள்விகளைச் செய்து, கவனமாகக் கல்வி கற்க தங்களை அர்ப்பணிப்பார்கள்.(34) உழவையும், வணிகத்தையும் சார்ந்திருக்கும் உலகம், வேதங்களால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் இவை அனைத்தும் தன் முக்கியக் கடமையை முறையாகச் செய்யும் மன்னனாலேயே பாதுகாக்கப்படுகின்றன.(35)
[3] "மேற்கண்ட சுலோகம், மனிதர்கள், குற்றவாளிகளை மன்னன் தண்டிப்பான் என்பதால், பிறரால் தங்களுக்கு இழைக்கப்படும் காயங்களைக் கூடப் பலவந்தமாகத் திருத்த முயலாமல் பொறுத்துக் கொள்வார்கள். மன்னர்களே இல்லையென்றால், சிறு காயங்களுக்குக் கூட உடனடியாகக் கொள்ளும் பழி தீர்ப்பு உலகளாவிய நடைமுறையாகிவிடும் என்ற பொருளுடன் இருப்பதாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மன்னன் கடுங்கனத்தைத் தானே ஏற்றுக் கொண்டு, தன் வலிமைமிக்கப் படையின் உதவியைக் கொண்டு தன் குடிமக்களைப் பாதுகாப்பதாலேயே, மக்களால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.(36) எவனுடைய இருப்பில் மக்கள் இருப்பார்களோ, எவனுடைய அழிவில் மக்கள் அழிவார்களோ, அவனை எவன்தான் வழிபடமாட்டான்?(37) மன்னனுக்கு ஏற்புடையதையும், நன்மையானதையும் எவன் செய்கிறானோ, அனைத்து வர்க்கத்தினருக்கும் அச்சத்தைக்கொடுக்கும் அரசகடமைகளை எவன் சுமக்கிறானோ {அவற்றில் பங்கு கொள்கிறானோ} அவன் இம்மையையும், மறுமையையும் வெல்கிறான்[4].(38) மன்னனுக்குத் தீங்கிழைக்க எந்த மனிதன் நினைக்கிறானோ, அவன் ஐயமில்லாமல் இம்மையில் துன்பத்தை அடைந்து, மறுமையில் நரகத்தை அடைகிறான்.(39) மன்னன் உண்மையில் மனித வடிவில் உள்ள உயர்ந்த தெய்வீகத்தன்மை கொண்டவன் என்பதால், அவனை {மன்னனை} ஒரு மனிதன்தானே என்று நினைத்து அலட்சியம் செய்யக்கூடாது.(40)
[4] "இங்கே முதன்மையானவனாகவும், மகிழ்ச்சியானவனாகவும் இருந்து, அடுத்த உலகில் அருள்நிலையை அடைவது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மன்னன், ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐந்து வெவ்வேறு வடிவங்களை ஏற்கிறான். அவன் {மன்னன்} அக்னி, ஆதித்யன், மிருத்யு, வைஸ்ரவணன் {குபேரன்}, யமன் ஆகிய வடிவங்களை ஏற்கிறான்.(41) மன்னன் பொய்மையால் வஞ்சிக்கப்பட்டு, தன் முன்னால் இருக்கும் பாவம் நிறைந்த குற்றவாளிகளைத் தன் கடும் சக்தியால் எரிக்கும்போது, அவன் அக்னியின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(42) அவனே தன் ஒற்றர்களின் மூலம் மனிதர்கள் அனைவரின் செயல்பாடுகளைக் கண்காணித்து, பொது நன்மைக்காக எதையும் செய்யும் போது, ஆதித்யனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(43) அவன், தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் ஆகியோருடன் நூற்றுகணக்கான தீய மனிதர்களைக் கோபத்துடன் அழிக்கும்போது, மிருத்யுவின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(44) அவன், கடுந்தண்டனைகளால் தீயோரைத் தண்டித்து, வெகுமதிகள் கொடுப்பதன் மூலம் நல்லோரை ஆதரிக்கும்போது, யமனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(45) அவன், தனக்கு மதிப்புமிக்கத் தொண்டாற்றியவர்களுக்கு அபரிமிதமான செல்வத்தைக் கொடையளித்து, தனக்குக் குற்றமிழைத்தோரிடம் இருந்து செல்வத்தையும், மதிப்புமிக்கக் கற்களையும் பறிக்கும்போது,(46) ஓ! மன்னா {வசுமனஸ்}, உண்மையில் அவன், சிலருக்குச் செழிப்பை அளித்து, வேறு சிலரிடம் இருந்து அவற்றைப் பறிக்கும்போது, பூமியில் குபேரனின் வடிவை ஏற்பதாகச் சொல்லப்படுகிறது.(47)
புத்திசாலித்தனம் உள்ள எவனும், செயல்படவல்ல எவனும், அறமீட்ட விரும்பும் எவனும், தீயவற்றிலிருந்து விடுபட்ட எவனும் மன்னனைக் குறித்த தீய செய்திகளைப் பரப்பக்கூடாது. மன்னனுக்கு எதிராகச் செயல்படும் எந்த மனிதனும் மகிழ்ச்சியை அடைய முடியாது,(48) அவன் மன்னனின் மகனாகவோ, சகோதரனாகவோ, தோழனாகவோ, தன்னைப்போலவே மன்னன் என்று எண்ணும் எவனுமாகவோ இருப்பினும் {மன்னனுக்கு எதிராகச் செயல்பட்டு} மகிழ்ச்சியை அடைய முடியாது. நெருப்பு கூட, தன்னைத் தூண்டப் பயன்படும் காற்றால் (எரியத்தக்க பொருட்களுக்கு மத்தியில்) சுடர்விட்டு எரிந்து எதையாவது எச்சமாக விடும்[5].(49) மன்னனின் கோபம், அதைத் தூண்டும் மனிதனிடம் எதையும் எஞ்ச விடாது. மன்னனுக்குச் சொந்தமான யாவும் தொலைவிலேயே தவிர்க்கப்பட வேண்டும்[6].(50)
[5] "எப்போதெல்லாம் தீ ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அங்கே தோன்றி அதைக் காற்றே நீட்டிக்கச் செய்கிறது என்பதால் காற்று நெருப்பின் சாரதியெனச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "அதாவது, மன்னனின் உடைமைகளில் எவனும் ஆசை வைக்கக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒருவன் மரணத்திலிருந்து விலகுவதைப் போலவே மன்னனுக்கு உரியவற்றில் இருந்து விலக வேண்டும். மன்னனுக்கு உரியதை அடைய விரும்பும் மனிதன், நஞ்சைத் தீண்டும் {விஷச்செடியை உண்ட} மானைப் போல விரைவாக அழிவை அடைகிறான்.(51) நுண்ணறிவு கொண்ட மனிதன், மன்னனுக்கு உரியவற்றைத் தனக்குரியவை போலவே பாதுகாக்க வேண்டும்.(52) மன்னனுக்கு உரிய செல்வத்தை அடைய விரும்புவோர், நித்திய இருள் மற்றும் புகழ்க்கேடு எனும் ஆழ்ந்த நரகில் உணர்வற்றவர்களாக மூழ்குவார்கள்.(53) மக்களைத் திளைக்கச் செய்பவன், மகிழ்ச்சியை அளிப்பவன், வளவன் {செழிப்பைக் கொண்டவன்}, அனைவரிலும் முதன்மையானவன், காயங்களை ஆற்றுபவன், பூமியின் தலைவன், மனிதர்களின் பாதுகாவலன் என்ற சொற்களால் துதிக்கப்படும் மன்னனை வழிபடாதவன் எவன் இருக்கிறான்?(54) எனவே, தன் செழிப்பை விரும்புபவனும், நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்றுபவனும், தன் ஆன்மாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவனும், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்தி அவற்றுக்குத் தலைவனாக இருப்பவனும், நுண்ணறிவு மற்றும் நினைவுத்திறனைக் கொண்டவனும், (வணிகப் பரிவர்த்தனையில்) புத்திசாலித்தனமிக்கவனுமான ஒரு மனிதன், எப்போதும் மன்னனிடம் பற்றோடு இருக்க வேண்டும்.(55)
நன்றியுணர்வுமிக்கவனும், ஞானம் கொண்டவனும், தாராள மனம் கொண்டவனும், பற்றுறுதிமிக்கவனும், தன்புலன்களைக் கட்டுப்படுத்தி அவற்றை ஆள்பவனும், அறம்சார்ந்தவனும், கொள்கைத் தீர்மானங்களை நோற்பனுமான ஓர் அமைச்சனை மன்னன் முறையாகக் கௌரவிக்க வேண்டும்.(56) தன் செயல்களில் பற்றுறுதிமிக்கவனும், நன்றியுணர்வுமிக்கவனும், அறம்சார்ந்தவனும், தற்கட்டுப்பாடு கொண்டவனும், துணிச்சல்மிக்கவனும், பெருந்தன்மை கொண்டவனும், பிறரின் உதவியேதுமின்றிப் பணிகளை நிறைவேற்றவல்லவனுமான ஒரு மனிதனை மன்னன் எப்போதும் ஊக்கப்படுத்த வேண்டும்.(57) அறிவு மனிதர்களைச் செருக்கடையச் செய்கிறது. மன்னன், மனிதர்களைப் பணிவடையச் செய்கிறான். மன்னனால் பீடிக்கப்படும் மனிதனால் ஒருபோதும் மகிழ்ச்சியை அடைய முடியாது. மறுபுறம், மன்னனால் ஆதரிக்கப்படும் மனிதன் மகிழ்ச்சியாகவே இருப்பான்.(58) மன்னனே தன் மக்களின் இதயமாக இருக்கிறான்; அவனே அவர்களது பெரும்புகலிடமாக இருக்கிறான்; அவனே அவர்களது மகிமையாக இருக்கிறான்; அவனே அவர்களது உயர்ந்த மகிழ்ச்சியாகவும் இருக்கிறான். ஓ! ஏகாதிபதி {வசுமனஸ்}, மன்னிடம் பற்றுடன் இருப்போர் இம்மையையும், மறுமையையும் வெல்கிறார்கள்.(59) தற்கட்டுப்பாடு, உண்மை, நட்பு, பெரும் வேள்விகளில் தேவர்களைத் துதிப்பது ஆகிய பண்புகளின் உதவியுடன் பூமியை ஆளும் மன்னன், பெரும் மகிமையை ஈட்டி, சொர்க்கத்தில் ஓர் அழிவில்லா வசிப்பிடத்தையும் அடைகிறான்" என்றார் {பிருஹஸ்பதி}.(60)
ஏகாதிபதிகளில் சிறந்தவனும், கோசலத்தின் ஆட்சியாளனுமான வீர வசுமனஸ், அங்கிரசின் மகனான பிருஹஸ்பதியால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டு, அதுமுதல் தன் குடிமக்களை {கவனத்துடன்} பாதுகாக்கத் தொடங்கினான்" என்றார் {பீஷ்மர்}.(61)
சாந்திபர்வம் பகுதி – 68ல் உள்ள சுலோகங்கள் : 61
ஆங்கிலத்தில் | In English |