The internal hostility between Bhojas and Vrishnis! | Shanti-Parva-Section-81 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 81)
பதிவின் சுருக்கம் : உறவினர்களை நிறைவுகொள்ளச் செய்ய முடியாதபோது செய்ய வேண்டியது குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; போஜர்களுக்கு, விருஷ்ணிகளுக்குமிடையில் உண்டான உட்பகையால் கிருஷ்ணன் துன்புற்றிருந்தபோது, நாரதர் அவனுக்குச் சொன்ன வழிமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "(இவ்வழியில்) ஒருவனால் தன் இரத்த சொந்தங்களையும், உறவினர்களையும் வெல்லமுடியவில்லையெனில், எவர்கள் நண்பர்களாக வேண்டுமோ அவர்கள் பகைவர்களாகிவிடுகிறார்கள். அப்போது, நண்பர்கள் மற்றும் எதிரிகள் ஆகிய இரு தரப்பின் இதயங்களையும் வெல்லும் வகையில் ஒருவன் தனது நடத்தையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது சம்பந்தமாகப் பழங்கால வரலாற்றில் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நாரதருக்கும் இடையில் நடந்த ஓர் உரையாடல் தென்படுகிறது.(2)
ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வாசுதேவன் {கிருஷ்ணன் நாரதரிடம்}, "ஓ! நாரதரே, கல்லாத மூட நண்பனும், கல்விமானாகவே ஆனாலும் நல்லறிவில்லாத நண்பனும் ஒருவனுடைய கமுக்கமான {இரகசிய} ஆலோசனைகளை அறியத் தகுந்தவர்களல்ல[1].(3) ஓ! தவசியே {நாரதரே}, நீர் என்னிடம் கொண்டுள்ள நட்பை நம்பி, நான் உம்மிடம் ஒன்றைச் சொல்லப் போகிறேன். ஓ! விருப்பம் போல் சொர்க்கத்திற்குச் செல்ல முடிந்தவரே, அடுத்தவன் நுண்ணறிவைக் கொண்டவன் என்ற உறுதியடைந்தால் மட்டுமே ஒருவன் அவனிடம் பேசலாம்.(4) நான் என் உறவினர்களிடம் அவர்களது செல்வத்தைக் குறித்து முகத்துதி செய்து ஒருபோதும் அடிமைத் தொழில் செய்வதில்லை. நான் என்னிடமுள்ளவற்றில் பாதியை அவர்களுக்குக் கொடுத்து, அவர்களுடைய தீய பேச்சுகளை மன்னிக்கிறேன்[2].(5) நெருப்பை அடைய விரும்பும் ஒரு மனிதனால் அரணிக்கட்டை அரைக்கப்படுவதைப் போலவே, என் இதயமும் என் உறவினர்களின் தீச்சொற்களால் கலங்கடிக்கப்படுகிறது. உண்மையில், ஓ! தெய்வீக முனிவரே, அந்தக் கொடூரப் பேச்சுகள் என் இதயத்தைத் தினமும் எரிக்கின்றன.(6)
[1] கும்பகோணம் பதிப்பில், "பண்டிதனல்லாத மித்திரனும், பண்டிதனாயிருந்தும் நல்லறிவில்லாத அமித்திரனும் மிக்க ரஹஸ்யமான விஷயத்தைத் தெரிந்து கொள்ளத் தக்கவரல்லர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நலன்விரும்பியாக இல்லாத ஒரு மனிதனும், தன் ஆன்மாவைக் கட்டுக்குள் கொள்ளாத கல்விமானும், மிக இரகசியமான ஆலோசனைகளை அறியக்கூடாது" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "நான் அரசனென்னும் பெயருள்ளவனாகி ஞாதிகளுக்கு அடிமைத் தொழிலைச் செய்துவருகிறேன்; புஜிக்கத்தக்கவைகளில் பாதியை மட்டுமே புஜிக்கிறேன்; மற்றொரு பாதியை ஞாதிகளுக்கு அளிக்கிறேன்; அவர்கள் வாக்கிலிருந்து வெளியாகும் கடுஞ்சொற்களையும் பொறுக்கிறேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான் என் உறவினர்களிடம் அவர்களது செல்வங்களைக் குறித்துப் பேசும் அடிமையாகச் செயல்படுவதில்லை. நான் இன்ப நுகர் பொருட்களில் பாதியை மட்டுமே அனுபவிக்கிறேன். நெருப்பிற்கான விருப்பத்தால் ஒன்றுடனொன்று உரசப்படும் இரு குச்சிகளைப் போல என் இதயத்தை நொறுக்கும் அவர்கள் பேசும் கடுஞ்சொற்களையும் நான் மன்னிக்கிறேன்" என்றிருக்கிறது.
சங்கர்ஷணரில் {பலராமன்} வலிமையும், கதனில் மென்மையும் வசிக்கின்றன, பிரத்யும்னனைப் பொறுத்தவரையில், அவன் மேனியழகில் என்னையும் விஞ்சியிருக்கிறான். ஓ! நாரதரே, (இவர்கள் அனைவரும் என் தரப்பில் இருந்தாலும்) நான் ஆதரவற்றவனாகவே இருக்கிறேன்.(7) அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளில், பெருஞ்செழிப்புடையவர்கள், வலிமை நிறைந்தவர்கள், துணிவுமிக்கவர்கள் மற்றும் தொடர்ந்த விடா முயற்சியுடையவர்கள் எனப் பலர் இருக்கின்றனர்.(8) யாருடைய தரப்பில் அவர்கள் இல்லையோ அவர்கள் அழிவை அடைவார்கள், மறுபுறம், யார் தரப்பில் அவர்கள் இருக்கிறார்களோ, அவர்கள் அனைத்தையும் அடைகிறார்கள். (ஆஹுகர் மற்றும் அக்ரூரர் ஆகியோர்) இருவராலும் மீண்டும் மீண்டும் விலக்கப்படும் நான், யாருடைய தரப்பையும் அடைந்ததில்லை.(9) ஒருவன் தன் தரப்பில் ஆஹுகர், மற்றும் அக்ரூரர் ஆகிய இருவரையும் கொண்டிருப்பதைவிட வேறு எந்தத் துன்பம் பெரியது? இருவரையும் என் தரப்பில் கொள்ளாமல், அவர்களில் ஒருவரை மட்டுமே கொள்வதை விட வேறு எந்தத் துன்பம் பெரியது?[3](10) ஒருவரோடொருவர் சூதாடிக்கொண்டிருக்கும் இரு சகோதரர்களும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் அவர்களுடைய தாயைப் போலத்தான் நான் இருக்கிறேன்.(11) ஓ! நாரதரே, இவ்வாறே நான் அவர்கள் இருவராலும் துன்பத்துக்குள்ளாகிறேன். எனக்கும் என் உறவினர்களுக்கும் எது நன்மையோ, அதைச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான்{கிருஷ்ணன்}.(12)
[3] "உண்மை என்னவென்றால் ஆஹுகரும், அக்ரூரரும் ஒருவரையொருவர் கடுமையாக எதிர்ப்பவர்களாவர். எனினும் இருவரும் கிருஷ்ணனை அன்புடன் விரும்பினர். ஆஹுகர் எப்போதும் அக்ரூரை விலக்குமாறு கிருஷ்ணனுக்கு அறிவுரை கூறினார், அக்ரூரும் ஆஹுகரை விலக்குமாறு அவனுக்கு அறிவுரை கூறினார். கிருஷ்ணன் இருவரின் நட்பையும் மதித்ததால் அவர்களில் ஒருவரையும் விலக்க முடியவில்லை. இங்கே அவன் என்ன சொல்கிறானென்றால், அவர்கள் இருவரையும் கொண்டிருந்தாலும் துன்பம், கொள்ளாவிட்டாலும் துன்பம் என்கிறான்" என்று இங்கே கங்குலி விளக்குகிறார்.
நாரதர் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, வெளியில் இருந்து வருவது, உள்ளிருந்து வருவது எனத் துன்பங்கள் இருவகைப்படும். ஓ! விருஷ்ணி குலத்தோனே, அவை ஒருவனின் சொந்த செயல்பாடுகளாலோ, பிறரின் செயல்பாடுகளாலோ உண்டாகின்றன.(13) இப்போது உனக்கு நேரும் துன்பமானது, உன் சொந்த செயல்களாலேயே உள்ளிருந்து உண்டானது. அக்ரூரரைச் சார்ந்தவர்களான பலதேவனும் {பலராமனும்}, போஜகுலத்தைச் சேர்ந்த பிறரும்,(14) செல்வம், அல்லது பேராசை, அல்லது {குற்றமுள்ள} சொற்கள், அல்லது வெறுப்பின் நிமித்தமாக அவரது {அக்ரூரரின்} தரப்பைச் சேர்ந்திருக்கிறார்கள். உன்னைப் பொறுத்தவரையில், நீ அடைந்த செல்வத்தை மற்றவருக்கு {ஆஹுகருக்குக்} கொடுத்தாய்.(15) நண்பர்களாக இருக்க வேண்டிய மனிதர்களை நீ கொண்டிருந்தாலும், உன் செயலாலேயே நீ உன் தலைக்கு மேல் துன்பத்தை ஏற்றுக் கொண்டாய். ஒருவன் கக்கிய உணவை மீண்டும் உட்கொள்ள முடியாததைப் போலவே, உன்னால் அந்தச் செல்வத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது.(16)
பப்ருவிடம் இருந்தோ, உக்ரசேனரிடம் இருந்தோ (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) நாட்டையும் திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது. ஓ! கிருஷ்ணா, (அவர்களிடம் இருந்து) அவற்றைத் திரும்ப எடுத்துக் கொள்வது உட்பகையை உண்டாக்கிவிடக்கூடும் என்ற அச்சத்தால் உன்னாலேயே கூட அவ்வாறு செய்யமுடியாது.(17) ஒருவேளை அம்முயற்சி வெற்றிபெற்றாலும், பெரும் பிரச்சனைக்குப் பிறகே, அடைவதற்கரிதான அந்த மிகக் கடும் சாதனையை அடைய முடியும். பெரும் படுகொலைகளும், செல்வத்திற்குப் பேரிழப்பும் நேரிடும், ஒருவேளை மொத்த அழிவும்கூட ஏற்படலாம்.(18) எனவே, இரும்பாலாகாததும், மென்மையானதாக இருப்பினும், இதயங்கள் அனைத்தையும் துளைக்கவல்லதுமான ஓர் ஆயுதத்தைப் பயன்படுத்துவாயாக. அவ்வாயுதத்தை மீண்டும் மீண்டும் கூர்த்தீட்டி உன் உறவினர்களின் நாவுகளைச் சீர்திருத்துவாயாக" என்றார்.(19)
வாசுதேவன் {கிருஷ்ணன் வாசுதேவரிடம்}, "ஓ! தவசியே, இரும்பாலாகாததும், மென்மையானதும், இருப்பினும் அனைவரின் இதயங்களையும் துளைக்கவல்லதும், என் உறவினர்களின் நாவுகளைச் சீர்திருத்த நான் பயன்படுத்த வேண்டியதுமான அந்த ஆயுதம் எது?" என்று கேட்டான்.(20)
நாரதர் {கிருஷ்ணரிடம்}, "உன் சக்திக்குத் தக்கபடி உணவளிப்பது, மன்னிப்பது {பொறுமை}, நேர்மை, மென்மை, உரிய மரியாதை கொடுத்து கௌரவித்தல் ஆகியவற்றையே இரும்பாலாகாத அவ்வாயுதம் கொண்டுள்ளது.(21) கொடுஞ்சொற்கள் பேசும் உறவனிரின் கோபத்தையும், அவர்களது இதயங்கள், மனங்கள் மற்றும் இகழும் நாவுகளையும் மென்மையான வார்த்தைகளால் மட்டுமே அடக்குவாயாக.(22) தூய்மையான ஆன்மாவையும், பெருஞ்சாதனைகளையும், நண்பர்களையும் கொண்ட பெரிய மனிதனாக இல்லாத எவராலும், கனமான சுமையைத் தாங்கிக் கொள்ள முடியாது. நீ (விருஷ்ணிகளை ஆளும்) இந்தப் பெருங்கனத்தை உன் தோள்களில் சுமப்பாயாக.(23) மேடுபள்ளமில்லாத சமமான சாலையில் அனைத்து எருதுகளாலும் கனமான சுமைகளைச் சுமக்க முடியும். அவற்றில் பலமிக்கவையே கடினமான சாலைகளிலும் அத்தகு கனங்களைச் சுமக்கவல்லனவாகும்.(24) ஒற்றுமையின்மையால் போஜர்கள் மற்றும் விருஷ்ணிகள் அனைவருக்கும் அழிவே ஏற்படும். ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ அவர்களில் முதன்மையானவனாவாய். போஜர்களும், விருஷ்ணிகளும் அழியாமல் இருக்கத்தக்கவகையில் நீ செயல்படுவாயாக.(25)
ஞானியான ஒரு மனிதனிடம், நுண்ணறிவு, மன்னிப்பு {பொறுமை}, புலனடக்கம், ஈகை ஆகியவற்றைத் தவிர வேறேதும் இருக்காது.(26) தன் குலத்தை மேன்மையுறச் செய்வதே எப்போதும் புகழத்தக்கதும், மகிமையானதும், நீண்ட வாழ்வை அளிக்கக்கூடியதுமாகும். ஓ! கிருஷ்ணா, உன் உறவினர்களுக்கு அழிவு நேராத வகையில் நீ செயல்படுவாயாக.(27) ஓ! தலைவா, கொள்கை மற்றும் போர்க்கலை ஆகியவற்றைப் பொறுத்தவரையில், நீ அறியாதது ஒன்றுமில்லை[4].(28) ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, லோகபாலர்கள் அனைவரையும் நம்பியிருக்கும் அனைத்து உலகங்களையும் போல, யாதவர்கள், குகுரர்கள், போஜர்கள், அந்தகர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் அனைவரும் உன்னையே நம்பியிருக்கின்றனர். ஓ! மாதவா {கிருஷ்ணா}, முனிவர்கள் எப்போதும் உன் முன்னேற்றத்தையே வேண்டுகின்றனர்.(29) அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலத்தை அறிந்தவன் நீயே. உன்னை நம்பி மகிழ்ச்சியான வாழ்வை எதிர்பார்க்கும் யாதவர்கள் அனைவரிலும் முதன்மையானவன் நீயே" என்றார் {நாரதர்}".(30)
[4] கும்பகோணம் பதிப்பில், "ஓ பிரபுவே, சந்தி விக்கிரகமுதலிய ஆறு குணங்களை ப்ரயோகிப்பதும், யாத்திரை செய்வதும், வருங்கால நிகழ்காலங்களிலுள்ளதும் உம்மால் அறியப்படாதது ஒன்றுமில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ தலைவா, கொள்கையின் ஆறு பண்புகளையோ, போர் தொடுத்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் நீயே அனைத்தையும் கட்டுப்படுத்துகிறாய், அனைத்தையும் நீ அறிவாய்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 81ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |