Kshemadarsin and Kalakavrikshiya | Shanti-Parva-Section-82 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 82)
பதிவின் சுருக்கம் : குற்றம் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கான பாதுகாப்பின் அவசியத்தை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; இதை விளக்குவதற்காகக் கோசல மன்னன் க்ஷேமதர்சின் மற்றும் காலகவிருக்ஷீயர் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற உரையாடலைச் சொன்னது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இப்போது நான் உனக்குச் சொன்னது முதன்மையான வழிமுறைகளாகும். ஓ! பாரதா, இரண்டாம் வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. மன்னனின் நிலை மேன்மையடைய முயற்சிக்கும் ஒரு மனிதன், எப்போதும் அம்மன்னனால் பாதுகாக்கப்பட வேண்டும்.(1) ஓ! யுதிஷ்டிரா, கூலி கொடுக்கப்பட்ட, அல்லது கொடுக்கப்படாத {உன்னிடம் பணியாளாகவோ, இல்லாமலோ உள்ள} ஒரு மனிதன், உன் கருவூலத்தில் உள்ள செல்வங்கள் உன் அமைச்சரால் கையாடல் செய்யப்படுவதைச் சொல்ல வந்தால்,(2) நீ அவனைத் தனிமையில் சந்தித்து {அவன் சொல்வதைக் கேட்டு}, (களங்கம் கற்பிக்கப்பட்ட) அந்த அமைச்சரிடம் இருந்தும் அவனைப் பாதுகாக்க வேண்டும். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நிதியைக் கையாடல் செய்யும் அமைச்சர்கள், அத்தகு தகவல் தருவோரைக் கொல்ல முனைவார்கள்.(3) அரச கருவூலத்தைக் கொள்ளையடிப்போர், அதைக் காக்க முயலும் மனிதனை எதிர்ப்பதற்காக ஒன்றாகச் சேர்வார்கள். பின்னவன் {காக்க முயல்பவன்} பாதுகாப்பில்லாமல் இருந்தால் அவனை நிச்சயம் அழித்துவிடுவார்கள்.(4)
இது தொடர்பாகத் தவசி காலகவிருக்ஷீயர் Kalakavrikshiya, கோசலத்தின் மன்னனிடம் {க்ஷேமதர்சினிடம் Kshemadarsin} சொன்னது, பழங்கதை ஒன்றில் குறிப்பிடப்படுகிறது.(5) ஒரு காலத்தில் கோசல நாட்டின் அரியணை ஏறிய க்ஷேமதர்சினிடம் காலகவிருக்ஷீயர் எனும் தவசி வந்ததாக நாம் கேளவிப்படகிறோம்.(6) க்ஷேமதர்சினின் அதிகாரிகள் அனைவருடைய நடத்தையையும் ஆய்வு செய்ய விரும்பிய அந்தத் தவசி, தன் கையில் கூண்டுக்குள் அடைபட்ட ஒரு காக்கையுடன், அந்த மன்னனின் {க்ஷேமதர்சினின்} ஆட்சிப்பகுதிகள் ஒவ்வொன்றுக்கும் பயணித்தார்.(7) மனிதர்கள் அனைவரிடமும் அவர், "காக அறிவியலைப் படிப்பீராக. காகங்கள் எனக்கு நிகழ்காலத்தையும், கடந்த காலத்தையும், எதிர் காலத்தையும் சொல்கின்றன" என்றார்.(8) அந்த நாட்டில் இவ்வாறு அறிவித்துக் கொண்டு, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களின் துணையுடன் கூடிய அவர், அந்த மன்னனுடைய அதிகாரிகள் அனைவரும் செய்யும் தீச்செயல்களை நோக்கத் தொடங்கினார்.(9) அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர்} அந்த நாட்டில் நடைபெறும் அனைத்து காரியங்களையும் உறுதி செய்து கொண்டு, மன்னனால் நியமிக்கப்பட்டிருந்த அதிகாரிகள் அனைவரும் மோசடியில் ஈடுபடுவதையும் அறிந்து கொண்டு,(10) அம்மன்னனைக் காண வந்தார்.
கடும் நோன்புகளைக் கொண்ட அவர் அம்மன்னனிடம், "(உன் நாட்டைக் குறித்த) அனைத்தையும் நான் அறிவேன்" என்றார்.(11) மன்னனிடம் வந்த அவர் {காலகவிருக்ஷீயர்}, அலுவல் முத்திரைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவனுடைய அமைச்சனிடம், அவன் இந்த இடத்தில், இந்தத் தீங்கைச் செய்தான் என்பதையும், அரச கருவூலத்தை அவன் கொள்ளையடித்ததை இந்த இந்த மனிதர்கள் அறிவார்கள் என்பதையும் தனது காக்கை தன்னிடம் சொல்லியிருப்பதாகச் சொன்னார். "என் காக்கை இதைச் சொல்கிறது. இந்தக் குற்றத்தை ஏற்பாயாக. அல்லது அது பொய் என்பதை விரைந்து மெய்ப்பிப்பாயாக" என்றார்.(13) பிறகும் அந்தத் தவசி, அதேபோன்ற கையாடல்களைச் செய்த பிற அதிகாரிகளின் பெயர்களையும் அறிவித்து, "என் காகம் ஒருபோதும் எந்தப் பொய்யையும் சொன்னதில்லை" என்றும் சொன்னார்.(14) ஓ! குருகுலத்தோனே {யுதிஷ்டிரா}, இவ்வாறு அந்தத் தவசியால் குற்றஞ்சாட்டப்பட்டு, தீங்கடைந்த அரசு அதிகாரிகள் அனைவரும் (ஒன்றுசேர்ந்து), இரவில் அந்தத் தவசி உறங்கும்போது அந்தக் காகத்தைத் துளைத்தனர் {கொன்றனர்}.(15)
கூண்டுக்குள் துளைக்கப்பட்டுக் கிடக்கும் தன் காகத்தைக் கண்ட அந்த மறுபிறப்பாள {பிராமண} முனிவர் {காலகவிருக்ஷீயர்}, காலையில் க்ஷேமதர்சினிடம் சென்று, அவனிடம்,(16) "ஓ! மன்னா, நான் உன் பாதுகாப்பை நாடுகிறேன். நீ பலமிக்கவன், அனைவரின் வாழ்வு மற்றும் செல்வங்களுக்கும் நீயே தலைவன். எனக்கு உன் உத்தரவு கிடைத்தால், உனக்கான நன்மையை என்னால் சொல்ல முடியும். நான் என் நண்பனாகக் கருதும் உனக்காக வருந்தியும், என் அர்ப்பணிப்பால் தூண்டப்பட்டும், என் முழு இதயத்துடன் உனக்குத் தொண்டாற்றும் ஆயத்தத்துடனும் உன்னிடம் வந்திருக்கிறேன்.(17) உன் செல்வம் களவாடப்படுகிறது. கள்வர்களிடம் எந்தக் கருணையும் காட்டாமல், அஃதை உன்னிடம் வெளியிடவே நான் வந்தேன். என் நண்பனாக நான் கருதும் உன்னை விழிப்படையச் செய்யவே நல்ல குதிரையைத் தூண்டும் ஒரு சாரதியைப் போல நான் இங்கு வந்திருக்கிறேன்.(18) தன் நலனையும், செழிப்பையும், வளர்ச்சியையும் விரும்பும் ஒரு நண்பனானவன், தனக்கு நன்மை செய்வதற்காகவும், அர்ப்பணிப்பு மற்றும் கோபத்தால் உந்தப்பட்டும் அத்துமீறும் மற்றொரு நண்பனை மன்னிக்க வேண்டும் {அவனிடம் பொறுமை காக்க வேண்டும்}" என்றார்.(19)
மன்னன் அவரிடம் {கோசல மன்னன் க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, "என் நன்மைக்கானவற்றின் நான் குருடனல்ல என்பதால், நீர் சொல்வதனை நான் ஏன் பொறுத்துக் கொள்ள மாட்டேன்?(20) ஓ! மறுபிறப்பாளரே நான் உமக்கு அனுமதி அளிக்கிறேன். நீர் விரும்பியதை என்னிடம் சொல்லலாம். ஓ! பிராமணரே, நீ சொல்லும் அறிவுரைகளுக்கு நிச்சயம் நான் கீழ்ப்படிவேன்" என்று மறுமொழி கூறினான்.(21)
அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, "உன் பணியாட்களின் நன்மைகளையும், குற்றங்களையும் உறுதி செய்து கொண்டு, அவர்களின் கரங்களில் உனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் உறுதி செய்து கொண்டு, என் அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டு, உன்னிடம் அனைத்தையும் சொல்வதற்காகவே நான் இங்கு வந்தேன்.(22) ஓ! மன்னா, (மனிதகுலத்திற்கான) பழங்காலத்து ஆசான்கள், பிறருக்குத் தொண்டாற்றுவோருக்கான சாபங்கள் என்னென்ன என்பதை அறிவித்திருக்கின்றனர். மன்னனுக்குத் தொண்டாற்றுவோரின் நிலையானது வலிநிறைந்ததும், இழிவானதுமாகும்.(23) எவன் மன்னர்களுடன் தொடர்பைக் கொண்டிருக்கிறானோ, அவன் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுடன் தொடர்புடையவன் என்று சொல்லப்படுகிறான். மன்னர்களுக்குப் பல நண்பர்கள் இருப்பதைப் போலவே பல எதிரிகளும் இருக்கிறார்கள்.(24) மன்னர்களுக்குத் தொண்டாற்றுபவர்கள், அவர்கள் அனைவருக்கும் அஞ்ச வேண்டும். மேலும், ஓ! ஏகாதிபதி, அவர்கள் ஒவ்வொரு கணமும் மன்னனுக்கும் அஞ்ச வேண்டும்.(25)
மன்னனுக்குத் தொண்டாற்றும் ஒரு மனிதன், மன்னனின் வேலையைச் செய்வதில் கவனக்குறைவாக இருக்க முடியாது. உண்மையில், செழிப்பை வெல்ல விரும்பும் ஒரு பணியாள், தன் கடமைகளை ஆற்றுவதில் ஒருபோதும் கவனக்குறைவுடன் இருக்கக்கூடாது.(26) அவனது கவனக்குறைவு {அஜாக்ரதை} மன்னனைக் கோபமடையச் செய்யும், அந்தக் கோபம் (அந்தப் பணியாளுக்கு) அழிவைக் கொண்டுவரும். எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனக் கவனமாகக் கற்கும் ஒருவன், சுடர்மிக்க நெருப்பின் முன் இருப்பதைப் போலவே மன்னனின் முன்பு அமர்ந்திருக்க வேண்டும்.(27) எந்தக் கணத்திலும் உயிரைவிட ஆயத்தமாக இருக்கும் ஒருவன், மன்னனே அனைத்திலும் பலமிக்கவன், அனைவரின் வாழ்வு மற்றும் செல்வத்திற்குத் தலைவன் என்பதாலும், கடும் நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்றவன் என்பதாலும், அவன் மன்னனிடம் கவனமாகப் பணியாற்ற வேண்டும்.(28) அவன், மன்னனின் முன்னிலையில் தீய பேச்சைப் பேசவோ, உற்சாகமில்லாமல், அல்லது அலட்சியமான நிலையில் அமரவோ, அவமதிக்கும் தன்மையுடன் காத்திருக்கவோ, புறக்கணிக்கும் வகையில் நடக்கவோ, இழிவான நிலைகள் மற்றும் அவமதிக்கும் வகையிலான அங்க அசைவுகளை வெளிக்காட்டவோ எப்போதும் அஞ்ச வேண்டும்.(29) மன்னன் மனம்நிறைந்தால், அவன் ஒரு தேவனைப் போலச் செழிப்பைப் பொழிவான். சீற்றமடைந்தாலோ, சுடர்மிக்க நெருப்பைப் போல அவன் வேர்களையே எரித்துவிடுவான்.(30)
ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, இதை யமன் சொல்லியிருக்கிறான். இதன் உண்மை உலகக் காரியங்களின் தென்படுகின்றன. (இந்தக் கருதுகோள்களின் படி செயல்பட்டு) நான் இப்போது எது உனக்குச் செழிப்பை அளிக்குமோ அதைச் செய்வேன்.(31) என்னைப் போன்ற நண்பர்கள், உன்னைப் போன்ற நண்பர்களின் கேடு காலங்களில் தங்களது நுண்ணறிவால் உதவி செய்வார்கள். ஓ! மன்னா, என் காகமானது உன் காரியத்தைச் செய்ததற்காகக் கொல்லப்பட்டிருக்கிறது.(32) எனினும், இதற்காக உன்னை நான் குற்றஞ்சாட்ட முடியாது. (இந்தப் பறவையைக் கொன்றவர்கள் எவர்களோ) அவர்களால் நீ விரும்பப்படவில்லை. உன் நண்பர்கள் யார், உன் எதிரிகள் யார் என்பதை உறுதி செய்து கொள்வாயாக. நுண்ணறிவுக்காக யாரிடமும் பணியாமல் அனைத்தையும் நீயே செய்வாயாக.(33) உன் நிறுவனத்தில் {அரசு அலுவலகங்களில்) உள்ள அனைவரும் கையாடல் செய்பவர்களே. அவர்கள் உன் குடிமக்களுக்கான நன்மையை விரும்பவில்லை. நான் அவர்களது பகைமைக்கு ஆளாகிவிட்டேன்.(34) உன்னுடன் தொடர்பிலிருக்கும் பணியாட்களுடன் சேர்ந்து சதி செய்யும் அவர்கள், உன்னை அழித்துவிட்டு, உனக்குப் பிறகு இந்த நாட்டை அடைய பேராசைப்படுகிறார்கள். எனினும், எதிர்பாராத சூழ்நிலைகளால் அவர்களது திட்டங்கள் வெற்றியடையவில்லை.(35)
ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, அந்த மனிதர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக நான் உன் நாட்டை விட்டு வேறேதேனும் ஆசிரமத்திற்குச் செல்லப் போகிறேன். எனக்கு உலகம் சார்ந்த விருப்பமேதுமில்லை, இருப்பினும், ஓ! தலைவா, வஞ்சக எண்ணம் கொண்ட அந்த மனிதர்கள் என் காக்கையின் மீது இந்தக் கணையை ஏவி, அப்பறவையை யமலோகம் அனுப்பிவிட்டனர். ஓ! மன்னா, தவங்களால் மேன்மையடைந்த பார்வையைக் கொண்ட கண்களுடன் இதை நான் கண்டேன்.(36,37) முதலைகளும், சுறாக்களும், திமிங்கலங்களும் நிறைந்த ஆற்றைப் போலிருக்கும் உன் நாட்டை இந்தக் காக்கை ஒன்றின் துணையுடன் கடந்திருக்கிறேன்.(38) உண்மையில், (விழுந்த) மரங்கள், சிதறிக்கிடக்கும் பாறைகள், முட்புதர்கள், சிங்கங்கள், புலிகள், மற்றும் பிற இரைதேடும் விலங்குகளின் விளைவால் புகமுடியாததும், அணுகமுடியாததுமான இமாலய பள்ளத்தாக்கைப் போன்ற உன் ஆட்சிப்பகுதிகளை அந்தப் பறவையின் துணையின் மூலமே நான் கடந்து வந்தேன்.(39) இருளின் விளைவால் அணுகமுடியாததாக இருக்கும் ஒரு பகுதியை ஒளியின் உதவியுடனும், கடக்க முடியாத ஆற்றை ஒரு படகின் உதவியுடனும் கடக்க முடியும் என்று கல்விமான்கள் சொல்கின்றனர். எனினும், அரச காரியங்களின் வழியைக் கடக்கவோ, ஊடுருவவோ எந்த வழிமுறைகளும் கிடையாது.(40)
உன் நாடானது, இருளில் மூழ்கியிருக்கும் அணுக முடியாத காட்டைப் போன்றதாகும். (அதன் தலைவனாக இருக்கும்) நீயே அதை நம்ப முடியாது. எனில், என்னால் எவ்வாறு முடியும்?(41) நன்மையும், தீமையும் இங்கே ஒன்றாகவே கருதப்படுகின்றன. எனவே, இங்கே தங்குவது பாதுகாப்பானதில்லை. அறச்செயல்கள் செய்வோர் இங்கே இறக்கின்றனர், அதே வேளையில் நீதியற்ற செயல்களைச் செய்வோருக்கு எந்த ஆபத்தும் இல்லை.(42) நீதியின் தேவைக்கேற்றபடி நீதியற்ற செயல்களைச் செய்வோர் கொல்லப்பட வேண்டுமேயன்றி ஒருபோதும் நல்லோர் தங்கள் செயல்களுக்காகக் கொல்லப்படக்கூடாது. எனவே, இந்த நாட்டில் நீண்ட காலம் தங்குவது எவனுக்கும் நல்லதல்ல. மான உணர்வு கொண்ட எந்த மனிதனும் இந்த நாட்டைவிட்டு விரைவில் அக வேண்டும்.(43) ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, சீதை என்ற பெயரில் ஓர் ஆறு இருக்கிறது. படகும் அதில் மூழ்கிவிடும். இந்த உனது நாடும் அந்த ஆற்றைப் போலவே இருக்கிறது. அதைச் சுற்றிலும் அனைத்தையும் அழிக்கும் வலை இருப்பதாகத் தெரிகிறது.(44) தேன் சேகரிப்பவனுக்காகக் காத்திருக்கும் வீழ்ச்சியைப் போலவோ, நஞ்சைக் கொண்ட கவர்ச்சிகரமான உணவைப் போலவோ நீ இருக்கிறாய். உன் இயல்பானது இப்போது நேர்மையற்ற மனிதர்களுக்கானதைப் போல அன்றி நல்லோருக்கானதாக இல்லை. ஓ! மன்னா, நீ கடும் நஞ்சுமிக்கப் பாம்புகள் நிறைந்த ஒரு குழியைப் போன்றவன்.(45)
ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, இனிய நீரால் நிறைந்திருப்பினும், அணுகுவதற்கு மிகக் கடினமானதும், அடர்ந்து வளர்ந்த காரிரங்கள் {மூங்கில்} மற்றும் முள் பிரம்பு ஆகியவற்றுடன் கூடியதும், ஆழமான கரைகளைக் கொண்டதுமான ஓர் ஆற்றுக்கு ஒப்பாக இருக்கிறாய். நாய்கள், கழுகுகள் மற்றும் நரிகளுக்கு மத்தியில் நீ ஓர் அன்னத்தைப் போல இருக்கிறாய்.(46,47) பெரும் மரத்தில் இருந்து வாழ்வாதாரத்தைப் பெறும் புல்லுருவிகள், அபரிமிதமாக வளர்ந்து பெருகி, இறுதியாக மரத்தையே முழுமையாக மறைத்துவிடும்.(48) காட்டுத்தீ ஏற்படும்போது, அந்தப் புல்லுருவிகளை முதலில் பிடித்தாலும், அவற்றோடு சேர்த்து அந்தத் தலைமை மரத்தையும் எரித்துவிடும். ஓ மன்னா, உன் அமைச்சர்களே நான் சொல்லும் புல்லுருவிகளுக்கு ஒப்பாக இருக்கின்றனர். நீ சோதித்து அவர்களைச் சரி செய்வாயாக.(49) அவர்கள் உன்னால் வளர்க்கப்படுகின்றனர். ஆனால் உனக்கு எதிராகச் சதி செய்யும் அவர்கள் உனது செழிப்பை அழிக்கின்றனர்.(50)
ஒருபாம்புடன் ஓர் அறையில் வாழ்வதைப் போலவோ, ஒரு வீரனுடைய மனைவியின் காதலனை {ஜாரப்புருஷனைப்} போலவோ உன் பணியாட்களின் தவறுகளை (உன்னிடமிருந்து) மறைத்து, தொடர்ச்சியான பயங்கர ஆபத்துடன் உன் வசிப்பிடத்தில் வாழ்கிறேன். என் சகாவாக வசிக்கும் மன்னனின் நடத்தையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம்.(51) மன்னன் தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறானா, அவனுடைய பணியாட்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறார்களா, அவர்கள் அவனை விரும்புகிறார்களா, அவன் தன் குடிமக்களை விரும்புகிறானா என்பனவற்றை நான் அறிய விரும்பினேன். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவற்றை உறுதிசெய்துகொள்ளும் நோக்குடனே நான் உன்னிடம் வந்தேன்.(52) பசித்தவனுக்கு உணவைப் போல நீ எனக்கு அன்பானவனாக இருக்கிறாய். எனினும், தாகமடங்கிய மனிதன் பானத்தை விரும்பாததைப் போல எனக்கு உன் அமைச்சர்களைப் பிடிக்கவில்லை.(53) நான் உன் நன்மைக்கு முனைவதால் அவர்கள் என்னிடம் களங்கம் காண்கின்றனர். என்னுடனான அவர்களது பகைக்கும் வேறேதும் காரணமில்லை என்பதில் ஐயமில்லை.(54) நான் அவர்களுடைய களங்கங்களை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்கிறேன். காயமடைந்த பாம்புக்கு அஞ்சுவதைப் போலத் தீய இதயத்தைக் கொண்ட எதிரியிடம் அச்சம் கொள்ள வேண்டும்" என்றார் {{காலகவிருக்ஷீயர்}.(55)
அதற்கு மன்னன் {மன்னன் க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, "ஓ! பிராமணரே, என் அரண்மனையில் தங்குவீராக. நான் எப்போதும் உம்மை மதித்து, கௌரவித்து, வழிபட்டு வருகிறேன்.(56) உம்மை விரும்பாதோர் என்னுடன் வசிக்க மாட்டார்கள். (நீர் சொன்ன) அந்த மனிதர்களை என்ன செய்யலாம் என்பதை நீரே சொல்வீராக.(57) ஓ! புனிதமானவரே, தண்டக்கோல் {செங்கோல்} முறையாகத் தரிக்கப்படுகிறதா, என் நாட்டில் அனைத்தும் நன்றாகச் செய்யப்படுகிறதா எனக் காண்பீராக. அனைத்தையும் சிந்தித்து நான் செழிப்பையடையும் வழியில் என்னை வழிநடத்துவீராக" என்றான் {க்ஷேமதர்சின்}.(58)
அதற்குத் தவசி {காலகவிருக்ஷீயர் மன்னன் க்ஷேமதர்சினிடம்}, "அவர்களது குற்றமான இந்த முதல் நிகழ்வுக்குக் கண்ணை மூடிக்கொண்டு {அதை வெளிப்படுத்தாமல்} அவர்களை ஒருவர் பின் ஒருவராகப் பலவீனப்படுத்துவாயாக. அவர்களது குற்றங்களை மெய்ப்பிட்டு ஒருவர் பின் ஒருவராகத் தாக்குவாயாக.(59) பலர் ஒரே குற்றத்தைச் செய்யும்போது, ஒன்றாகச் செயல்படுவதால் அவர்களால் முள்ளின் கூர்மையை மழுங்கடிக்க முடியும். (சந்தேகத்திற்காளாகி உனக்கு எதிராகச் செயல்படும்) உன் அமைச்சர்கள் உன் கமுக்கமான ஆலோசனைகளை வெளியிடும் வரை, அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க உன்னை நான் அறிவுறுத்துவேன்.(60) எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இயல்பிலேயே கருணை கொண்டவர்களும், எவருக்கும் துன்பம் தர விரும்பாதவர்களுமான பிராமணர்கள் ஆவோம். நாங்கள் எங்கள் நன்மையை விரும்புவதைப் போலவே, உன் நன்மையையும், பிறரின் நன்மையையும் விரும்புகிறோம்.(61)
ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, நான் என்னைக் குறித்துச் சொல்கிறேன். நான் உன் நண்பன். தவசி காலகவிருக்ஷீயன் என்ற பெயரில் நான் அறியப்படுகிறேன்.(62) நான் எப்போதும் உண்மையைப் பின்பற்றுகிறேன். உன் தந்தை என்னைத் தமது விருப்பத்திற்குரிய நண்பனாகக் கருதினார். ஓ! மன்னா, உன் தந்தை ஆட்சி செய்கையில் நாட்டுக்குத் துன்பம் நேர்ந்தபோது, (அதை விரட்ட) அனைத்துத் தொழில்களையும் கைவிட்டுத் தவங்கள் பலவற்றைச் செய்தேன். உன் மீது கொண்ட அன்பின் காரணமாக, நீ (தகாத மனிதர்களிடம் நம்பிக்கை வைக்கும்) தவற்றை மீண்டும் இழைக்காமல் இருப்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்.(64) நீ எந்தத் தொல்லையும் இல்லாமல் நாட்டை அடைந்தாய். அதன் இன்பதுன்பங்களோடு தொடர்புடைய அனைத்தையும் சிந்தித்துப்பார். நீ உன் நாட்டில் அமைச்சர்களைக் கொண்டிருக்கிறாய். ஆனால், ஓ! மன்னா, ஏன் உனக்குக் கவனக்குறைவெனும் குற்றவுணர்வு ஏற்பட வேண்டும்?" என்றார்.(65)
ஓ! மன்னா {க்ஷேமதர்சினா}, நான் என்னைக் குறித்துச் சொல்கிறேன். நான் உன் நண்பன். தவசி காலகவிருக்ஷீயன் என்ற பெயரில் நான் அறியப்படுகிறேன்.(62) நான் எப்போதும் உண்மையைப் பின்பற்றுகிறேன். உன் தந்தை என்னைத் தமது விருப்பத்திற்குரிய நண்பனாகக் கருதினார். ஓ! மன்னா, உன் தந்தை ஆட்சி செய்கையில் நாட்டுக்குத் துன்பம் நேர்ந்தபோது, (அதை விரட்ட) அனைத்துத் தொழில்களையும் கைவிட்டுத் தவங்கள் பலவற்றைச் செய்தேன். உன் மீது கொண்ட அன்பின் காரணமாக, நீ (தகாத மனிதர்களிடம் நம்பிக்கை வைக்கும்) தவற்றை மீண்டும் இழைக்காமல் இருப்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்.(64) நீ எந்தத் தொல்லையும் இல்லாமல் நாட்டை அடைந்தாய். அதன் இன்பதுன்பங்களோடு தொடர்புடைய அனைத்தையும் சிந்தித்துப்பார். நீ உன் நாட்டில் அமைச்சர்களைக் கொண்டிருக்கிறாய். ஆனால், ஓ! மன்னா, ஏன் உனக்குக் கவனக்குறைவெனும் குற்றவுணர்வு ஏற்பட வேண்டும்?" என்றார்.(65)
இதன்பிறகு, அந்தக் கோசல மன்னன் க்ஷத்திரிய வகையில் இருந்து ஓர் அமைச்சரையும், அந்தப் பிராமணக் காளையை {காலகவிருக்ஷீயரைத்} தன் புரோகிதராகவும் நியமித்துக் கொண்டான்.(66) இம்மாற்றங்களைச் செய்த பிறகு, அந்தக் கோசலத்தின் மன்னன் {க்ஷேமதர்சின்} மொத்த உலகத்தையும் அடக்கி, பெரும்புகழை அடைந்தான். தவசி காலகவிருக்ஷீயர், மன்னனுக்காகப் பெரும் வேள்விகளைச் செய்து தேவர்களை வழிபட்டார்.(67) அந்தக் கோசல மன்னன், அவரது நல்ல ஆலோசனைகளைக் கேட்டு, மொத்த உலகையும் கைப்பற்றி, அந்தத் தவசி சொன்ன வழியிலே அனைத்து வகையிலும் நடந்து கொண்டான்" என்றார் {பீஷ்மர்}.(68)
சாந்திபர்வம் பகுதி – 82ல் உள்ள சுலோகங்கள் : 68
ஆங்கிலத்தில் | In English |