Appointment of Ministers! | Shanti-Parva-Section-85 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 85)
பதிவின் சுருக்கம் : எந்தெந்த வர்ணங்களில் எத்தனை அமைச்சர்களை நியமிக்க வேண்டும்; அவர்கள் எத்தகைய பண்புகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்; குற்றவாளிகளுக்கு எவ்வாறு தண்டனை வழங்க வேண்டும்; தூதர், மெய்க்காப்பாளன், அமைச்சர், படைத்தலைவன் ஆகியோர் என்ன திறன்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பன குறித்து யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {பீஷ்மரே}, பேரருளையும், நித்திய புகழையும் அடைய ஒரு மன்னன் தன் குடிமக்களை எவ்வழிமுறையின் ஆள வேண்டும்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தூய ஆன்மாவையும், தன் குடிகளை ஆளும் கடமையில் கவனத்தையும் கொண்ட ஒரு மன்னன், நீதியுடன் தன்னை நடத்திக் கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் அவன் தகுதியையும், புகழையும் ஈட்டுவான்" என்றார்.(2)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மன்னன், எவருடன் எவ்வழியில் நடந்து கொள்ள வேண்டும்? ஓ! பெரும் ஞானம் கொண்டவரே, கேட்கும் எனக்கு முறையாக அனைத்தையும் சொல்வதே உமக்குத் தகும்.(3) நீர் ஏற்கனவே சொன்னவற்றில் ஒரு மனிதனுக்கான அறங்களில் {பண்புகளில்} எதுவும் எந்த ஒரு தனி மனிதனிடமும் காணப்படவில்லை என்பதே என் நம்பிக்கை" என்றான்[1].(4)
[1] கும்பகோணம் பதிப்பில், "உம்மால் முன் சொல்லப்பட்ட புருஷனுக்குரிய இக்குணங்கள் யாவும் ஒரு புருஷனிடமிராவென்று எனக்குத் தோன்றுகிறது; ஆகையால், அரசன் எவ்விதவ்யவகாரத்தை எந்த அதிகாரிகளுடனிருந்து நிர்ணயஞ்செய்ய வேண்டும்? இந்த ப்ரஸ்னத்திற்குத் தகுந்த உத்தரஞ்சொல்லப் பிரார்த்திக்கிறேன்" என்று இருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, நீ பெரும் நுண்ணறிவு கொண்டவனாக இருக்கிறாய். இது நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. அந்த நற்குணங்கள் அனைத்தையும் கொண்ட மனிதன் மிக அரிதானவனே.(5) சுருக்கமாகச் சொன்னால், கவனமான தேடலுக்குப் பிறகும் கூட {எவனிடமும்} இத்தகு நடந்தை (சொல்லப்படும் அறங்கள் அனைத்தின் இருப்பும்) காணப்படுவது மிக அரிதே. எனினும், உன்னால் எந்த வகையான அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உனக்குச் சொல்கிறேன்.(6)
வேதகல்வி, கண்ணிய உணர்வு ஆகியவற்றைக் கொண்டவர்களும், சனாதக வகையைச் சேர்ந்தவர்களும், தூய நடத்தை கொண்டவர்களுமான நான்கு {4} பிராமணர்களும்; உடல் பலம் கொண்டவர்களும், ஆயுதந்தரிக்க வல்லவர்களுமான எட்டு {8} க்ஷத்திரியர்களும்,(7) செல்வம் படைத்தவர்களான இருபத்தோரு {21} வைசியர்களும், பணிவானவர்களும், தூய நடத்தை கொண்டவர்களும், தினசரி கடமைகளில் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களுமான மூன்று {3} சூத்திரர்களும்,(8) புராணங்கள் மற்றும் எட்டு முக்கிய அறங்களை[2] {பண்புகளைக்} குறித்த அறிவு கொண்டவனான ஒரு சூதனும் உன் அமைச்சர்களாக இருக்க வேண்டும். {ஆக மொத்தம் 37 அமைச்சர்கள்}. அவர்கள் அனைவரும் ஐம்பது வயதைக் கடந்தவர்களாகவும், கண்ணிய உணர்வு கொண்டவர்களாகவும், பொறாமையில் இருந்து விடுபட்டவர்களாகவும்,(9) சுருதிகள் மற்றும் ஸ்மிருதிகளை அறிந்தவர்களாகவும், பணிவுடையவர்களாகவும், நடுநிலையாளர்களாகவும், வழக்காடுபவர்களின் மத்தியில் செயலின் பல்வேறு வகைகளைக் குறித்துச் சொல்லி தீர்வை எட்ட ஆயத்தமாக இருப்பவர்களாகவும், பேராசையில் இருந்து விடுபட்டவர்களாகவும்,(10) வியசனங்கள் என்று அழைக்கப்படும் ஏழு அதிபயங்கரத் தீமைகளில்[3] இருந்து விடுபட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மன்னன், {வழக்கு விசாரணையின்போது} அந்த எட்டு அமைச்சர்களுக்கு மத்தியில் ஆலோசிக்க வேண்டும்[4].(11) மேலும் அவன் {மன்னன்}, அந்த ஆலோசனையின் விளைவுகளைத் தன் குடிமக்களுக்கான செய்தியாகத் தன் நாட்டில் வெளியிட வேண்டும். நீ எப்போதும் இத்தகு நடத்தையையே பின்பற்றி உன் மக்களைக் கண்காணிக்க வேண்டும்.(12)
[2] கும்பகோணம் பதிப்பில், இந்த எட்டுக் குணங்கள் "கேட்க விருப்பம், கேட்பது, அறிவது, தரிப்பது, ஊகிப்பது, புத்தியால், விலக்குவது, விஜ்ஞானம், தத்வஜ்ஞானம்" ஆகியன என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில் இதற்கு அடிக்குறிப்பாக, "வேட்டை, சொக்கட்டான், பெண்டிர், குடியெனக் காமத்தாலுண்டவன நான்கும், சரீரதண்டம், கடுஞ்சொல், பொருளை அபகரித்தல் எனக் கோபத்தாலுண்டவன மூன்றுமாம்" என்றிருக்கிறது.[4] மொத்தம் 37 அமைச்சர்கள் என்று சொல்லிவிட்டு இங்கு எட்டு அமைச்சர்கள் என்று சொல்லப்படுவது ஏன்? பிற பதிப்புகளையும் ஒப்பு நோக்க வேண்டும். கும்பகோணம் பதிப்பில், "வித்தைகளைக் கற்றவர்களும், ஸமர்த்தர்களும், பிரம்மச்சர்யத்தை முடித்தவர்களும், பரிசுத்தர்களுமான நான்கு பிராம்மணர்களையும், பலசாலிகளும், ஆயுதபாணிகளுமான பதினெட்டு க்ஷத்திரியர்களையும் நிறைந்த பொருளுள்ள இருபத்தொரு வைஸ்யர்களையும், வணக்கமுள்ளவர்களும், முந்திய காரியங்களில் பரிசுத்தர்களாயிருந்தவர்களுமான மூன்று சூத்திரர்களையும் (கேட்க விருப்பம், கேட்பது, அறிவது, தரிப்பது, ஊகிப்பது, புத்தியால், விலக்குவது, விஜ்ஞானம், தத்வஜ்ஞானம் என்னும்) எட்டுக் குணங்களுடன் கூடினவரும், புராணங்களைக் கற்றவரும், ஐம்பது பிராயமுள்ளவரும், ஸமர்த்தரும், அஸூயை இல்லாதவரும், வேதங்களையும், தர்மசாஸ்திரங்களையும் அறிந்தவரும், வணக்கமுள்ளவரும், ஸமமாகப் பார்க்கிறவரும் விவாதமுள்ளவர்களுக்குச் செய்ய வேண்டிய காரியத்தில் சக்தியுள்ளவரும், பொருள்களில் ஆசையில்லாதவரும் மிக்கக் கொடுமையுள்ள ஏழு வித விசனங்களில்லாதவருமான ஸூதரையும் அமாத்யர்களாகச் செய்ய வேண்டும். எட்டு மந்திரிகளின் நடுவில் அரசன் ஆலோசனையைத் தீர்மானிக்க வேண்டும். பிறகு, ராஜ்யத்திலுள்ள பிரதான அதிகாரியிடம் அனுப்பித் தெரிவிக்க வேண்டும். இவ்வித வ்யவகாரத்துடன் எப்பொழுதும் நீ பிரஜைகளைப் பார்த்து வர வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தகுதி படைத்த ஆலோசகர்களைக் குறித்து நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன். இதன்படி நடந்து கொள்வாயாக. வேதங்களைக் கற்றவர்களும் துணிச்சல்மிக்கவர்களும், அறவோர்களும், தூய்மையானவர்களுமான நான்கு பிராமணர்கள் அதில் இருக்க வேண்டும். தங்கள் முந்தைய பணிகளில் தூய்மையாக இருந்த பணிவுள்ள மூன்று சூத்திரர்கள் இருக்க வேண்டும். துணிவுள்ளவரும், தீய குணம் இல்லாதவரும், ஐம்பது வயதையுடையவருமான ஒரு சூதர் இருக்க வேண்டும். அவர் பழங்கதைகளைச் சொல்பவராகவும், எட்டு பண்புகளைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும். ஸ்மிருதி உரைகளைப் புரிந்து கொண்டவராகவும், பணிவுள்ளவராகவும், நடுநிலையுடன் கூடியவராகவும் அவர் இருக்க வேண்டும். செல்வத்தில் பேராசையுடன் சச்சரவுகள் நேரும்போது, என்ன செய்யப்பட வேண்டும் என்பதை அறிந்தவராக அவர் இருக்க வேண்டும். ஒரு குற்றத்தைக் குறித்த தீர்மானம் எட்டப்படும்போது, மன்னன் அந்த எட்டு அமைச்சர்களின் மத்தியில் இருந்து ஆலோசிக்க வேண்டும். அவர்கள் {அந்த எட்டு அமைச்சர்களும்} அதி பயங்கரமான ஏழு தீமைகள் அற்றவர்களாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது. இதன் முடிவில் பிபேக்திப்ராய், பதினெட்டு க்ஷத்திரியர்கள், இருபத்தோரு வைசியர் என்றிருந்ததைச் செம்பதிப்பில் தவிர்த்துவிட்டார்கள் என்று அடிக்குறிப்பில் தெரிவிக்கிறார். எனவே, நாம், "4 பிராமணர்கள், 18 க்ஷத்திரியர்கள் {கங்குலியில் 8 என்று இருந்தாலும்கூட}, 21 வைசியர்கள், 3 சூத்திரர்கள், 1 சூதர் என மொத்தம் 47 அமைச்சர்கள்" என்றும், "அவர்களில் எட்டு அமைச்சர்களின் மத்தியில் வைத்து அரசன் எந்தக் குற்றத்தையும் ஆலோசிக்க வேண்டும் என்றும் கொள்ளலாம். அல்லது பிபேக்திப்ராயின் கூற்றை ஏற்கலாம். அவ்வாறு கொண்டால் ஆலோசிக்கத்தக்க அமைச்சர்கள் என 4 பிராமணர், 3 சூத்திரர், 1 சூதர் மட்டும்தான் கணக்கில் வருவர்.
பொருளின் உரிமை குறித்து இரு மனிதர்களிடையிலான சச்சரவின் பேரில் உன்னிடம் கொடுக்கப்பட்டவற்றை, நீ ஒருபோதும் பறிமுதல் செய்யவோ, உனதாகக் கொள்ளவோ கூடாது. அத்தகு நடத்தை நீதி நிர்வாகத்தைக் கெடுத்துவிடும். உன் நீதி நிர்வாகம் இவ்வாறு பழுதுபட்டால், பாவமே உன்னைப் பீடிக்கும்.(13) அஃது உன் நாட்டையும் பீடித்து, பருந்தைக் கண்ட சிறு பறவைகளைப் போல உன் மக்களை அஞ்சவைக்கும். பிறகு உனது நாடானது, கடலில் உடைந்த படகைப் போல உருகி {அழிந்து} விடும்.(14) மன்னன் தன் குடிகளை அநீதியுடன் ஆண்டால், அவனது இதயம் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, சொர்க்கத்தின் கதவானது அவனுக்கு எதிராகச் சாத்தப்படும்.(15) ஓ! மனிதர்களில் காளையே, ஒரு நாடானது நீதியிலேயே தன் வேரைக் கொண்டுள்ளது. நீதி வழங்கும் ஆசனத்தில் அமர்ந்து, தன்னலத்துடன், அநீதியாகச் செயல்படும் அமைச்சரும், அல்லது மன்னனின் மகனும் {இளவரசனும்}, காரியங்களின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, தன்னலத்தால் உந்தப்பட்டு நியாயமில்லாமல் நடந்து கொள்ளும் அதிகாரிகள் அனைவரும் அந்த மன்னனுடன் சேர்ந்து நரகில் மூழ்குவார்கள்.(16,17)
வலியோரால் ஒடுக்கப்பட்டு, பரிதாபகரமான ஒப்பாரிகளில் ஈடுபடும் ஆதரவற்ற மனிதர்கள் தங்கள் பாதுகாவலனை மன்னனிடமே கொண்டுள்ளனர்.(18) இரு தரப்புகளுக்கிடையிலான சச்சரவு வழக்குகளில், சாட்சிகளின் ஆதார அடிப்படையிலேயே தீர்மானம் எட்டப்பட வேண்டும். வழக்காளிகளில் ஒருவர் சாட்சி ஏதும் இல்லாமல், ஆதரவற்றவராக இருந்தால், மன்னன் அந்த வழக்கில் சிறப்பான கவனத்தைச் செலுத்த வேண்டும்.(19) குற்றவாளிகள் அவர்கள் செய்த குற்றங்களின் அடிப்படையில் தண்டனை பெற மன்னன் ஆவன செய்ய வேண்டும். செல்வந்தர்கள் {குற்றமிழைக்கும்போது}, அபராதங்கள் மற்றும் பறிமுதல்கள் செய்வதன் மூலமும், ஏழைகள் {குற்றமிழைக்கும்போது}, சுதந்திரம் இழக்கச் செய்வதன் மூலமும் தண்டிக்கப்பட வேண்டும்.(20) மிகத்தீய நடத்தை கொண்டோரை, உடற்சார் துன்பங்களின் மூலம் மன்னன் தண்டிக்க வேண்டும். நல்லோர் அனைவரையும் மன்னன் இனிய சொற்கள் மற்றும் செல்வக்கொடைகளின் மூலம் பேணிக் காக்க வேண்டும்.(21) மன்னனைக் கொல்ல முனைபவன், பல்வேறு வழிமுறைகளின் மூலமான மரணத் தண்டனையால் தண்டிக்கப்பட வேண்டும். தீவைத்தல், களவு, வர்ணக்கலப்புக்கு வழிவகுக்கும் வகையில் பெண்களின் துணையை நாடுதல் ஆகிய குற்றங்களைச் செய்பவனும் அதே வகையில் தண்டிக்கப்பட வேண்டும்.
ஓ! ஏகாதிபதி, தண்ட அறிவியலின் விதிகளுக்கு ஏற்புடைய வகையிலும் முறையாகத் தண்டனை அளிக்கும் மன்னன் அச்செயலால் எந்தப் பாவத்தையும் இழைப்பதில்லை. மறுபுறம், அவன் அழியா தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறான்.(23) காரணமின்றித் தண்டனைகளை விதிக்கும் மூட மன்னன், இம்மையில் புகழ்க்கேட்டை ஈட்டி, மறுமையில் நரகில் மூழ்குகிறான்.(24) ஒருவன் வேறொருவரின் குற்றத்திற்காகத் தண்டிக்கப்படக்கூடாது. (குற்றவியல்) சட்டத்தை நன்கு சிந்தித்துப் பார்த்த பிறகே, ஒரு மனிதன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படவோ, விடுவிக்கப்படவோ வேண்டும்.(25)
ஒரு மன்னன் எந்தச் சூழ்நிலையிலும் ஒரு தூதரைக் கொல்லக்கூடாது. தூதரைக் கொல்லும் மன்னன், தன் அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து நரகில் மூழ்குவான்.(26) தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை பற்றுறுதியுடன் சொன்ன ஒரு தூதனைக் கொல்லும் மன்னன், தன் மூதாதையர்களுக்குக் கருவைக் கொன்ற பாவத்தைத் தேடித் தருகிறான்.(27) ஒரு தூதன், உயர்ந்த குடிபிறப்பு, நாநயம், புத்திக்கூர்மை, இனிய பேச்சு, தனக்குக் கொடுக்கப்பட்ட செய்தியைப் பற்றுறுதியுடன் கூறல், நல்ல நினைவுத்திறன் ஆகிய ஏழு திறமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.(28) மன்னனைப் பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்களும் அதே வகைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும். தலைநகரையோ, நகரரணையோ காக்கும் அதிகாரியும் அதே திறன்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.(29)
மன்னனின் அமைச்சர், சாத்திரங்களின் தீர்மானங்களை அறிந்தவராக, போர்களை வழிநடத்துபவராக, உடன்படிக்கைகளை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும். மேலும் அவர், நுண்ணறிவு, துணிவு, பணிவு, ஆகியவற்றைக் கொண்டவராகவும், இரகசியங்களைக் காப்பவராகவும் இருக்க வேண்டும்.(30) அவர் உயர் குடி பிறப்பையும், மனோ பலத்தையும், தூய நடத்தையும் கொண்டவராக இருக்க வேண்டும். இந்தப் பண்புகளைக் கொண்டிருந்தால் அவர் தகுந்தவராகக் கருதப்பட வேண்டும்.
மன்னனுடைய படைகளின் தலைவனும் அதேபோன்ற திறன்களைக் கொண்டவனாக இருக்க வேண்டும்.(31) அவன் பல்வேறு வகைப் படை அணிவகுப்புகளை {வியூகங்களை} அறிந்தவனாகவும், இயந்திரங்கள் மற்றும் ஆயுதங்களின் பயன்பாடுகளை அறிந்தவனாகவும் இருக்க வேண்டும். அவன், மழை, குளிர், வெப்பம், காற்று ஆகியவற்றைத் தாங்கிக் கொள்ளக் கூடியவனாகவும், பகைவரின் தவறுகளைக் கவனமாகப் பார்ப்பவனாகவும் இருக்க வேண்டும்.(32)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஒரு மன்னன், தன் எதிரிகளைப் பாதுகாப்பு உணர்வுடன் அமைதியடையச் செய்ய இயன்றவனாக இருக்க வேண்டும். எனினும், அவன் {மன்னன்} எவனையும் நம்பாமல் இருக்க வேண்டும். தன் சொந்த மகனிடம் நம்பிக்கை கொள்வதே கூட அவனுக்கு அங்கீகரிக்கப்படவில்லை.(33) ஓ! பாவமற்றவனே, சாத்திரங்களின் தீர்மானங்கள் என்ன என்பதை இப்போது நான் உனக்குச் சொன்னேன். எவனையும் நம்ப மறுத்தலே ஆட்சித்திறத்தின் உயர்ந்த புதிர்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது" என்றார் {பீஷ்மர்}.(34)
சாந்திபர்வம் பகுதி – 85ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |