Sweet speech and agreeable behaviour! | Shanti-Parva-Section-84 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 84)
பதிவின் சுருக்கம் : இனிமையான பேச்சும், இனிமையான நடத்தையும் சாதிக்கக் கூடியவற்றைப் பிருஹஸ்பதிக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலின் மூலம் யுதிஷ்டிரனுக்கு எடுத்துச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பிருஹஸ்பதிக்கும், சக்ரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(1)
சக்ரன் {இந்திரன் பிரஹஸ்பதியிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, ஒரு மனிதன், எந்தக் காரியத்தைக் கவனமாகச் சாதிப்பதன் மூலம், அனைத்து உயிரினங்களின் மதிப்புக்குரியவனாகி பெரும்புகழை அடைய முடியும்?" என்று கேட்டான்.(2)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "ஓ! சக்ரா {இந்திரா}, ஒரு மனிதன் பேச்சில் இனிமையுடையவனாக இருந்தால், அவன் அனைத்து உயிரினங்களின் மதிப்புக்குரியவனாகி, பெரும் புகழை அடைவான்.(3) ஓ! சக்ரா, இதுவே அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றாகும். இதைப் பயில்வதால் ஒருவனால் எப்போதும் அனைத்து உயிரினங்களின் அன்பைப் பெற முடியும்.(4) {இனிய} ஒரு சொல்லும் பேசாதவனும், புருவம் சுருங்கி, முகம் சுழிப்பவனுமான ஒரு மனிதன் அனைத்து உயிரினங்களின் வெறுப்புக்கு ஆளாகிறான். இனிய சொல் பேசாமை அவனை அவ்வாறு ஆக்குகிறது.(5) பிறரைக் கண்டதும், புன்னகையுடன் முதலில் பேசும் மனிதன், அவர்கள் அனைவரையும் தன்னிடம் நிறைவுகொள்ளச் செய்கிறான்.(6)
இனிமையான சொல் இல்லாமல் கொடைகளையே {தானங்களையே} அளித்தாலும்கூட, அது குழம்பில்லாத சோற்றைப் போலப் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காது.(7) ஓ! சக்ரா, இனிய சொற்களுடன் மனிதர்களின் உடைமைகளே பறிக்கப்பட்டாலும்கூட, அத்தகு இனிமையான நடத்தையானது கொள்ளை கொடுத்தவனைச் சமரசம் செய்வதில் வெல்லும்.(8) எனவே, ஒரு மன்னன், தண்டனையையே அளிக்க விரும்பினாலும் இனிமையான வார்த்தைகளிலேயே பேச வேண்டும். பேச்சில் இனிமை ஒருபோதும் காரியங்களில் தவறுவதில்லை. அதே வேளையில், எந்த இதயத்தையும் காயப்படுத்துவதும் இல்லை.(9) நற்செயல்கள் செய்து நல்லவனாக இருக்கும் ஒரு மனிதன், இனிமையானவனாகவும், இனிமையான பேச்சைக் கொண்டவனாகவும் இருந்தால் அவனுக்கு இணையானவன் வேறு எவனும் கிடையாது" என்றார் {பிருஹஸ்பதி}".(10)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இவ்வாறு தன் புரோகிதரால் {பிருஹஸ்பதியால்} சொல்லப்பட்ட சக்ரன் {இந்திரன்}, அந்த அறிவுரைகளின்படியே செயல்படத் தொடங்கினான். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, நீயும் இவ்வறத்தைப் பயில்வாயாக" {என்றார்}.(11)
சாந்திபர்வம் பகுதி – 84ல் உள்ள சுலோகங்கள் : 11
ஆங்கிலத்தில் | In English |