Indication of the city in which the king may reside! | Shanti-Parva-Section-86 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 86)
பதிவின் சுருக்கம் : மன்னனும், அரச அங்கத்தினரும் வசிக்க வேண்டிய நகரத்திற்குரிய அடையாளங்கள், ஒரு நாடு வலுவூட்டப்படவும், பாதுகாக்கப்படவும் வேண்டிய வழிமுறைகள்; தவசிகளிடம் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மன்னன் எவ்வித நகரத்திற்குள் வசிக்க வேண்டும்? அவன், ஏற்கனவே உண்டாக்கப்பட்ட ஒரு நகரத்தில் வசிக்க வேண்டுமா? அல்லது அவன் தனியாக ஒன்றைக் கட்ட வேண்டுமா? ஓ! பாட்டா, இஃதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, ஓ! குந்தியின் மகனே, ஒரு மன்னன் வசிக்க வேண்டிய நகரத்தைப் பொறுத்தவரையில் கடைப்பிடிக்க வேண்டிய தற்காப்புகளையும், பிற்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளையும் விசாரிப்பதே {விசாரித்தறிவது} முறையாகும்.(2) எனவே, நகரரண்களின் {கோட்டைகளின்} தற்பாதுகாப்பைக் குறித்து நான் உரையாடப்போகிறேன். நான் சொல்வதைக் கேட்ட பிறகு, தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு, வழிநடத்தப்படும்படியே கவனமாக உன்னை நடத்திக் கொள்வாயாக.(3) ஆறு வகை அரண்களில் {துருக்கங்களில்} தன் கண்களைச் செலுத்தியபடியே {கவனத்தைக் கொண்டு} மன்னன், அனைத்து வகைச் செழிப்புகளையும், பயன்படுத்துவதற்கான அனைத்து வகைப் பொருட்களையும் அபரிமிதமாகக் கொண்ட தன் நகரங்களைக் கட்ட வேண்டும்.(4) நீர்அரண்கள் {ஜலதுர்க்கம்}, பூமிஅரண்கள் {பூமிதுர்க்கம்}, மலைஅரணங்கள் {கிரிதுர்க்கம்}, மனிதஅரண்கள் {மனுஷ்யதுர்க்கம்}, மண்அரண்கள் {மருதுர்க்கம்}, காட்டுஅரண்கள் {வனதுர்க்கம்} ஆகியனவே அந்த ஆறு வகை அரண்களாகவும் {துருக்கங்களாகும்}[1].(5)
[1] "சுற்றிலும் அனைத்துப் புறங்களிலும் ஓர் ஆற்றாலோ, ஆறுகளாலோ, கடலாலோ சூழப்பட்டன நீர் அரண்கள். சமவெளிகளில், உயர்ந்த மதில்களுடனும், சுற்றிலும் அகழிகளுடனும் கட்டப்பட்டன பூமி ஆரண்கள். பாதுகாவலர்கள் மற்றும் பற்றுறுதி கொண்ட மக்களால் முறையாகப் பாதுகாக்கப்படும் கோட்டையில்லா நகரங்களே மனித அரண்கள் ஆகும்" என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.
அரணால் பாதுகாக்கப்பட்டதும், அரிசி மற்றும் ஆயுதக் கிடங்குகளை அபரிமிதமாகக் கொண்டதும், ஊடுருவமுடியா சுவர்கள் மற்றும் அகழியால் பாதுகாக்கப்பட்டதும், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் நிறைந்ததும், கல்வி மற்றும் இயந்திரவியல் கலையில் திறன் ஆகியவற்றைக் கொண்ட மனிதர்கள் வசிப்பதும், அனைத்து வகைப் பொருட்கள் நன்கு சேமிக்கப்பட்டதும், அறநடத்தையும், தொழிலில் நுண்ணறிவும், பலமும், சக்தியும் கொண்ட மனிதர்கள் நிறைந்ததும், விலங்குகள் நிறைந்ததும், நேர்மையான நடத்தை கொண்ட மனிதர்கள் இருப்பதும், அமைதி நிலைத்திருப்பதும், ஆபத்தில்லாததும், அழகால் சுடர்விடுவதும், இசை மற்றும் பாடல்களால் எதிரொலிப்பதும், துணிச்சல்மிக்க, செல்வம் நிறைந்த மனிதர்களைக் கொண்டதும், வேத மந்திரங்களின் ஒலியால் எதிரொலிக்கப்படுவதும், விழாக்களும், பண்டிகைகளும் அடிக்கடி நடைபெறுவதும், எப்போதும் தேவர்களின் வழிபாடுகள் நடைபெறுவதுமான ஒரு நகரத்திலேயே மன்னன், அவனது அமைச்சர்கள், பற்றுறுதி கொண்ட அவனது படையினர் ஆகியோர் வசிக்க வேண்டும்[2].(6-10)
[2] "இதற்கு முந்தைய வரியில் குறிப்பிட்டத்தைப் போன்ற இரண்டாம் வகை அரண் இஃது என நீலகண்டர் சொர்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அங்கே வசிக்கும் மன்னன், தன் படைகளை அதிகரித்து, தன் நண்பர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தி, நீதிமன்றங்களை நிறுவி தன் கருவூலத்தை நிறைப்பதில் ஈடுபட வேண்டும். தன் நகரங்கள் மற்றும் மாகாணங்களில் நிந்தனைகள் மற்றும் தீமைகள் அனைத்தையும் அவன் தடுக்க வேண்டும்.(11) அவன் அனைத்துவகைப் பொருட்களையும் முன்னேற்பாட்டுடன் சேகரிப்பதிலும், தன் ஆயுதக்கிடங்குகளைக் கவனத்துடன் நிறைப்பதிலும் ஈடுபட வேண்டும். அரிசி மற்றும் பிற தானியங்களையும் அவனது கிடங்குகளில் அதிகரிக்கச் செய்து, (விவேகத்துடன்) தனது ஆலோசனைகளை உறுதியடையச் செய்ய வேண்டும்.(12) அவன் மேலும் தன் கிடங்குகளில், விறகு, இரும்பு, உமிகள், கரிகள், மரங்கள், கொம்புகள், எலும்புகள், மூங்கில்கள், மஜ்ஜை, எண்ணெய் மற்றும் வெண்ணெய், கொழுப்பு, தேன், மருந்து வகைகள்,(13) பட்டுச்சணல், {ஸர்ஜரம் எனும்} நறுமணத் திரவியம், அரிசி, ஆயுதங்கள், அம்புகள், தோல், (நாண்கயிறுகளுக்கான) நரம்பு, பிரம்பு, முஞ்சப் புல் {ஒரு வகைத் தர்ப்பம்}, பிறவகைச் செடிகொடிகள் {மூலிகைகள்} ஆகியவற்றையும் அதிகரிக்க வேண்டும்.(14) மேலும், பெரும் அளவிலான நீரைக் கொண்ட குளங்கள் {அல்லது தொட்டிகள்} மற்றும் கிணறுகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து, பாலுள்ள மரங்கள் அனைத்தையும் அவன் பாதுகாக்க வேண்டும்[3].(15)
[3] "அஃதாவது, ஆலமரம் மற்றும் அரசமரம் போன்றவை. இவை பயணிகளுக்குப் புத்துணர்வூட்டும் நிழலைத் தருகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(பல்வேறு அறிவியல் துறைகளில்) ஆசான்களாக இருப்போரையும், ரித்விக்குகள், புரோகிதர்கள், வலிமைமிக்க வில்லாளிகள், கட்டடக் கலைஞர்கள், வானியல் வல்லுனர்கள், சோதிடக் கலைஞர்கள், மருத்துவர்கள் ஆகியோரையும்,(16) ஞானம், நுண்ணறிவு, தற்கட்டுப்பாடு, புத்திக்கூர்மை, துணிவு, கல்வி, உயர்குடி பிறப்பு, மனோசக்தி ஆகியவற்றைக் கொண்டவர்களையும், அனைத்தவகை பணிகளையும் செய்யவல்ல மனிதர்கள் அனைவரையும் கௌரவித்து, கவனத்துடன் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.(17) மன்னன் நல்லோரைக் கௌரவித்து, நியாயமற்றவர்களைத் தண்டிக்க வேண்டும். தீர்மானத்துடன் செயல்படும் அவன், பல்வேறு வகையினரையும் அவரவருக்குரிய கடமைகளில் நிறுவ வேண்டும்.(18) அவன் {மன்னன்}, தன் நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போரின் வெளிப்புற நடத்தையையும், மனோநிலையையும் ஒற்றர்கள் மூலம் சரியாக உறுதிச் செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .(19) மன்னன் தானே தன் ஒற்றர்கள், ஆலோசகர்கள், தன் கருவூலம், தண்டனை அளிக்கும் துறைகளைச் சார்ந்தோர் ஆகியோரை நேரடியாகக் கண்காணிக்க வேண்டும். அனைத்தும் இவர்களையே சார்ந்திருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.(20)
ஒற்றர்களையே தன் பார்வையாகக் கொள்ளும் மன்னன், தன் எதிரிகள், நண்பர்கள் மற்றும் நடுநிலையாளர்களின் செயல்களை அனைத்தையும், அவர்களது நோக்கங்கள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.(21) பிறகு அவன் கவனத்துடன் தன் திட்டங்களை வகுத்து, தன்னிடம் பற்றுறுதியுடன் இருப்பவர்களைக் கௌரவிக்கவும், பகைமையுடன் இருப்பவர்களைத் தண்டிக்கவும் செய்ய வேண்டும்.(22) மன்னன் எப்போதும் வேள்விகளில் தேவர்களைத் துதித்து, எவருக்கும் துன்பமளிக்காமல் கொடைகளைக் கொடுக்க வேண்டும். நீதிக்குத் தடங்கலாகவோ, குறுக்கீடாகவோ ஒருபோதும் எதையும் செய்யாமல் அவன் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும்.(23) ஆதரவற்றோர், தலைவனற்றோர், முதியோர், விதவைகளாக இருக்கும் பெண்டிர் ஆகியோரை அவன் எப்போதும் பாதுகாத்து, அவர்களைப் பராமரிக்க வேண்டும்.(24)
மன்னன் எப்போதும் தவசிகளைக் கௌரவித்து, உரிய காலங்களில் துணிகள், பாத்திரங்கள் மற்றும் உணவை அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும் (25) அவன் (நாட்டில்) தன்னிலை குறித்தும், தன் திட்டங்கள் அனைத்தையும் குறித்தும், தன் நாட்டைக் குறித்தும் மிகுந்த கவனத்துடன் அந்தத் தவசிகளுக்குத் தெரிவித்து, அவர்கள் முன்னிலையில் எப்போதும் அவன் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.(26) உயர்ந்த பிறப்பையும், பெரும் கல்வியையும் கொண்டவர்களும், உலகம் சார்ந்த அனைத்துப் பொருட்களையும் கைவிட்டவர்களுமான தவசிகளை அவன் காணும்போது, படுக்கைகள், ஆசனங்கள் மற்றும் உணவுக் கொடைகளுடன் அவர்களை அவன் கௌரவிக்க வேண்டும்.(27) எந்த இயல்பிலான துன்பத்தில் அவன் விழுந்தாலும், அஃதை அவன் ஒரு தவசியிடம் நம்பிக்கையுடன் சொல்ல வேண்டும். கள்வர்களே கூட அத்தகைய பண்பு கொண்ட மனிதர்களிடம் நம்பிக்கை கொள்வார்கள்.(28) மன்னன் தன் செல்வத்தை ஒரு தவசியின் பொறுப்பில் கொடுத்து, அவருடைய ஞானத்தை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும். எனினும் அவன் அனைத்துச் சந்தர்ப்பங்களில் அவர்களுக்காகக் காத்திருக்கவோ, வழிபடவோ கூடாது[4].(29)
[4] "’ஞானத்தை எடுத்துக் கொள்’ என்பது அவர்களோடு ஆலோசனை நடத்து என்ற பொருளைக் கொண்டதாகும். ‘எப்போதும் அவர்களிடம் காத்திருக்கக் கூடாது {அவர்களுக்குப் பணி செய்து கொண்டிருக்கக்கூடாது}’ என்பது, மன்னனின் செல்வத்தை வைத்திருப்பவர்கள் அவர்கள்தான் என்று சந்தேகப்பட்டுக் கள்வர்கள் அவர்களைக் கொன்றுவிடக் கூடும்" என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவரிடம் நிதிகளை வைக்கலாம்; திரும்பவும் பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி அவர்களிடம் செல்வதும், அதிகமாகப் பூஜிப்பதும் கூடா" என்றிருக்கிறது.
தன் நாட்டில் வசிப்போரில் ஒருவரை அவன் தன் நட்புக்கெனத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோலவே, எதிரியின் நாட்டில் வசிப்போரில் மற்றொருவரையும் அவன் தேர்ந்தெடுக்க வேண்டும். காடுகளில் வசிப்போரில் இருந்து மூன்றாமவரையும், தனக்குக் கப்பம் கட்டும் நாடுகளில் வசிப்போரில் ஒருவரை நான்காமவராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும்.(30) அவன், அவர்களிடம் நல்ல விருந்தோம்பலை வெளிப்படுத்தி, அவர்களுக்குக் கௌரவங்களை அளித்து, அவர்களுக்கான வாழ்வாதார வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவன் {மன்னன்} எதிரிகளின் நாடுகளில் வசிக்கும் தவசிகளிடமும், தன் நாட்டில் வசிக்கும் தவசிகளிடமும் ஒரே வழியிலேயே நடந்து கொள்ள வேண்டும்.(31) தவங்கள் மற்றும் கடும் நோன்புகளில் ஈடுபடும் அவர்கள், மன்னனுக்குப் பேரிடர் நேர்ந்து அவன் பாதுகாப்பை நாடும்போது, அவனுக்கு வேண்டியதைக் கொடுப்பார்கள்.(32) மன்னன் வசிக்கத் தகுந்த நகரத்துக்குண்டான குறியீடுகள் நான் இப்போது உனக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்" என்றார் {பீஷ்மர்}.(33)
சாந்திபர்வம் பகுதி – 86ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |