Administration and taxation! | Shanti-Parva-Section-87 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 87)
பதிவின் சுருக்கம் : நாட்டைப் பாதுகாத்து வலுப்படுத்த ஏற்படுத்தப்பட வேண்டிய நிர்வாக முறையையும், வரி, தீர்வைகள் மூலம் நாட்டிலிருந்து பொருளைச் சேர்க்கும் முறையையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மன்னா {பீஷ்மரே}, ஒரு நாட்டை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும்? அஃதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? நான் இவற்றை அறிய விரும்புகிறேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "நான் சொல்வதைக் குவிந்த கவனத்தோடு கேட்பாயாக. ஒரு நாடு எவ்வாறு வலுப்படுத்தப்பட வேண்டும், எவ்வாறு அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(2) ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு தலைவனை நியமிக்க வேண்டும். பத்துக் {10} கிராமங்களுக்கு (அல்லது பத்து தலைவர்களுக்கு) ஒரு கண்காணிப்பாளன் {அதிபதி} இருக்க வேண்டும். இப்படிப்பட்ட இரண்டு கண்காணிப்பாளர்களுக்கு (இருபது {20} கிராமங்களைக் கட்டுப்படுத்த) ஓர் அதிகாரி இருக்க வேண்டும். அந்த அதிகாரிக்கும் மேல் நூறு {100} கிராமங்களைக் கொண்ட ஒருவன் இருக்க வேண்டும்; அவனுக்கும் மேல் ஆயிரம் {1000} கிராமங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்ட ஒருவன் இருக்க வேண்டும்.(3) ஒரு கிராமத் தலைவனானவன், அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனின் பண்புகளையும், திருத்த வேண்டிய குறைகள் அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பிறகு அவன், அதை (தனக்கு மேல்நிலையில் உள்ளவனான) இருபது {20} கிராமங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் சொல்ல வேண்டும்.(4) அந்த அதிகாரி பதிலுக்கு, (தனக்கு மேல்நிலையில் உள்ளவனான) நூறு {100} கிராமங்களுக்குப் பொறுப்பான அதிகாரியிடம் தன் ஆட்சிப்பகுதிக்குள் இருக்கும் மனிதர்கள் அனைவரின் நடத்தையையும் தெரிவிக்க வேண்டும்.(5)
கிராமத் தலைவனே அந்தக் கிராமத்தில் உள்ள விளைச்சல் மற்றும் உடைமைகள் ஆகிய அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வொரு தலைவனும், பத்துக் {10} கிராமங்களுக்குத் தலைவனாக இருப்பவனைப் பராமரிப்பதற்கான தன் பங்கைக் கொடுக்க வேண்டும். பின்னவன் {பத்துக் {10} கிராமங்களுக்குத் தலைவன்}, இருபது {20} கிராமங்களின் தலைவனை ஆதரிக்க அதையே செய்ய வேண்டும்.(6)
ஓ! பாரதர்களின் தலைவா, நூறு {100} கிராமங்களுக்குத் தலைவன், மன்னனிடம் இருந்து அனைத்து கௌரவத்தையும் பெற வேண்டும், மேலும் அவன், தன்னை ஆதரித்துக் கொள்ள மக்கள் மற்றும் செல்வம் நிறைந்த ஒரு பெரிய கிராமத்தைக் கொண்டிருக்க வேண்டும்.(7)
எனினும், நூறு {100} கிராமங்களின் தலைவனுக்கு அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஒரு கிராமமானது, ஆயிரம் {1000} கிராமங்களுக்குத் தலைவனாக இருப்பவனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.
மேலும், ஆயிரம் {1000} கிராமங்களுக்குத் தலைவனான அந்த மேலதிகாரி, தன்னை ஆதரித்துக் கொள்ள ஒரு சிறு நகரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.(8) அவன் அதிலிருந்து கிடைக்கும் தானியங்கள், தங்கம் மற்றும் பிற உடைமைகளை அனுபவிக்க வேண்டும். அவனே அது தொடர்பான போர்க்கடமைகள் மற்றும் உள் விவகார காரியங்கள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.(9) அந்த அதிகாரிகளுக்கிடையிலான பரஸ்பர உறவுகள் மற்றும் நிர்வாகக் காரியங்களை ஏதோ ஓர் அறம்சார்ந்த அமைச்சர் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு நகரத்திலும், அதன் அதிகார எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் கவனிக்க ஓர் அதிகாரி இருக்க வேண்டும்.(10)

விண்மீன் கூட்டத்திற்கிடையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஏதோவொரு பயங்கரக் கோளைப் போல, இறுதியாகச் சொல்லப்பட்ட (மட்டுமடங்கற்ற அதிகாரங்களைக் கொண்ட) அந்த அதிகாரியானவன், அவனுக்குக் கீழுள்ள அதிகரிகள் அனைவருக்கும் மேலானவனாகச் செயல்பட்டு, நடந்து கொள்ள வேண்டும். அத்தகு அதிகாரியானவன், தன் ஒற்றர்களின் மூலம் தனக்குக் கீழுள்ளவர்களின் நடத்தையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.(11)
அப்படிப்பட்ட உயரதிகாரிகளானவர்கள், கொலைகார மனோநிலையில் இருக்கும் மனிதர்கள் அனைவரிடம் இருந்தும், தீச்செயல்களைச் செய்யும் மனிதர்கள் அனைவரிடம் இருந்தும், பிறரின் செல்வத்தைக் களவாடுவோர் அனைவரிடம் இருந்தும், வஞ்சகம் நிறைந்தோர் அனைவரிடம் இருந்தும், பிசாசின் ஆதிக்கத்திலிருப்போர் எனக் கருதப்படும் அனைவரிடம் இருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.(12)
மன்னனானவன், வணிகத்தில் ஈடுபடுவோரின் விற்பனைகள், கொள்முதல்கள், சாலைகளின் நிலை, உணவு, ஆடை, கையிருப்புகள், ஆதாயங்கள் ஆகியவற்றைக் குறித்துக் கொண்டு அவர்களுக்கு வரி விதிக்க வேண்டும்.(13) மன்னன், உற்பத்தியாளர்களின் பரிணாமத்தையும், உற்பத்தியில் ஈடுபடுவோரின் வரவு செலவுகளையும், கலைகளின் நிலையையும் அனைத்துத் தருணங்களிலும் உறுதி செய்து கொண்டு, கைவினைஞர்கள் {தொழிலாளிகள்} பின்பற்றும் கலைகளுக்கு {தொழிலுக்கு} ஏற்ப அவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும்.(14) ஓ! யுதிஷ்டிரா, மன்னன் அதிக வரிகளை விதிக்கலாம், ஆனால் தன் மக்களைக் காயடிக்கும் வகையில் அவன் ஒருபோதும் வரிகளை விதிக்கக்கூடாது. (15)

உற்பத்தியின் அளவு, உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்பின் அளவு ஆகியவற்றை உறுதி செய்து கொள்ளாமல் எந்த வரியும் விதிக்கப்படக்கூடாது. போதிய காரணமில்லாமல் உற்பத்தியைப் பெருக்குவதற்காக எவரும் பணி செய்யவோ, உழைப்பில் ஈடுபடவோ மாட்டார்கள்[1].(16) மன்னன், தானும், பொருளை உற்பத்தி செய்ய உழைத்து வரிவிதிக்கப்படுபவனும் அதன் மதிப்பைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வரிகளை விதிக்க வேண்டும்.(17) மன்னன் தனக்கிருக்கும் தாகத்தால், தன் {நாடு எனும்} அடித்தளத்தையும், பிறரின் {காரியங்கள் எனும்} அடித்தளங்களையும் அழித்துவிடக்கூடாது. தன் மக்களிடம் வெறுப்புக்குள்ளாகும் எந்தச் செயலையும் எப்போதும் அவன் தவிர்க்க வேண்டும். உண்மையில் இவ்வழியில் நடந்து கொண்டால் அவன் மக்களிடம் செல்வாக்கடைவதில் வெல்வான்.(18) (வரிகள் மற்றும் தீர்வைகளின் காரியத்தில்) தீராப் பெரும்பசி கொண்டவன் என்று கெட்ட பெயர் ஈட்டும் மன்னனை குடிமக்கள் வெறுப்பார்கள். வெறுப்பின் பொருளாக மாறும் ஒரு மன்னனால் எங்கிருந்து செழிப்பை அடைய முடியும்? அப்படிப்பட்ட மன்னனால் ஒருபோதும் தனக்கான நன்மையை அடைய முடியாது.(19)
[1] "ஒருவனை எளிமையாகப் பராமரித்துக்கொள்ளப் போதுமான இலாபம் கிடைக்கும் என்பது இல்லாது போனால், அவன் அப்பணியில் இருந்து முற்றிலும் விலகிவிடுவான். எனவே, ஒரு பணியின் மூலம் கிடைக்கும் உற்பத்தி அளவுக்கு வரிவிதிக்கும்போது, அந்த உற்பத்தியாளர்களுக்குத் தேவையான அளவுக்கு இலாப வரம்பை மன்னன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே இங்குப் பொருளாக இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நல்ல நுண்ணறிவு கொண்ட ஒரு மன்னன், கன்றுகளின் (காரியத்தில் மனிதர்கள் நடந்து கொள்ளும்} ஒப்புமையைப் போலத் தன் நாட்டில் இருந்து {வரிகளைக்} கறக்க வேண்டும்.(20) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, பால் குடிக்கக் கன்றை அனுமதித்தால், அது பலமுள்ளதாக வளர்ந்து பெருங்கனங்களைச் சுமக்கும்.(20) மறுபுறம், பசுவிடமிருந்து அதிகமாகப் பால் கறக்கப்பட்டால் கன்று மெலிந்து, தன் தலைவனுக்குத் தொண்டாற்றத் தவறும். அதே போலவே நாட்டில் இருந்து அதிகமாக {வரிகளை} எடுத்தால், குடிமக்கள் எந்தப் பெரிய செயலையும் அடைவதில் தவறுவர்.(21) தன் நாட்டைத் தானே பாதுகாத்து, (வரிகள் மற்றும் தீர்வைகளின் காரியத்தில்) தன் குடிமக்களுக்கு ஆதரவைக் காட்டி, எளிதாக அடைந்தவற்றில் இருந்து தன்னைத் தாங்கிக் கொள்ளும் மன்னன் மகத்தான விளைவுகளை அடைவதில் வெல்கிறான்.(22) அப்போது அந்த மன்னன் தன் தேவைகளை நிறைவு செய்து கொள்ளப் போதுமான அளவுக்குச் செல்வத்தை அடைய மாட்டானா?[2] இவ்வழக்கில் மொத்த நாடும் அவனது கருவூலமாகிறது, அதே வேளையில் கருவூலமானது அவனது படுக்கையறையாகிறது.(23) நகரங்கள் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் மன்னனைச் சார்ந்திருக்கும் ஏழைகளாக இருந்தால், அவன் தனது சக்திக்குத் தகுந்தபடி அவர்களிடம் கருணை காட்ட வேண்டும்.(24) மன்னன், புறநகர்களில் நிறைந்திருக்கும் கள்வர்கள் அனைவரையும் தண்டித்து, தன் கிராமங்களில் இருக்கும் மக்களைப் பாதுகாத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும். அவ்வழக்கில், குடிமக்கள் தங்கள் மன்னனின் இன்ப துன்பங்களில் பங்குதாரர்களாகி அவனிடம் மிகுந்த மனநிறைவடைவார்கள்.(25)
[2] "அரசுக்குத் தேவைப்படும் தருணங்களில் குடிமக்கள் தங்கள் வளங்களை மன்னனின் பயன்பாட்டுக்கு மனம்விரும்பிக் கொடுப்பார்கள் என்பது இங்கே பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
செல்வம் சேகரிக்க நினைக்கையில், மன்னன் தன் நாட்டின் தலைமையான மையப் பகுதிகளுக்கு ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று தன் மக்கள் அஞ்சிடுமாறு முயற்சி செய்ய வேண்டும்.(26) அவன் அவர்களிடம், "இதோ பேரிடர் நம்மை அச்சுறுத்துகிறது. எதிரியின் செயல்பாடுகளின் விளைவாகப் பேரச்சம் உண்டாகிறது. எனினும், பூத்திருக்கும் மூங்கில்லைப் போல, எதிரி மிக விரைவில் அழிவை அடைப்போகிறான் என்பதால், இந்த ஆபத்து நம்மைக் கடந்து போவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.(27) எழுச்சி அடைந்திருக்கும் என் எதிரிகள், பெரும் எண்ணிக்கையிலான கள்வர்களுடன் சேர்ந்து, தங்கள் அழிவுக்காகவே நம் நாட்டை இடரில் ஆழ்த்த விரும்புகிறார்கள்.(28) பயங்கர ஆபத்துகள் நிறைந்த இந்தப் பேரிடரைக் கருத்தில் கொண்டும், உங்கள் பாதுகாப்புக்காகவும் நான் உங்கள் செல்வத்தை வேண்டுகிறேன்.(29)
இந்த ஆபத்து கடந்து சென்றதும், நான் இப்போது உங்களிடம் எடுத்துக் கொள்வனவற்றைத் திரும்பக் கொடுத்து விடுவேன். எனினும், எதிரிகள் (எதிர்க்கப்படவில்லையென்றால்), அவர்கள் உங்களிடம் இருந்து பலவந்தமாகப் பிடுங்கும் எதையும் அவர்கள் திரும்பக் கொடுக்க மாட்டார்கள்.(30) மறுபுறம், அவர்கள் (எதிர்க்கப்படவில்லையென்றால்) உங்கள் மனைவியர் உட்பட உங்கள் உறவினர்கள் அனைவரையும் கொல்லக் கூடும். நீங்கள் உங்கள் பிள்ளைகள் மற்றும் மனைவியருக்காகவே செல்வத்தை விரும்புகிறீர்கள் என்பது நிச்சயம்.(31) நான் உங்கள் செழிப்பில் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் நான் உங்களை என் சொந்தப் பிள்ளைகளைப் போலவே பார்க்கிறேன். உங்களால் எனக்கு எவ்வளவு கொடுக்க முடியுமோ, அதை நான் பெற்றுக் கொள்ளப் போகிறேன். நான் யாருக்கும் துன்பமளிக்க விரும்பவில்லை.(32) பேரிடர் காலங்களில் பலமிக்கக் காளைகளைப் போல நீங்கள் இத்தகு சுமைகளைச் சுமக்க வேண்டும். துயர்மிக்கக் காலங்களில் செல்வம் உங்களுக்கு விருப்பத்திற்குரியதாக இருக்கக்கூடாது" என்று சொல்ல வேண்டும்.(33)
காலம் தொடர்பான கருத்துகளை அறிந்த மன்னன், இத்தகு ஏற்கத்தக்க, இனிமையான, புகழ்ச்சியான வார்த்தைகளுடன் தன் முகவர்களை அனுப்பித் தன் மக்களிடம் இருந்து தீர்வைகளைத் திரட்ட வேண்டும்.(34) தன் கோட்டைகளைச் செப்பனிடும் தேவை குறித்து அவர்களுக்குச் சுட்டிக்காட்டி, தன் நிறுவனங்கள் மற்றும் பிற தலைமைகளின் செலவுகளைக் கொடுத்துத் தீர்த்து, அந்நிய படையெடுப்பைக் குறித்த அவர்களின் அச்சத்தைத் தூண்டி, அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி, அவர்கள் அமைதியாக வாழ வேண்டிய வழிமுறைகளை உறுதி செய்ய வேண்டும் என்று சொல்லி மன்னன் தன் ஆட்சிப்பகுதியில் உள்ள வைசியர்களுக்குத் தீர்வைகளை விதிக்க வேண்டும்.(35)
மன்னன் வைசியர்களை அலட்சியம் செய்தால் அவர்கள் அவனது ஆட்சிப்பகுதிகளைக் கைவிட்டு அங்கிருந்து தொலைந்து காடுகளுக்குச் சென்று விடுவார்கள். எனவே, மன்னன் அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.(36) ஓ! பிருதையின் மகனே {யுதிஷ்டிரனே}, மன்னன் எப்போதும் வைசியர்களை இணங்கச் செய்து, அவர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தூண்டி, அவர்களது உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, எப்போதும் அவர்களுக்கு ஏற்புடையதைச் செய்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.(37)
ஓ! பாரதா, மன்னன் எப்போதும் வைசியர்களின் உற்பத்தி சக்திகளைப் பெருக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் பலத்தை அதிகரிப்பதும், வேளாண்மையை முன்னேற்றுவதும், வணிகத்தை வளர்ச்சியடையச் செய்வதும் வைசியர்களே.(38) எனவே, ஞானமுள்ள மன்னன் எப்போதும் அவர்களை மனம் நிறையச் செய்ய வேண்டும். கவனத்துடனும், கனிவுடனும் செயல்படும் அவன், அவர்களுக்கு மென்மையான தீர்வைகளையே விதிக்க வேண்டும்.(39) வைசியர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்வது எளிதானதே. ஓ! யுதிஷ்டிரா, நாட்டில் உள்ள வைசியர்களிடம் இவ்வாறு நடந்து கொள்வது நாட்டுக்குப் பெரும் நன்மையை உண்டாக்குமேயன்றி வேற்றில்லை" என்றார் {பீஷ்மர்}.(40)

சாந்திபர்வம் பகுதி – 87ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |