Rishava, Tanu and Viradyumna! | Shanti-Parva-Section-127| Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 127)
பதிவின் சுருக்கம் : ரிஷபரென்ற முனிவர் ஒருவர் தான் தீர்த்தயாத்திரை சென்று வந்தது குறித்தும், பதரியில் தாம் கண்ட முனிவர் தனு மற்றும் மன்னன் வீரத்யும்னன் குறித்தும் மன்னன் சுமித்திரனிடம் விவரித்தது...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-127 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அப்போது அந்த முனிவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தவரும், முனிவர்களில் சிறந்த மறுபிறப்பாளருமான ரிஷபர்[1], சிறிதாகப் புன்னகைத்து இந்த வார்த்தைகளைச் சொன்னார்:(1) “ஓ! மன்னர்களில் புலியே {சுமித்திரனே}, ஓ! தலைவா, புனிதத்தலங்களுக்குப் பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொண்டிருந்தபோது, நரன் மற்றும் நாராயணரின் அழகிய ஆசிரமத்திற்குச் சென்றேன்.(2) பதரி {பத்ரிநாத்} என்றழைக்கப்படும் ஓர் இனிமையான இடம் இருக்கிறது. அங்கே (புனிதமான கங்கை பிறந்த) ஆகாயத்தில் ஒரு தடாகமும் இருக்கிறது[2]. ஓ! மன்னா, அங்கே தவசி அஸ்வசிரஸ் {ஹயக்ரீவர்} அழிவில்லாத வேதங்களை (எப்போதும்) படித்துக் கொண்டிருக்கிறார்.(3) அந்தத் தடாகத்தில் தூய்மைச் சடங்குகளை முடித்துக் கொண்டு, பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் நீர்க்காணிக்கைகளை உரிய சடங்குகளுடன் காணிக்கையளித்த பிறகு நான் ஆசிரமத்திற்குள் நுழைந்தேன்.(4) முனிவர்களான நரனும், நாராயணனும் அந்த ஆசிரமத்திற்குள் எப்போதும் தங்கள் நேரத்தை உண்மையான இன்பத்துடன் கடத்துகிறார்கள்[3]. அந்த இடத்தில் அருகிலேயே நான் வசிப்பதற்காக மற்றொரு ஆசிரமத்திற்குச் சென்றேன்.(5)
[1] ரிஷபர் பிரம்ம சபையில் இருக்கும் ஒரு முனிவராக சபா பர்வம் பகுதி 12ல் குறிப்பு இருக்கிறது https://mahabharatham.arasan.info/2013/09/Mahabharatha-Sabhaparva-Section12.html. இவர் ரிஷப மலையில் வசித்ததாக வன பர்வம் பகுதி 110ல் குறிப்பிருக்கிறது https://mahabharatham.arasan.info/2014/02/Mahabharatha-Vanaparva-Section110.html
[2] “இந்தத் தடாகம் இமயத்தில் பெரும் உயரத்தில் இருக்கிறது” எனக் கங்குலி விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “அவ்விடத்தில் அழகனா அந்தப் பதரீவிருக்ஷமும் (இலந்தைமரமும்) அவ்விதமே கங்காநதியைச் சேர்ந்த தடாகமும் இருக்கின்றன.[3] “அந்த அழவில்லா தவசிகளின் ஆன்மாக்கள் உன்மையான இன்ப நிலையை அனுபவித்துக் கொண்டு அந்த ஆசிரமத்திலேயே எப்போதும் வசிப்பதாக நம்பப்படுகிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அங்கே அமர்ந்திருந்த போது, மிக நெடியவரும், தோலாடையும் மரவுரியும் அணிந்திருப்பவரும், மெலிந்திருப்பவருமான ஒரு முனிவர் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். தவமெனும் செல்வத்தைக் கொண்ட அவர் தனு என்ற பெயரைக் கொண்டவராவார்.(6) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, வேறு மனிதர்களை ஒப்பிடுகையில் அவரது {தனுவின்} உயரம் எட்டு மடங்கு பெரியதாகத் தெரிந்தது. ஓ! அரசமுனியே {சுமித்திரனே}, அவரது மெலிந்த உடலைப் பொறுத்தவரையில், அதபோன்றதொரு உடலை நான் இதுவரை கண்டதில்லை.(7) ஓ! மன்னா, அவரது உடல் ஒருவனின் சுண்டுவிரல் அளவுக்கு மெலிதாக இருந்தது. அவரது கழுத்து, கரங்கள், கால்கள் மற்றும் முடி ஆகியன இயல்புக்குமீறிய தன்மைகளுடன் இருந்தன.(8) அவரது தலையானது அவரது உடலின் அளவுக்குத் தகுந்ததாகவும், அவரது காதுகளும், கண்களும் அதே போலவும் இருந்தன. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அவரது பேச்சும், அசைவுகளும் பலவீனமாகவே இருந்தன.(9) மிக மெலிந்தவரான அந்தப் பிராமணரைக் கண்ட நான், உற்சாகத்தை இழந்தவனாகவும், அச்சமடைந்தவனாகவும் ஆனேன். அவரது பாதத்தை வணங்கிய நான், அவர் முன்பு குவிந்த கரங்களுடன் நின்றேன்.(10)
ஓ! மனிதர்களுள் காளையே {சுமித்திரா}, அவரிடம் என் பெயரையும், என் குடும்பத்தையும், என் தந்தையின் பெயரையும் அவருக்குச் சொன்னபிறகு, அவரால் குறிப்பிடப்பட்ட ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.(11) ஓ! ஏகாதிபதி, அப்போது, அறவோரில் முதன்மையானவரான தனு, அங்கே வசித்து வந்த முனிவர்களுக்கு மத்தியில் அறம் மற்றும் பொருள் சம்பந்தப்பட்டவற்றைக் குறித்து உரையாடத் தொடங்கினார்.(12) அந்த உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், படைகள் மற்றும் தன் வீட்டுப் பெண்மணிகள் ஆகியோரின் துணையுடன் கூடியவனுமான ஒரு மன்னன் வேகமான குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் அந்த இடத்திற்கு வந்தான்.(13) அந்த மன்னனின் பெயர் வீரத்யும்னன் ஆகும். அழகிய பண்புகளைக் கொண்ட அவன், பெரும் குழைக் கொண்டவனாக இருந்தான். அவனுடைய மகனின் பெயர் பூரித்யும்னன் ஆகும். அந்தப் பிள்ளை தொலைந்து போகவும், உற்சாகமிழந்த அவனுடைய தந்தை, தொலைந்து போனவனைத் தேடிக் காடுகளில் அலைந்தபடியே,(14) “நான் இங்கே என் மகனைக் கண்டுவிடுவேன்! நான் இங்கே என் மகனைக் கண்டுவிடுவேன்” என்று நம்பிக்கொண்டே அந்தக்காலத்தில் அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(15)
அந்த மெலிந்த முனிவரிடம் பேசிய அவன், “உயர்ந்த அறவோனான என் மகனைக் கண்டுபிடிப்பது நிச்சயம் மிகக் கடினமானதாகவே இருக்கிறது. ஐயோ, அவன் என் ஒரே மகனாவான். தொலைந்து போன அவனை எங்கும் காண முடியவில்லை.(16) அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லையாயினும், கண்டுபிடித்துவிடுவோம் என்ற என்ற நம்பிக்கை {எதிர்பார்ப்பு} மிகப் பெரியதாக இருக்கிறது. உண்மையில் மரணத் தருவாயில் இருக்கும் நான், (தொடர்ந்து தவறினாலும்) அந்தத் நம்பிக்கையால் {எதிர்பார்ப்பால்} நிறைந்திருக்கிறேன்” என்றான்.(17)
மன்னின் இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், முனிவர்களில் முதன்மையானவரும், புனிதமானவருமான தனு, தலையைத் தொங்கவிட்டபடியே தியானத்தில் தம்மைப் புதைத்துக் கொண்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.(18) தியானத்தில் புதைந்திருக்கும் அவரைக் கண்ட மன்னன், உற்சாகத்தைப் பெரிதும் இழந்தான். பெருந்துயரத்தில் மெதுவாகவும், மென்மையாகவும் பேசத் தொடங்கிய அவன்,(19) “ஓ! தெய்வீக முனிவரே, எது வெல்லப்பட முடியாதது? மேலும் எது நம்பிக்கையை விடப் பெரியது? ஓ! புனிதமானவரே, நான் கேட்பது முறையற்றதாக இல்லையென்றால் {முறையானதென்றால்}, இஃதை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(20)
அதற்கு அந்த முனிவர் {தனு, மன்னன் வீரத்யும்னனிடம்}, “புனிதமான பெரும் முனிவர் ஒருவர் உன் மகனால் அவமதிக்கப்பட்டார். அவன் தன் தீயூழின் மூலமும், தன் மூட அறிவினால் உந்தப்பட்டும் அதைச் செய்துவிட்டான்.(21) அந்த முனிவர் உன் மகனிடம், ஒரு தங்கத்தாலான கொள்கலன் ஒன்றையும், மரவுரியையும் கேட்டார். உன் மகனோ அவமதிக்கும் வகையில், அந்தத் தவசியை நிறைவு செய்ய மறுத்தான்.(22) உன் மகனால் இவ்வாறு நடத்தப்பட்ட அந்தப் பெரும் தவசி ஏமாற்றமடைந்தார்” என்றார்.
இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், உலகம் அனைத்தாலும் வழிபடப்படும் அந்தத் தவசியை வழிபட்டான். ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அற ஆன்மா கொண்ட அந்த வீரத்யும்னன், நீ இப்போது இருப்பதைப் போலவே களைப்புடன் அங்கே அமர்ந்திருந்தான்.(23) பதிலுக்கு அந்தப் பெரும் முனிவரும், கானகவாசிகள் நோற்கும் சடங்குகளின்படி, மன்னனின் காலைக் கழுவிக் கொள்ள நீரும், வழக்கமான பொருட்களைக் கொண்ட அர்க்கியத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.(24) அப்போது, ஓ! மனிதர்களில் புலியே, துருவ நட்சத்திரத்தைச் சூழ்ந்திருக்கும் நட்சத்திரக் கூட்டங்களைப் போல அந்த மனிதர்களில் காளையைச் சுற்றிலும் முனிவர்கள் அனைவரும் அமர்ந்தனர்.(25) பிறகு அவர்கள், அந்த வெல்லப்பட முடியாத மன்னன் அந்த ஆசிரமத்திற்கு வந்ததற்கான காரணத்தை அவனிடம் கேட்டனர்” என்றார் {ரிஷபர்}.(26)
சாந்திபர்வம் பகுதி – 127ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |