Practices in the time of distress! | Shanti-Parva-Section-130| Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 130)
பதிவின் சுருக்கம் : பேராபத்திலும், துயரிலும், நண்பர்களை இழந்த நிலையிலும் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-130 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “ஓ! பாரதரே, நண்பர்களை இழந்தவனும், பல எதிரிகளைக் கொண்டவனும், கருவூலம் தீர்ந்தவனும், துருப்புகளற்றவனுமான ஒரு மன்னனுடைய நடந்தை எவ்வாறு இருக்க வேண்டும்?(1) உண்மையில் அவன், தீய அமைச்சர்களால் சூழப்பட்டிருக்கும்போதும், ஆலோசனைகள் {இரகசியங்கள்} அனைத்தும் வெளிப்படும்போதும், தன் முன்னே உள்ள வழி தெளிவற்று இருக்கும்போதும்,(2) வேறு நாடுகளைத் தாக்கச் செல்லும்போதும், ஒரு பகை நாட்டைக் கலங்கடிப்பதில் ஈடுபட்டிருக்கும்போதும், பலவீனனாக இருந்தும் ஒரு பலமிக்க ஆட்சியாளனுடன் போர் புரியும் போதும் அவனது {மன்னனின்} நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? நாட்டின் காரியங்களில் ஒழுங்கில்லாமல் இருப்பவனும், இடம் மற்றும் நேரத்தின் தேவைகளை அலட்சியம் செய்பவனும், ஒடுக்குமுறையின் விளைவாக அமைதியை ஏற்படுத்த முடியாதவனும், எதிரிகளுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்க முடியாதவனுமான ஒரு மன்னனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? அவன் தீய வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைய முனைய வேண்டுமா? அல்லது, செல்வத்தை நாடாமல் தன் உயிரை விட வேண்டுமா?” என்று கேட்டான்.(3,4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குலத்தின் காளையே, கடமைகளை அறிந்தவனான நீ, (கடமைகள் தொடர்பான) ஒரு புதிரைக் குறித்து என்னிடம் கேட்கிறாய்[1].(5) ஓ! யுதிஷ்டிரா, கேளாமல் இந்தக் கடமை குறித்து நான் சொல்லத் துணியேன். அறநெறி மிக நுட்பமானதாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே, சாத்திர உரைகளின் துணையுடன் அஃதை ஒருவன் புரிந்து கொள்ள வேண்டும். கேள்விப்பட்டதை நினைவுகூர்வதன் மூலமும், நற்செயல்களைச் செய்வதன் மூலமும், எந்த இடத்திலும் உள்ள எவனும் அறவோனாகலாம் {நல்லோனாகலாம்}.(6) மன்னன், நுண்ணறிவுடன் செயல்படுவதன் மூலம் செல்வத்தை அடைவதில் வெல்லவோ, வெல்லாமலோ போகலாம்[2]. இக்காரியத்தில் உன் கேள்விக்கான பதில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று உன் நுண்ணறிவின் உதவியுடன் நினைத்தப்பார்.(7) ஓ! பாரதா, (துயர்மிக்க {ஆபத்து} காலங்களில்) மன்னர்கள் பெரும் தகுதியையுடைய {புண்ணியத்தையுடைய} எந்த வழிமுறைகளின் மூலம் தங்கள் நடத்தையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்பாயாக. எனினும், உண்மை அறநெறிகளின் நிமித்தமாக, அந்த வழிமுறைகளை அறம்சார்ந்தவை {நல்லவை} என்று நான் சொல்லமாட்டேன்.(8) ஒடுக்குமுறையின் மூலம் கருவூலம் நிரப்பப்பட்டால், அத்தகைய நடத்தையானது மன்னனை அழிவின் விளிம்புக்குக் கொண்டு விடும். இக்காரியம் குறித்துச் சிந்தித்த நுண்ணறிவுமிக்க மனிதர்களின் தீர்மானம் இதுவே ஆகும்.(9) ஒருவன் எந்த வகைச் சாத்திரங்கள், அல்லது அறிவியலை எப்போதும் படிக்கிறானோ, அவை தங்களால் இயன்ற வகையிலான அறிவையே அவனுக்குக் கொடுக்கும். அத்தகையே அறிவே உண்மையில் அவனுக்கு ஏற்புடையதாகிறது.(10)
[1] “அஃதாவது, இது வேறு யாருக்கும் முன்னிலையில் வைத்து உரையாடக் கூடிய காரியமல்ல என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] “அதாவது, கூர்மதியுடன் கூடிய சூழ்ச்சித்திட்டங்களால் ஒரு மன்னன் தன் கருவூலத்தை நிரப்பிக் கொள்வதில் வெல்லலாம், அல்லது, அவனுடைய சிறந்த கூர்மதியும், கணக்கீடுகளும் தவறவும் செல்லாம் என்பது பொருள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வழிமுறைகளைப் பொறுத்தவரையில், அறியாமையானது புதிய கண்டுபிடிப்புகளில் வெறுமையான நிலைக்கே ஒருவனை வழிவகுக்கும். மேலும், அறிவின் உதவியுடன் வழிமுறைகளைத் தீட்டும் நிலையானது, பெரும்புகழின் ஊற்றுக்கண்ணாக இருக்கும். எந்த ஐயுணர்வையும், எந்த வன்மத்தையும் ஊக்கப்படுத்திக் கொள்ளாமல் இந்த அறிவுரைளைக் கேட்பாயாக[3].(11) கருவூலம் குறைவடைவதன் மூலம், மன்னனின் படைகள் குறைவடைகின்றன. எனவே, நீரில்லா காட்டில் நீரை உண்டாக்கும் ஒருவனைப் போல, மன்னன் (எவ்வழிமுறைகளிலாவது) தன் கருவூலத்தை நிரப்ப வேண்டும்.(12) பழங்காலத்தவரால் பின்பற்றப்பட்ட இந்தப் போலி அறநெறிக்கு ஏற்புடைய வகையில் மன்னன் செயல்பட வேண்டும், நேரம் வரும்போது தன் மக்களிடம் கருணையைக் காட்ட வேண்டும்[4]. இதுவும் ஒரு நித்திய கடமையாகும்.(13) இயன்றவர்களும், தகுந்தவர்களுமான மனிதர்களுக்கு, கடமைகள் ஒரே வகையைச் சார்ந்தவையே. எனினும், துன்ப காலங்களில் ஒருவனுடைய கடமை வேறு வகையைச் சார்ந்ததாகும். செல்வமில்லாமல் ஒரு மன்னன் (தவங்கள் அல்லது அதுபோன்ற செயல்களால்) அறத்தகுதியை ஈட்ட முடியும். எனினும் வாழ்வென்பது, அறத்தகுதியை விட மிக முக்கியமானதாகும். (செல்வமில்லாமல் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், செல்வத்தை அடையும் வழியின் குறுக்கே நிற்கும் எந்தத்தகுதியும் நாடப்படக்கூடாது).(14)
[3] “அதாவது, தூய இதயத்துடன் கேட்க வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] “அதாவது, துன்ப காலத்தைக் கடந்ததும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பலவீனமான மன்னன், எவ்வளவுதான் முயன்றாலும், தன் அறத்தகுதியை மட்டுமே துணையாகக் கொண்டு அதிகாரத்தை அடைய முடியாது. அவன் அறத்தகுதியை மட்டுமே அடைவதால் அவனுக்குரிய நியாயமான வாழ்வாதாரத்தை அவனால் ஒருபோதும் அடையமுடியாது.(15) எனவே, துன்ப கால நடைமுறைகள் சில வேளைகளில் அறநெறிக்கு இசைவற்றதாகவே கருதப்படுகின்றன. எனினும், கல்விமான்கள் அந்த நடைமுறைகள் பாவத்திற்கே வழிவகுக்கின்றன என்று கருதுகிறார்கள்.(16) துன்ப காலம் முடிந்ததும் ஒரு க்ஷத்திரியன் என்ன செய்ய வேண்டும்? (அத்தகைய நேரத்தில்) அவன் தன் தகுதிக்கு அழிவு ஏற்படாதவாறு தன் நடத்தையை அமைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவன் தன் எதிரிகளுக்குத் தான் அடிபணியாமல் இருக்கும் வழியில் செயல்பட வேண்டும்[5]. இவையும் அவனது கடமைகளாகவே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவன் சோர்வில் மூழ்கக்கூடாது.(17) (துன்ப காலங்களில்) அவன், பிறருடைய தகுதியையோ, தனது தகுதியையோ (அழிவடையும் ஆபத்திலிருந்து) காக்க முயலக்கூடாது. மறுபுறம், அவன் தன்னையே காத்துக் கொள்ள வேண்டும். இதுவே தீர்மானமான முடிவாகும்[6]. கடமைகளை அறிந்தவர்களான பிராமணர்கள், தங்களுக்குரிய கடமைகளில் செயல்திறனுடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட இந்த ஸ்ருதி இருக்கிறது. அதே போல, க்ஷத்திரியனைப் பொறுத்தவரையில், கரங்களின் வலிமையே பெரும் உடைமை என்பதால், அவன் உழைப்பில் {முயற்சியில்} செயல்திறன் கொண்டவனாக இருக்க வேண்டும்.(18,19) ஒரு க்ஷத்திரியனுக்கு வாழ்வாதார வழிமுறைகள் இல்லையென்றால், தவசிகளுக்கும் உரியவற்றையும், பிராமணர்களுக்குச் சொந்தமானவற்றையும் தவிர வேறு எதைத்தான் அவன் எடுக்கக்கூடாது? {அதாவது வேறு எதையும் அவன் எடுத்துக் கொள்ளலாம்}.(20)
[5] “அதாவது, தணிவுச்சடங்குகளைச் செய்ய வேண்டும். ஏற்கனவே தான் தீங்கிழைத்தவர்கள் தன்னிடம் நிறைவில்லாத நிலையை அடையாதவாறு அவர்களுக்கு நன்மையைச் செய்ய வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] அடுத்தவர்களின் தகுதி, அல்லது தனது தகுதியை அவன் பாதுகாக்க முயலக்கூடாது என்பதன் பொருள்: அத்தகைய நேரங்களில், தன் தகுதி, அல்லது பிறரின் தகுதிக்குத் தீங்கிழைக்கும் என்று எந்தவொரு செயலையும் செய்யாதிருக்கக் கூடாது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பிறருடைய, அல்லது தன்னுடைய அறத்தகுதிகள் குறித்த அனைத்துக் கருதுகோள்களையும் அவன் அலட்சியம் செய்யலாம். அத்தகைய நேரத்தில் அவனுடைய ஒரே நோக்கம் தன்னைக் காத்துக் கொள்வதாக இருக்கவேண்டும், அதாவது தன் உயிரைப் பாதுகாக்க வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒரு பிராமணன், (சாதாரண நேரங்களில்) எவனுக்கு ஒருபோதும் வேள்வி செய்யக்கூடாதோ அவனுக்கே துன்ப காலங்களில் வேள்வி செய்து கொடுக்கலாம், தடைசெய்யப்பட்ட உணவையும் உண்ணலாம் என்பது போல, (துயரில் இருக்கும்) ஒரு க்ஷத்திரியன், தவசிகள் மற்றும் பிராமணர்களைத் தவிர அனைவரிடமும் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.(21) (எதிரியால்) பீடிக்கப்பட்டு, (தப்பும் வழிமுறைகளை நாடும்) ஒருவனுக்கு எதுதான் முறையற்ற போக்காக இருக்கும்? (நிலவறைக்குள்) அடைபட்டு கிடந்து, (தப்ப முயலும்) ஒரு மனிதனுக்கு எதுதான் முறையற்ற பாதையாக இருக்க முடியும்? ஒரு மனிதன் துன்பத்துக்குள்ளானால், முறையற்ற போக்கின் மூலமும் தப்பலாம்.(22) கருவூலம் மற்றும் படை பலவீனத்தின் விளைவால் ஒரு க்ஷத்திரியன் மிகுந்த அவமானத்தை அடைந்தால், பிச்சைக்கார வாழ்வோ, வைசியத் தொழிலோ, சூத்திரத் தொழிலோ அவனுக்கு விதிக்கப்படவில்லை.(23) போர் மற்றும் வெற்றியின் மூலம் செல்வத்தை அடைவதே தொழிலாக ஒரு க்ஷத்திரியனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. அவன் தன் வகையைச் சேர்ந்த ஒருவனிடம் பிச்சை எடுக்கக்கூடாது. சாதாரண நேரங்களில் முதன்மையாகத் தனக்கு விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றும் மனிதன், துன்ப காலங்களில், மாற்று நடைமுறைகளைப் பின்பற்றித் தன்னை ஆதரித்துக் கொள்ள வேண்டும்.(24) துன்ப காலங்களில் சாதாரண நடைமுறைகளைப் பின்பற்ற முடியாது. ஒரு க்ஷத்திரியன் நீதியற்ற, முறையற்ற வழிமுறைகளின் மூலமும் வாழலாம். பிராமணர்களே கூடத் தங்கள் வாழ்வாதாரங்கள் அழிவடையும் போது, அதையே செய்வதைக் காண முடிகிறது.(25)
(அத்தகைய நேரங்களில்) பிராமணர்களே இவ்வாறு நடந்து கொள்ளும்போது, க்ஷத்திரியர்கள் அவ்வாறு செய்வதில் என்ன ஐயமிருக்க முடியும்? உண்மையில் இது தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். மனச்சோர்வில் மூழ்காமலும், அழிவடையாமலும் ஒரு க்ஷத்திரியன் செல்வந்தர்களிடம் இருந்து (பலவந்தமாக) தன்னால் முடிந்ததை எடுத்துக் கொள்ளலாம்.(26) க்ஷத்திரியனே மக்களைப் பாதுகாப்பவனும், அழிப்பவனும் ஆவான் என்பதை அறிவாயாக. எனவே, துயரில் இருக்கும் ஒரு க்ஷத்திரியன், (முற்றிலும்) மக்களைக் காக்கும் நோக்கோடு தன்னால் முடிந்ததை (பலவந்தமாக) எடுத்துக் கொள்ள வேண்டும்.(27) ஓ! மன்னா, உலகில் உள்ள எந்த மனிதனாலும், பிற உயிரினங்களுக்குத் தீங்கிழைக்காமல் தன் வாழ்வைத் தாங்கிக் கொள்ள முடியாது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆழ்ந்த கானகத்தில் தனியாக வாழும் தவசி கூட இதற்கு விதிவிலக்கானவரல்ல.(28) ஓ! குருக்களின் தலைவா, ஒரு க்ஷத்திரியன், அதிலும் குறிப்பாக ஆட்சி செய்வதில் விருப்பமுள்ள ஒருவன், விதியைச் சார்ந்து ஒருபோதும் வாழக்கூடாது.(29) மன்னனும் நாடும், எப்போதும் முறையாக ஒருவரையொருவர் காத்துக் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு நித்திய கடமையாகும்.(30)
நாடு துன்பத்தில் மூழ்கும்போது, மன்னன் தன் உடைமைகள் அனைத்தையும் செலவழித்துப் பாதுகாப்பதால், நாடும் மன்னன் துன்பத்தில் மூழ்கும்போது அவனைப் பாதுகாக்க வேண்டும்.(31) அதிகத் துன்பத்திலும் கூட, கருவூலம், தீயோரைத் தண்டிக்கும் {அரசு} இயந்திரம், படை ஆகியவற்றையும், நண்பர்கள், கூட்டாளிகள், தேவையான பிற அமைப்பினரையும், தன் நாட்டில் உள்ள தலைவர்கள் ஆகியோரையும் மன்னன் கைவிடக்கூடாது.(32) ஒருவன் தன் வித்துகளைக் காப்பதற்காக, அவற்றைத் தன் உணவிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என்ற கடமையை அறிந்தோர் சொல்கின்றனர்[7]. பெரும் மாயாசக்திகளுக்காக நன்கறியப்பட்டவனான சம்பரனின் உடன்படிக்கையில் இந்த உண்மை குறிப்பிடப்படுகிறது.(33) எந்த மன்னனின் நாடு நலிவுறுகிறதோ, அவனுடைய வாழ்வுக்கு ஐயோ. எந்த மனிதன் வாழ்வாதாரத் தேவைகளுக்காக அந்நிய நாட்டுக்குச் சென்று வாழ்கிறானோ, அவனுடைய வாழ்வுக்கு ஐயோ.(34) கருவூலமும், படையுமே மன்னனின் வேர்களாகும். மேலும் அவனுடைய படையானது, கருவூலத்திலேயே தன் வேரைக் கொண்டுள்ளது. அவனுடைய படையே அனைத்து அறத்தகுதிகளுக்கும் வேராகும். மேலும் அறத்தகுதிகளே அவனுடைய குடிமக்களின் வேராகும்.(35)
[7] “விதைக்கு இல்லாமல் உண்டுவிட்டால் பிறகு உணவு கிடைப்பது அரிதாகிவிடும். உண்பதைக் குறைத்தாவது விதையைச் சேமித்தால் பிறகு உணவுக்குக் குறையிருக்காது. அதுபோலச் செல்வம் குறைந்த மன்னனை குடிமக்கள் பாதுகாத்தால், பிறகு அவனால் அவர்கள் காக்கப்படுவார்கள். அப்படிச் செய்யாமல் மன்னனுக்குக் கேடு வந்தால் குடிமக்களும் அழிந்துவிடுவார்கள்” என்பது பழையவுரை என்று கும்பகோணம் பதிப்பில் அடிக்குறிப்பு இருக்கின்றது.
பிறரை ஒடுக்காமல் ஒருபோதும் கருவூலத்தை நிரப்ப முடியாது. ஒடுக்குமுறையில்லாமல் படையை எவ்வாறு பாதுகாக்க முடியும்? எனவே, மன்னன், துன்ப காலங்களில், கருவூலத்தை நிரப்புவதற்காகத் தன் குடிமக்களை ஒடுக்கினால் எந்தக் குற்றத்தையும் இழைத்தவனாகமாட்டான்.(36) வேள்விகளைச் செய்வதற்காக முறையற்ற செயல்கள் பல செய்யப்படுகின்றன. இந்தக் காரணத்தினால், (துன்ப காலத்தில் தன் கருவூலத்தை நிரப்பும் நோக்குடன்) ஒரு மன்னன் முறையற்ற செயல்களைச் செய்வதால் எந்தக் குற்றத்தையும் இழைத்தவனாகமாட்டான்.(37) செல்வத்தை அடைவதற்காக, (துன்ப காலங்களில்) முறையான நடைமுறைகளையும் தவிர்த்து, வேறு நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. (துன்ப காலங்களில்) அத்தகைய முறையற்ற நடைமுறைகளைப் பின்பற்றவில்லையெனில், தீமையே நிச்சயமான விளைவாக இருக்கும். அழிவுக்காகவும், துயருக்காகவும் இயங்கும் அமைப்புகள் அனைத்தும், செல்வத்தைத் திரட்டுவதற்காகவே அமைந்திருக்கின்றன. ஒரு நுண்ணறிவுமிக்க மன்னன் (அத்தகைய காலங்களில்) இத்தகைய கருத்துகளால் வழிநடத்தப்பட்டு, தன் போக்கைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.(38) வேள்விகளுக்கு விலங்குகளும், பிற பொருட்களும் தேவைப்படுவதைப் போலவே, வேள்விகள் இதயத்தைத் தூய்மைப்படுத்துவதைப் போலவே, விலங்குகள், வேள்விகள் மற்றும் இதயத்தூய்மை ஆகிய அனைத்தும் இறுதி விடுதலைக்கானது {முக்திக்கானது} என்பதைப் போலவே, கொள்கையும், தண்டனையும், கருவூலத்துக்காக இருக்கின்றன, கருவூலம் படைக்காக இருக்கிறது, கொள்கை, கருவூலம் மற்றும் படை ஆகிய மூன்று எதிரிகளை வெல்வதற்காகவும், நாட்டைப் பாதுகாத்து பெருக்குவதற்காகவும் இருக்கின்றன.(39)
நான் இங்கே அறநெறியின் உண்மை வழிகளை எடுத்துரைக்கும் ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லப் போகிறேன். ஒரு வேள்விக் கம்பை {யூபத்தை} அமைப்பதற்காக ஒரு பெரு மரம் வெட்டப்படுகிறது. அதை வெட்டும் போது, அதன் வழியில் குறுக்கிடும் பிற மரங்களும் வெட்டப்படுகின்றன. வீழும் அவையும், அந்த இடத்தில் நிற்கும் பிறரைக் கொல்கின்றன {பிற உயிரினங்கள், அல்லது மரங்களையும் கொல்கின்றன}.(40,41) அதேபோலவே நன்கு நிரம்பிய கருவூலத்தை அமைக்கும் வழியில் குறுக்கே நிற்பவர்களும் கொல்லப்படவே வேண்டும். வேறு வகையில் எவ்வாறு வெற்றியை அடைய முடியும் என்பதை நான் காணவில்லை[8].(42) இம்மை, மறுமை ஆகிய ஈருலகங்களும், உண்மையும், அறத்தகுதியும் செல்வத்தால் அடையப்படுகிறது. செல்வமில்லாத மனிதன் பிணமே ஆவான்.(43) வேள்விகள் செய்வதற்கான செல்வம் எல்லா வழிமுறைகளிலும் அடையப்பட வேண்டும். ஓ! பாரதா, துன்பகாலத்தில் செய்யப்படும் எந்தச் செயலையும் பற்றியிருக்கும் தகுதியின்மையும், பிற நேரத்தில் அதே செயலில் பற்றியிருக்கும் தகுதியின்மையும் ஒன்றல்ல.(44) ஓ! மன்னா, செல்வத்தை அடைவதையும், கைவிடப்படுவதையும் ஒரே மனிதனிடம் காண முடியாது. காட்டில் எந்தச் செல்வந்தனையும் நான் காணவில்லை.(45)
[8] கும்பகோணம் பதிப்பில், “யாகத்திற்காக யூபத்திற்குரிய மரத்தை வெட்டுகிறார்கள். அவ்விடத்தில் அருகிலுள்ள எந்தச் சில மரங்கள் (அதற்கு) விரோதமாயிருக்கின்றனவோ அந்த மரங்களையும் நிச்சயமாக வெட்டுகிறார்கள். அந்த மரங்கள் விழும்பொழுது மற்ற மரங்களையும் முறிக்கின்றன. சத்துருக்களைத் தபிக்கச் செய்கிறவனே, இவ்விதம் எந்த மனிதர்கள் பெரிய பொக்கசத்திற்கு விரோதிகளாயிருக்கிறார்களோ அவர்களைக் கொல்லாமல் இந்தப் பொக்கசம் ஸித்திப்பதைக் காணேன்” என்றிருக்கிறது.
உலகத்தில் உள்ள எந்தச் செல்வத்தை எடுத்துக் கொண்டாலும், “இஃது எனதாகும், இஃது எனதாகும்” என்று சொல்லி ஒவ்வொருவரும் வேறு அனைவருடனும் போட்டியிடுவதே காணப்படுகிறது.(46) ஓ! பகைவர்களை எரிப்பவனே, நாட்டை அடைவதைவிட ஒரு மன்னனுக்குத் தகுதி வாய்ந்தது {புண்ணியம் நிறைந்தது} வேறு எதுவும் இல்லை. சாதாரணக் காலங்களில் தன் குடிமக்களிடம் கடும் தீர்வைகளைச் சுமத்தி அவர்களை ஒடுக்குவது ஒரு மன்னனுக்குப் பாவம் நிறைந்த செயலாகும். எனினும், துன்ப காலங்களில் இது முற்றிலும் வேறுபடும்.(47) கொடைகள், வேள்விகள் மூலம் சிலர் செல்வத்தை அடைகிறார்கள்; தவத்தில் விருப்பமுடைய சிலர், தவங்களின் மூலம் செல்வத்தை அடைகிறார்கள்; சிலர் அதைத் தங்கள் நுண்ணறிவு மற்றும் புத்திசாலித்தனத்தின் உதவியுடன் அடைகிறார்கள்.(48) செல்வமில்லாதவன் பலவீனன் என்று சொல்லப்படும் அதே வேளையில் செல்வந்தன் பலமிக்கவனாகிறான். ஒரு செல்வந்தனால் அனைத்தையும் அடைய முடியும். நன்கு நிரப்பப்பட்ட கருவூலத்தைக் கொண்ட மன்னன் அனைத்தையும் சாதிப்பதில் வெல்வான்.(49) கருவூலத்தைக் கொண்டு ஒரு மன்னனால் அறத்தகுதியை ஈட்ட முடியும், தன் இன்ப விருப்பங்களை நிறைவு செய்து கொள்ள முடியும், இம்மையையும், மறுமையையும் அடைய முடியும். எனினும், கருவூலம் அறத்தின் துணை கொண்டே நிரப்பப்பட வேண்டும், துன்ப காலங்களைத் தவிர்த்து அறமில்லா நடைமுறைகளால் ஒருபோதும் அது {கருவூலம்} நிரப்பப்படக்கூடாது” என்றார் {பீஷ்மர்}.(50)
ராஜதர்மாநுசாஸன உப பர்வம் முற்றும்
சாந்திபர்வம் பகுதி – 130ல் உள்ள சுலோகங்கள் : 50
ஆங்கிலத்தில் | In English |