Partition! | Shanti-Parva-Section-131| Mahabharata In Tamil
(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 01)
பதிவின் சுருக்கம் : மன்னன் பலவீனமாக இருக்கும்போது ஏற்படும் எதிரிகளின் படையெடுப்பு, பிரிவினை ஆகியவற்றின் போது அவன் என்ன செய்ய வேண்டும் என்று யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-131 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “பலவீனமானவனும், அடிபணிந்தவனும், நண்பர்களின் உயிர் குறித்த கவலையால் போரில் ஈடுபடாதவனும், எப்போதும் அச்சத்தின் வசப்பட்டிருப்பவனும், தன் ஆலோசனைகளை இரகசியமாக வைத்துக் கொள்ள முடியாதவனுமான மன்னனால் இதைத் தவிர வேறு என்ன செய்யப்பட வேண்டும்?(1) நகரங்களும், நாடுகளும் எதிரிகளால் பிரிக்கப்படும், கைப்பற்றப்படும் நிலைக்கு உள்ளானவனும், செல்வத்தை இழந்தவனும், தன் நண்பர்களையும், தன்னோடுள்ளவர்களையும் (வறுமை நிலை காரணமாக) கௌரவிக்க முடியாதவனும், ஒற்றுமையின்மை கொண்ட, அல்லது எதிரிகளால் வாங்கப்பட்ட அமைச்சர்களைக் கொண்டவனும், எதிரியின் முகத்துக்கு முன்பு அடிபணிந்து நிற்க வேண்டியவனும், படை சிறுத்தவனும், பலமிக்க எதிரியால் இதயம் கலங்கடிக்கப்பட்டவனுமான மன்னன் உண்மையில் என்ன செய்ய வேண்டும்??” என்று கேட்டான்.(2,3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “படையெடுத்து வரும் எதிரி, தூய இதயம் கொண்டவனாகவும், அறநெறி மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் அறிந்தவனாகவும் இருந்தால், நீ குறிப்பிடும் வகையில் உள்ள ஒரு மன்னன், தாமதம் செய்யாமல் படையெடுத்துவருபவனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, ஏற்கனவே வெல்லப்பட்ட தன் நாட்டின் பகுதிகளை மீட்க வேண்டும்.(4) படையெடுப்பாளன் பலமிக்கவனாகவும், பாவியாகவும், நியாயமற்ற வழிமுறைகளில் வெற்றியை அடைய முயல்பவனாகவும் இருந்தால், தன் ஆட்சிப்பகுதிகளில் ஒரு பகுதியைக் கைவிட்டு அவனிடமும் அமைதியையே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(5) படையெடுப்பாளன் அமைதியை ஏற்படுத்த விரும்பவில்லை என்றால், மன்னன் ஆபத்தில் இருந்து தப்பிக்க, தன் தலைநகரையும், தன் உடைமைகளையும் கைவிட வேண்டும். அவன் தன் உயிரைக் காத்துக் கொள்ள முடிந்தால், எதிர்காலத்தில் அதே போன்ற உடைமைகளை அடையும் நம்பிக்கையுடன் இருக்கலாம்.(6) கருவூலம் மற்றும் படையைக் கைவிடுவதால் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம் என்றால், அறநெறி அறிந்த எந்த மனிதன்தான் மிக மதிப்புமிக்க உடைமையான தன் சுயத்தைத் தியாகம் செய்வான்?(7) ஒரு மன்னன் தன் வீட்டின் பெண்மணிகளைப் பாதுகாக்க வேண்டும். இவர்கள் எதிரியின் கரங்களில் வீழ்ந்தால் (அவர்களை விடுவிப்பதற்காகத் தானே பிடிபடும் ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில்) அவர்களிடம் எந்தக் கருணையும் காட்டக்கூடாது” என்றார்.(8)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “தன்னுடையவர்களே நிறைவில்லாதவர்களாக இருக்கும்போதும், படையெடுப்பாளர்களால் ஒடுக்கப்படும்போதும், தன் கருவூலம் தீர்ந்த போதும், தன் ஆலோசனைகள் வெளிப்படும்போதும் ஒரு மன்னன் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.(9)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அத்தகு சூழ்நிலைகளில் உள்ள ஒரு மன்னன் (தன் எதிரி நேர்மையானவனாக இருந்தால்) அவனுடன் அமைதி ஏற்படுத்திக் கொள்ள முனைய வேண்டும். (எதிரி நியாயமற்றவனாக இருந்தால்) அவன் தன் வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். இத்தகு வழிமுறைகளால் அன் எதிரியைத் தன் நாட்டில் இருந்து பின்வாங்கச் செய்ய வேண்டும்; அல்லது துணிச்சலுடன் போரிட்டு, தன் உயிரை விட்டுச் சொர்க்கத்திற்கு உயர வேண்டும்.(10) பற்றுறுதிமிக்கவர்களும், உற்சாகம் நிறைந்தவர்களும், தன் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும் நிறைந்த ஒரு சிறு படையின் உதவியைக் கொண்டே கூட ஒரு மன்னனால் மொத்த பூமியையும் வெல்ல முடியும்.(11) போரில் கொல்லப்பட்டால் அவன் நிச்சயம் சொர்க்கத்திற்கு உயர்வான். (எதிரிகளைக்) கொல்வதில் வென்றாலோ, அவன் நிச்சயம் பூமியை அனுபவிப்பான். போரில் தன் உயிரை விடுவதால், ஒருவன் இந்திரனின் தோழமையையே அடைகிறான்” என்றார் {பீஷ்மர்}.(12)
சாந்திபர்வம் பகுதி – 131ல் உள்ள சுலோகங்கள் : 12
ஆங்கிலத்தில் | In English |