Mother and Father! | Shanti-Parva-Section-129| Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 129)
பதிவின் சுருக்கம் : பெற்றோருக்குப் பணிவிடை செய்வது ஒவ்வொருவரின் கடனை நேர் செய்வதற்குரிய இயல்பு என்று யமன் கௌதம முனிவருக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-129 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, “அமுதத்தைக் குடிப்பவன் போலவே, நீர் சொல்வதைக் கேட்கும் நானும் தாகம் தணியாதவனாக இருக்கிறேன். தன்னறிவைக் கொண்ட ஒருவன், தியானத்தால் ஒருபோதும் தணிவடையாததைப் போலவே, நீர் சொல்வதைக் கேட்பதால் நான் ஒருபோதும் தணிவடையவில்லை.(1) எனவே, ஓ! பாட்டா, அறநெறி குறித்து நீர் மீண்டும் உரைப்பீராக. அறநெறி குறித்த உமது உரையாடல்கள் எனும் அமுதத்தைப் பருகுவதால் என் தாகம் ஒருபோதும் தணிவடையவில்லை” என்றான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பழங்காலத்தில் கௌதமருக்கும், சிறப்புமிக்க யமனுக்கு இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகின்றது.(3) கௌதமர் பாரிபாத்ர {பாரியாத்திர} மலையில் ஒரு பெரிய ஆசிரமத்தைக் கொண்டிருந்தார். அந்த வசிப்பிடத்தில் அவர் எத்தனை வருடங்கள் இருந்தார் என்பதை என்னிடம் கேட்பாயாக. அறுபதாயிரம் {60,000} வருடங்களுக்கு அந்தத் தவசி அந்த ஆசிரமத்திலேயே பல கடுந்தவங்களைச் செய்தார்.(4) ஒரு நாள், ஓ! மனிதர்களில் புலியே, லோகபாலகனான யமன், தூய ஆன்மா படைத்த அந்தத் தவசி கடுந்தவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே சென்றான். கடுத் தவங்களைச் செயதவரும், கடுந்தவங்களிலேயே எப்போதும் ஈடுபட்டு வருபவருமான அந்தத் தூய்மையான ஆன்மாவை {கௌதமரை} யமன் கண்டான்.(5)
வந்தவன் யமன் என்பதைப் புரிந்து கொண்ட அந்த மறுபிறப்பாள தவசி, கூப்பிய கரங்களுடனும், (அவனது ஆணைகளுக்குக் காத்திருக்கும் வகையில்) அவனை விரைவாக வணங்கி அமர்ந்தார்.(6) தர்மராஜனும் அந்தப் பிராமணக் காளையைக் கண்டு (பதிலுக்கு) முறையாக வணங்கி, தான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டான்.(7)
கௌதமர் {யமனிடம்}, “ஒருவன் எச்செயல்களைச் செய்வதால் தன் தாய்க்கும், தந்தைக்கும் பட்ட கடனில் இருந்து விடுபடலாம்? மேலும் அடைவதற்கரிதான தூய அருள் கொண்ட உலகங்களை ஒருவன் எவ்வாறு வெல்லலாம்?” என்று கேட்டார்.(8)
யமன் {கௌதமரிடம்}, “ஒருவன், உண்மை என்ற கடமைக்குத் தன்னை அர்ப்பணித்து, தூய்மையையும், தவங்களையும் பயின்று, இடையறாமல் தனது தாய் மற்றும் தந்தையை வழிபட வேண்டும்.(9) ஒருவன், பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் குதிரை வேள்விகளையும் செய்ய வேண்டும். இத்தகு செயல்களால் ஒருவன் அற்புதமான (புகழ்) உலகங்களை வெல்லலாம்” என்றான்”.(10)
சாந்திபர்வம் பகுதி – 129ல் உள்ள சுலோகங்கள் : 10
ஆங்கிலத்தில் | In English |