Sudarsana and Ogavati! | Anusasana-Parva-Section-02 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 02)
பதிவின் சுருக்கம் : இல்லறத்தின் சிறப்பை விளக்க சுதர்சனன் மற்றும் ஓகவதியின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! மனிதர்களில் விவேகியே, ஓ! சாத்திரங்கள் அனைத்தையும் கற்றவரே, ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, நான் இந்தப் பெருங்கதையைக் கேட்டிருக்கிறேன்.(1) அறபோதனைகள் நிறைந்த வரலாறுகளே மேலும் கேட்க நான் விரும்புகிறேன், என்னை நிறைவுசெய்வதே உமக்குத் தகும்.(2) ஓ! பூமியின் தலைவா, இல்லறத்தான் எவனும் {கிருஹஸ்தன் எவனும்} அறப்பயிற்சியின் மூலம் மிருத்யுவை வென்றிருக்கிறானா என்பதை எனக்குச் சொல்வீராக. விவரங்கள் அனைத்துடன் எனக்கு இதைச் சொல்வீராக" என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இல்லறத்தான் ஒருவன் அறப்பயிற்சியின் மூலம் மிருத்யுவை வென்ற இந்தப் பழைய வரலாறு சொல்லப்படுகிறது.(4) ஓ! மன்னா, பிரஜாபதியான மனு, இக்ஷ்வாகு என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். சூரியனைப் போன்று ஒளிமிக்கவனான அந்த மன்னனுக்கு {இக்ஷ்வாகுவுக்கு} நூறு மகன்கள் பிறந்தனர்.(5) ஓ! பாரதா, அவனுடைய பத்தாவது மகனுக்குத் தசாஸ்வன் என்ற பெயர் சூட்டப்பட்டது. பிழையற்ற ஆற்றல் கொண்ட இந்த அறம்சார்ந்த இளரவசனே மாஹிஷ்மதியின் மன்னனானான்.(6) ஓ! மன்னா, இந்தத் தசாஸ்வனின் மகன், வாய்மை, ஈகை மற்றும் அர்ப்பணிப்பை நிலையாகப் பயிலும் அறம் சார்ந்த ஓர் இளவரசனாக இருந்தான். மதிராஸ்வன் என்ற பெயரில் அறியப்பட்ட அவன், பூமியின் தலைவனாக அவளை {பூமியை} ஆண்டான். அவன் வேத கல்வி மற்றும் ஆயுத அறிவியல் கல்வி ஆகியவற்றில் தன்னை நிலையாக அர்ப்பணித்திருந்தான்.(8) அந்த மதிராஸ்வனின் மகன், பெரும் நற்பேற்றையும், பலம், சக்தி, அதிகாரம் ஆகியவற்றுடன் கூடியவனாகத் தியுதிமான் என்ற பெயரைக் கொண்டிருந்தான்.(9) தியுதிமானின் மகன், மிகுந்த அர்ப்பணிப்பும், பக்தியும் மிக்க மன்னனாகச் சுவீரன் என்ற பெயரில் உலகங்கள் அனைத்திலும் புகழ்பெற்றிருந்தான். அறநோக்கு ஆன்மாவுடன் கூடிய அவன், தேவர்களின் தலைவனான மற்றொரு இந்திரனைப் போலப் பெருஞ்செல்வம்படைத்தவனாக இருந்தான்.(10)
சுவீரனுக்குப் போரில் வெல்லப்பட முடியாதவனாகவும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகவும், சுதுர்ஜயன் என்ற பெயரில் அறியப்பட்ட ஒரு மகன் இருந்தான்.(11) இந்திரனைப் போன்ற உடலைக் கொண்ட துர்ஜயனுக்கும், நெருப்பின் காந்தியைக் கொண்ட ஒரு மகன் இருந்தான். துரியோதனன் என்ற பெயரைக் கொண்ட அவன் அரச முனிகளில் முதன்மையான பெரும் ஏகாதிபதியாக இருந்தான்.(12) போர்க்களத்தில் இருந்து ஒருபோதும் தப்பி ஓடாதவனும், இந்திரனைப் போன்ற வீரத்தைக் கொண்டவனுமான இந்த ஏகாதிபதியின் நாட்டில் இந்திரன் அபரிமிதமான மழையைப் பொழிந்தான்.(13) இந்த மன்னனின் நாடு மற்றும் நகரங்கள் ரத்தினங்கள், கால்நடைகள், பல்வேறு வகைத் தானியங்கள் மற்றும் செல்வங்களுடன் நிறைந்திருந்தன.(14) அவனுடைய நாட்டில் கஞ்சர்கள் யாரும் இல்லை, துன்பத்தால் அல்லது வறுமையால் பீடிக்கப்பட்ட எந்த மனிதனும் இல்லை. பலவீனமான அல்லது நோயால் பீடிக்கப்பட்ட உடல் கொண்ட எந்த மனிதனும் அவனுடைய நாட்டில் இல்லை.(15)
அந்த மன்னன் {துரியோதனன்}, மிகுந்த புத்திமானாகவும், பேச்சில் மென்மையானவனாகவும், பொறாமையற்றவனாகவும், தன் ஆசைகளை அடக்கி ஆள்பவனாகவும், அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனாகவும், கருணை நிறைந்தவனாகவும், ஆற்றல் கொண்டவனாகவும், தற்பெருமையில் ஈடுபடாதவனாகவும் இருந்தான்.(16) அவன் வேள்விகளைச் செய்பவனாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவனாகவும், நுண்ணறிவுமிக்கவனாகவும், பிராமணர்கள் மற்றும் வாய்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனாகவும் இருந்தான். அவன் ஒருபோதும் பிறரை அவமதிக்காதவனாகவும், ஈகையாளனாகவும், வேதங்கள் மற்றும் வேதாந்தங்களைக் கற்றவனாகவும் இருந்தான்.(17) ஓ! பாரதா, மங்கலமானவளும், புனிதமானவளும், குளிர்ந்த நீரைக் கொண்டவளுமான நர்மதையெனும் தெய்வீக ஆறானவள், தன் சொந்த இயல்பினோடு {அந்த தெய்வீக வடிவத்தோடு} அவனிடம் வந்தாள்.(18) அவன் அந்த ஆற்றிடம், தாமரைக் கண்களையும், பேரழகையும் கொண்டவளும், சுதர்சனை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒரு மகளைப் பெற்றான்.(19) ஓ! யுதிஷ்டிரா, துரியோதனனின் மகளான அந்தச் சிறந்த கன்னிகையைப் போன்று அதற்கு முன் பெண்குலத்தில் எந்த ஓர் உயிரினமும் அழகாக இருந்ததில்லை.(20)
ஓ! ஏகாதிபதி, அக்னி தேவன், ஒரு பிராமண வடிவில் மன்னனிடம் வந்து, அழகுநிறைந்த இளவரசி சுதர்சனையின் கரத்தை வேண்டினான்.(21) அம்மன்னன் {துரியோதனன்}, ஏழையும், தனக்கு ஒப்பான பதவி இல்லாதவனுமான அந்தப் பிராமணனுக்குத் தன் மகளைக் கொடுக்க விரும்பவில்லை.(22) எனவே அக்னி அவனுடைய பெரும் வேள்வியில் இருந்து மறைந்து போனான்[1].
[1] கும்பகோணம் பதிப்பில் இப்பகுதி இன்னும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு: "அக்னி பகவான், சரத்கால ஸூர்யனுக்கு நிகரான ஒளியுள்ள அழகிய மானிட உருவத்தையெடுத்துக் கொண்டு அந்த ஸுதர்சனையென்னும் ராஜகுமாரியை நேரில் விரும்பினான். பிதாவுக்குப் பணிவிடை செய்ய நிச்சயஞ்செய்துகொண்ட அவள், பிதாவினால் அக்னிஹோத்ரசாலையில் நியமிக்கப்பட்டு அக்னி கார்யம் செய்ய ஆரம்பித்தாள். மனத்தைக் கவர்வதாகிய அவளுருவத்தைக் கண்டு அக்னிபகவான், மன்மதனால் தூண்டப்பட்டு அவளைத் தன் மனைவியாகச் செய்து கொள்ள ரஹஸ்யமாக ஆரம்பித்தான். "குற்றமற்ற அங்கமுள்ளவளே, தாமரைமலர் போன்ற கண்களும், மான்குட்டி போன்ற பார்வையும், பூர்ணசந்திரனுக்கு நிகரான முகமும், வாழை மரம் போன்ற தொடைகளும் உடையவளே, என்னிடம் நேசித்து என்னை அடையக் கடவாய். தாமரையிதழ் போன்ற கண்களுள்ளதும், கொடிகள் போன்ற புருவங்களினால் அழகியதும், மனத்தைக் கவர்வதுமாகிய இந்த உன் அழகான முகத்தை நான் கண்ட பிறகு என்னை மன்மதன் பீடிக்கிறான். பிறைச் சந்த்ரனுக்கொப்பானதும் கூந்தலால் அலங்கரிக்கப்பெற்றதும், தாழம்பூமடல் போல அழகியதுமான உன் நெற்றியைக் கண்ட என்னை அனங்கன் மிகத் துன்பப்படுத்துகிறான். இளவெய்யிற்பட்டு மலர்ந்த தாமரை மலர் போன்றதும், வேர்த்து மயிர் பொடித்திருப்பதும், கோவைப் பழம் போன்ற அதரமுடையதும் மிக்க அழகான விலாஸமுடையதுமான உனது முகம் என்னை மிகவும் மயக்குகிறது. தந்தங்களின் கிரணமென்னும் கயிற்றினால் கட்டப்பட்டதுபோல வெளிப்படாமல் காப்பாற்றப்பட்ட உன் வாக்கும் இளந்துளிர் போன்ற இந்த நாவும் என் மனத்தை இழுக்கின்றன. உனது பற்கள் ஏற்றத்தாழ்வில்லாதவைகளாகவும், பளபளப்பாகவும் அழகான வடிவமுள்ளவையாகவும் நெருக்கமாகவும் இருக்கின்றன. பிராம்மணன் {என்} மனைவியே, அழகாயிருக்கிறாய். நீ தயை செய்து என்னையடையக் கடவாய். அழகியதும், அழகிய கடைக்கண் பார்வையுள்ளதுமாகிய உனது முகம் உள்ளத்தைக் கவர்கிறது. அச்சமுள்ளவளே, ஒன்றோடொன்று சேர்ந்தவையும், ஹாரங்களாலும், ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பெற்றவையும், பழுத்த வில்வக்கனிகள் போன்றவையும், தளராதவையுமான உன் இரு கொங்கைகளும் அணைதற்குரியன. ஆழ்ந்த நாபியுடன் அழகாயிருக்கும் சிறந்த நிறமுள்ளவளே, என்னை அடையக்கடவாய்" என்று சொன்னான். மஹாத்மாவான அக்னி தேவனால் ரஹஸ்யத்தில் இவ்வாறு சொல்லப்பெற்ற அந்தப் பெண் மனத்தால் கொஞ்சம் நடுக்கமுற்று, வெட்கத்துடன் பேசலானாள், "ஐயா, மேற்குலத்தில் பிறந்த கன்னிகைகளைக் கொடுப்பதற்கு முக்யமாகத் தாய் தந்தையரும் சுற்றத்தாரும் அதிகாரிகள் அல்லரோ? பாணிக்ரஹணத்துக்குரிய மந்த்ரங்களைச் சொல்லி அக்னியில் ஹோமம் செய்து பெரியோர்களின் ஸபையில் விவாஹம் செய்த பெண்ணுக்குக் கணவனே தஞ்சம். தேவனே, ஆதலால், நான் ஸ்வதந்த்ரமுள்ளவள்ளல்லேன். என் தந்தையைக் கேள்" என்றாள். அதன் பிறகு, சில காலத்துக்குப் பின் துர்யோதனராஜன் யாகத்துக்குரிய பொருள்களைச் சேகரிப்பதில் ஸமர்த்தர்களான மந்த்ரிமார்களையழைத்து, "நான் யாகம் செய்யப் போகிறேன். எனக்கு வேண்டிய பொருள்களைச் சேகரிக்க வேண்டும்" என்று சொன்னான். பிறகு, அந்த ராஜாவினுடைய வேள்வியானது ப்ராம்மணோத்தமர்களால் ஆரம்பிக்கப்பட்டபோது அக்னி பகவான் அந்தண வடிவத்துடன் அரசனிடம் கன்னியைக் கேட்டான். அவ்வரசனோ அவனுக்குப் பெண் கொடுக்க எண்ணம் கொள்ளவில்லை. "இவன் ஏழை; நமது வர்ணம் அல்லன்" என்று நினைத்து, அவன் அந்தப் பிராம்மணனுக்குக் கன்னிகையைக் கொடுக்க எண்ணங்கொள்ளவில்லை. அம்மஹாத்மாவான அரசன் யாகதீக்ஷை எடுத்துக் கொண்ட பிறகு, ஹோமத்திற்காக வேதிகையில் வைக்கப்பட்ட அக்னி மறைந்தது" என்றிருக்கிறது. கங்குலி, மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் மேற்கண்ட விவரிப்பு இல்லை.
இதயத்தில் துயர் கொண்ட அம்மன்னன் பிராமணர்களை அழைத்து அவர்களிடம்,(22) "சிறப்புவாய்ந்த பிராமணர்களே, தீயோருக்குச் செயப்படும் நன்மை அவர்களது கருத்தில் இருந்து மறைந்து போவது போல அக்னி இவ்வேள்வியில் இருந்து மறைந்து போகும் அளவுக்கு நான் என்ன பாவம் செய்தேன், அல்லது நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள்?(24) உண்மையில், அக்னி மறைந்து போகுமளவுக்கு நாம் செய்த பாவம் நிச்சயம் பெரியதாக இருக்கும். இந்தப் பாவம் உங்களுடையதாகவோ, என்னுடையதாகவோ இருக்க வேண்டும். இக்காரியத்தை முழுமையாக விசாரிப்பீராக" என்று சொன்னான்.(25)
ஓ! பாரதகுல இளவரசர்களில் முதன்மையானவனே, மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட பிராமணர்கள், வாக்கைக் கட்டுப்படுத்தி, அக்னி தேவனின் பாதுகாப்பைக் குவிந்த கவனத்தோடு நாடினார்கள்.(26) கூதிர்காலச் சூரியனைப் போல ஒளிமிக்கவனும், ஆகுதிகளைச் சுமக்கும் தெய்வீக வாகனமுமான அவன், மகிமைபொருந்திய ஒளி சூழ அவர்கள் முன்பு தோன்றினான்.(27)
அப்போது உயர் ஆன்ம அக்னி அந்தச் சிறந்த பிராமணர்களிடம், "நான் எனக்காகவே துரியோதனனின் மகளைக் கேட்டேன்" என்றான்.(28) இதனால் ஆச்சரியமடைந்த பிராமணர்கள் அனைவரும் காலையில் எழுந்து அக்னி தேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளை மன்னனிடம் சொன்னார்கள்.(29)
ஞானியான அம்மன்னன், பிரம்மத்தைச் சொல்பவர்களின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இதயத்தில் மகிழ்ச்சியடைந்து, "அப்படியே ஆகட்டும்" என்றான். மேலும் அம்மன்னன் சிறப்புமிக்கவனான அக்னிதேவனிடம், "ஓ! அக்னியே, நீ எப்போதும் இங்கே எங்களுடன் இருக்க எண்ணுவாயாக" என்று ஒரு வரத்தை வரதட்சணையாக {கன்யாசுக்லமாக} வேண்டிக் கேட்டான்.(30) தெய்வீக அக்னியும், "அப்படியே ஆகட்டும்" என்று அந்தப் பூமியின் தலைவனிடம் {துரியோதனனிடம்} சொன்னான். இந்தக் காரணத்தினாலேயே இந்த நாள்வரை மாஹிஷ்மதி நாட்டில் அக்னி இருக்கிறான்;(31) தென்திசை வெற்றிப் பயணத்தில் {திக்விஜயத்தில்} சகாதேவனாலும் காணப்பட்டான்.(32) பிறகு மன்னன் தன் மகளைப் புதிய ஆடைகளில் நகைகளுடன் அலங்கரித்து, அந்த உயர் ஆன்ம தேவனுக்குக் கொடுத்தான், அக்னியும், வேள்விகள் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஏற்பதைப் போலவே, இளவரசியான சுதர்சனையைத் தன் மனைவியாக வேத சடங்குகளுடன் ஏற்றுக் கொண்டான்.(33,34) அவளது தோற்றம், அழகு, அருள், பண்பு, உன்னதப் பிறப்பு ஆகியவற்றில் நிறைவடைந்த அக்னி, அவளிடம் வாரிசைப் பெற மனம் கொண்டான். சுதர்சனன் என்ற பெயரைக் கொண்ட மகனை விரைவில் அவளிடம் பெற்றான்.(35,36) சுதர்சனனும், தோற்றத்தில் முழுநிலவைப் போன்ற அழகுடன் இருந்தான். பிள்ளைப்பருவத்திலேயே அவன் உயர்ந்ததும், எப்போதும் நீடிப்பதுமான பிரம்ம ஞானத்தை அடைந்தான்[2].(37)
[2] கும்பகோணம் பதிப்பில், "அந்த ஸுதர்சனன் அழகில் நிறைமதிக்கு நிகராகவிருந்தான். அவன் குழந்தையாயிருக்கையிலேயே நித்யமும், சிறந்ததுமான வேதமுழுமையும் ஓதினான்" என்றிருக்கிறது.
நிருகனின் பாட்டனும், ஓகவான் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னன் இருந்தான். ஓகவதி என்ற பெயரில் ஒரு மகளும், ஓகரதன் என்ற பெயரில் ஒரு மகனும் அவனுக்குப் பிறந்தனர்.(38) மன்னன் ஓகவான், தேவியைப் போன்ற அழகுநிறைந்தவளான ஓகவதி என்ற தன் மகளைக் கல்விமானான சுதர்சனனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.(39) ஓ! மன்னா, சுதர்னன், ஓகவதியுடன் ஓர் இல்லறத்தானின் {கிருஹஸ்தனின்} வாழ்வுமுறையை நோற்று, குருக்ஷேத்திரத்தில் அவளுடன் சேர்ந்து வாழ்ந்தான்.(40) புத்திமானும், சுடர்மிக்க சக்தி கொண்டவனுமான அந்த இளவரசன் {சுதர்சனன்}, ஓர் இல்லறத்தானின் வாழ்வுமுறையைப் பின்பற்றியபடியே மரணத்தை {யமனை} வெல்லும் நோன்பை நோற்றான்.(41)
ஓ! மன்னா அந்த அக்னிமகன் {சுதர்சனன்}, {தன் மனைவியான} ஓகவதியிடம், "நமது விருந்தோம்பலை நாடுவோருக்கு (அவர்களது விருப்பங்களுக்கு} எதிரான எந்தச் செயலையும் ஒருபோதும் செய்யாதே.(42) நீ உன்னையே கொடுக்க வேண்டியிருந்தாலும், விருந்தினர்களை வரவேற்கும் வழிமுறைகளில் எந்த ஐயுணர்வும் கொள்ளாதே[3].(43) ஓ! அழகியே, விருந்தினர்களுக்கு இணங்கும் விருந்தோம்பலைவிட இல்லறத்தாருக்கு உயர்ந்த அறம் வேறேதும் கிடையாது என்பதால் இந்நோன்பே எப்போதும் என் மனத்தில் இருக்கிறது.(44) என் வார்த்தைகளுக்கு உன்னிடம் எந்த அதிகாரமாவது இருந்தால், ஐயமில்லாமல் இஃதை உன் மனத்தில் எப்போதும் கொள்வாயாக.(45) ஓ! பாவமற்றவளே, அருளப்பட்டவளே, நீ என்னை நம்பினால், நான் உன் அருகில் இருந்தாலும், உன்னிடம் இருந்து தொலைவாக இருந்தாலும் ஒருபோதும் விருந்தினரை அவமதிக்காதே" என்றான்.(46)
[3] கும்பகோணம் பதிப்பில், "என்ன என்ன வகையினால் விருந்து வந்தவன் த்ருப்தியடைவனோ அவற்றையெல்லாம் தன்னைக் கொடுப்பதாகவிருந்தாலும் ஒருகாலும் நீ ஆலோசிக்க வேண்டாம். இந்த வ்ரதம் எப்போதும் என் மனத்திலேயே இருக்கிறது" என்றிருக்கிறது.
அப்போது ஓகவதி, தன் தலைக்கு மேலே கரங்களைக் குவித்து, "நீர் ஆணையிடும் எதனையும் நான் செய்யாமல் விட மாட்டேன்" என்று மறுமொழி கூறினாள்.(47)
அப்போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, சுதர்சனனை வெல்ல விரும்பிய மிருத்யு {யமன்}, அவனிடம் தாமதங்களை {அவன் செய்யும் தவறுகளைக்} காண அவனைக் கண்காணிக்கத் தொடங்கினான்.(48)
ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில், காட்டில் இருந்து விறகைக் கொண்டுவர அக்னிமகன் {சுதர்சனன்} வெளியே சென்றபோது, அருள்நிறைந்த பிராமணர் ஒருவர் ஓகவதியிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி விருந்தோம்பலை வேண்டினார்,(49) "ஓ! அழகிய பெண்ணே, இல்லறத்தாருக்குப் பரிந்துரைக்கப்பட்ட விருந்தோம்பலெனும் அறத்தில் உனக்கு நம்பிக்கையேதும் இருந்தால், இன்று நீ என்னை விருந்தோம்பல் சடங்குகளுடன் வரவேற்க வேண்டும் என உன்னை வேண்டுகிறேன்" என்றார்.(50)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பெரும் புகழைக் கொண்ட அந்த இளவரசி {ஓகவதி}, அந்தப் பிராமணரால் இவ்வாறு கேட்கப்பட்டதும், வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சடங்குகளின் படி அவரை வரவேற்றாள்.(51) அவர் அமர்வதற்கு இருக்கையும், கால் கழுவிக்கொள்ள நீரும் கொடுத்த அவள், "உமது காரியம் என்ன? நான் உமக்கு என்ன தர வேண்டும்?" என்று கேட்டாள்.(52)
அதற்கு அந்தப் பிராமணர், "ஓ! அருளப்பட்டவளே, உன் மேனியில் என் காரியம் இருக்கிறது. மனத்தில் எத்தயக்கமுமின்றி அதன்படியே நீ செயல்படுவாயாக.(53) இல்லறத்தாருக்குப் பரிந்துரைக்கப்பட்ட கடமைகள் உனக்கு ஏற்புடையனவாக இருந்தால், ஓ! இளவரசியே, உன் மேனியை எனக்குக் கொடுப்பதன் மூலம் என்னை நிறைவு செய்வாயாக" என்றார்.(54)
பல்வேறு பொருட்களைக் கொடுப்பதாக அந்த இளவரசியால் ஆசைகாட்டப்பட்டாலும் அந்தப் பிராமணர் வேறு கொடை எதையும் கேட்காமல் அவளது மேனியையே கேட்டுக் கொண்டிருந்தார்.(55) தீர்மானமாக இருக்கும் அவரைக் கண்ட அந்தப் பெண்மணி, முன்பே தன் கணவனால் கொடுக்கப்பட்ட ஆணைகளை நினைவுகூர்ந்து, வெட்கமடைந்து {அவமானமடைந்தவளாக} அந்தச் சிறந்த பிராமணரிடம் "அப்படியே ஆகட்டும்" என்றாள்.(56) இல்லறத்தாரின் அறத்தை ஈட்ட விரும்பிய தன் கணவனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த அவள் உற்சாகத்துடன் அந்த மறுபிறப்பாள முனிவரை அணுகினாள்.(57)
அதே வேளையில் விறகு சேகரித்துக் கொண்டு அக்னிமகன் {சுதர்சனன்} தன் இல்லம் திரும்பினான். கடுமையான, இரக்கமில்லாத இயல்புடன் கூடிய மிருத்யுவானவன், அர்ப்பணிப்புமிக்க ஒரு நண்பனுடன் இருப்பது போலவே அவனது அருகிலேயே எப்போதும் இருந்தான்.(58) அந்தப் பாவகனின் {அக்னியின்} மகன் {சுதர்சனன்} தன் ஆசிரமத்திற்குத் திரும்பியதும், ஓகவதியின் பெயர் சொல்லி அழைத்தும் (எந்தப் பதிலையும் அடையாமல்) மீண்டும் மீண்டும், "நீ எங்கே சென்றுவிட்டாய்?" என்று கேட்டான்.(59)
தன் கணவனிடம் அர்ப்பணிப்புமிக்க அந்தக் கற்புடைய பெண்மணி, அந்தப் பிராமணரின் கரங்களில் அகப்பட்டிருந்ததால் தன் கணவனுக்குப் பதிலேதும் சொல்லவில்லை.(60) உண்மையில் அந்தக் கற்புமிக்கப் பெண், கறைபட்டவளாகத் தன்னைக் கருதி, வெட்கத்தால் {அவமானத்தால்} பேச்சற்றவளானாள்.(61)
சுதர்சனன் மீண்டும் அவளிடம், "கற்புடைய என் மனைவி எங்கே இருக்கக்கூடும்? அவள் எங்கே சென்றுவிட்டாள்? (அவள் மறைந்ததைவிட) எனக்குப் பெரியது வேறு ஏதும் இல்லை.(62) எளிமையும், வாய்மையும் நிறைந்தவளும், கணவனிடம் அர்ப்பணிப்புமிக்கவளுமான அந்தப் பெண்மணி, ஐயோ, இனிய புன்னகையுடன் ஏன் இன்று என் அழைப்புக்குப் பதில் சொல்லாமல் இருக்கிறாள்?" என்றான்.(63)
அப்போது அந்தக் குடிசையில் இருந்த பிராமணர், சுதர்சனனிடம், "ஓ!பாவகனின் மகனே {சுதர்சனா}, ஒரு பிராமணன் வந்திருக்கிறான்,(64) வரவேற்புக்குரிய பல்வேறு பொருட்களைக் கொண்டு உனது மனைவியான இவளால் ஆசை காட்டப்பட்டாலும், அவன் அவளது மேனியை மட்டுமே விரும்பினான்,(65) இப்போது இந்த அழகிய முகம்படைத்த பெண் உரிய சடங்குகளுடன் என்னை வரவேற்பதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதை அறிவாயாக. இத்தருணத்திற்குத் தகுந்தது எனக் கருதும் எதையும் நீ செய்யலாம்" என்றார்.(66)
இரும்பு தண்டத்துடன் கூடிய மிருத்யுவானவன், அந்த முனிவன் {சுதர்சனன்} தன் உறுதிமொழியில் இருந்து பிறழ்வான் என நினைத்து அவனை அழிப்பதற்காக அக்கணத்தில் அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.(67)
சுதர்சனன் அதிர்ச்சியடைந்தாலும், பார்வை, சொல், செயல் அல்லது எண்ணத்தில் உள்ள பொறாமை மற்றும் கோபம் அனைத்தையும் கைவிட்டு,(68) "ஓ! பிராமணரே, நீர் இன்புற்றிருப்பீராக. எனக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஓர் இல்லறத்தான் தன் விருந்தினரைக் கௌரவிப்பதன் மூலம் பெரும் தகுதியை ஈட்டுகிறான்.(69) இல்லறத்தானைப் பொறுத்தவரையில், தன் விருந்தினருக்குத் தன் இல்லத்தில் இருப்பதை முறையாகக் கொடுத்துக் கௌரவிப்பதில் விளைவதை விடப் பெருந்தகுதி {பெரும்புண்ணியம்} வேறேதும் கிடையாது என்று கல்விமான்கள் சொல்கின்றனர்.(70) என் உயிர், என் மனைவி, மேலும் நான் கொண்டுள்ள உலக உடைமைகள் ஆகிய அனைத்தும் என் விருந்தினர்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டவையே. இதை நான் என் நோன்பாக நோற்கிறேன்.(71) ஓ! பிராமணரே, இம்மொழியை நான் உண்மையில் சொல்வதால், தன்னறிவை {சுயஞானத்தை} நான் அடைவேன்.(72) ஓ! அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவரே, நெருப்பு, காற்று, பூமி, நீர் மற்றும் வானம் என்ற ஐம்பூதங்களும், மனம், புத்தி, ஆன்மா, காலம், வெளி மற்றும் பத்து புலன்கள்(73) ஆகிய அனைத்தும் மனிதர்களின் உடல்களில் இருந்து, அவர்கள் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களை எப்போதும் சாட்சியாகக் காண்கின்றன.(74) இந்த உண்மை இன்று என்னால் சொல்லப்படுகிறது, இதற்காகத் தேவர்கள் எனக்கு அருள் தரட்டும், அல்லது நான் பொய் பேசினால் என்னை அழிக்கட்டும்" என்றான்.(75)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அப்போது அனைத்துத் திசைகளிலும் எதிரொலிக்கும்படி ஒரு குரல், "இஃது உண்மை, இது பொய்யல்ல" என்று அலறியது.(76)
அப்போது அந்தப் பிராமணர், பூமியையும், வானத்தையும் சூழ்ந்து எழும் காற்றைப் போலக் குடிசையில் இருந்து வெளியே வந்து,(77) வேதவொலிகளால் மூவலகங்களையும் எதிரொலிக்கச் செய்து, அறம்சார்ந்த அம்மனிதனின் பெயர் சொல்லி அழைத்து, அவனை வாழ்த்தி,(78) "ஓ! பாவமற்றவனே, நான் தர்மன். மகிமை அனைத்தும் உனக்கே ஆகும். ஓ! வாய்மை விரும்பியே, உன்னைச் சோதிக்கவே நான் இங்கே வந்தேன். நீ அறம் சார்ந்தவன் என்பதை அறிந்து நான் நிறைவடைகிறேன்.(79) உன் தவறுகளைத் தேடி உன்னை எப்போதும் பின்தொடர்ந்து கொண்டிருந்த மிருத்யுவை நீ வென்றுவிட்டாய்.(80) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, தன் கணவனிடம் அர்ப்பணிப்புள்ள இந்தக் கற்புடைய பெண்ணை, பார்வையால் அவமதிக்கும் திறனும் மூவுலகத்தில் ஒருவனுக்கும் இல்லை எனும்போது அவளது மேனியை {எவனாலும்} தொடவும் முடியாது.(81) உன் நற்குணத்தினாலும், தன் சொந்த கற்பினாலும் இவள் பாதுகாக்கப்பட்டிருக்கிறாள். பெருமைமிக்க இந்தப் பெண்மணி சொல்வதற்கு முரணாக ஏதும் இருக்க முடியாது.(82) பிரம்மம் ஓதுபவளும், கடுந்தவங்களுடன் கூடியவளுமான இவள், உலகத்தின் விடுதலைக்காக {விமோசனத்துக்காக} ஒரு பெரிய ஆறாக வடிவ மாற்றம் பெறுவாள்.(83) நீ உனது சொந்த உடலுடன் அனைத்து உலகங்களையும் அடைவாய், மேலும் யோக அறிவியலைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இவளது உடலின் ஒரு பாதி உன்னைப் பின்தொடரும், மறுபாதியானது ஓகவதி என்று கொண்டாடப்படும் ஆறாக மாறும்[4].(84) தவங்களின் மூலம் அடையப்படும் அனைத்து உலகங்களையும் நீ இவளுடன் சேர்ந்து அடைவாய்.(85) திரும்பி வராத நித்தியமாக நீடித்திருக்கும் உலகங்களை நீ இந்தத் திரள் உடலுடனே அடைவாய்.(86) நீ மரணத்தை வென்றாய், உயர்ந்த இன்ப நிலைகள் அனைத்தையும் அடைந்தாய், உன் (மனத்தின்) சக்தியால் எண்ணத்தின் வேகத்தை அடைந்து, ஐம்பூதங்களின் சக்திக்கு மேலாக எழுந்திருக்கிறாய்.(87) ஓ! அறம்சார்ந்த மனிதர்களின் இளரவசே, இவ்வாறு ஓர் இல்லறத்தானின் கடமைகளைப் பின்பற்றியதன் மூலம் நீ உன் ஆசைகள், விருப்பங்கள், கோபம் ஆகியவற்றை வென்றிருக்கிறாய், இந்த இளவரசியோ உனக்குத் தொண்டாற்றி, துன்பம், ஆசை, மாயை, பகைமை, மனத்தளர்ச்சி ஆகியவற்றை வென்றிருக்கிறாள்" என்றான் {தர்மன்}".(88)
[4] ஓகவதி என்பது, சரஸ்வதி ஆற்றின் கிளை ஆறாகும். மேலுள்ள படத்தில் குருக்ஷேத்திரத்தின் அருகில் தென்படுவதுதான் ஓகவதியாறு தோன்றுமிடம். சரஸ்வதியின் மறைவோடு, இந்தக் கிளையாறும் மறைந்திருக்க வேண்டும்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அப்போது (தேவர்களின் தலைவனான) மகிமைபொருந்திய வாசவன், ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட ஓர் அழகிய தேரைச் செலுத்திக் கொண்டு அந்தப் பிராமணனை {சுதர்சனனை} அணுகினான்.(89) மரணம், ஆன்மா, அனைத்து உலகங்கள், அனைத்துப் பூதங்கள், புத்தி, மனம், காலம், வெளி, ஆசை, கோபம் ஆகிய அனைத்தும் வெல்லப்பட்டன.(90) எனவே, ஓ! மனிதர்களில் சிறந்தவனே, ஓர் இல்லறத்தானுக்கு விருந்தினரை விட உயர்ந்த தெய்வீகம் வேறெதுவும் இல்லை என்பதை மனத்தில் தாங்குவாயாக.(91) கௌரவிக்கப்பட்ட ஒரு விருந்தினருடைய அருளானது, ஆயிரம் வேள்விகளின் தகுதியைவிட நன்மைமிக்கது என்று கல்விமான்களால் சொல்லப்படுகிறது.(92) தகுதிவாய்ந்த விருந்தினர் ஒருவன் ஓர் இல்லறத்தானின் விருந்தோம்பலை நாடும்போது, அவனால் கௌரவிக்கப்படவில்லையெனில் அவனது புண்ணியங்கள் அனைத்தையும் (தன்னோடு) எடுத்துக் கொண்டு (பதிலுக்கு) தன் பாவங்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுக்கிறான்.(93) என் மகனே {யுதிஷ்டிரனே}, ஓர் இல்லறத்தானால் எவ்வாறு மரணம் வெல்லப்பட்டது என்ற இந்தச் சிறந்த கதையை இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன்.(94) (கேட்போருக்கு) இச்சிறந்த கதையைச் சொல்வது, மகிமை, புகழ் மற்றும் நீண்டவாழ்நாள் {நீண்ட ஆயுள்} ஆகியவற்றைக் கொடுக்கும். உலகம் சார்ந்த செழிப்பை நாடும் மனிதன், அனைத்துத் தீமைகளையும் விலக்குவதில் இது திறன்மிக்கது எனக் கருத வேண்டும்.(95) ஓ! பாரதா, இந்தச் சுதர்சனனின் வாழ்க்கைக் கதையைத் தினமும் உரைக்கும் மனிதன் அருள் உலகங்களை அடைவான்" {என்றார் பீஷ்மர்}.(96)
அநுசாஸனபர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 96
ஆங்கிலத்தில் | In English |