Kala and Karma! | Anusasana-Parva-Section-01 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 01)
பதிவின் சுருக்கம் : அழிவுக்குத் தானே காரணமாக அமைந்ததை எண்ணி வருந்திய யுதிஷ்டிரன்; கௌதமி என்ற கிழவி, அர்ஜுனகன் என்ற வேடன், மிருத்யு மற்றும் யமன் ஆகியோருக்கிடையில் மரணம் குறித்து நிகழ்ந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா {பிதாமஹரே}, மன அமைதி என்பது நுட்பமானதென்றும், பல்வேறு வடிவங்களைக் கொண்டதென்றும் சொல்லப்படுகிறது. நான் உமது உரையாடல்கள் அனைத்தையும் கேட்டேன், ஆனாலும் மன அமைதி எனதாகவில்லை. ஓ! ஐயா, இக்காரியத்தில் மனத்தை அமைதியடைய {ஆறுதலடையச்} செய்ய உம்மால் பல வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன, இருந்தாலும், இவ்வளவு காரியங்கள் நடப்பதற்கும் காரணமாக அமைந்த என்னால், பல்வேறு வகைகளிலான அமைதிநிலைகளை அறிந்து கொள்வதால் மட்டுமே மனோ அமைதியை எவ்வாறு அடைய முடியும்?(2) ஓ! வீரரே உமது உடல் கணைகளால் மறைக்கப்பட்டிருப்பதையும், கடுங்காயங்களால் அவதியுறுவதையும் கண்டு, நான் ஏற்படுத்தியிருக்கும் தீமைகளைக் குறித்த எண்ணத்தால் நான் மன அமைதியை அடையத் தவறுகிறேன் {எனக்கு ஆறுதல் உண்டாகவில்லை}.(3) ஓ! மனிதர்களில் பெரும் வீரரே, அருவிகளில் நீர் பெருகியிருக்கும் ஒரு மலையைப் போலக் குருதியால் குளித்திருக்கும் உமது உடலைக் கண்டு, மழைகாலத்துத் தாமரையைப் போல நான் துயருறுகிறேன்.(4)
ஓ! பாட்டா {பீஷ்மரே}, போர்க்களத்தில் என் மக்கள் என் நிமித்தமாகத் தங்கள் எதிரிகளுடன் போரிட்டதால் நீர் இந்த அவல நிலையை அடைந்ததைவிட அதிகத் துன்பத்தை வேறு எது அளிக்க முடியும்?(5) என் நிமித்தமாக வேறு இளவரசர்களும், தங்கள் மகன்கள் மற்றும் உற்றார் உறவினருடன் சேர்ந்து அழிவை அடைந்திருக்கின்றனர். ஐயோ, இதைவிடத் துன்பம் தரத்தக்கது வேறு எது?(6) ஓ! இளவரசரே {பீஷ்மரே}, விதி மற்றும் கோபத்தின் வசத்தை அடைந்து இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்த எங்களுக்கும், திருதராஷ்டிரர் மகன்களுக்கும் என்ன விதி காத்திருக்கிறது {நாங்கள் என்ன கதியை அடையப் போகிறோம்} என்பது எங்களுக்குச் சொல்வீராக.(7) ஓ! மனிதர்களின் தலைவரே, உம்மை இந்நிலையில் காணாததால், திருதராஷ்டிரர் மகன் {துரியோதனன்} நற்பேறு பெற்றவன் என நான் நினைக்கிறேன்.(8) ஆனால், நமது நண்பர்கள் மற்றும் உமது மரணத்திற்குக் காரணமாக அமைந்த எனக்கு, வெறுந்தரையில் இந்த அவல நிலையில் உம்மைக் காண்பதால் மன அமைதி மறுக்கப்பட்டிருக்கிறது.(9)
தன் குலத்தில் இழிந்தவனான தீய துரியோதனன், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றி தன் துருப்புகள் மற்றும் தன் தம்பியர் அனைவருடன் போர்க்களத்தில் இறந்தான்.(10) தீய ஆன்மா கொண்ட இழிந்தவன் இப்போது வெறுந்தரையில் கிடக்கும் உம்மைக் காணவில்லை. உண்மையில், இந்தக் காரணத்திற்காக, வாழ்வை விட மரணமே {எனக்கு} விரும்பத்தக்கது என நான் கருதுகிறேன்.(11) ஓ! நோன்பு வழுவா வீரரே, நானும் என் தம்பிகளும் போர்க்களத்தில் எங்கள் எதிரியின் கரங்களில் மாண்டிருந்தால்,(12) நீர் கணைகளால் துளைக்கப்பட்டுக் கிடக்கும் இந்த அவல நிலையை நான் கண்டிருக்க மாட்டேன். ஓ! இளவரசரே {பீஷ்மரே}, படைப்பாளன் {பிரம்மன்} தீச்செயல் செய்பவர்களாக எங்களைப் படைத்திருக்கிறான் என்பது திண்ணம்.(13) ஓ! மன்னா, நீர் எனக்கு நன்மை செய்ய விரும்பினால், மறுமையிலும் {மறுமையிலாவது} இந்தப் பாவத்தில் இருந்து நான் தூய்மை அடையும் வழியை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(14)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! நற்பேறு பெற்றவனே, (தெய்வம், விதி மற்றும் காலத்தைச்) சார்ந்திருக்கும் உன் ஆன்மாவே உன் செயல்களுக்கான காரணமென ஏன் நீ நினைக்கிறாய்? அதன் {ஆன்மாவுடைய} செயல்பாடின்மையின் வெளிப்பாடானது, நுட்பமானதும், புலன்களால் உணரப்பட முடியாததுமாகும்.(15) இக்காரியத்தில், மிருத்யு {யமன்}, கௌதமி, காலன், வேடன் மற்றும் ஒரு பாம்பு ஆகியோருக்கிடையில் நடந்த உரையாடலைக் கொண்ட இந்தப் பழங்கதை குறிப்பிடப்படுகிறது. ஓ! குந்தியின் மகனே, கௌதமி என்ற பெயரையும், பெரும் பொறுமையையும், மனோ அமைதியையும் கொண்ட ஒரு கிழவி {முதிர்ந்த பெண்மணி} இருந்தாள். ஒரு நாள் அவள், பாம்பால் கடிக்கப்பட்டதன் விளைவால் தன் மகன் மரணமடைந்ததைக் கண்டாள். அர்ஜுனகன் என்ற பெயரைக் கொண்ட ஒரு கோபக்கார வேடன், ஓர் இழையில் அந்தப் பாம்பைக் கட்டி அதைக் கௌதமியின் முன் கொண்டு வந்தான்.(16-19)
அவன் அவளிடம், "ஓ! அருளப்பட்ட பெண்மணியே, இந்த இழிந்த பாம்பே உன் மகனின் மரணத்திற்குக் காரணமாகும். இழிவான இஃதை எவ்வகையில் கொல்லலாம் என்பதை எனக்கு விரைந்து சொல்வாயாக. நான் இதை நெருப்பில் வீசவா? அல்லது துண்டுகளாக வெட்டிப் போடவா? குழந்தையைக் கொன்ற இந்த ஈனப்பிறவி இனியும் வாழ்ந்திருப்பது தகாது" என்றான்.(20)
கௌதமி { வேடன் அர்ஜுனகனிடம்}, "ஓ! சிறு புத்தி கொண்ட அர்ஜுனகா, இந்தப் பாம்பை விடு. இஃது உன் கரங்களில் இறப்பது தகாது. தனக்காகக் காத்திருக்கும் தவிர்க்கப்பட முடியாதவற்றை அலட்சியம் செய்து பாவத்தில் மூழ்கும் வகையில் தன்னைக் கனமாக்கிக் கொள்ளும் மூடன் எவன்?(21) நற்செயல்களைச் செய்வதன் மூலம் தங்களைக் கனமற்றவர்களாக்கிக் கொள்வோர் பெருங்கடலைக் கடக்கும் ஓடத்தைப் போல உலகக் கடலைக் கடக்கிறார்கள். ஆனால் பாவத்தால் தங்களைக் கனமாக்கிக் கொள்பவர்கள் நீருக்குள் வீசப்பட்ட கணையைப் போல அடி ஆழத்தில் மூழ்குகிறார்கள்.(22) இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் என் பிள்ளை மீண்டும் உயிர்பெற மாட்டான், மேலும் இதை வாழ விடுவதால் உனக்கும் எந்தத் தீங்கும் நேராது. இந்த உயிரினத்தைக் கொல்வதன் மூலம் முடிவில்லாத யம லோகத்திற்கு எவன் செல்வான்?" என்று கேட்டாள்.(23)
வேடன், "ஓ! சரிதவறுக்கிடையிலான வேறுபாட்டை அறிந்த பெண்ணே, உயிரினங்கள் அனைத்தின் துன்பத்திலும் பெரியோர் பீடிக்கப்படுவார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் நீ சொன்ன இந்த வார்த்தைகள் (துயரத்தில் மூழ்காமல்) தன்னிறைவடைந்த ஒரு மனிதனால் சொல்லப்படும் அறிவுரை நிறைந்தவையாக இருக்கின்றன. எனவே, நான் இந்தப் பாம்பைக் கொல்லத்தான் வேண்டும்.(24) மனோ அமைதியை விரும்புபவர்கள் அனைத்திற்கும் காலத்தின் போக்கையே காரணமாகக் கொள்கின்றனர், ஆனால் நடைமுறை அறிந்த மனிதர்கள் (பழி தீர்த்துக் கொள்வதன் மூலம்) தங்கள் துயரத்தை உடனே தணித்துக் கொள்கின்றனர். நிலையான மாயையில் இருக்கும் மனிதர்கள், (இவ்வாறான செயல்களினால் மறுமையில் கிட்டும்) பேரின்பத்தை இழந்து விடுவோமென அஞ்சுகின்றனர்[1]. எனவே, ஓ! பெண்ணே, (என்னைக் கொண்டு) இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் உன் துயரத்தைத் தணித்துக் கொள்வாயாக" என்றான்.(25)
[1] கும்பகோணம் பதிப்பில், "சாந்தியை விரும்புகிறவர்கள் நேர்ந்த காலத்தையும் விட்டுவிடுவார்கள். காரியத்தைக் கவனிப்பவர்கள் (ஸமயம் நேர்ந்தபொழுது அக்கார்யத்தைச் செய்து) உடனே துயரத்தை விட்டுவிடுவார்கள். என்றும் துயரப்படுகின்றவர்களுக்குப் பாக்கியம் கெடுகின்றது" என்றிருக்கிறது.
கௌதமி, "நம்மைப் போன்ற மக்கள் (கெடுபேறால்) ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை. நல்ல மனிதர்கள் தங்கள் ஆன்மாக்களில் அறத்தையே எப்போதும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பிள்ளையின் மரணம் ஏற்கனவே விதிக்கப்பட்டதாகும். எனவே, இந்தப் பாம்பைக் கொல்வதை அங்கீகரிக்க இயலாதவளாக இருக்கிறேன்.(26) சினம் துன்பத்திற்கே வழிவகுக்கும் என்பதால் பிராமணர்கள் சினங்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! நல்ல மனிதா, இந்தப் பாம்பை மன்னித்து, கருணையோடு அதை விடுவாயாக" என்றாள்.(27)
வேடன், "பீடத்தில் வேள்வி செய்வதன் மூலம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டும் மனிதன், அதைத் தன் பலிக்கும் {பலியான விலங்குக்கும்} கொடுப்பதைப் போல நாமும் (இந்த உயிரனத்தைக்) கொல்வதன் மூலம் மறுமையில் வற்றாத பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவோம். ஓர் எதிரியைக் கொல்வதன் மூலம் தகுதி அடையப்படுகிறது. வெறுக்கத்தக்க இந்த உயிரினத்தைக் கொல்வதன் மூலம் மறுமையில் நீ உண்மையான பெரும் தகுதியை ஈட்டுவாய்" என்றான்(28).
கௌதமி, "ஓர் எதிரியை வதைப்பதிலும், கொல்வதிலும் என்ன நன்மை இருக்கிறது? நம் அதிகாரத்தில் உள்ள ஓர் எதிரியை விடுவிக்காததன் மூலம் என்ன நன்மை வெல்லப்படுகிறது? எனவே, ஓ! நலமான முகத்தோற்றத்தைக் கொண்டவனே, நாம் ஏன் இந்தப் பாம்பை மன்னித்து விடுவதனால் கிட்டும் தகுதியை {புண்ணியத்தை} அடைய முயற்சிக்கக்கூடாது?" என்று கேட்டாள்.(29)
வேடன், "(பல உயிரினங்களைக் காக்காமல்) இந்த ஒற்றை உயிரினத்தைக் காப்பதற்குப் பதிலாக, இதனிடமிருந்து ({இந்த ஒற்றை உயிரினத்தின்} தீமையில் இருந்து) பெரும் எண்ணிக்கையாலனவை காக்கப்பட வேண்டும். நல்லோர் (அழிந்து போகட்டுமெனவே) தீயோரைக் கைவிடுகிறார்கள். எனவே, இந்தத் தீய உயிரினத்தைக் கொல்வாயாக" என்றான்.(30)
கௌதமி, "ஓ! வேடா, இந்தப் பாம்பைக் கொல்வதன் மூலம் என் மகன் மீண்டும் உயிர் பெற மாட்டான், மேலும், இதன் {இந்தப் பாம்பின்}} மரணத்தால் அடையப்படும் வேறு எந்தக் கதியையும் நான் காணவில்லை. எனவே, ஓ! வேடா, வாழும் உயிரினமான இந்தப் பாம்பை விட்டுவிடுவாயாக" என்றாள்.(31)
வேடன், "விருத்திரனைக் கொன்றதன் மூலம், (வேள்விக் காணிக்கைகளில்) சிறந்த பகுதியை இந்திரன் அடைந்தான். ஒரு வேள்வியை அழித்ததன் மூலம் வேள்விக் காணிக்கைகளில் தன் பங்கை மஹாதேவன் அடைந்தான். எனவே, மனத்தில் எந்த அச்சத்திற்கும் இடம் தராமல், இந்தப் பாம்பை உடனே கொல்வாயாக" என்றான்".(32)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அந்த உயர் ஆன்ம கௌதமி, அந்தப் பாம்பைக் கொன்றுவிடுமாறு அந்த வேடனால் மீண்டும் மீண்டும் தூண்டப்பட்டாலும், அவள் அந்தப் பாவச்செயலை மனத்தாலும் நினைக்கவில்லை.(33) அப்போது கயிற்றில் கட்டப்பட்டிருந்த அந்தப் பாம்பு, பெருமூச்சு விட்டுப் பெரும் சிரமத்துடன் மனோ அமைதியைத் தக்க வைத்துக் கொண்டு, மெதுவாக மனிதக் குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னது.(34)
பாம்பு {வேடனிடம்}, "ஓ! மூட அர்ஜுனகா, என்னுடைய குற்றமென்ன? எனக்குச் சொந்த விருப்பமும் கிடையாது, நான் சுதந்திரமானவனும் {எச்சார்பும் இல்லாதவனும்} கிடையாது. இந்தச் சிறு வேலைக்கு மிருத்யுவே என்னை அனுப்பினான்.(35) அவனது ஆணையின் பேரிலேயே நான் இந்தப் பிள்ளையைக் கடித்தேனேயன்றி என் பங்கில் எந்தக் கோபத்தினாலும் அல்ல. எனவே, ஓ! வேடா, இதில் பாவமேதும் இருந்தால் அந்தப் பாவம் அவனுடையதே {மிருத்யுவினுடையதே}" என்றது.(35)
வேடன், "மற்றொருவரால் வழிநடத்தப்பட்டு நீ இந்தத் தீமையைச் செய்திருந்தால், இச்செயலில் கருவியாக இருந்த பாவமும் உன்னையே சேரும்.(37) ஓ! பாம்பே, மண் பாத்திரம் செய்வதில் குயவனின் சக்கரம், தடி மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் காரணமாக இருப்பதைப் போலத்தான் நீயும் (இவ்விளைவை உண்டாக்கிய காரணங்களின் ஒன்றாக இருக்கிறாய்). குற்றவாளி என் கரங்களால் மரணமடையத் தகுந்தவன். ஓ! பாம்பே, நீ குற்றவாளி. உண்மையில், இக்காரியத்தை நீயே ஏற்றுக் கொண்டாய்" என்றான்.(39)
பாம்பு, "குயவனின் சக்கரம், தடி மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் சார்பற்ற {சுதந்திரமான} காரணங்களாக இல்லாததைப் போலவே நானும் ஒரு சார்பற்ற {தானே காரியம் செய்ய இயலாத} காரணமாக இருக்கிறேன். எனவே, இக்குற்றம் எனதில்லை என்றே நீ கருத வேண்டும்.(40) வேறு வகையில் நீ சிந்தித்தால், இவற்றை ஒன்றோடொன்றாக இயங்கும் காரணங்களாகக் கருத வேண்டும். இவ்வாறு ஒன்றாக இயங்குவதால், காரணம் மற்றும் விளைவில் அவற்றின் தொடர்பு குறித்து ஐயம் எழுகிறது.(41) இஃது இவ்வாறிருக்கையில், குற்றம் எனதில்லை, இக்காரியத்தில் நான் மரணமடையத் தகாதவன், மேலும் நான் எந்தப் பாவத்தையும் செய்த குற்றவாளியுமல்லேன். அல்லது இதில் பாவம் இருக்கிறது என நீ கருதினால், அந்தப் பாவமும் காரணங்களின் தொகுப்பில் இருக்கிறது" என்றது.(42)
வேடன், "நீ இக்காரியத்தில் முக்கியக் காரணமாவோ இயக்கமாகவோ இல்லை என்றாலும் (இந்தப் பிள்ளையின்) மரணத்திற்கு நீயே காரணமாக இருக்கிறாய். எனவே, நீ மரணத்திற்குத் தகுந்தவன் என்பது எனது கருத்து.(43) ஓ! பாம்பே, ஒரு தீயச் செயலைச் செய்தும், அதைச் செய்தவனுக்கு அதில் தொடர்பில்லை என நீ நினைத்தால், இக்காரியத்தில் வேறெந்தக் காரணமும் இல்லை. ஆனால் உண்மையில் இதைச் செய்ததற்கு நீயே உண்மையில் மரணத்திற்குத் தகுந்தவன். இன்னும் நீ வேறென்ன நினைக்கிறாய்?" என்று கேட்டான்.(44)
பாம்பு, "எந்தக் காரணமும் இருக்கிறதோ, இல்லையோ,[2] (இடையில்) {முதுகெலும்பாக இருக்கும்} ஒரு செயலில்லாமல் எந்த விளைவும் உண்டாவதில்லை. எனவே, இவ்விரண்டிலும் {காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும்} தூண்டும் காரணத்தின் திறன் எதனையும் கொள்ளாமல், (இக்காரியத்தில்) என் இயக்கம் மட்டுமே காரணம் எனக் கொள்வதில் முறையான நோக்கமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(45) ஓ! வேடா, உண்மையில் நானே காரணம் என நீ நினைத்தால், ஓர் உயிரினத்தைக் கொன்ற இந்தக் குற்றச்செயல், என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கியவனின் தோள்களில் இருக்கிறது[3]" என்றது.(46)
[2] "ஒரு மரத்தை வீழ்த்தும் செயலில், தன்னறிவுள்ள எவனோ ஒருவனால் உயர்த்தப்படும் கோடரியின் இடைநிலை செயலால் அந்த விளைவு {மரம் வீழ்த்தப்படுவது} நேர்கிறது. ஆனால் ஒரு காடு எரிவதில், தன்னறிவுள்ள எந்த இயக்கமும் இல்லாமல் உலர்ந்த மரக்கிளைகளின் உராய்வில் நெருப்பு உண்டாகிறது என இந்த வாக்கியத்திற்குப் பொருள் கூறுகிறார் உரையாசிரியர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "காற்றானது, உலரந்த குச்சிகளை எரியத் தூண்டுவதைப் போல என உரையாசிரியர் இங்கே பொருள் சேர்த்துக் கொள்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வேடன், "ஓ! மூடா, ஓ! இழிந்த பாம்பே, வாழத்தகாத நீ, ஏன் இவ்வளவு வார்த்தைகளைப் பந்தாக எறிந்து கொண்டிருக்கிறாய். நீ என் கரங்களால் மரணமடையத் தகுந்தவனே. நீ இந்தக் குழந்தையைக் கொன்றதன் மூலம் மிகக் கொடிய செயலொன்றைச் செய்திருக்கிறாய்" என்றான்.(47)
பாம்பு, "ஓ! வேடா, வேள்வியைச் செய்து தரும் புரோஹிதர்கள், நெருப்பில் தெளிந்த நெய்யை ஆகுதியாக ஊற்றும் செயலில் எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும்} ஈட்டாததைப் போலவே, நானும் இவ்வகையான விளைவில் தொடர்புடையவனாகவே கருதப்பட வேண்டும்" என்றது".(48)
பீஷ்மர் தொடர்ந்தார், "மிருத்யுவால் இயக்கப்பட்ட பாம்பு இவ்வாறு சொன்னதும், மிருத்யுவே {யமனே} அங்கே தோன்றி, அந்தப் பாம்பிடம் இவ்வாறு பேசினான்.(49)
மிருத்யு, "ஓ! பாம்பே, காலனால் வழிநடத்தப்பட்டே நானும் நீயும் இந்தக் குற்றேவலைச் செய்தோம். நானோ, நீயோ இந்தப் பிள்ளையின் மரணத்திற்குக் காரணமானவர்களல்ல.(50) ஓ! பாம்பே, காற்றால் அங்கேயும், இங்கேயும் அலைக்கப்படும் மேகங்களைப் போலவே நான் காலனால் இயக்கப்படுகிறேன்.(51) சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் குணங்கள் தொடர்புடைய ஆதிக்கங்கள் அனைத்தும் காலனையே தங்கள் ஆன்மாவாகக் கொண்டு அனைத்து உயிரினங்களிலும் இயங்குகின்றன.(52) சொர்க்கத்திலோ, பூமியிலோ உள்ள அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் காலனின் இதே ஈர்ப்பிலேயே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். ஓ! பாம்பே, மொத்த அண்டமும் காலனின் இதே ஆதிக்கத்திலேயே ஊக்கம்பெறுகிறது.(53) இவ்வுலகில் உள்ள செயல்கள், செயலின்மைகள், அவற்றின் மாற்றங்கள் {விகாரங்கள்} ஆகிய அனைத்தும் காலனின் ஆதிக்கத்திலேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.(54) சூரியன், சோமன், விஷ்ணு, நீர், காற்று, நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, நெருப்பு {அக்னி}, வானம், பூமி, மித்ரன், பர்ஜன்யன், அதிதி, வசுக்கள், ஆறுகள், பெருங்கடல்கள் என இருப்பில் உள்ள மற்றும் இருப்பில் இல்லாத பொருட்கள் அனைத்தும் காலனாலேயே படைக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன.(55) ஓ! பாம்பே, இஃதை அறிந்து நீ ஏன் என் மீது பழி சுமத்த நினைக்கிறாய்? இதில் எக்குற்றமும் எனதாகா இருந்தால், நீயும் பழி சுமத்தப்பட வேண்டியவனே" என்றான் {மிருத்யு}.(56,57)
பாம்பு, "ஓ! மிருத்யு, நான் உன்னைப் பழிக்கவில்லை, மேலும் அனைத்துப் பழியில் இருந்தும் உன்னை விடுவிக்கவில்லை. உனது ஆதிக்கத்தில் உன் இயக்கத்தின் பேரிலேயே நான் (என் செயல்களைச்) செய்தேன் என்று மட்டுமே நான் சொல்கிறேன்.(58) காலன் மீது எப்பழியும் இருந்தாலோ, எப்பழியும் இல்லா விட்டாலோ அக்குற்றத்தை ஆராய்வது என் வேலையல்ல. அதற்கான உரிமையும் நமக்கில்லை.(59) இந்தப் பழியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வது என் பொறுப்பாக இருப்பதைப் போலவே மிருத்யுவிடம் எந்தப் பழியும் இல்லை எனக் காண்பதும் என் கடமையாகும்" என்றது".(60)
பீஷ்மர் தொடர்ந்தார், "பிறகு அந்தப் பாம்பானது அர்ஜுனகனிடம் {அந்த வேடனிடம்}, "மிருத்யு சொன்னதை நீ கேட்டாய். எனவே, குற்றமற்றவனான என்னை இந்தக் கயிற்றில் கட்டி என்னை வதைப்பது உனக்கு முறையாகாது" என்றது.(61)
ஓ! பாம்பே, "நான் உன் வார்த்தைகளையும், மிருத்யுவின் வார்த்தைகளையும் கேட்டேன். ஆனால், இவை உன் மீதான பழியைத் துடைக்கவில்லை.(62) மிருத்யுவும், நீயும் இந்தப் பிள்ளையின் மரணத்திற்கான காரணங்களாக இருக்கிறீர்கள். நான் உங்கள் இருவரையுமே காரணங்களாகக் கருதுகிறேன், ஆனால் நீங்களே உண்மையான முக்கியக் காரணம் என்று நான் சொல்லவில்லை.(63) நல்லோருக்குத் துன்பத்தை உண்டாக்கும் தீயவனும், பழி நிறைந்தவனுமான மிருத்யு தெறுமொழி பெற்றவனாவான் {சபிக்கப்பட்டவனாவான்}. பாவம் நிறைந்தவனான நீ பாவச் செயல்களில் ஈடுபடுவதால் உன்னை நான் கொல்லப் போகிறேன்" என்றான்.(64)
மிருத்யு, "நாங்கள் இருவரும் சுதந்திரமானவர்களல்ல, ஆனால் காலனைச் சார்ந்தவர்கள்; {அவனால்} நியமிக்கப்பட்ட பணியைச் செய்ய விதிக்கப்பட்டவர்ள். இக்காரியத்தை நீ முழுமையாகக் கருத்தில் கொண்டால் எங்களிடம் எக்குற்றத்தையும் காணமாட்டாய்" என்றான்.(65)
வேடன், "ஓ! பாம்பே, ஓ! மிருத்யுவே, நீங்கள் இருவரும் காலனைச் சார்ந்திருப்பவர்கள் என்றால், (நன்மையில் இருந்து எழும்) இன்பமும், (தீமையில் இருந்து எழும்) கோபமும் எவ்வாறு உண்டாகின்றன என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்" என்றான்.(66)
மிருத்யு, "எது செய்யப்பட்டதோ அது காலனின் ஆதிக்கத்திலேயே செய்யப்பட்டது. ஓ! வேடா, காலனே அனைத்திற்கும் காரணம் என்றும், நாங்கள் இருவரும் காலனால் ஈர்க்கப்பட்ட காரணத்தால் எங்களுக்கு நியமிக்கப்பட்ட பணியைச் செய்தோம் என்றும் ஏற்கனவே சொன்னேன், எனவே, ஓ! வேடா, எங்கள் இருவரையும் நீ எவ்வகையிலும் நிந்திக்கலாகாது" என்றான்".(67,68)
பீஷ்மர் தொடர்ந்தார், "அப்போது அறநெறி அறிவியல் சார்ந்த அந்தச் சச்சரவுக் காட்சியில் காலன் {காலபுருஷன்} தோன்றி, அங்கே கூடியிருந்த பாம்பு, மிருத்யு மற்றும் வேடனிடம் இவ்வாறு பேசினான்.(69)
காலன், "ஓ! வேடா, மிருத்யுவோ, இந்தப் பாம்போ, நானோ எந்த உயிரினத்தின் மரணத்திலும் குற்றவாளிகளல்ல. நிகழ்வைத் தூண்டும் உடனடி காரணங்களாக மட்டுமே நாங்கள் இருக்கிறோம். ஓ! அர்ஜுனகா, இக்காரியத்தில் இந்தப் பிள்ளையின் கர்மமே எங்கள் செயல்பாட்டைத் தூண்டும் காரணமாக இருந்தது.(70) வேறு எக்காரணத்தாலும் இப்பிள்ளை இறக்கவில்லை. இவன் தன் கர்மத்தின் விளைவாலேயே இறந்திருக்கிறான்.(71) இவன் தன் முற்பிறவியில் செய்த கர்மத்தின் விளைவாலேயே மரணத்தைச் சந்தித்திருக்கிறான். நாங்கள் அனைவரும் எங்கள் ஒவ்வொருவருக்குமுரிய கர்மத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறோம்.(72) மகன்களைப் போலவே கர்மமே விடுதலைக்கான துணையாகும், மேலும் கர்மமே மனிதனின் அறத்தையும், மறத்தையும் குறிப்பிடுகிறது. செயல்கள் ஒன்றையொன்று தூண்டுவதைப் போலவே, நாங்கள் ஒருவரையொருவர் தூண்டுகிறோம்.(73) களிமண் குவியலை மனிதர்கள் தாங்கள் விரும்பிய வண்ணங்களில் அமைத்துக் கொள்வதைப் போல மனிதர்கள் அடையும் பல்வேறு விளைவுகள் கர்மத்தாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.(74) ஒளியும், நிழலும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் போல மனிதர்கள் தங்கள் சொந்த செயல்களின் மூலம் அமையும் கர்மத்தையே சார்ந்திருக்கிறார்கள்.(75) எனவே, நீயோ, நானோ, மிருத்யுவோ, பாம்போ, இந்தப் பிராமணப் பெண்ணோ இந்தப் பிள்ளையின் மரணத்திற்கான காரணங்கள் இல்லை.(76) இங்கே இவனே {இந்தப் பிள்ளையே அவனது மரணத்திற்கான} காரணமாக இருக்கிறான்" என்றான் காலன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, காலன் இவ்வழியில் இக்காரியத்தை விளக்கியதும், மனிதர்கள் தங்கள் செயல்களாலேயே துன்பத்தை அடைகிறார்கள் என்று தன் மனத்துக்குள் சமாதானமடைந்த கௌதமி, {வேடனான} அர்ஜுனகனிடம் இவ்வாறு பேசினாள்.(77)
கௌதமி {வேடன் அர்ஜுனகனிடம்}, "காலனோ, மிருத்யுவோ {யமனோ}, பாம்போ இக்காரியத்தில் காரணமாக அமையவில்லை. இந்தப் பிள்ளை தன் சொந்த கர்மத்தின் விளைவாலேயே மரணத்தை அடைந்திருக்கிறான்.(78) என் மகனின் இறப்பில் (அதன் காரணமாக அமையும் முற்பிறவி செயலில்) நானும் பங்குபெற்றிருக்கிறேன். காலனும், மிருத்யுவும் இவ்விடத்தில் இருந்து செல்லட்டும். ஓ! அர்ஜுனகா, நீ இந்தப் பாம்பை விடுதலை செய்வாயாக" என்றாள்".(79)
பீஷ்மர் தொடர்ந்தார், "காலன், மிருத்யு மற்றும் அந்தப் பாம்பு ஆகியோர் தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்றதும், கௌதமியும், அந்த வேடனும் தங்கள் மனத்தில் ஆறுதலடைந்தனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இவை யாவற்றையும் கேட்டு உன் துன்பவிலகி மனத்தில் அமைதியை அடைவாயாக. மனிதர்கள் தங்கள் சொந்த கர்மத்தின் விளைவாகவே சொர்க்கத்தையோ, நரகத்தையோ அடைகின்றனர்.(81) இந்தத் தீமையை நீயோ, துரியோதனனோ உண்டாக்கவில்லை. (இந்தப் போரில்) பூமியின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டது காலனின் செயல் என்று அறிவாயாக" {என்றார் பீஷ்மர்}".(82)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பலமிக்கவனும், அறம் சார்ந்தவனுமான யுதிஷ்டிரன் இவை அனைத்தையும் கேட்டு மனத்தில் ஆறுதல் அடைந்து, மீண்டும் பின்வருமாறு விசாரித்தான்".(83)
அநுசாஸனபர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 83
ஆங்கிலத்தில் | In English |