Viswamitra! | Anusasana-Parva-Section-03 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 03)
பதிவின் சுருக்கம் : அடைதற்கரிதான பிராமணத் தன்மையானது க்ஷத்திரியரான விஷ்வாமித்ரரால் எவ்வாறு அடையப்பட்டது என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்...
[1]யுதிஷ்டிரன், "ஓ! இளவரசரே {பீஷ்மரே} பிராமணத்தன்மையானது வேறு மூன்று வர்ணங்களால் (க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியோரால்) அடைவதற்கு மிக அரிதானது என்றால், ஓ! மன்னா, உயர் ஆன்ம விஷ்வாமித்ரர், (பிறவியால்) ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிராமணத் தன்மையை அடைந்தது எவ்வாறு? ஓ! ஐயா, இதை நான் அறிய விரும்புகிறேன். எனவே இக்காரியம் குறித்த உண்மையை எனக்குச் சொல்வீராக.(1,2) ஓ! ஐயா, அந்தப் பலமிக்க மனிதர் தன் தவத்தகுதிகளின் மூலம் உயர் ஆன்ம வசிஷ்டரின் நூறு மகன்களை ஒரு கணத்தில் அழித்துவிட்டார்.(3) அவர் கோப வசத்தில் இருந்தபோது, எண்ணற்ற தீய ஆவிகளையும், வலிமையும், வீரமும் கொண்டவர்களையும், காலனுக்கு ஒப்பானவர்களுமான ராட்சர்களையும் படைத்தார்.(4) நூற்றுக்கணக்கான மறுபிறப்பாள தவசிகளைக் கொண்டதும், பெருமையும், கல்வித்தகுதியும் கொண்டதும், பிராமணர்களால் போற்றிப் புகழப்படுவதுமான குசிக குலமானது இந்த மனிதர்களின் உலகில் அவராலேயே உண்டானது.(5)
[1] கும்பகோணம் பதிப்பில் இதற்கு முன்பு மூன்று அத்தியாயங்கள் இருக்கின்றன. முதல் {மூன்றாவது} அத்தியாயத்தின் அடிக்குறிப்பில், "3, 4, 5 இந்த அத்யாயங்கள் வ்யாக்யான பாடத்தில் 27, 28, 29வது அத்யாயங்களாயிருக்கின்றன, ’ப்ராம்மணத்வத்தை மற்ற மூன்று வர்ணத்தாரும் பெறுவது அரிதாயின்’ என்று அனுவாதமாக எடுத்திருப்பது பொருந்தாது" என்றிருக்கிறது. அதாவது கங்குலியின் அநுசாஸன பர்வத்தில் வரப்போகும் 27, 28, 29 அத்தியாயங்கள் 3, 4, மற்றும் 5ம் அத்தியாயங்களாக வர வேண்டும் என்பதும், இந்த 3ம் பகுதி 6ம் அத்தியாயமாக இடம்பெற வேண்டும் என்பதும் கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பு தரும் உட்கருத்தாகும். பிராமணத் தன்மையை அடைவது அரிது என்று திடீரென யுதிஷ்டிரன் கேட்பது இங்கே உண்மையில் பொருந்தாமல்தான் இருக்கிறது.
ரிசீகரின் மகனும், கடுந்தவங்களைக் கொண்டவருமான சுனச்சேபர், அம்பரீஷனின் பெரும் வேள்வியில் ஒரு விலங்காகக் கொல்லப்பட்ட வேண்டியவராக இருந்தாலும் விஷ்வாமித்ரரின் மூலம் விடுவிக்கப்பட்டார்.(6) ஹரிஷ்சந்திரன் {ஹரிச்சந்திரன்} வேள்வியில் தேவர்களை நிறைவு செய்ததால், அவர் {சுனச்சேபர்} ஞானியான விஷ்வாமித்ரரின் மகனானார்.(7) அண்ணனான தேவவிரதனை மதிக்காததால், அவனது ஐம்பது தம்பிகளும் சண்டார்களாகப் போகும்படி சபிக்கப்பட்டனர்.(8) இக்ஷ்வாகுவின் மகனான திரிசங்கு, தன் நண்பர்களால் கைவிடப்பட்டு, கீழ் உலகங்களில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தபோது, விஷ்வாமித்ரரின் விருப்பப்படி சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்.(9) விஷ்வாமித்ரர், கௌசிகி என்ற பெயரைக் கொண்டதும், தெய்வீக முனிவர்களால் அடிக்கடி நாடப்படுவதுமான ஒரு பெரும் ஆற்றை {தன் தங்கையாகக்} கொண்டிருந்தார். அந்தப் புனிதமான, மங்கலமான ஆறானது, தேவர்களாலும், மறுபிறப்பாள முனிவர்களாலும் அடிக்கடி நாடப்பட்டது.(10)
புகழ்பெற்ற தேவகன்னிகையும், அழகிய கைவளைகளைக் கொண்டவளுமான ரம்பை, அவரது தவங்களுக்கு இடையூறு செய்ததால் சபிக்கப்பட்ட ஒரு பாறையாகச் சமைக்கப்பட்டாள்.(11) மகிமைபொருந்திய வசிஷ்டர், விஷ்வாமித்ரரின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகப் பழங்காலத்தில் தன்னைக் கொடிகளால் சுற்றிக் கொண்டு ஆற்றில் விழுந்து, பிறகு கட்டுகளில் இருந்து விடுபட்டு வெளியே வந்தார்.(12) பெரியதும், புனிதமானதுமான அந்த ஆறு இதன் விளைவால் அதுமுதல் விபாசை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[2].(13) அவர் {விஷ்வாமித்ரர்} மகிமை பொருந்தியவனும், பலமிக்கவனுமான இந்திரனை வேண்டியதால், அவரிடம் நிறைவடைந்த அவன் அவரைச் சாபத்தில் இருந்து விடுவித்தான்[3]. அவர் ஆகாயத்தின் வட பக்கத்தில் இருந்து கொண்டு, ஏழு மறுபிறப்பாள முனிவர்களுக்கும் {சப்தரிஷிகளுக்கும்} சார்ந்து உத்தானபாதன் மகனான துருவனுக்கும் நடுவில் எப்போதும் ஒளியைப் பொழிந்து கொண்டிருக்கிறார்.(14,15)
[2] "விபாசை என்றால் கட்டுகளில் இருந்து விடுவிப்பது என்று பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "விஷ்வாமித்ரர், த்ரிசங்குவுக்கு யாகம் செய்விக்கும் போது, ‘சண்டாளனுக்கு யாகம் செய்விக்கும் நீ சண்டாளனாவாய்’ என்று வசிஷ்டபுத்ரர்கள் கொடுத்தச் சாபத்தினால், பஞ்சம் வந்து பசியினால் வருந்தின காலத்தில் நாய் மாம்ஸத்தைத் திருட்டுத் தனமாகக் கொண்டு வந்து சமைக்கத் தொடங்கும்போது இந்த்ரன் பருந்துரூபமாக அதைக் கொண்டு போனான். அப்போதே அவர் சாபத்தினின்று விடுபட்டு இந்திரனைத் துதித்தார். மழைபெய்து பஞ்சம் நீங்கிற்று என்பது பழைய உரை" என்றிருக்கிறது. கங்குலியும் இதே அடிக்குறிப்பை இங்கே தந்திருக்கிறார்.
இவையும், இன்னும் பலவும் அவரது சாதனைகளாக இருக்கின்றன. ஓ! குருகுலத்தின் வழித்தோன்றலே, இவை ஒரு க்ஷத்திரியரால் செய்யப்பட்டிருப்பதால் எனக்கு ஆவல் மேலிடுகிறது.(16) எனவே, ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இக்காரியத்தை எனக்கு உண்மையாக விளக்குவீராக. தன் உடற்கட்டைக் கைவிட்டு, சதையாலான மற்றொரு வசிப்பிடத்தைக் கொள்ளாமல் அவரால் எவ்வாறு பிராமணராக முடிந்தது?(17) ஓ! ஐயா, மதங்கனின் கதையை எனக்குச் சொன்னதைப் போலவே இக்காரியத்தை உண்மையில் விளக்குவீராக[4].(18) மதங்கன் (தவங்கள் அனைத்தையும் செய்திருந்தாலும்) சண்டாளனாகப் பிறந்தவனாதலால் பிராமணத்தன்மையை அடைய முடியாதபோது, இந்த மனிதனால் {விஷ்வாமித்ரரால்} எவ்வாறு பிராமண நிலையை அடைய முடிந்தது?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(19)
[4] 1ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ள கும்பகோணம் பதிப்பின் சுட்டுதலுக்கு இணங்க இங்கே யுதிஷ்டிரன் மதங்கனின் கதை தனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டதாகச் சொல்கிறான். கங்குலியில் மதங்கனின் கதை அநுசாஸன பர்வம் பகுதி 27ல் வருகிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |